03 நவம்பர் 2012

கணிதமேதை அத்தியாயம் 4



 --------------------------------
அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையின்றி, கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை சீனிவாச இராமானுஜன்
----------------------------------

       1904 முதல் 1909 வரையிலான ஆண்டுகளில், இராமானுஜன் படிப்பைத் தொடரவும் வழியின்றி, வேலையும் ஏதுமின்றி, கணிதச் சிந்தனையிலேயே காலத்தைக் கழித்தார். குடும்பச் சூழல் மிகவும் மோசமான நிலையிலிருந்தும், இராமானுஜனின் தாயும் தந்தையும், இராமானுஜனைப் பொறுத்துக் கொண்டனர். வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்த வில்லை. கணிதச் சிந்தனையிலும், கடவுள் சிந்தனையிலுமே காலத்தை ஓட்டினார்.

      கணிதச் சமன்பாடு என்பது கடவுள் பற்றிய சிந்தனையை உண்டாக்காத வரை, அச்சமன்பாட்டிற்குப் பொருளில்லை என்பதே இராமானுஜனின் கருத்தாகும்.

(1) இராமானுஜன் வீடு (2) சாரங்கபாணி கோயில்
   எப்பொழுதாவது கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குச் சென்று புத்தகம் கடன் பெறுவது அல்லது கணிதப் பேராசிரியரைச் சந்திப்பது போன்ற நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் சாரங்க பாணிக் கோவிலிலேயே இருந்தார் அல்லது தன் வீட்டின் ஜன்னலுக்கு அருகில் உண்ண திண்ணையில் சம்மனமிட்டு அமர்ந்து, ஒரு பெரிய சிலேட்டில் கணக்குப் போட்டுப் பார்ப்பதையே தன் முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருந்தார். தெருவில் நடைபெறும் எந்த நிகழ்வுகளும், ஓசைகளும் ஒருபோதும் அவர்தம் கவனத்தைக் கலைத்ததில்லை.

இராமானுஜன் பயன்படுத்திய சிலேட்டு
     நீண்ட காலம் பொறுமையோடு இருந்த இராமானுஜனின் பெற்றோரும், இறுதியில் பொறுமையிழந்தனர். 1908 ஆம் ஆண்டு இறுதியில், தன் மகனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இராமானுஜனுக்குத் திருமணம் செய்ய, கோமளத்தம்மாள் முடிவெடுத்தார்.

ஜானகி

     இராஜேந்திரம் என்னும் ஊரில் உள்ள ரெங்கசாமி என்பவரின் மகள் ஜானகியை இராமானுஜனுக்கு மணம் முடிக்க கோமளத்தம்மாள் முடிவு செய்தார்.

     உறவினர் இல்ல விழாவிற்காக, கோமளத்தம்மாள் இராஜேந்திரம் சென்ற பொழுது ஜானகியைப் பார்த்தார். ஜானகிக்கு வயது ஒன்பது. கோமளத்தம்மாளுக்கு ஜானகியைப் பிடித்து விடவே, ஜானகியின் பெற்றோரிடமிருந்து ஜாதகத்தைப் பெற்று வந்து, இராமானுஜனின் ஜாதகத்துடன் பொருத்திப் பார்த்தார், ஜாதகங்கள் பொருந்தி வரவே இருவருக்கும் திருமணம் செய்ய பேசி முடித்தார்.

இராமானுஜனின் மறைவிற்குப் பின் ஜானகி

     இராமானுஜனின் தந்தை சீனிவாசன் அவர்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை. கும்பகோணத்திலேயே பலர் இராமானுஜனுக்குப் பெண் கொடுக்க முன் வருவார்கள், எதற்காக வெளியூரில் பெண் பார்க்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னிடம் எதுவும் சொல்லாமல், கோமளத்தம்மாள் ஏற்கனவே திருமணம் பேசி முடித்துவிட்டார் என்பதை அறிந்த போது, எதிர்த்துப் பேச முடியாமல் புழுங்கினார். தனது விருப்பத்தையும் மீறி இத் திருமணம் நடைபெறுவதால், தனது சொந்த மகனின் திருமணத்திற்கே செல்லாமல் கும்பகோணத்திலேயே இருந்து விட்டார் சீனிவாசன்.
வலது புறம் ஜானகி வயதானகாலத்தில்
       திருமணம் குளித்தலையை அடுத்த இராஜேந்திரத்தில் பெண் வீட்டில் நடைபெறுவதாக ஏற்பாடு. இராஜேந்திரம் கும்பகோணத்தில் இருந்து 60 மைல் தொலைவில் உள்ள சிற்றூராகும். திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு ஏற்பாடாகியிருந்தது.

     கோமளத்தம்மாள் தன் மகன் இராமானுஜன் மற்றும் உறவினர்களுடன் சென்ற புகை வண்டியோ, பல மணி நேர தாமதத்திற்குப் பிறகே குளித்தலையைச் சென்றடைந்தது. அங்கிருந்து மாட்டு வண்டியை வாடகைக்குப் பேசி இராஜேந்திரம் சென்றடைய இரவு 12 மணியாகிவிட்டது.

     ஜானகிக்கு உடன் பிறந்தவர்கள் ஐவர்.  ஒருவர் சகோதரர் மற்ற நாலவரும் சகோதரிகள். ஜானகிக்கும் அவரது சகோதரி விஜயலட்சுமிக்கும் ஒரே நாளில் திருமணம் செய்வதாக ஏற்பாடு. கோமளத்தம்மாளும் இராமானுஜனும் மிகவும் தாமதமாக வந்ததால், கோபமடைந்த, ஜானகியின் தந்தை ரெங்கசாமி திருமணத்தையே நிறுத்தப் போவதாக அறிவித்தார். ஆனால் கோமளத்தம்மாளோ தன் வாதத் திறமையால் அவரை வென்று, மறுநாள் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில், மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

     மறுநாள் ஜுலை மாதம் 14 ஆம் நாள், 1909 ஆம் ஆண்டு, இராமானுஜன் ஜானகி திருமணம் நடைபெற்றது.

     இராமானுஜனின் திருமணமானது வெளிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சூழ்நிலைகள் சற்று மாறத் தொடங்கின. இராமானுஜன் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்தார்.

     இந்துத்துவ சிந்தனையானது வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. முதல் நிலை மாணவப் பருவமாகும். இரண்டாவது கிரஹஸ்த்த என்னும் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் குடும்பத் தலைவர் நிலையாகும். மூன்றாம் நிலை வனப்பிரஸ்த்த என்னும் அமைதி வேண்டி வாழ்வைக் காட்டில் கழிக்கும் நிலையாகும். நான்காவது அனைத்தையும் துறந்து, பொருள், செல்வம், குடும்பம், சுற்றத்தார் என அனைவரையும் மறந்து, பற்றற்று வாழும் துறவு நிலையாகும்.

     இராமானுஜனின் மனமானது நான்காம் நிலையான சந்யாசி நிலையை அடைய விரும்பினாலும், இத் திருமணத்தின் மூலம் குடும்பப் பாரங்களையும், சுமைகளையும் ஏற்க வேண்டிய இரண்டாம் நிலையைத் தான் அடைந்திருப்பதை இராமானுஜன் உணர்ந்தார். சிறிது காலம் கும்பகோணத்தில் வசித்த ஜானகியும், தன் சொந்த வீட்டிற்குச் சென்று விட்டாள்.

      இராமானுஜனின் தந்தையும் ஐம்பது வயதைத் தாண்டிவிட்டதால், குடும்பப் பாரம் சுமக்க வேண்டிய நிலைக்கு இராமானுஜன் தள்ளப் பட்டார்.

     இந்நிலையில் இராமானுஜன் ஹைட்ரசல் பிரச்சினையால் பாதிக்கப் பட்டார். அறுவை சிகிச்சை செய்வதே இதற்கு ஒரே தீர்வு. ஆனால் அதற்குரிய நிலையில் குடும்பச் சூழல் அமையவில்லை.

     கோமளத்தம்மாள் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் செலவிற்காக உறவினர்கள் பலரிடம் உதவி கேட்டார். ஆனால் உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. ஆனால் 1910 ஆம் ஆண்டு சனவரியில் டாக்டர் குப்புசாமி என்பவர் முன் வந்து, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து இராமானுஜனைக் குணப்படுத்தினார்.

     அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப் பட்ட நிலையில் கூட, தனது ஐம் புலன்களில் எப் புலன் முதலில் செயலிழக்கிறது, எது இரண்டாவதாகச் செயலிழக்கிறது என வரிசைப்படி உணர்ந்து கூறி, துணைக்கு வந்திருந்த தன் நண்பனைத் திகைக்க வைத்தார் இராமானுஜன்.

இந்தியக் கணிதவியல் கழகம்

வி. இராமசுவாமி அய்யர்
     1906 ஆம் ஆண்டின் இறுதியில் வி. இராமசுவாமி அய்யர் என்பவர் சென்னை, மைசூர், கோயமுத்தூர் மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள கணிதப் பேராசிரியர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். தமிழ் நாட்டில் ஒரு கணிதவியல் கழகத்தை அமைத்திட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுவதே இக்கடிதத்தின் நோக்கமாகும். அக் கால கட்டத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நூல்களை இந்தியாவில் காண்பது என்பதே அரிதான செயலாகும். இக் கணிதக் கழகத்தைத் தொடங்குவதன் மூலம் மேலை நாடுகளின் கணிதவியல் நூல்களைத் தமிழகத்திற்கும் வரவழைக்க இயலும் என இராமசுவாமி அய்யர் எண்ணினார்.

     ஆண்டு சந்தா ரூ.25 செலுத்தத் தயாராக உள்ள ஆறு பேர் கிடைத்தால் போதும், கணிதவியல் கழகத்தைத் தொடங்கி விடலாம் என்று எண்ணி முயற்சியில் இறங்கினார்.

     முதலாண்டிலேயே 20 கணிதப் பேராசிரியர்கள் உறுப்பினராய்ச் சேர இந்தியக் கணிதவியல் கழகம் தொடங்கப் பெற்றது. விரைவிலேயே இக் கழகத்திற்கென்று தனியொரு கணித இதழும் தொடங்கப் பெற்றது.

இந்திய கணிதவியல்  கழக இதழ்
     1910 ஆம் ஆண்டு இறுதியில் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருக்கோயிலூர் சென்று, இந்த இராமசுவாமி அய்யரை இராமானுஜன் சந்தித்தார். இந்தியக் கணிதவியல் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான இராமசுவாமி அய்யர் அவர்கள், அச்சமயம் திருக்கோயிலூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

     இராமசுவாமி அய்யரைச் சந்தித்த இராமானுஜன் தனது கணித நோட்டுகளை அவரிடம் காண்பித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்த இராமசுவாமி அய்யர், அறிமுகக் கடிதம் ஒன்றை வழங்கி, சென்னை சென்று, பி.வி.சேசு அய்யர் என்பாரை நேரில் சென்று பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்தார்.

     பி.வி.சேசு அய்யர் என்பவர் வேறு யாருமல்ல இராமானுஜன் பயின்ற அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்தான். ஆனால் அச்சமயம் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இராமானுஜனுக்கு, இவருடன் தொடர்பு ஏதும்   இல்லாமலிருந்தது.

       சென்னை சென்ற இராமானுஜன் சேசு அய்யரைச் சந்திக்கவில்லை. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ். பால கிருட்டின அய்யர் என்பவரைச் சந்தித்தார். ஆனால் பாலகிருட்டின அய்யரோ, உதவி செய்யும் அளவிற்குத் தான் பெரியவரல்ல என்று கூறி இராமானுஜனை அனுப்பி வைத்தார்.

ஆர். இராமச்சந்திர ராவ்
    டிசம்பர் மாதத்தில் இராமானுஜன், ஆர். இராமச்சந்திர ராவ் என்பாரைச் சந்தித்தார். இராமச்சந்திர ராவ் அவர்கள், சென்னை பிரசிடென்சிக் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1890 இல் அரசுப் பணியில் சேர்ந்து, நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பதிவாளராக உயர்ந்து, அதனைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, நெல்லூர் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றி வருபவர். இவை எல்லாவற்றையும் விட, முக்கியமானது அவர், கணிதவியல் அறிஞராவார். மேலும் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருபவர். புத்தி கூர்மையுள்ளவர்.

     இராமானுஜனுக்கு இராமச்சந்திர ராவ் அவர்களுடன், எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான செய்திகள் இல்லை. இருப்பினும் இராமச்சந்திர ராவ் அவர்களின் உறவினர் கிருட்டினராவ் அவர்களின் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

     இராமானுஜன் மூன்று முறை இராமச்சந்திர ராவ் அவர்களைச் சந்தித்தார். முதல் சந்திப்பின் போது, இராமானுஜன் தனது கணிதத் தாட்களை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார். இரண்டாம் முறை சந்தித்தபோது, இராமச்சந்திர ராவ், இராமானுஜன் கணக்குகளைப் பரிசீலித்ததாகவும், ஆனால் இது போன்ற கணக்குகளைத் தான் ஒரு போதும் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

     மூன்றாம் முறை சந்தித்த போது, இராமச்சந்திர ராவ் வெளிப்படையாகவே பேசினார். நீங்கள் உண்மையிலேயே கணித அறிவு படைத்தவரா? நீங்கள் எழுதியுள்ளதும், பேசுவதும் உண்மைதானா? என்று எனக்குப் புரியவில்லை என்று கூறினார்.

     இதற்குப் பதிலளித்த இராமானுஜன், பம்பாயில் வசிக்கும் புகழ்பெற்ற கணித மேதை சல்தானா அவர்களிடம் தான் கடிதத் தொடர்பு கொண்டிருந்தமையையும், தனக்கு அவர் எழுதிய கடிதங்களையும் காட்டினார்.

     கடிதங்களைக் கண்டு மனநிறைவு பெற்ற இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு, இராமானுஜன் தன் கணக்குகளைப் பற்றி வளக்கினார். தனது முடிவிலாத் தொடர் பற்றியும், உலகிற்கு அறிவிக்கப்படாத கணித உண்மைகளைப் பற்றியும் விளக்கினார்.

     இறுதியில், இராமச்சந்திர ராவ் இராமானுஜனைப் பார்த்து, தற்சமயம் உமது தேவை என்ன? என்று வினவினார். இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார். அதாவது அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையின்றி, கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார்.

,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?