10 ஜனவரி 2014

புதியதோர் உலகில் ஓர் நாள்

   

  நண்பர்களே, கடந்த 5.1.2014 ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள் என்றாலே ஒரு வித சோம்பலும் சேர்ந்தே வந்துவிடுகிறது. காலையில் சற்று தாமதமாகத்தான் கண் விழித்தேன்.


     நண்பர் துரைபிள்ளை நடராசன் அவர்களின் அழைப்பு, அலைபேசியில் பாடலாய் ஒலித்தது. வெற்றிவேல் முருகன் இரும்புத் தலைக்கு வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார். இதோ வருகிறேன் என்றேன்.

     தங்களுக்கும் வெற்றிவேல் முருகனை நினைவிருக்கும். வலைப் பூவின் வழி, தாங்களும் இவரைச் சந்தித்திருக்கிறீர்கள். இருளில் இணைந்த இதயங்கள் இருவரையும், சுவாமிமலை கோயிலில், அவர்களின் திருமணத்தன்று சந்தித்தோமே நினைவிருக்கிறதா? ஆம் நண்பர்களே அவர்களேதான்.

      இருளில் இணைந்த இதயங்கள் என்னும் தலைப்பில், பதிவினை வெளியிட்ட அடுத்த நாளே, திரு வெற்றிவேல் முருகன் அவர்கள் அலைபேசியில் என்னை அழைத்தார்.

     சார், உங்களது கட்டுரையினைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையினைப் படித்துக் கருத்துரை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த முறை இரும்புத் தலைக்கு வரும்பொழுது, உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

     உங்களோடு பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் போன்ற மனிதர்களின் உணர்வுகள், செயல்பாடுகள் குறித்துப் பேச ஆசைப் படுகின்றேன். நீங்கள் இதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். என் போன்றோரை, இவ்வுலகம், இன்னும் முழுமையாய் புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன் என்று கூறியிருந்தார்.

           வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினர், திருமணத்திற்குப் பின், இன்றுதான் இரும்புத் தலைக்கு வந்துள்ளனர்.

    
நண்பர் நடராசன்
காலை 10.00 மணியளவில், நண்பர் துரைபிள்ளை நடராசன் அவர்களும் நானும், இரு சக்கர வாகனத்தில் தஞ்சையில் இருந்து புறப்பட்டோம். 20 கி.மீ தொலைவுதான். முப்பதே நிமிடங்களில் இரும்புத் தலையில் இருந்தோம்.


     மலர்ந்த முகத்துடன் இரு கரம் கூப்பி எங்களை வரவேற்றனர் வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினர். முருகனின் தந்தையாரும் உடன் இருந்தார்.

    முருகன் பேசத் தொடங்கினார். பிறவி முதலே கண் பார்வையினை இழந்தவர்களில் பல வகையினர் உள்ளனர். கண்களில் கரு விழியே இல்லாமல் இருப்பவர்களுக்கு மட்டும்தான், காணுகின்ற காட்சி எல்லாம் இருளாகவே இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல. கண்களில் கரு விழிகள் உள்ளன. காட்சிகளைக் காண இயலாதே தவிர, வெளிச்சத்தை உணர முடியும். சிலரால் வண்ணங்களைக் கூட பிரித்து அறிய முடியும் என்றார்.

     கேட்டால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள். எங்களால், நாங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு நபர்களையும், அவர்களின் உடல் வாசனையில் இருந்தே, வேறுபடுத்தி, இவர் யார், இவருடைய பெயர் என்ன, நமக்கும் இவருக்கும் உள்ள உறவு என்ன என்பதை உணர முடியும் என்றார்.

     இந்த அறையில், இப்பொழுது நான், எனது தந்தை, நீங்கள், எனது மனைவி, எனது மைத்துனர், சித்தப்பா நடராசன், எனது மாமனார் என எழுவர் உள்ளோம். என்னால் மற்ற அறுவரின் இருப்பை உணர முடிகிறது. புதிதாக ஒருவர், இந்த அறைக்குள், சத்தம் ஏதுமின்றி நுழைவாரேயானால், அடுத்த நொடியே, அவரின் வருகையை உணர்ந்து விடுவேன். ஒவ்வொருவருக்கும் கைவிரல் ரேகை, எவ்வாறு மாறுபடுகிறதோ, அவ்வாறே உடலின் வாசமும் வேறுபடும். எனவே புதியவர் ஒருவரின் வருகையை, அவரது வாசமே காட்டிக் கொடுத்துவிடும் என்றார்.

     வாசனையினால் மட்டுமல்ல, ஒருவர் நடந்து வரும் பொழுது, கால்கள் பூமியில் படுவதால், எழும்பும் ஓசை இருக்கிறதல்லவா, அதிலிருந்தே, யார் வருகிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுவேன் என்றார். ஒவ்வொருவரின் நடையும் வேறுபடும், ஒவ்வொரு நபரும், கால்களைத் தரையில் ஊன்றும் விதத்தில் இருந்தும், கால்களைத் தரைவில் தேய்த்தவாரே நடக்கும் பொழுது எழும்பும் ஓசையில் இருந்தும், ஒவ்வொருவரையும், தனித்தனியே பிரித்து அறிய எங்களால் முடியும் என்றார்.

     நடிகர் விக்ரம் அவர்கள், தாண்டவம் என்னும் ஓர் படத்தில், பார்வையற்றவராக நடித்திருப்பார் என்று, நான் கூறி முடிப்பதற்குள், ஓ கென்னி என்ற மனிதராக நடித்திருக்கிறார் அல்லவா என்றார். மலைத்துப் போய்விட்டேன்.

     தாங்கள் தாண்டவம் திரைப்படத்தினைப் பார்த்திருக்கலாம். அப்படத்தில் நடிகர் விக்ரம், கென்னி என்ற பாத்திரத்தில், பார்வை அற்றவராக நடித்திருப்பார். பார்வை அற்றவர்களுக்கானப் பயிற்சிப் பள்ளி ஒன்றினையும் அப்படத்தில் காட்டுவார்கள். அப்பள்ளியில் பலர் வாய்மூலம் ஒவ்வொரு நிமிடமும், ஒரு சிறு ஒலியினை எழுப்பி, அந்த ஒலியின் எதிரொலியை உணர்ந்து, அறிந்து (வௌவ்வால்கள் பறக்கிறதல்லவா, எதிரொலியைப் பயன் படுத்தி Eco System) சாலைகளில் வெகு இயல்பாக நடந்து செல்வதையும், மிதி வண்டி ஓட்டிச் செல்வதையும் காட்டுவார்கள்.

     முருகன் கூறினார். உண்மை நண்பரே அது. எங்களது ஒவ்வொரு செயலும் எதிரொலியை மையமாக வைத்தே அமையும். இதோ இந்த அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் பேசும் பொழுது, ஒவ்வொருவரும் உச்சரிக்கும் வார்த்தைகள், இவ்வறையின் சுவர்களில் மோதி, சுவற்றில் அடித்த பந்து போல் மீண்டும் திரும்பி நம்மிடமே வருவதை என்னால் உணர முடிகிறது. நமது பேச்சின் முலம் உண்டாரும் எதிரொலியை வைத்தே, இந்த அறையின் நீள அகலங்களை என்னால் மதிப்பிட முடியும் என்றார்.

     விக்ரம் நடித்தப் படத்தில் காட்டும் முறையினை, இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்கிறார். ஏனென்றால், மற்ற நாடுகளின் சாலைகள் அமைதி நிறைந்தவை. முறைப்படுத்தப் பட்ட பயணம் அவர்களுடையது. ஆனால் இந்தியச் சாலைகளில், எப்பொழுது பார்த்தாலும், வெண்கலக் கடைக்குள் யானை புகுந்ததைப் போல, சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இரைச்சல் மிகுந்த  இந்தியச் சாலைகளில், எதிரொலியைத் துல்லியமாய் உணர்ந்து நடக்க எங்களால் இயலாது என்றார்.


நண்பர்களே, இப்பதிவிலுள்ள படங்களில், எனக்குப் பின்னால், வெள்ளை சட்டை, கைலியுடன் ஒரு வாலிபர் நிற்பதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இந்த இளைஞனின் பெயர் கார்த்திக். நித்யாவின் சகோதரர். சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஃபில்., பயின்று முடித்துள்ளார். தொடர்ந்து டாக்டர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறார்.

       நண்பர்களே இந்த கார்த்திக்கும் பிறவி முதலே கண் பார்வை அற்றவர்தான். இறைவனின் திருவிளையாடலைப் பார்த்தீர்களா? இரும்புத் தலையில் இருந்து, தனியாகவே புறப்பட்டு, சென்னைத் தரமணிக்குச் சென்றுவிடுவேன். யார் துணையும் எனக்குத் தேவையில்லை என்கிறார்.

       கடந்த மாதம், கார்த்திக் சென்னை சென்ற பொழுது, எலும்பூர் தொடர் வண்டி நிலையத்தில், காத்திருந்து, அவரை அழைத்துச் சென்றது யார் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், யார் துணையும் இன்றி, வந்திருந்து, இவரை வரவேற்றது, இதோ இந்த முருகன்தான். கேட்கக் கேட்க என் விழிகள் வியப்பால் விரிகின்றன. எப்படி நீங்கள், இவரை வரவேற்க முடியும்? மனம் நினைப்பதற்குள், வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டன.

     முருகன், கார்த்திக் இருவருமே சிரித்தனர். எங்களால் முடியும் என்றனர். என்னிடம் வார்த்தைகள் இல்லை. அமைதியாய் அவர்களைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

     தொடர் வண்டி நிலையத்திற்குள் சென்றவுடன், முருகன் கார்த்திக்கை அலைபேசியில் அழைப்பார். கார்த்திக்கின் அலைபேசியில் இருந்து வரும் ஒலியுடன், முருகன் அவர்கள், அப்பொழுது, தான் நிற்கும் இடத்தில் உண்டாகும் ஒலியையும் ஒப்பிட்டுப் பார்ப்பார். வெவ்வேறு விதமான ஒலிகள் கேட்டால், மெதுவான முன்னேறி நடப்பார். எவ்விடத்தில், அலைபேசி வழியாக வருகிற ஒலியும், அலைபேசியைப் பயன்படுத்தாக, காதின் மூலம் வருகிற ஒலியும் ஒத்துப் போகிறதோ, அவ்விடத்தில் கார்த்திக் இருப்பதை அறிவார்.

     கார்த்திக் நீ இருக்குமிடத்திற்கு வந்துவிட்டேன் என அலைபேசியில் தெரியப்படுத்துவார். சரி, இதோ ஸ்டிக் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியவாரே அலைபேசியை கார்த்திக் துண்டிப்பார்.

    
     கண் பார்வையினை இழந்தவர்கள் பயன்படுத்துகிறார்கள் அல்லவா, ஒரு கைத்தடி, அதன் பயனே அலாதியானது. அக் கைத்தடி, நடப்பதற்கு மட்டுமல்ல, தங்களைப் போன்றவர்களை, ஒருவருக்கொருவர் அடையாளம் காணுவதற்கும்தான்.

     கார்த்திக் கைத்தடியைத் தரையில் தட்டியவாறு நடந்து வருவார். தொடர் வண்டி நிலையத்தில் உண்டாகும் அனைத்து வித, ஒலிகளில் இருந்தும், முருகன், அக்கைத்தடியின் ஒலியினை பிரித்து அறிந்து கொள்வார். உடனே இவரும், தனது கைத்தடியினைப் பயன்படுத்தி ஒலிவரும் திசையில் நடப்பார். விரைவில் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொள்வார்கள்.

    

        இவர்கள் வாழும் உலகம், நாம் வாழும் உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அது ஒரு புதியதோர் உலகம். அமைதி மயமானது. அன்பு மயமானது. போட்டி, பொறாமை, வஞ்சனை போன்ற வார்த்தைகளில் பொருள் கூட அறியாத அற்புத உலகம். இவர்களது உலகில் சஞ்சரிக்க எனக்கும் ஓர் வாய்ப்பு கிட்டியதை எண்ணிப் பெருமைப் பட்டவாறு, சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தேன். பிறகு கேட்டேன்.

      தங்களின் திருமணத்தைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். படித்தேன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என அலைபேசி வழியாக அழைத்து, வலையுலக உறவுகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தீர்களே, எப்படிப் படித்தீர்கள்.

      முருகன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? நான் நன்றாக லாப் டாப் பயன்படுத்துவேன். எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. எப்படி, எப்படி, எப்படி என என்னையுமறியாமல், ஒரே கேள்வியையே மீண்டும், மீண்டும் கேட்டேன்.

     நித்யா எனத் தன் மனைவியை அழைத்தார். எனது லேப்பை எடுத்து வாயேன் என்றார். நித்யா அவர்களும், அறைக்குள் சென்று, லேப் டாப்பை எடுத்து வந்து கொடுத்தார்.

    


மடி கணினியை மடியில் வைத்துக் கொண்டு, அதற்கு உயிரூட்டினார். கணினியோ உயிர் பெற்று எழுந்து, பேசத் தொடங்கியது.

     நாமெல்லாம், மௌஸ்ஸின் உதவியுடன் கணினியை இயக்குகிறோம். இக்கணினியோ, உபயோகிப்பாளரை, குரல் மூலம் வழி நடத்துகிறது. கணினியில் ஏராளமாக நூல்களை சேமித்து வைத்துள்ளார். ஒவ்வொரு நூலாகக் காட்டினார்.

       நூல்கள் பி.டி.எஃப்., வடிவில் இருந்தன. அந்நூலினைத் திறந்தவுடன், அந்நூலின் ஒவ்வொரு வரியையும், கணினியே படித்துக் கூறுகிறது. கணினியில் சினிமா பாடல்களைக் கேட்போமில்லையா? அதைப் போலவே, நூலின் ஒவ்வொரு வரியினையும், கணினி படித்து உரக்கக் கூறிக் கொண்டே வருகிறது.

           ஒரு முக்கியமான செய்தியைத் தங்களிடம் கூற வேண்டும். நீங்களும் நம்பித்தான்ஆக வேண்டும். நான் கண்ணால் கண்டேன், காதால் கேட்டேன். இது உண்மை நண்பர்களே உண்மை, கலப்படமில்லாத உண்மை.

     செய்தியினைக் கூறட்டுமா நண்பர்களே, நூலின் ஒவ்வொரு வரியையும் கணினி படித்துச் சொன்னது என்று கூறினேன் அல்லவா?, அக்கணினியின் வேகம் என்ன தெரியுமா நண்பர்களே? ஒரு நிமிடத்திற்கு ஐநூறு வார்த்தைகளை கணினி உச்சரிக்கின்றது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஐநூறு வார்த்தைகளை கணினி உச்சரிக்கின்றது.

      நண்பர்களே, என் காதால் கேட்டேன். நாம், நம் வீட்டிலுள்ள, குறுந்தகட்டில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். குறுந்தகடு ஒரு சீரான வேகத்தில், மெதுவாக சுழல்வதால், பாடலின் வரிகள், இனிமையாய் இசையுடன் நம்மை மயக்குகின்றன.

       ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். குறுந்தகடானது சுழலும் வேகத்தினை முடிந்த அளவிற்கு, அதிகப்படுத்தினால் என்னவாகும். ஐந்த நிமிடம் நீண்டு ஒலிக்க வேண்டிய பாட்டு, அரை நிமிடத்தில் முடிந்து விடும் அல்லவா?. அரை நிமிடத்தில் அப்பாடலைக் கேட்டால், நமக்கு ஏதேனும் புரியுமா?

      ஒரு நிமிடத்திற்குள் கணினி ஐநூறு வார்த்தைகளை உச்சரிக்கின்றது. முருகனோ. தன்னை மறந்து ரசித்துக் கேட்கின்றார். ஒவ்வொரு வார்த்தையையும், தெளிவாய் என் காதுகள் கேட்கின்றன என்கிறார். இது முருகன் போன்றோரின், தனிப்பட்ட  சக்தி, திறமை.

      நண்பர் முருகன் அவர்கள், நான் அவரின் திருமணம் பற்றி எழுதியப் பதிவினை, இவ்வாறுதான் கேட்டு ரசித்தேன், மகிழ்ந்தேன் என்றார்.

      ஆம் நண்பர்களே, நமது வலைப் பூக்களில், நம் பதிவிடும் வார்த்தைகளையும் இவரது கணினி. இவருக்குப் படித்துக் காட்டுகிறது. விஞ்ஞானத்தின் இன்றைய வளர்ச்சி அப்படி.

     சிறிது நேரம் பேச்சு, பல திசைகளிலும் சென்றது. பின்னர் நான் கேட்டேன். சுவாமிமலையில், திருமணத்தன்று, பதிவேட்டில் கையொப்பம் இட்டீர்களே எப்படி?.

     நாங்கள் அனைவருமே கையெழுத்துப் போடுவோம். எங்களுக்கு என்று தனியே எழுதும் முறை ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றார்.


    

பிரைலி முறையில் படிப்பீர்கள் என்று தெரியும். எப்படி எழுதுவீர்கள்? என்றேன். பிரைலி முறையிலேயே எழுதுவோம் என்றார்.

     பிரைலி முறையிலானப் புத்தகங்களில், எழுத்துக்களானது, தாள்களை விட்டு சிறிது, மேலே உப்பிய வடிவில் இருக்கும். இவ்வெழுத்துக்களைத், தங்களது விரல்களால் தடவி, உணர்ந்து படிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பிரைலி முறையில் எழுதவும் முடியும் என்பது, நான் இதுவரை அறிந்திராத செய்தியாக இருந்தது.

     எனக்காக எழுதிக் காட்டுங்களேன் என்றேன். நித்யா அந்த சிலேட்டை எடுத்து வா என்றார். நித்யா எடுத்து வந்து கொடுத்தார்.
    





   அது ஒரு பிளாஸ்டிக் அட்டை. இரண்டு பிளாஸ்டிக் தகடுகள் ஒன்றின் கீழ் ஒன்றாக, இணைக்கப்பட்டிருந்தன. புத்தகத்தின் அட்டையினைப் புரட்டிப் பார்ப்போமல்லவா? அது போல் இரண்டு பக்கங்கள் மட்டுமே உள்ள, ஏ4 அளவுள்ள அட்டை.

     மேல் அட்டையில், மேலிருந்து கீழ் நோக்கிய செவ்வக வடிவிலான ஒட்டைகள் இருந்தன. அந்த அட்டையில் இடமிருந்து வலமாக 30 செவ்வக வடிவ ஓட்டைகளும், மேலிருந்து கீழாக 27 ஓட்டைகளும் இருந்தன.

     ஒவ்வொரு செவ்வக வடிவிலான ஓட்டைக்கு உள்ளும், ஆறு சிறிய ஓட்டைகள். இரண்டிரண்டாக, மேலிருந்து கீழாக மூன்று வரிசைகளில் ஆறு ஓட்டைகள். வலப்புறம் மேலே இருக்கும் ஓட்டையின் எண்.1. அதற்கும் கீழே இருப்பது எண் 2. அதற்கும் கீழே எண் 3. இடதுபுறம் மேலே இருக்கும் ஓட்டையின் எண் 4, அதற்கும் கீழே எண் 5, அதற்கும் கீழே எண் 6.

4 1
5 2
6 3

    ஒன்று முதல் ஆறு வரையிலான ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள். எழுத்துக்கள் இவர்களுக்கு தலைகீழ் மனப்பாடம். எழுத்தாணி ஒன்று வைத்திருக்கிறார். பார்த்தேன் உண்மையிலேயே கூர்மையான ஆணிதான்.

    

இரண்டு பிளாஸ்டிக் அட்டைகளுக்கும் இடையில் ஒரு வெள்ளைத் தாளை வைத்து மூடினார். தான் எழுத வேண்டிய எழுத்துக்களுக்கு உரிய ஓட்டைகளில், எழுத்தாணியால குத்துகிறார். முதல் வரிசையில், வலப்புறத்தில் தொடங்கி, இடது புறமாக குத்திக் கொண்டே வருகிறார். பின் இரண்டாவது வரியினை, வலப்புறத்தில் இருந்து தொடங்கி மீண்டும் இடப்புறமாக.

     எழுதி முடித்தபின், அட்டையினை இரண்டாகப் பிரித்து, நடுவிலுள்ள தாளை எடுக்கிறார். தாளினைத் திருப்பி, மேற் புறத்தினை உட்புறமாகவும், வெளிப் புறத்தினை உட்புறமாகவும் மாற்றி, மடியில் வைத்துக் கொண்டு, தனது விரலால், இடது புறத்தில் இருந்து தொடங்கி, வலப்புறம் நோக்கிய நகர்த்தி, தடவியபடியே, ஒவ்வொரு எழுத்தாக மனதிற்குள்ளாகவே கூட்டி, படுவேகமாகப் படிக்கிறார்.

      தாளில் ஓட்டையிடும் பொழுது, வலப்புறத்தில் இருந்து இடது புறமாக ஓட்டையிடுகிறார். ஓட்டையிட்ட பின் தாளினைத் திருப்பி, இடது புறத்தில் இருந்து வலது புறமாகத் தடவிப் படிக்கிறார். அசந்து போய்விட்டேன் நண்பர்களே, அசந்து போய்விட்டேன்.

     அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திக், நாங்கள் பள்ளிக் கூட நாட்களில், ஆசிரியர்களிடம் அதிகம் அடி வாங்கியதே, இந்த எழுத்துப் பயிற்சிக்காகத்தான். ஒவ்வொரு ஓட்டைக்கும் உரிய எழுத்தினை மனப்பாடம் செய்யச் சொல்லி, நாங்கள் மனப்பாடம் செய்கிற வரை அடிப்பார்கள். அன்று பள்ளியில் நாங்கள் பெற்ற அடிகள்தான், இன்று எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அன்று எங்களை அடித்த அதே ஆசிரியர்கள், இன்று எங்களுக்குத் தெய்வமாகத் தோன்றுகிறார்கள். அன்று அவர்கள் அடித்து எங்களைக் கட்டாயப்படுத்தாமல் இருந்திருந்தால், இன்று எங்களது நிலை? நினைத்துப் பார்க்கவே பயமான இருக்கிறது என்றார்.

        கார்த்திக் பள்ளிக்கூட நாட்கள் பற்றி பேசியதும், முருகனின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவுவதைப் பார்த்தேன். எனது பத்தாம் வகுப்பு ஆசிரியரை என்னால் மறக்கவே முடியாது, அவர்தான் முதன் முதலில் எங்களுக்கு, உட்பார்வை மனிதர்கள் என்று பெயர் சூட்டினார் என்று கூறி நெகிழ்ந்து போனார்.

     நண்பர் முருகன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, அடி மனதில் ஒர் சந்தேகம் தோன்றிக் கொண்டே இருந்தது. சென்னை எலும்பூர் தொடர் வண்டி நிலையத்தில், கார்த்திக்கை வரவேற்றேன் என்று கூறினாரல்லவா? அப்பொழுது அலைபேசியில் கேட்கும் ஒலியினையும், தன்னைச் சுற்றிலும் கேட்டும் ஒலியினையும், ஒப்பிட்டுப் பார்த்து, கார்த்திக் இருக்கும் இடத்தினை அறிந்து கொள்வேன் என்றால் அல்லவா? எனது சந்தேகமே இங்குதான்.

     எப்படி கார்த்திக்கை அலைபேசியில் அழைத்தீர்கள் என்றேன். சிரித்துக் கொண்டே, நித்யாவை அழைத்து, அலைபேசியை எடுத்து வரச் சொன்னார்.

    

நாம் அன்றாடம் பயன்படுத்தும், நோக்கியா அலைபேசிதான் அது.

      மடி கணினியைப் போலவே, இந்த அலைபேசியும், முருகனுடன் பேசியது. உங்களது அலைபேசி எண்ணை, சேமிக்காமல் விட்டுவிட்டேன். உங்களது எண்ணைச் சொல்லுங்களேன் என்றார். 9 4 4 3 4 7 6 7 1 6 என்று மெதுவாக, ஒவ்வொரு எண்ணாகக் கூறினேன். அவர் விசைப் பலகையினை அழுத்த, அழுத்த, அலைபேசி அவர் பதிவிட்ட எண்னை ஒரு முறை வாசித்துக் காட்டியது.

     அடுத்துப் பெயரினைப் பதிய கரந்தை என்ற வார்த்தையின் ஆங்கில எழுத்துக்களைக் கூறுங்களேன் என்றார். K  A  R  A  N  T  H  A  I என்று ஒவ்வொரு எழுத்தாகக் கூற பதிவு செய்தார். JAYAKUMAR.  J  A y A  என ஆரம்பித்தேன், போதும் எனக்கூறி பெயரினையும் பதிவு செய்தார். பதிவிட்டு முடித்ததும், அலைபேசி கரந்தை ஜெயக்குமார் என்று கூறி, எனது எண்னையும் ஒரு முறை வாசித்துக் காட்டியது.

    

அருகில் இருந்த நண்பர் நடராசன் அவர்கள், முருகன் என்னை அலைபேசியில் அழையுங்களேன் என்றார். அலைபேசியைக் காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு, ஒரு விசையினை அழுத்த, அவர் ஏற்கனவே பதிவிட்டு வைத்திருந்த நபர்களின் பெயர்களை, அலைபேசி வரிசையாகக் கூறியது. அதிலிருந்து நடராசனின் பெயரினைத் தேர்வு செய்து, விசையினை அழுத்தினார். அடுத்த நொடி, நண்பர் நடராசனின் பையிலிருந்த அலைபேசி சிணுங்கத் தொடங்கியது.

     இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எங்களுக்குப் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது என்றார். அலைபேசியின் விலை என்ன என்றேன். இந்திய மதிப்பில் ரூ.40,000 என்றார்.

     நண்பர்களே, இதுவரை முருகன் மகிழ்ச்சியாகத்தான் பேசிக் கொண்டு இருந்தார். அலைபேசியின் விலையினைக் கேட்ட நொடியில், அவரது குரலில், ஓர் இனம் புரியாத வருத்தமும், சோகமும் கலந்து வெளிவருவதை என்னால் உணர முடிந்தது. காரணம் புரியவில்லை. ஏன் என்று கேட்பதா, கேட்காமல் விட்டுவிடுவதா என்றும் புரியவில்லை. எனினும் மனதில உள்ளதை வார்த்தைகளில் கேட்டுவிட்டேன்.

     நான் பயன்படுத்துகின்ற அலைபேசி மற்றும் மடி கணினியின் விலையும், நீங்கள் பயன்படுத்துகின்ற அலைபேசி மற்றும் மடி கணினியின் விலையும் ஒன்றுதான். பொருளின் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் அலைபேசியிலும், மடி கணினியிலும், எங்களின் தேவைக்காக, ஏற்றப்படும் மென்பொருளின் விலை அதிகம் என்றார்.

     நான் அமெரிக்காவில், டாக்டர் பட்டத்திற்காக ஆய்வினை மேற்கொண்ட பொழுது, அக்கல்வி நிறுவனத்தார், மடி கணினிக்கு உரிய மென் பொருளை இலவசமாகவே வழங்கினர். அலைபேசிக்கும் வேண்டும் என்று கேட்டேன். அலைபேசிக்கும் தங்களின் படிப்பிற்கும் தொடர்பில்லையே என்றனர். படிப்பு தொடர்பான வசதிகளை மட்டும்தான் இலவசமாக வழங்குவோம் என்றனர்.

     எனது படிப்பு தொடர்பாக, எனது கல்வி நிறுவனத்தையோ அல்லது எனது வழிகாட்டி ஆசிரியர்களையே, எதாவது ஒரு காரணத்திற்காக, வெளியூரில் இருந்து, நான் தொடர்பு கொள்ள நினைத்தால், என்னால் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்? என்று கேட்டேன். பதிலில்லை. ஆனால் அடுத்த நாளே, அலைபேசிக்கு உரிய மென்பொருளையும் இலவசமாகவே வழங்கினர் என்றார்.

    

எங்களுக்கு என்று பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்ட கண்ணாடியும் உள்ளது. சென்சார் வசதி பொறுத்தப் பட்ட கண்ணாடி அது. நாங்கள் நடந்து செல்லும் பொழுது, எதிரில் மனிதரோ. வாகனமோ வந்தாலும், கண்ணாடியில உள்ள சென்சார் செயல்பட்டு, எங்களின் காதுகளில் பஸ்ஸர் ஒலி ஒலிக்கும் என்றார்.

      அதேபோல் ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்திற்குப் பயன் படுத்த, அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ்., வசதியினையும் பயன்படுத்துவோம் என்றார்.

      உலகின் ஏனைய நாடுகள் அனைத்தும், தங்களின் நாடுகளில் உள்ள, முருகன் போன்றவர்களுகுத் தேவையான, அனைத்து உபகரணங்களையும் இலவசமாகவே வழங்கி உதவி வருகின்றன. ஆனால் நம் நாடு, எங்களைப் போன்றவர்களை கருணைக் கண் கொண்டு பார்ப்பதில்லை. அருகில் உள்ள பாண்டிச்சேரி கூட, பல வித உதவிகளைச் செய்து வருகிறது. ஆனால் நம் மாநிலம், எங்கள் விசயத்தில், எங்களைப் போலவே, காணாமல் இருந்து வருகிறது என்று ஆதங்கம் தேய்ந்த குரலில் கூறுகிறார்.

    
வெற்றிவேல் முருகனின் மைத்துனரும், மாமனாரும்
என்போன்ற மனிதர்களால், சாலைகளில் வாகனங்களில் அமர்ந்தவாறு, இசைக் கச்சேரிகள் மட்டுமே நடத்த இயலும் என்று, பலரும் எங்களைத் தவறாக குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் எங்களால், மற்றவர்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும். எனது மாமனார் இருக்கிறாரே, அவரும் என்னைப் போலத்தான். ஆனால் அவர் தினமும் வயலுக்குச் சென்று விவசாயம் செய்து வருகிறார்.

     கடலூரில் என்போன்றவர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம் அப்பகுதி மக்களின் அறியாமை. நெருங்கிய இரத்த உறவில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்றவுடன் முறையான மருத்துவம் பெறாமல் இருப்பது, தடுப்பூசிகளை ஒழுங்காக போட்டுக் கொள்ளாமல் இருப்பது இவைதான். கடலூருக்குச் சென்று பாருங்கள், என் போன்றவர்கள் மாட்டு வண்டிகளை ஓட்டிச் செல்வதைக் காணலாம்.

     நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நீங்கள் யாவரும், ஆட்டோகிராப் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலில் வருகிறாரே, கருப்புக் கண்ணாடி அணிந்த மனிதர் ஒருவர், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில், வெல்டிங் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி வருவது உங்களுக்குத் தெரியுமா?

     நான் படித்த காரணத்தினால், விஞ்ஞான வளர்ச்சியின் பயனை முழுமையாக அறிந்து கொண்டு, அவைகளை எனது அன்றாட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருகிறேன்.

    ஆனால் என் போன்று படிக்காதவர்களின் நிலையினை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி அறிவில்லாத, அறியாமை நிறைந்த பெற்றோர்களும் இருப்பார்களேயானால், அவர்களுக்கு இது போன்ற வசதிகள் இருப்பதே தெரியாமல் போய்விடும் அல்லவா?

      முருகனின் கோரிக்கை, வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக, ஆயிரக் கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் ஒதுக்கிச் செலவிட்டு வரும், அரசானது, ஆண்டுதேர்றும், என் போன்றவர்களுக்காக, வெறும் பத்து கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்து, அறிவியல் சாதனங்களை இலவசமாக வழங்கி, அவர்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்பதுதான்.

      முருகன் போன்றோர், நம்மைவிட, மிகப் பெரிய, மிக உன்னத, அன்புமயமான, உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உலகம் பெயரியது. அன்பு பெரியது.

     உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் என்று கூறுவர் நம் முன்னோர். இவர்கள் எல்லாம் விரிந்து, பரந்த உள்ளத்திற்குச் சொந்தக்கார்ர்கள்.

     இவர்களின் ஆசை, எதிர்பார்ப்பு அனைத்தும் மிக மிகச் சிறியது. அதைக்கூட நாம் இவர்களுக்கு வழங்கா விட்டால், என்ன செய்வார்கள் இவர்கள்.

நண்பர்களே,
விரைவில் வழி பிறக்கும்
இவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்
என
நம்புவோம்.