10 ஆகஸ்ட் 2021

ஈழத்துத் தமிழிசை


வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

-          சுவாமி விபுலாநந்தர்

 

     ஈழம்.

     இலங்கை, தென்மா விலங்கை, லங்கா, நாகதீபம், லங்கதுவீபம், தப்ரபேன், சேலான், சிலோன், தர்மதீபம், இரத்தின துவீபம்.

     இவையெல்லாம் ஈழத்தின் மறு பெயர்கள்.

    

தமிழகக் கல்வெட்டுகள் இலங்கையை, ஈழம் என்றே குறிப்பிடுகின்றன.

     பட்டினப் பாலையும் ஈழம் என்றே குறிப்பிடுகிறது.

     இராவணன் ஆண்ட இலங்கையை  வீணா கானம் என்பர்.

     இராவணன் யாழ் வாசிப்பதில் வல்லவன்.

     இராவணன் சாம கானம் பாடியவன்..

     திருஞான சம்பந்தர், தனது பாடலில், திருநீற்றின் பெருமையைப் பாடும் பொழுது, இராவணனையும் சேர்த்தே பாடுகிறார்.

     இரவின் வண்ணம் கொண்ட இராவணன், தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு எனப் புகழ்கிறார்.

இராவணன் மேலது நீறு, எண்ணத் தருவது நீறு

பராவணம் ஆவது நீறு, பாவம் அறுப்பது நீறு

தராவணம் ஆவது நீறு, தத்துவம் ஆவது நீறு

ஆராவணங்கும் திருமேனி, ஆவலாயன் திருநீறே.

     இராவணனின் தம்பி விபீசணனின் காலத்திலும் இசை மேலாங்கியே இருந்தது.

     இலங்கையின், காரையில் உள்ள புத்த விகாரை ஒன்றில், விபீசணனின் முடிசூட்டு விழா, ஓவியமாய் காட்சி அளிக்கிறது.

     இவ்வோவியத்தில், ஒரு பெண் யாழ் வாசித்துக் கொண்டும், மற்றொரு பெண் குழல் வாசித்துக் கொண்டும் இருக்கும் காட்சியை இன்றும் காணலாம்.

     மணிமேகலை காவியத்தில், ஆபுத்திரன் இலங்கைக்கு வந்த செய்தி இடம் பெறுகிறது.

     ஆபுத்திரன் மணிப்பல்லவம் என்னும் நயினா தீவை அடைந்ததையும், அப்பகுதியை ஆண்ட மன்னன், ஆபுத்திரனுக்கு விருந்து வைத்ததாகவும், இவ்விருந்தில் இசை, நடன, வாத்திய நிகழ்ச்சிகள் இடம் பெற்றதையும் மணிமேகலை விளக்குகிறது.

     இலங்கையின் பல பகுதிகளில் கொட்டகை அமைத்து, இசை, நாடகப் பயிற்சிகள் நடைபெற்று வந்ததை, யாழ்ப்பாண அரசன் சங்கிலியன் என்பவன் எழுதிய, தென்னிந்திய இசை என்னும் ஓலைச் சுவடி மூலம் அறிய முடிகிறது.

     கூத்து, மெல்லிசை, கருநாடக இசை, பஜனை மூலமாக, தமிழிசைகள் செழித்து வளர்ந்திருக்கினறன.

     ஈழத்து யாழ்ப்பாண வரலாற்றை, யாழ்ப்பாண வைபவமாலை, இலங்கை  சரித்திரம், கைலாய மாலை, ஆகிய நூல்கள் உக்கிர சிங்கன் காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன.

     உக்கிரசிங்கனின் மகன், ஏதுங்க பாரசிங்கன் என்பவன், யாழ்பாடி என்னும் பாணர் குலத்தைச் சார்ந்த கலைஞனின், யாழ் வாசிப்பில் மகிழ்ந்து, தன் தேசத்தின் தென் கோடியில் இருந்த மணற்கோட்டையை பரிசாய் வழங்கியதையும் இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.

     விஜயனும், விஜயனுடன் வந்த கலிங்கர்களும், இலங்கையில் பல ஆலயங்களைக் கட்டியதோடு, இடிந்து சிதைந்து கிடந்த பல ஆலங்களையும் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

     இவ்வாலயங்கள் மூலம் தமிழிசை தொய்வின்றித் தொடர்ந்து வளர்ந்திருக்கிறது.

     திருஞானசம்பந்தரும், சந்தரமூர்த்தி நாயனாரும், தமிழகத்தில் இருந்து கொண்டே, ஈழத்தின், திருகோணேசுவரம், திருக்கேதீச்சரம் கோயில்களைப் பற்றியப் பல பதிகங்களைப் பாடியிருக்கிறார்கள்.

     அருணகிரிநாத சுவாமிகளும், தனது திருப்புகழில், கதிர்காமக் கோயில் பற்றிப் பாடியிருக்கிறார்.

     சம்பந்தரோ, இசையிலும், தமிழிலும், சிவபக்தியிலும் சிறந்த இராவணனைத் தனது பதிகங்களில் பாடியிருக்கிறார்.

     கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின், சோழர்களின் ஆட்சியில், இலங்கையில் சைவமும், தமிழும் மேலும் தழைத்து ஓங்கியது.

     ராஜராஜேசுவரம்

     உத்தம சோழீசுவரம்

     நித்திய விநோதீசுவரம்

     மத்தீசுவரம் முதலான பல ஆலயங்கள் தோற்றம் பெற்றன.

     கோயில் நிர்வாகம் வரைமுறைப் படுத்தப் பெற்றது.

     ஓதுவா மூர்த்திகள், தேவரடியார்கள், இசைக் கலைஞர்கள் நியமிக்கப் பட்டனர்.

     தமிழிசை தழைத்தது.

     இசையின் வளர்ச்சியில் ஆலயங்கள் பெரும் பங்காற்றின.

     சோழர் ஆட்சியில், யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு, சுமார் நான்கு நூற்றாண்டுகள் தமிழர் பண்பாட்டின் பல்வேறு கூறுகளும் உச்சம் பெற்றன.

     சோழரகள் காலத்தில் கோயில்களில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறைகள், சோழர்கள் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்தன.

     நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னர்களும், தமிழக மன்னர்களைப் பின்பற்றி, கலைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர்.

     வாய்ப்பாடு, இசை, நடனம் முதலியன அரசவை கலை வடிவங்களாகவும், கோயில் கலை வடிவங்களாகவும் வளர்ந்தன.

     பிற்காலத்தில் இலங்கையில் தோன்றிய அறிஞர்கள், கவிஞர் பெருமக்களில் பலரும், பலப்பல பதிகங்களைப் பாடி, தமிழிசைக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள்.

     இவர்களுள் முதன்மையாய் நிற்பவர், சுவாமி விபுலாநந்த அடிகள் ஆவார்.

     இவர், தமிழகத்தின், தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்களிதழான, தமிழ்ப் பொழில் இதழில், பல தமிழிசை ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

    


பின்னர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் வேண்டுகோளை ஏற்று, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே அமர்ந்து, தமிழின், முதல் இசை இலக்கண நூலாகிய யாழ் நூலைப் படைத்தார்.

     பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் ஏழு இயல்களாய், யாழ் நூழைப் படைத்து, தமிழிசைக்குப் பெருந்தொண்டு புரிந்தார்.

     அடுத்து வருபவர், சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களால்,

நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

சொல்லு தமிழ் எங்கே?

சுருதி எங்கே?

எனப் போற்றப்பெற்ற, ஆறுமுக நாவலர் ஆவார்.

     இலங்கையில் சைவ சமயப் பணிகளை வளர்ப்பதற்கும், திருமுறைகளை ஓதுவதற்கும், ஓதுவா மூர்த்திகளையும், அவர்களுக்குரிய திருமுறைப் பயிற்சிகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.

     இவர்களுக்குப் பின்,

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாய் அம்மா

என்ற உலகப் புகழ்பெற்றப் பாடலை எழுதிய திரு வீரமணி.

     நாமகள் புகழ்மாலை, சிறுவர் செந்தமிழ், இலங்கை வளம், திருப்பள்ளி எழுச்சி, கந்தவன நன் மணிமாலை என இசைக்குப் புகழ் சேர்த்த நவாயூர் சோம சுந்தரப் புலவர்,

     இசைஞானமும் மொழி ஞானமும் கைவரப்பெற்ற அருளாளர், பலநூறு தமிழிசைக் கீர்த்தனைகள் இயற்றிய விநாசித் தம்பி,

     முன்னூறுக்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை எழுதிய வெள்ளை சா.வைத்தியலிங்கம் பிள்ளை

     வித்துவான் சொக்கன்.

     கவிஞர் புதுவை ரெத்தின துரை,

     ந.வி.மு.நவரத்தினம்,

     சந்திர சேகரம்,

     வேலாயுதம் பிள்ளை,

     சிவபாலன்,

     ஞானாம்பிகை குலேந்திரன்

     கிருஷ்ணவேணி,

     மயில்வாகனம்,

     சச்சிதானந்தம் முதலான எண்ணற்ற பெருமக்களின் அரும் முயற்சியால், ஈழத்துத் தமிழிசை சார்ந்த நூல்கள், தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

     ஈழத்துத் தமிழிசை நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

---
ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 8.8.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை,

ஸ்ரீலங்கா, யாழ்பாணப் பல்கலைக் கழக

இசைத்துறை, முதுநிலை விரிவுரையாளர்


முனைவர் ஸ்ரீநாகபூஷணி அரங்கராஜ் அவர்களின்,

இசையோடும், பாடலோடும் இணைந்த

ஈழத்துத் தமிழிசை

என்னும் தலைப்பிலான இணைய  வழி உரைகேட்டு மகிழ்ந்தேன்.

ஈழத்துத் தமிழிசையை

கடல் தாண்டி

வான் வழி

அழைத்து வந்து,

இணைய வழி

இறக்கி வைத்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.