31 அக்டோபர் 2013

கடலில் கரைந்தவர்




நடுத்தர உயரம், கருத்த உடல்
கம்பீரத் தோற்றம், பரந்த நெற்றி
உறுதியை உரைக்கும் கண்கள்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பு
படர்ந்த மீசை, நரையைக் கருமயிர்
திரைபோல் மூடிய பருவம்

     நண்பர்களே, தமிழரைத் தட்டி எழுப்பியக் குரலுக்குச் சொந்தக்காரரை, நாடாண்ட குரலுக்குச் சொந்தக்காரரை, சட்டசபையில் அறிவையும் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும் பட்டவர்த்தனமாய் விளக்கிய குரலுக்குச் சொந்தக்காரரை உங்களுக்கு அறிமுகப் படுத்த  விரும்புகின்றேன்.

     நண்பர்களே நம்மில் பலர் இவரை அறிந்திருக்கலாம், அறிந்து மறந்திருக்கலாம், இன்றைய இளம் தலைமுறையினர் இவரை அறியாதிருக்கலாம். மறந்தவருக்கு நினைவூட்டுவதிலும், அறியாதவருக்குத் தெரியப்படுத்துவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்கிறது.
     
பலவகையில்  தமிழர்க்கு  நன்மை  செய்த
     பண்பாளன்  முன்னாள்தென்  னிந்தி  யாவின்
நலவுரிமைச்  சங்கத்தில்  பங்கு  ஏற்று
     நல்லதொரு  தளபதியாய்  விளங்கி  வந்தோன்
இலையாகக்  கொழுந்தாகப்  பெரியாரி  ன்முன்,
     இந்நாட்டில்  பலமனிதர்  இருந்தபோது
மலராகப்  பெரியாரே  போற்று  கின்ற
     மலையாக  இருந்தவர்நம்  பன்னீர்  செல்வம்

என உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தளபதியாகவும்,

தொல்லை  நீக்கிட  எழுந்த
தூயரில்  பன்னீர் செல்வன்
இல்லையேல்  படைத் தலைவன்
இல்லையெம்  தமிழ் வேந்துக்கே

எனப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் படைத் தலைவனாகவும் போற்றப் பெற்ற, இராவ் பகதூர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களை அறிமுகப்படுத்தவும், நினைவூட்டவும் விரும்புகின்றேன் நண்பர்களே. வாருங்கள் பண்பாளர் பன்னீர் செல்வத்தை அறிவோம். வாருங்கள்.

     நண்பர்களே, பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனை தேரூர்ந்த மனுநீதிச் சோழன் ஆண்ட ஊரான திருவாரூருக்கு அருகிலுள்ள, செல்வ புரத்தில், 1888 ஆம் ஆண்டு பிறந்தவர் நம் பன்னிர் செல்வம்.
தமிழவேள் பி.டி.ராஜன்
     தஞ்சையிலும், திருச்சியிலும் கல்வி கற்ற பன்னீர் செல்வம், சட்டம் பயில இலண்டன் சென்றார். பின்னாளில் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கிய தமிழவேள் பி.டி.இராசன் அவர்களும், அப்பொழுது இலண்டனில் மாணவராய் சட்டம் பயின்று வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

     சட்டக் கல்வியை முடித்தவுடன் தஞ்சையில் வழக்கறிஞராய் பணியாற்றத் தொடங்கினார். வழக்கறிஞர் பணியோடு பொது வாழ்விலும் ஈடுபட்டார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் விளங்கிய தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரும், பன்னீர் செல்வமும் இணைபிரியா நண்பர்களாயினர். தஞ்சை மக்கள் இவர்களை, இரட்டையர் என்றே அழைக்கத் தொடங்கினர்.

     தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நீதிக் கட்சியின் தூண்கள் என அழைக்கப் பட்டவர்கள் மூவர். முதலாமவர் ஏ.டி.பன்னீர் செல்வம், இரண்டாமவர் உமாமகேசுவரனார், மூன்றாமவர் ஐ.குமாரசாமி பிள்ளை. மூவருமே வழக்கறிஞர்கள்.

     ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் 1918 இல் தஞ்சை நகராட்சி மன்றத் தலைவரானார். தொடர்ந்து 1922 முதல் இரண்டாண்டுகள், தஞ்சை மாவட்டக் கல்விக் குழுத் தலைவரானார்.

      1924 ஆம் ஆண்டு முதல் 1930 வரையிலான ஆறாண்டுகள் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் இவர். உமாமகேசுவரனாரோ வட்டக் கழகத் தலைவர். இக்கால கட்டத்தில் தஞ்சை மாவட்டமானது, கல்வித் துறை வளர்ச்சியில் தலை நிமிர்ந்து நின்றது.

     நண்பர்களே, உமாமகேசுவரனார் பன்னீர் செல்வம் இருவரின் முயற்சியால், தஞ்சையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 40 இல் இருந்து 170 ஆக உயர்ந்தது. தஞ்சையில் சோம்பேறிகளின் கூடாரமாக விளங்கிய, அன்ன சத்திரங்கள் அனைத்தையும், ஏழை மாணவர்களின் இலவச உணவு விடுதிகளாக மாற்றினர். அதிலும் குறிப்பாக ஒரத்தநாடு, ராசா மடம் என்னும் இரு ஊர்களில் இருந்த சத்திரங்கள், மாணவர்கள் தங்கி, பயிலும் மாணவர் விடுதிகளாக உருமாற்றம் பெற்றன.

     நண்பர்களே, இந்த ராசாமடம் விடுதியில் இலவசமாய் தங்கி, இலவசமாய் உண்டு, கல்வி பயின்ற மாணவர் ஒருவர்தான், பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்தார். ஆம் நண்பர்களே, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தங்கி கல்வி பயின்ற விடுதிதான் ராசாமடம் மாணவர் விடுதி.

              இவர் மட்டுமல்ல, பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், கவிஞர் சுரதா, கவிஞர் அ.மறைமலையான் முதலானோரும் இளமையில் இங்கே உண்டு, கற்றுத் தேறியவர்கள்தான்.

     அதுமட்டுமல்ல நண்பர்களே, திருவையாற்று வடமொழிக் கல்லூரியில் தமிழும் நுழைந்து, அரசர் கல்லூரியாக புதிய பரிமாணம் பெற்றதும் இவர்களாளேதான்.

     இவர்களது காலத்தில் தஞ்சையில், முக்கியக் கட்டிடங்கள் இரண்டு எழுப்பப் பெற்றன. ஒன்று மாவட்டக் கழக அலுவலகக் கட்டிடம். இரண்டாவது வட்டக் கழக அலுவலகக் கட்டிடம்.


    
  நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பனகல் அரசர் ஆற்றிய பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், மாவட்டக் கழகக் கட்டிடத்திற்கு பனகல் கட்டிடம் என்று பெயர் சூட்டினார் பன்னீர் செல்வம். இன்றும் இக்கட்டிடம் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.


      வட்டக் கழகக் கட்டிடமோ, உமாமகேசுவரனார் மறைவிற்குப் பின், அவர் பெயராலேயே உமாமகேசுவரனார் கட்டிடம் என்றே, இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

     நண்பர்களே, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்றம் சென்றார் பன்னீர் செல்வம். தந்தைப் பெரியாரின் அன்பிற்கு உரியவரானார். பெரியார் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபின், பெரியாருக்கு அடுத்த தலைவராக, அதாவது நீதிக் கட்சியின் துணைத் தலைவராக பன்னீர் செல்வம் உயர்ந்தார். செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் பெரியார் எதையும் செய்ததில்லை.
 
ராஜா சர் முத்தையா செட்டியார், ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார்
      பன்னீர் செல்வம் மட்டுமல்ல உமாமகேசுவரனாரும் தந்தைப் பெரியாரின் அன்பிற்கும், முழு நம்பிக்கைக்கும் உரியவராய்த் திகழ்ந்தார். நண்பர்களே, இதில் வியப்பிற்கு உரிய செய்தி ஒன்றுள்ளது. ஆம் பெரியார் நாத்திகவாதியாய் விளங்கிய போதிலும், பெரியாரின் முழு நம்பிக்கையினைப் பெற்ற இவர்கள் இருவருமே ஆத்திக வாதிகள்.

     நண்பர்களே, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்படுத்தப் பட்ட சைமன் கமிஷன், தனது அறிக்கையினை 1930 இல் தாக்கல் செய்ததையும், இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகள் பற்றியும் நாம் அறிவோம். முதல் வட்ட மேசை மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொள்ளவில்லை, ஆனால் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். நண்பர்களே, இந்த இரு மாநாடுகளிலும், இந்திய கிறித்தவர்களின் சார்பாக, கலந்து கொண்ட பெருமைக்கு உரியவர்தான் சர் ஏ.டி. பன்னீர் செல்வம்.
 
முதல் வரிசையில் வலமிருந்து நான்காவதாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருப்பர் ஏ.டி.பன்னீர் செல்வம், அடுத்ததாக அமர்ந்திருப்பவர் அம்பேத்கார்
     1934 ஆம் ஆண்டு ஜுன் மாதம், சென்னை மாகாண அரசின் உள்துறை அமைச்சராக சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நியமிக்கப் பட்டார்.

     நண்பர்களே நேர்மையின் இலக்கணம் செல்வம். இவர் உள் துறை அமைச்சராய் விளங்கிய காலத்தில், இவரது சொந்த மருமகன் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பதவியினைப் பெற முயன்றபோதும், செல்வம் அதற்கு இணங்கினாரில்லை. அத்தகைய நேர்மையாளர்.
 
தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா.
மாலையுடன் அமர்ந்திருப்பர் பன்னீர்.நிற்பவர்களில் முதல் வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்பவர் உமாமகேசுவரனார்
      1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவரானார். காங்கிரஸ் வந்ததும், கட்டாய இந்தியும் வந்தது. தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது.

     நண்பர்களே, கட்டாய இந்தியை எதிர்த்து, முதல் தீர்மானத்தை இயற்றிய அமைப்பு எது தெரியுமா? ஆம்  நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கம்தான்.

     இராஜாஜி அவர்கள் கட்டாய இந்தி குறித்த, தன் எண்ணத்தினை வெளிப்படுத்திய 16வது நாளே, 28.8.1937 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், உமாமகேசுவரனாரால், முதல் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கமும் களத்தில் இறங்கியது.

      தந்தைப் பெரியார் இந்தி எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றினார். பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். தஞ்சையிலே பேராட்டத்தில் இறங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், உமாமகேசுவரனார், ஐ.குமாரசாமி பிள்ளை  போன்றோர் தஞ்சை சிறையில் அடைக்கப் பட்டனர்.
 
அன்றைய ஜெயில், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளி
     நண்பர்களே, இந்தியை எதிர்த்து பன்னீரும், உமாமகேசரும் சிறையிருந்த இடம், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாய் செயலாற்றி வருகின்றது.

     இந்நிலையில், ஆளுநரைக் கண்டு மக்களின் மன நிலையை உணர்த்த தூதுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. அக்குழுவில் தந்தைப் பெரியார், நாவலர் பாரதியார் மற்றும் த.வே.உமாமகேசுவரனார் மூவரும் இடம் பெற்றனர். மூவரும் ஆளுநரையும் சந்தித்தனர்.

      நண்பர்களே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, ஒரு நாள் எட்டய புரத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமை நாவலர் பாரதியார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட முத்தமிழ்க் காவலர் முழங்கிக் கொண்டிருந்தபோது, மேடையில்  இருந்தவர்களை நோக்கி சரமாரியாய் கற்கள் வீசப்பட்டன.
 
        காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டம் நிறுத்தபட்டும், கல் மாரிப் பொழிவது மட்டும் நிற்கவில்லை. பாரதியாரையும், முத்தமிழ்க் காவலரையும் பெரும்பாடு பட்டுக் காத்த காவல் துறையினர், கல் எறிந்த 32 பேரைக் கைது செய்து வழக்கும் பதிந்தனர். ஆனால் அரசோ, அவ் வழக்கைத் தள்ளுபடி செய்து, கலகக்காரர்களை விடுதலை செய்தது.


        நண்பர்களே, செய்தியறிந்த பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் பொங்கி எழுந்தார். முதல்வர் இராஜாஜியுடன் நேருக்கு நேர் விவாதத்தில் இறங்கினார்.

செல்வம் – இப்படி வழக்கினை ரத்து செய்து விடுவித்தால், சமுக  
           விரோதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக ஆகிவிடாதா?
இராஜாஜி – பொதுக் கூட்டங்களில் பேசுகிறவர்கள், மக்களை 
           பதற்றமடையச் செய்யாத வகையிலும், மாற்றாரைப் 
           பழித்துரைக்காத முறையிலும் பேசுதல் வேண்டும்
செல்வம் – சோமசுந்தர பாரதியாரைப் போலவும், கி.ஆ.பெ.விசுவநாதத்தைப் 
           போன்றும் உயர்தரமும் ஆற்றலும் பண்பாடும் கொண்ட
           பேச்சாளர்களை, நான் இதுவரையில் சட்ட மன்றில் கூடக்
           கண்டதில்லை. அன்றியும் அரசே தன் விருப்பப்படி
           குற்றவாளிகளின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தால்,   
           இது எங்கே கொண்டுபோய் விடுமோ? எதில் சென்று
           முடியுமோ?
அமைச்சர் – குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனக் கண்டதாலேயே 
             அவற்றை அரசு ரத்து செய்தது.
செல்வம் -  ஒவ்வொரு குற்றச்சாட்டினையும் அரசே ஆராய்ந்து பார்த்து,
            எந்தக் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது, எது அடிப்படை
            உள்ளது எனத் தீர்ப்பு வழங்க முற்பட்ட்டால், பின் நீதி
            மன்றங்கள் எதற்கு? வழக்குரைஞர்கள்தாம் எதற்கு?

இராஜாஜி சார்பில் பதில் வரவில்லை.

செல்வம் -  காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு சட்டம், எதிரானவர்கட்கு ஒரு சட்டம்
            என்றால், இந்நாட்டில் அராஜக ஆட்சி நடப்பதாகவே அர்த்தம்.

இதற்கும் பதில் கூறவில்லை. இப்படிச் செல்வம் சினம் கொப்பளிக்க ஆவேசமுடன் சாடியபோது, அவையே கப்சிப். முதல்வரோ, அமைச்சரோ மூச்சே விடவில்லை. உண்மையான தருக்கவாதிகளுக்கு எப்படிப் பதில் தர முடியும். பின்பொருமுறை, சட்டமன்றத்தில் முதல்வர் இந்தி எதிர்ப்பு பற்றிப் பேசும்போது,

இராஜாஜி –  பாரதியாரும், பெரியாரும்தானே இந்தியை எதிர்க்கிறார்கள்?
செல்வம் –  அப்படியானால், நீங்கள் ஒருவர்தானே இந்தியை
            ஆதரிக்கிறீர்கள்

     நீதிக் கட்சியின் தொடர் போராட்டத்தால் இந்தி பின்வாங்கியது. இந்தியை வெளியேற்றிய மகிழ்ச்சியில், சற்று இளைப்பாறுவதற்குள், இரண்டாம் உலகப் போர் முன் வந்த நின்றது.

     இரண்டாம் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவை ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவின் சார்பில், இந்த அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சருக்கு உதவியாக, ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

     நண்பர்களே, 10.1.1940 அன்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், இந்த ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஏ.டி.பன்னீர் செல்வம்

      இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெறவிருந்த போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 26.2.1940 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு, பம்பாய் சென்றார்.

     பம்பாயில் தமிழவேள் உமாமகேசுவரனாரின் உறவினர், மின் ஆற்றல் பொறியாளர் தியாகராச பிள்ளை என்பாரின் வீட்டில் தங்கினார்.

     மறுநாள் பம்பாயில் இருந்து புறப்பட்டு, விமானம் மூலம் கராச்சி சென்றார். கராச்சியில் இருந்தவாறு, தந்தைப் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதுதான் தான் எழுதும் கடைசிக் கடிதம் என்பதை செல்வம் அப்போது உணரவில்லை.

                                                விமான நிலையம்,
                                                கராச்சி,
                                                29.2.1940
எனது அன்புள்ள தலைவர் அவர்கட்கு,
      நேற்று மாலை பம்பாயிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் எந்த பிளேனில் போகிறதாயிருந்தேனோ, அந்த பிளேன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. அநேகமாய் இன்று மாலை இங்கு வந்து சேரும். நாளை காலை 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து கிளம்புவேன். ஆகவே வரும் திங்கட்கிழமை லண்டன் போய்ச் சேருவேன் என்று எண்ணுகிறேன்.
                                                இப்படிக்கு,
                                               தங்களன்புள்ள,
                                              பன்னீர் செல்வம்

     1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் அதிகாலை,இராணுவ விமானமாகிய அனிபால், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களையும், மூன்று ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளையும், நான்கு விமானப் பணியாளர்களையும் சுமந்து கெண்டு விண்ணில் ஏறியது. ஆனால் தரை இறங்கவே இல்லை.

      நண்பர்களே, விமானத்தின் சிதறிய பாகங்களைக் கூட கண்டு பிடிக்க இயலவில்லை. ஓமான் தீபகற்பத்தின் அருகில் ஓமார் வளைகுடா பன்னீர் செல்வத்தை வாரி அணைத்துக் கொண்டது. வானூர்தியில் ஏறி மறைந்த மற்றொரு சுபாஷ் சந்திர போஸ், நமது பன்னீர் செல்வம்.

      இராணுவ விமானங்கள் பல, ஓயாது பறந்து, ஓமான் வளைகுடாவையே சல்லடையாய் சலித்துத் தேடின. பயன்தானில்லை.

     தமிழ் மொழி தம் தாய்மொழி என்பதையும், தமிழ் இனம் தம் இனம் என்பதையும், என்றும் மறவாது, தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், செயலிலும், தமிழர்தம் முன்னேற்றத்தையே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்த பன்னீர் செல்வம், தமிழக மக்கள் அனைவரையும் துன்பக் கடலில் மிதக்க விட்டுவிட்டு, தான் மட்டும் ஓமான் கடலில் கரைந்து போனார்.


     என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கைதானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசையல்லவா என்று கருதினேன். பத்து வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த, ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து, சரியாக இருபதாவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை, கதறவில்லை.

     பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகின்றது. தமிழர்களைக் காணும் தோறும் தமிழர் நிலையை எண்ணும்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

     காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுகத் துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும், நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது. இவருக்குப் பதில் யார் என்று மனம் திகைக்கிறது
என்று பதறிய தந்தைப் பெரியாரின் வார்த்தைகளே பன்னீர் என்னும் தமிழ்ச் செல்வத்தின் அருமையை, பெருமையை பறைசாற்றும்.


     பன்னீர் செல்வம் மறைந்த செய்தி கேட்டுப் பதறினார், நெஞ்சம் கலங்கினார் உமாமகேசுவரனார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, கரந்தைப் பன்னீர் செல்வம் தமிழ்க் கல்லூரி எனப் பெயரிட, தீர்மானம் நிறைவேற்றி ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டார். ஆனால், பன்னீர் செல்வத்தைப் போலவே, உமாமகேசுவரனாரிடமும், இயற்கை தன் விளையாட்டை விளையாண்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

     நண்பர்களே, தமிழவேள் உமாமகேசுவரனார் 1938 ஆம் ஆண்டில், கரந்தைப் புலவர் கல்லூரியைத் தோற்றுவித்தார். கல்லூரி ஓராண்டு நடைபெற்ற நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்தார், கல்லூரிக்கு அனுமதியினை வழங்க மறுத்தனர். காரணம் ரூ.25,000 முதற் பொருளாக செலுத்த வேண்டும் என பல்கலைக் கழகம் வற்புறுத்தியது.

      தொடங்கிய நாள் தொட்டு, பொருளாதார நெருக்கடியிலேயே வளர்ந்து வந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடம் ஏது அவ்வளவு பணம். தொடங்கிய முதலாண்டிலேயே கல்லூரி மூடப்பட்டது.

     உள்ளம் தளராத உமாமகேசுவரனார், திருச்சி பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் உதவியுடன், அந்த அறக்கட்டளைச் சொத்துக்களையே முதற் பொருளாய்ச் சமர்ப்பித்து, கல்லூரியை மீட்டெடுக்க முனைந்து வெற்றியும் கண்டார். ஆயினும் பல்கலைக் கழகத்தின் இசைவு ஆணை வரும் முன், வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கவி இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனைக் காண.

      உமாமகேசுவரனாருக்கு ஒரு பேராசை. பல்கலைக் கழகத்தின் இசைவினையே பெற இயலாமல் தத்தளித்த போதும், கல்லூரியினை, சாந்தி நிகேதனத்தைப் போல், ஒர் பல்கலைக் கழகமாய் உயர்த்திப் பார்த்திட வேண்டும் என்ற இடையறா கனவு.

      கனவோடு, இலட்சியத்தோடு பயணித்த உமாமகேசுவரனாரை வழியில் மடக்கிப் பிடித்தது இயற்கை. உடல் நலம் குன்றினார். கங்கைக்கு அருகில் பைசாபாத் என்னும் சிற்றூரில், இயற்கையிடம் தோற்று, நிறைவேறா இலட்சியங்களுடன், சரயு நதிக் கரையில் தீ கொழுந்துகளுக்கு உணவாகிப் போனார்.

      நதிக் கரையில் தீயில் கரைந்து போனதால், கடலில் கரைந்த நண்பரின் பெயரினைச் சூட்ட வேண்டும் என்ற உமாமகேசுவரனாரின் உன்னத எண்ணம், காற்றில் கரைந்தது.

ஆங்கில  நாட்டில்  நல்ல
    இந்திய  அமைச்ச  னுக்குத்
தீங்கிலாத்  துணையாயச்  சென்றான்
    சர்பன்னீர்ச்  செல்வன்  தான்மேல்
ஓங்கிய  விண்வி  மானம்
    உடைந்த்தோ  ஒலிநீர்  வெள்ளம்
தூங்கிய  கடல்  வீழ்த்  தானோ
     துயர்க்  கடல்  வீழ்ந்தோம்  நாங்கள்
-          பாவேந்தர் பாரதிதாசன்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.