01 அக்டோபர் 2012

முதல் குரல்


வலைப் பூ பேரன்பர்களுக்கு,

      வணக்கம். நான் கடந்த 13.9.2012 அன்று, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். தொலைக் காட்சிப் பார்க்கக் கூடாது, கணினி முன் அமரக் கூடாது என்று மருத்துவர்கள், ஒரு வார காலத்திற்கு தடா போட்டனர். வீடு திரும்பிய பின், என் மனைவி, இத் தடாவை மேலும் ஒரு வார காலத்திற்கு நிட்டித்து பொடா வை அமல் படுத்தினார்.

      இரண்டு வாரம் நிறைவுற்று, தடாவும், பொடாவும் சிறிது தளர்த்தப் பட்ட நிலையில், இன்றுதான் கணினி முன் அமரும் வாய்ப்புக் கிடைத்தது.

        அன்பர்களின் வலைப் பூவைக் காணாத கண்ணும் கண்ணல்ல
        அன்பர்களின் வலைப் பூவைப் பார்க்காத நாளும் நாளல்ல

        இனி நாளும் வருவேன் வலைப் பூக்களைக் காண.

                                       என்றென்றும் அன்புடன்,
                                        கரந்தை ஜெயக்குமார்

முதல் குரல்



       இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதை மெத்தப் படித்தவர்களும் பெருமையாய்க் கருதிய காலம். இதன் விளைவாய் மணிப்பிரவாள நடை என்னும், தமிழும் வடமொழியும் கலந்து பேசும் பேச்சு வழக்கு உண்டாயிற்று.

     ஆங்கிலேயர்களின் வருகையாலும், ஆட்சியாலும் ஆங்கில மொழிச் சொற்களும் தமிழில் கலந்து, தமிழ்ச் சொற்களாகவே உருமாறிப் போயின. சிறு சிறு கிராமங்களில் வசிக்கும், படிப்பறிவு அற்ற பாமரர்கள் கூட, விளக்கை லைட்டு என்றும், தண்ணீரை வாட்டர் என்றும், வானொலியை ரேடியோ என்றும், மருத்துவரை டாக்டர் என்றும் அழைக்கும் பழக்கம் உண்டாயிற்று. நாளடைவில் ஆங்கிலச் சொல் எது, தமிழ்ச் சொல் எது, என்று அறியாத வகையில் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தன. இதனால் தமிழ் மொழியே உருமாறி புதிய மொழியாய் மாறிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டது.

     மலையாளலும், தெலுங்கும், கன்னடமும் இவ்வாறு தமிழில் இருந்து திரிந்த, பிரிந்த மொழிகள் தானே. இதனால் தானே,

  கன்னடமுங்  களிதெலுங்கும் கவின் மலையாளமுந்  துளுவும்
  உன்னுதரத்  துதித்தெழுந்தே  ஒன்று  பால  ஆயிடினும்,
  ஆரியம்போல்  உலகவழக்கு அழிந்து  ஒழிந்து  சிதையாஉன்
  சீரிளமைத்திறம்  நினைந்து  செயல் மறந்து  வாழ்த்துதுமே

என்று பாடினார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

     பாலையும் நீரையும் தனித்தனியே பிரித்தெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்னப் பறவை என்பர். அந்த அன்னப் பறவையைப் போல், வடமொழியிலிருந்து, தமிழ் மொழியைப் பிரித்தெடுக்கவும், பிரித்து தமிழை நன்னிலைக்கு வளர்த்து உயர்த்தவும் தோன்றிய அமைப்புதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

          கெடல்  எங்கே  தமிழின்  நலம்
         அங்கெல்லாம்  தலையிட்டுக்
         கிளர்ச்சி செய்வீர்

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் கிளர்ச்சி செய்து தமிழை மீட்டெடுக்கத் தோன்றிய அமைப்புதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம். கரந்தை என்றாலே மீட்டல் என்றுதானே பொருள்.

தமிழவேள் உமாமகேசுவரனார்
     1911 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயரா முயற்சியாலும், சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் தளரா உழைப்பாலும், தனித் தமிழில் பேசும் கரந்தை நடை தோன்றியது.

    
 வட மொழியின் பிடியில் இருந்தும், அங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்தும், தமிழைக் காக்க, கரந்தையும் தமிழறிஞர்களும் போராடி வந்த வேளையில், ஆட்சி அதிகாரத்துடன், அரசு உத்தரவு என்னும் கேடயம் தாங்கி, அழையா விருந்தாளியாய் இந்தி உள்ள நுழைந்தது.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

     இந்தியாவின் பொது மொழியாக இருக்க வல்லமை வாய்ந்த மொழி இந்திதான் என்பது மகாத்மா காந்தியின் எண்ணமாகும். இந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மகாத்மா காந்தி அவர்கள் 1918 ஆம் ஆண்டு இந்தி பிரச்சார சபையினைத் ( Dhakshin Bharat Hindi Prachar) தொடங்கினார். தமிழகத்திலும் இச்சபை கிளை விரித்து, இந்தியைப் பரப்ப முற்பட்டது.

     இந்நிலையில் 1920 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசானது, சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டத்தினை ( Madras Local Bodies Act 1920 ) இயற்றி தேர்தலை நடத்தியது. இத்தேர்தலில் நீதிக் கட்சி சென்னை மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. 1920 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டுவரை நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தியும் ராஜாஜியும்
     1937 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1937 ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் நாள் இராஜாஜி என்றழைக்கப் படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முதல்வர் பொறுப்பேற்றார். இராஜாஜி அவர்கள் முதல்வராய்ப் பதவியேற்ற அடுத்த மாதமே, 11.8.1937 இல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயக் கல்வி மொழியாக அறிமுகப் படுத்த எண்ணியுள்ளதாக அறிவித்தார்.

     தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் வீறு கொண்டு எழுந்தது.

முதல் இந்தி எதிர்ப்புத் தீர்மானம்

    இராஜாஜி அவர்கள் தன் எண்ணத்தை வெளிப் படுத்திய 16 ஆம் நாளே, 27.8.1937 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில், முதல் இந்தி மொழி மறுப்புக் கூட்டம் நடைபெற்றது.

     வழக்கறிஞர் எம்.எம். வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவரகளும், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் கரந்தைக் கவியரசு அவர்களும், கட்டாய இந்தியை எதிர்த்து உரையாற்றினர். கூட்டத்தின் முடிவில், ஏழு தீர்மானங்கள்  நிறைவேற்றப் பட்டன.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின இத் தீர்மானங்களே, கட்டாய இந்தியை எதிர்த்து நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானமாகும். அவையாவன,

01.                       இளம் பிராயத்தினராயுள்ள மாணவர்கள் கற்க வேண்டியிருக்கும் தாங்கவொண்ணாத சுமையாகும் பாடத் திட்டத்தில், இந்த அயல் மொழியையும் சேர்ப்பதனால், மாணவர் சிறார்களின் உடல் நலமும், கல்வி முன்னேற்றமும் கேடுற்றுப் பாழ்படுமென்பது,

02.                        ஆங்கிலம், தாய்மொழி இவற்றிற்குரிய பயிற்சிக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நேரங்களிலிருந்து காலத்தை இந்தி மொழி பறி கொள்வதால், அம்மொழிகளில் மாணவர் தேர்ச்சி குன்றி மொழி வளம் பாழ்படுமென்பது,

03.                        வடமொழி பயிலும் மாணவர்க்கு மிக்க உதவியாகவும், கல்வித் துறையில் பின்னிலையில் நிற்கும் வகுப்பினரின் கல்வி முன்னேற்றம் தடைபட்டுக் கேடுறுமெனவும் கருதுவம் என்பது,


04.                        மக்களிடையே தொடக்கக் கல்வியை பரவச் செய்தற்கு வேண்டிய அளவு பணமில்லாதிருப்பதுவும், பயனற்றதாகிய இந்தி வளர்ச்சியில், உள்ள முதலை செலவிடத் துணிவதும், இந்திமொழி ஆசிரியர்கள் மாகாணத்தின் தேவைக்கும் போதாது மிகமிகக் குறைந்திருப்பதும் காணமாட்டாது, இதனைத் தொடங்குவது மதியீனமும், பயனற்றதும் என்பது,

05.                        இந்த மாகாணத்து மக்களுக்கு எவ்வித நற்பயனும் விளைக்கமாட்டாத இந்தி மொழியைப் பரப்புவோமென ஆராயாது விரைவதும், பொதுமக்கள் தமக்கு இன்றியமையாது வேண்டுமெனப் பரிந்து கேட்கும் கல்விச் சீர்திருத்தங்களைக் கருதாது நெகிழ விட்டிருப்பதும், அரசியலார் இயற்றும் தவறென்பது,


06.                        பொதுமக்களின் மனப்பான்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு இதனை வெளியிடாதும், இதனால் விளையவிருக்கும் கேடுகளைக் கருதாமலும், இத்தகைய முக்கியமான கருமத்தை மிகமிகச் சடுதியில் தொடங்கத் துணிந்தது இழுக்கென்பது,

07.                        விரும்பவும், வேண்டவும் படாததொரு மொழியை, முன்னெச்சரிக்கையில்லாத மக்களின் மீது, தமது அதிகாரக் கொடுமையால் சுமத்துவோமென வன்கண்மை புரிவது, மக்களாட்சியின் தத்துவங்களையும், தாமே தற்பெருமை பேசிக் கொள்ளும் அகிம்சா தருமத்தையும் வலிந்து தாக்குமென்பது.

தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் முன்மொழிய, டி.ஆர். மதுர முத்து மூப்பனார் அவர்கள் வழிமொழிய. ஜெ.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் துணை மொழிய, இவ்வேழு தீர்மானங்களும் மறுப்பார் இன்றி ஒரு மனதாய் நிறைவேற்றப் பட்டன.

     உமாமகேசுவரனார் தீர்மானங்களை இயற்றியதோடு நிம்மதி அடைந்தாரில்லை. சீறிக் கிளம்பினார். இந்தி மொழிக்கு ஆதரவாக. இராஜாஜி முன்வைத்தக் கருத்துக்கள் அத்துனையையும், தன் எழுத்தினாலும், பேச்சினாலும் தகர்த்தெறிந்தார்.

     இந்தி மொழிக்கு ஆதரவாக இராஜாஜி ஐந்து கருத்துக்களை முன் வைத்தார்.

01.                   இந்தியாவின் அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி வேண்டும். இந்தி மொழி நாடெங்கும் பயிலும் பெரு வழக்கிற்று, அதுவே சிறந்தது.

02.                   மொழி வேற்றுமையால் மனவேற்றுமை விளையும், மொழி ஒன்றுபட்டால் மக்களின் உள்ளமும் ஒன்றுபடும்


03.                   ஆங்கில ஆட்சியின் தொடர்பு முழுதும் விடுபட்டு, இந்திய நாடு தன்னரசு கொள்ளும் நாளில், இந்தி மொழியே அரசியல் மொழியாகத் திகழும். அதுகாலை தென்னாட்டினர் ஏக்கற்று நிற்காது முதன்மையிடம் பெறுதற் பொருட்டு இந்தி மொழியில் புலமையும் பயிற்சியும் பெற வேண்டும்.

04.                   இந்தி மொழியில் தேர்ச்சியடைந்தவர் அரசியல் துறைகளில் பதவியும் ஊதியமும் பெறலாம். இம்மொழிப் பயிற்சி இல்லாதவர் அவற்றைப் பெறலாகாது.


05.                   இந்தி மொழியால் தமிழ் மொழி வளம் பெறுமேயன்றிப் பாழ்பட மாட்டாது.


அஞ்சாமை  ஈகை  அறிவூக்கம்  இந்நான்கும்
எஞ்சாமை  வேந்தர்க்கு  இயல்வு

என்பார் திருவள்ளுவர். அஞ்சுதல் என்பதையே அறியாத உமாமகேசுவரனார், முதல் மந்திரியையும், அமைச்சர்களையும் நோக்கி சொற்கனைகளை வீசினார்.

     மக்களின் விருப்பம் யாதாயினும் பள்ளிகள்தோறும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவது திண்ணம். அதனை எதிர்ப்பவர்கள் அறிவிலிகள் என முதல் மந்திரியார் கூறுகின்றனர். மற்றுமுள்ள ஒன்பது மந்திரிகளும், பத்து அமைச்சர்களும். இவ்வரசியல் கட்சியினராகிய சட்டசபை உறுப்பினர்களும் தனது உளம் பற்றிய கருத்தை வெளியிடுதற்கு அஞ்சி, தத்தம் பதவிகளைக் காத்துக் கொள்ளுவதே கருமனெம நினைத்துத் தலைவரைப் பின்பற்றியே பேசுகின்றனர்.

     மக்களின் ஆணையே தமக்குத் துணையாயிருப்பதெனவும் அன்னார் குறிவழி நின்று தொண்டு புரிதலே தமது கருமம்  எனவும் பறைசாற்றி வருகின்ற மந்திரி வகையினர், மக்கள் வேண்டாததொன்றை வலிந்து செலுத்துவோமென்பது நீதி முறையா? மக்கள் வேண்டாததும், விரும்பாததுமாகிய இந்தியை மாணவர்கள் கற்குமாறு வலியப் புகுத்துவோமென்பது கொடுங்கோன்மையன்றோ?

     அரசியல் தலைமையிலிருக்கும் ஒரு சிலர் விரும்பும் இத் தீய செயல் நிறைவேறுவதற்கு, பிறர் கருவிகளாய் இருப்பது  இழிந்த செயலாகும். தமிழ் நாட்டின் உரிமைகளைப் பறி கொண்டு, பதவிகளில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், உடுக்கை இந்தவன் கை போல வந்து, இடக்கண் களைய முற்பட வேண்டும். தமிழ் மக்கள் ஊமர்களாய், செவிடர்களாய் இருந்தொழியாது, அடிமை வாழ்வை உதறி எறிந்து தமிழ்ப் போரில் முனைந்து நின்று வாகை சூட வேண்டும்

என்று வீர முழக்கமிட்ட உமாமகேசுவரனார், இராஜாஜியின் கருத்துக்களுக்கு எதிராக, தன் வாதங்களைப் பின்வருமாறு, முன்வைத்து முழங்கினார்.

01.         இந்திய நாடு இந்நிலைக்கு வருதற்கு இந்தி மொழி சிறிதும் துணை செய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன் மொழிகளும் துணை செய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தியடிகள் போன்ற தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்தகாலை, நாட்டு மொழி அறியாது இடர் பட்டாரில்லை. அவரது கருத்துக்களை அறியுமாறில்லாது தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்திய நாடெங்கும் பெரு வழங்கில் உள்ளது எனுங் கூற்றும் ஒப்பத் தக்கதன்று. இம்மொழி தென்னாட்டில் வழக்கில் இல்லாதது. வட நாட்டிலும், சிற்சில பகுதிகளில் மட்டும் பல்வேறு  உருவங்களில் ஒன்று பேசுவோர், மற்றொன்றை அறிய மாட்டாது வழக்கில் இருப்பது. பெரு வழக்கில் இருப்பதென்பதும் பொய்க் கூற்று.

02.         சாதி பற்றியும், சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்கங்களால் கொலை, பழி, பாதகங்களும் பகைமையும் ஒரு மொழி பயில்வோருள்ளேயே, நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களுள் வேற்றுமை உணர்ச்சிகளை வளர்த்து, இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும், கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாது, மொழி பற்றிய வாதங்களால் கலாம் விளையுமெனக் கதையாலெனினும் கேட்டறியாத மந்திரி, இந்தி மொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும் ஏமாற்றமும் ஆகும்.


03.         நாட்டு மொழிகள் யாவற்றையும் கீழ்ப்படுத்தி இந்தி மொழியானது, மொழியரசு புரியவிருக்குங்காலம் பல்லூழிகள் கடந்தும் நிகழுமோவென ஐயுற வேண்டியிருக்கின்றது.

04.         வடநாடு சென்று வேலை தேடுவோர்க்கன்றி இது பொருந்தாது. இந்திய நாட்டின் அரசியல் சட்டமானது நாட்டு மொழியும், ஆங்கிலமும் அரசியல் துறைகளில் வழங்கத் தகுவனவென்று விதித்திருக்கின்றது. அரசியல் அலுவல்கட்குரிய தகுதிகளைப் பெற்றும் வேலை கிடைக்காது அலமருவோர் வடநாட்டிலும் மிகுந்திருக்கின்றனர். வடநாட்டில் வேலை கிடைக்குமெனும் ஆசையால் தென்னாட்டினன் இந்தி மொழியைக் கற்கப் புகுவது பயனிலுழவாகும்.


05.         வடமொழிச் சார்புடையாரும், அன்னார் நன்மதிப்பை எவ்வாற்றானும் பெற்று வாழ வேண்டுமெனுங் குறிக்கோளில் அடிப் பட்டவர்களும் இக் காரணத்தை ஏதுவும் எடுத்துக் காட்டுமின்றி கூறித் திரிகின்றனர். முகமதியராட்சியில் அடிப்பட்ட வட நாட்டினரின் ஊழியத் தொடர்பால், துலுக்கு மொழிகளும், ஆரியச் சிதைவு மொழிகளும் கலந்த குளறு படை மொழியே இந்தி எனப்படுவது. சிறந்த நூல் வழக்கோ, இலக்கியமோ இல்லாதது. கலைச் செல்வத்தைக் கண்டறியாதது. இதுபோது வடநாட்டினரிற் சிலர் அரசியற் குழப்பமாகிய பெரு வள்ளத்தால் ஏற்றப்பட்டு, தென்னாட்டை அடிமை கொண்டதால், தமது கொற்றம்பிற்றை நாளில் பேசப்படவேண்டுமெனும் சிறு வேட்கையால், தமது மொழியை நாடெங்கும் பரப்பவும், பேணவும் கருதுகின்றனர். தென்னாட்டுத் தலைவர்களோ, வடநாட்டுத் தலைவர்களின், நன் மதிப்பைப் பெறுவதாலன்றி, தமது வாழ்வு உயராதென நினைந்து, அன்னார் அடியிணையைத் தந்தலைக் கணியாக்கி, நீர் வழிச் செல்லும்  புணைபோலச் சென்று, வட நாட்டினரின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்து விட்டனர். இக் கொள்கையினர் இந்தியை வளர்ப்பதால் தமிழ் மொழி வளரும் என நாடெங்கும் கூறி வருவது வெற்றுரை. கேழ்வரகில நெய் வடிகிறது என்ற கதைகளை இப்பொய்யுரை நினைவிற்குக் கொணர்கின்றது.

சென்னை மாகாணத் தமிழர் மாநாடு

பெரியார்
     26.12.1937 இல் திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடானது, இந்தி எதிர்ப்பு மாநாடாகவே நடைபெற்றது. இம்மாநாட்டுப் பணிகளை முன்னின்று செய்து, மாநாட்டு வரவேற்புரை நிகழ்த்தியவர் உமாமகேசுவரனார் ஆவார்.

சோமசுந்தர பாரதியார்
     இம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட மிக முக்கியமானத் தீர்மானம் என்ன தெரியுமா? சோமசுந்தர பாரதியார், தந்தைப் பெரியார், தமிழவேள் உமாமகேசுவரனார் ஆகிய மூவரும் ஒரு தூதுக் குழுவாகச் சென்று, மாநில ஆளுநரைச் சந்தித்து, இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினால், தமிழ்ர்க்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்து முறையிட வேண்டும் என்பதாகும்.

காஞ்சித் தமிழர் மாநாடு

     27.2.193 அன்று நடைபெற்ற காஞ்சித் தமிழர் மாநாட்டில், கலந்து கொண்டு, பொது மக்கள் பணத்தைக் கொண்டு சர்க்கார் வரவு செலவு திட்டத்தில் தேவையற்ற இந்திக்குப் பணம் செலவழிக்கக் கூடாதென இம்மாநாடு எச்சரிக்கின்றது என்னும் தீர்மானத்தை உமாமகேசுவரனார் வழி மொழிந்தார்.

கட்டாய இந்திக் கல்வி சட்டம் அமல்

     தமிழ் நாட்டில் நடைபெறும் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும், கண்டு கொள்ளாத இராஜாஜி அவர்கள், 21.4.1938 இல் சென்னை மாகாணத்தின் 125 பள்ளிகளில், கட்டாய இந்திக் கல்வி கற்பிப்பதற்கான அரசு ஆணையினை வெளியிட்டார்.

     வெகுண்டு எழுந்தார் உமாமகேசுவரனார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தினை தீவிரப் படுத்த முடிவு செய்தார். திருச்சியிலிருந்து, சென்னை கோட்டை நோக்கி பேரணி ஒன்று புறப்பட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இப்பேரணியைத் திறம்பட நடத்திச் செல்ல, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், வழக்கறிஞர் ஐ.குமார சாமி பிள்ளை அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, மாநிலம் தழுவிய பிரச்சாரத்திற்கு உமாமகேசுவரனார் புறப்பட்டார்.

தமிழர் பெரும் படை

ஐ.குமாரசாமி
     வழக்கறிஞர் ஐ.குமாரசாமி பிள்ளை அவர்களைத் தளபதியாகக் கொண்டு, தமிழர் பெரும் படை ஒன்று, 1.8.1938 இல் திருச்சியிலிருந்து புறப்பட்டு, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கியவாறும், தமிழுணர்வை ஊட்டியவாறும், 47 நாட்கள் இடைவிடாது நடந்து, 304 ஊர்களை கடந்து 11.9.1938 இல் சென்னையைச் சென்றடைந்தது.

     இப்பெரும் படையினைத் உலகமே வியக்குமாறு, தளபதியாய் இருந்து நடத்திச் சென்ற, வழக்கறிஞர் ஐ .குமாரசாமி யார் தெரியுமா? உமாமகேசுவரனாரின் மறைவிற்குப் பின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது தலைவராய் தேர்ந்தெடுக்கப் பெற்ற அதே ஐ.குமாரசாமி பிள்ளைதான்.

தமிழவேளின் சூறாவளிச் சுற்றுப் பயணம்

கி.ஆ.பெ.விசுவநாதன்
     தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களும் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து, இந்தி எதிர்ப்பு உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்தனர்.

     இக்குழுவினர் வட ஆற்காடு மாவட்டத்திற்குச் சென்ற பொழுது, இம் மூவரையும் எதிர்கொண்டு வரவேற்றவர், வட ஆற்காடு மாவட்டத்தில் தமிழாசிரியராய் பணியாற்றிக் கொண்டிருந்த உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை ஆவார்.

ஔவை துரைசாமி பிள்ளை
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும், நலமான வாழ்வுக்கும் வழிகோலியது. கரந்தையில் மூவர் எனக்கு உறுதுணையாயினர்.முதலாமவர் என்னைப் போற்றிக் புரந்த தமிழவேள் உமாமகேசுவரனார், மற்றொருவர் என் பேராசான் கரந்தைக் கவியரசு. மூன்றாமவர், என் வாழ்விலும், தாழ்விலும் பங்கேற்று, நானும் எனது நிழலும் போல, நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும், உள்ளத்தால் இணைந்திருந்த சிவ.குப்புசாமி பிள்ளை என்று உரைத்து, உமாமகேசுவரனாரிடத்தில் பக்தியும், பற்றும், பாசமும் கொண்டவர் ஔவை துரைசாமி பிள்ளையாவார்.

     வட ஆற்காடு முழுமையும், மூவரையும் அழைத்துச் சென்று இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு ஔவை ஏற்பாடு செய்தார். இதன் பலனையும் ஔவை அனுபவித்தார். அன்றைய காங்கிரஸ் அரசாங்கமானது, ஔவை அவர்களை பல ஊர்களுக்கும் மாற்றம் செய்து மகிழ்ச்சி அடைந்தது தனிக் கதை.

தாலமுத்து- நடராசன் மறைவு

     இந்தி எதிர்ப்புப் போராட்டம் பட்டி, தொட்டியெங்கும் பரவியது.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கானோர் சிறை சென்றனர். அவ்வாறு சிறை சென்றவர்களுள், தாலமுத்து மற்றும் நடராசன் ஆகிய இருவரும் கடுமையான வயிற்று நோயால் பீடிக்கப் பட்டு, சிறைக் கைதிகளாகவே உயிர் துறந்தனர். இருவருக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமலும், விடுதலை செய்யாமலும், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால்தான் விடுதலை செய்வோம் என்று சிறை அதிகரிகள் கூறியதாக ஒர் செய்தி நாடெங்கும் பரவி, போராட்ட உணர்வை தீவிரப் படுத்தியது.

இராஜாஜி ராஜினாமா

     1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்தியர்களைக் கேட்காமலலேயே, இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று, காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் அடிப்படையில் 29.10.1939 அன்று இராஜாஜி அமைச்சரவை பதவி விலகியது.

கட்டாய இந்திக்கு ஓய்வு

     காங்கிரஸ் அமைச்சரவையின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 29.10.1939 முதல் 30.4.1946 வரை ஆளுநரின் ஆட்சி நடைபெற்றது. தந்தைப் பெரியார், தமிழவேள் உமாமகேசுவரனார் மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் மூவரும் தூதுக் குழுவாய் சென்று, ஆளுநரைச் சந்தித்து, கட்டாய இந்தி சட்டத்தை கைவிடுமாறு வேண்டினர்.

     அன்றைய ஆளுநர் எர்ஸ்க்கின் அவர்களும், 1.2.1940 அன்று கட்டாய இந்திக் கல்வியைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தமிழினம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

மகாத்மா காந்தியின் மனமாற்றம்

     இந்தியாவின் பொது மொழியாக இந்தியை மாற்ற, பிள்ளையார் சுழி போட்ட, மகாத்மா காந்தியடிகள், சிலகாலம் தமிழ் பயின்றதன் பலனாய், பின்னாளில் உரைத்ததைக் கேளுங்கள்.

     இந்த சச்சரவில் (டிரான்ஸ்வால் சச்சரவு) தமிழர்கள் செய்த காரியத்தைப் போல், வேறு எந்த இந்திய சாதியும் செய்யவில்லை.  ஆதலால், வேறு யாதொரு காரணமும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்துவதற்காக மாத்திரமாவது, அவர்களுடைய புஸ்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க, அந்த பாஷையிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. அது நேர்த்தியாகவும் அமிர்தம் போன்றதுமான பாஷை. நான் படித்ததிலிருந்த எனக்குத் தெரிவது என்னவெனில், தமிழர்களின் மத்தியில் பூர்வ காலத்திலும், இப்போதும் அநேக புத்திமான்களும், ஞானவான்களும் இருந்திருக்கிறார்கள், முடிவில் இந்திய முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்பட வேண்டுமானால், சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ்ப் பாஷையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.