14 மார்ச் 2014

இரோம் சர்மிளா

     
அது ஒரு பேரூந்து நிற்குமிடம். அதிகாலையின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி, பேரூந்திற்காகப் பலர் காத்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் கலந்து நிற்கிறார்கள். அப்பொழுது, அவ்வழியாகச் சென்ற பச்சை நிற இராணுவ வாகனம், பேரூந்து நிறுத்தத்திற்கு முன் வந்ததும் நிற்கிறது. இரண்டு இராணுவ வீரர்கள் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள். இருவர் கைகளிலும் இயந்திரத் துப்பாக்கிகள். பேரூந்திற்காகக் காத்திருப்பவர்களை நோக்கி இருவரும் சரமாரியாகச் சுடுகிறார்கள்.


     அறுபத்தி இரண்டு வயதான லேசாங்பம் என்னும் வயதான பெண்மணி முதல், பதினெட்டே வயதான, வீரத்திற்காக தேசிய விருதினைப் பெற்ற, சினாம்சந்தரமணி என்னும் இளைஞன் வரை, அங்கு பேருந்திற்காகக் காத்திருந்த பத்து பேரும், அடுத்த நொடி, வேரறுந்த மரங்கள் போல், தரையில் விழுந்து துடிதுடித்து இறக்கின்றனர்.

     இராணுவ வீரர்கள் இருவரும், அமைதியாய், எதுவுமே நடக்காதது போல், வண்டியில் ஏறுகின்றனர். வாகனம் விரைகிறது.

     நண்பர்களே, படிக்கவே உள்ளம் நடுங்குகிறதல்லவா? இது கற்பனையல்ல, நிஜம். நெஞ்சைச் சுடும் நிஜம்.

     மணிப்பூர் மாநிலம், இம்பாலில் இருந்து, பதினாறு கி.மீ., தொலைவிலுள்ள மாலோம் என்னும் பகுதியில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியது.
    
பத்து பேர் கொல்லப்பட்டதன் நினைவிடம்
நண்பர்களே, இந்தக் கொடூரம் நடந்தது, 2000 வது ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் வியாழக் கிழமை. இக்கோரக் கொலையினைக் கண்டு மணிப்பூர் நடுங்கியது. சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்.

      

   அந்தப் பெண்ணின் வயது 28. இரு நாட்களாகவே அவர் மிகவும் குழப்பம் அடைந்திருந்தார். நாளிதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும், பேரூந்து நிலையப் படுகொலையைப் படங்களாகப் பார்த்த நொடியில் இருந்தே, அவருடைய கோபமும், வேதனையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

     இனியும் அமைதியாய் அமர்ந்து இருக்க முடியாது என்பது புரிந்தது. பரிகாரம் தேட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதையும் அவர் உணர்ந்திருந்தார். இருப்பினும், தனியொரு ஆளாய் என்ன செய்ய இயலும்? யோசித்தார். அவர் பெரிதும் நேசிக்கும் மகாத்மா காந்தி, தனது பொக்கைப் பல் தெரிய, மனதில் தோன்றி புன்னகைத்தார். என்ன செய்ய வேண்டும் என்பது, அடுத்த நொடியே அவருக்குத் தெளிவாய் தெரிந்தது.

     நவம்பர் 5, ஞாயிற்றுக் கிழமை. அவர் தனது அம்மாவின் அருகில் அமர்ந்து, அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு கூறினார், நம்முடைய நாட்டிற்காக, நான் சிலவற்றைச் செய்யப் போகிறேன். அதற்கு, எனக்கு, உன்னுடைய ஆசிர்வாதம் வேண்டும்.

     தாய் முதலில் கலக்கம் அடைந்தாலும், மனதைத் தேற்றிக் கொண்டு, மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.

     நிரபராதிகளான பத்து பேரை, இராணுவம் கொலை செய்த அதே இடத்தில், அவர் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
       நண்பர்களே, இந்த வீர மங்கை, இரும்புப் பெண்மணியின் பெயர் இரோம் சர்மிளா. சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு நாள், இரு நாள் அல்ல, 2000 வது ஆண்டு தொடங்கி இன்றுவரை, கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது.

     சர்மிளாவின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மணிப்பூர் மாநில, ஆயுதப் படைக்கு அளித்துள்ள, சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்.

     ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த மணிப்பூர், 1947 இல், இந்தியா சுதந்திரமடைந்த பொழுது, முழு சுதந்திர அதிகாரமுள்ள மன்னர் ஆட்சியின் கீழ் வந்தது.

     1949 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள், மணிப்பூர் இந்திய யூனியனில் இணைந்தது. 1972 இல் மணிப்பூர் முழு உரிமையுள்ள மாநிலமாய் மாறியது.

     அதற்கு முன்பே, தனி நாடு கேட்டும், மணிப்பூரை இரண்டு, மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடும் பல்வேறு ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் தோன்றி, அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

     இதுபோதாதென்று, மணிப்பூரில் மது ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தப் பெண்கள் களமிறங்கினர். நிசாபந்த் என்னும் ஓர் அமைப்பு தொடங்கப் பெற்றது. பள்ளிக் கூட ஆசிரியை சத்ரிமா தான் இதன் தலைவர்.

     இரவு நேரங்களில் பெண்கள் தீபங்களுடன், மதுக் கடைகளை முற்றுகையிட்டனர். இவர்கள் விளக்கேந்திய வீராங்கனைகள் (மெய்ரபெய்பிஸ்) என அழைக்கப்பட்டார்கள்.
    


     பெண்களின் போராட்டம் ஒரு புறம். போராட்டக்காரர்களின் செயல்பாடுகள் ஒரு புறம். போராட்டக்காரர்களை அடக்குவதற்கான, காவல் துறையினரின் வேட்டை ஒரு புறம். மக்கள் நிம்மதி இழந்தனர்.

     நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. 1980 ஆம் ஆண்டு மே மாதம், மணிப்பூரின் முதன் மந்திரி தொரந்தசோசங், புரட்சி இயக்கங்களை அடங்குவதற்கு மத்திய அரசின் உதவியை நாடினார்.

     எனவே, கலகக்காரர்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அடக்குவதற்காக, ஒடுக்குவதற்காக, மத்திய அரசின் ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெஷல் பவர்ஸ் ஆக்ட் (Armed Forces Special Powers Act) AFSPA  என்னும் சட்டம் 1980 ஆம் ஆண்டு மே மாதம், மணிப்பூரில் நடைமுறைக்கு வந்தது.

     பொதுமக்களின் அமைதிக்கு அவசியம் என்று தோன்றினால், ஒருவரைப் பார்க்கும் பொழுது, அவரால் பொது அமைதி கெடும் என்று தோன்றினால், முன்னறிவிப்புக் கொடுத்த பிறகு, அவரைச் சுட்டுக் கொல்லவும், மரணம் அடையும் வரை தண்டனை கொடுக்க பலத்தைப் பயன்படுத்தவும் இராணுவத்திற்கு அனுமதி உண்டு.

      இராணுவமோ, துணை இராணுவமோ, எவ்வித உத்தரவு நகலும் இன்றி, எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சோதனை இடலாம். யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யலாம்.

     கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மணிப்பூர் இந்த சட்டத்தினுடைய கெடுதலை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
    


2004 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் நாள் இரவு. கிராமத்தில் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டுள்ள குடியிருப்பில், ஒரு வீட்டின் கதவு பலமாகத் தட்டப் படுகிறது. வெளியே துப்பாக்கிகளுடன் நான்கு வீரர்கள். கதவைத் திறந்த, வயது முதிர்ந்த பெண்ணையும், அவரது மகளான மனோரமா என்பவரையும் வெளியே இழுத்துப் போட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற வந்த, மனோரமாவின் இரு சகோதரர்களும் அடித்து நொறுக்கப்பட்டனர்.

     அடுத்த நாள், மனோரமாவினுடைய அரை நிர்வாண உடல், சாலையில் கிடப்பதை மக்கள் பார்த்தனர். உடல் முழுவதும் கீறல்கள், பூட்ஸ் காலால் உதைத்துப் கிழிக்கப்பட்ட மார்பகங்கள், துப்பாக்கிக் குண்டு துளைக்கப் பட்ட அடையாளத்துடன் உடல் கிடந்தது.

     பெண்கள் அனைவரும் கோபம் கொண்டு பொங்கி எழுந்து தெருவிற்கு வந்தார்கள். இராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அணிவகுப்பு நடத்தினார்கள். விசாரனை நடத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடு என முழக்கமிட்டார்கள்.

    அணிவகுப்பு, இராணுவ முகாமை அடைந்தபோது, பெண்களின் ஆவேசம் எல்லை கடந்தது.

    

உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே ....
எங்களைக் கொல்லுங்கடா ....
எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ....

      மணிப்பூர் நாளிதழ்களில் மட்டுமல்ல, தேசிய நாளிதழ்களிலும் இப்போராட்டம், படங்களுடன் வெளிவந்து, பார்த்தவர்களையும்  படித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்தது.

     எதிர்ப்பு சூறாவளியாய் சுழன்று அடித்தது. மனித உரிமை மீறல்கள், தேசிய ஊடகங்களில் நாடு முழுவதும் விவாதிக்கப் பட்டன.

     அன்றைய மத்திய அமைச்சர், இராணுவத்தினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், பெண்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தாலும், இனி பெண் அதிகாரிகளே முன்னிலை வகிப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.

     மனோரமா சம்பவத்தை விசாரிக்க, மாநில அரசானது, நீதிபதி உபேந்திராவினுடைய தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

     நிர்வாணப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மெய்ரபெய்பிஸி (விளக்கேந்திய வீராங்கனைகள்) அமைப்பைச் சார்ந்த, லொய் தாம் இபிடோம்பி தேவி கூறுவதைக் கேளுங்கள்.

    அப்பொழுது தோன்றியிருந்த பகை, எங்களுக்கு ஏற்படும் அவமானத்தைக் கூட சாதாரணமாக்கி விட்டது. தேவைப்பட்டால் நாங்கள் இறக்கவோ, தற்கொலை செய்து கொள்ளக் கூட ஆலோசனை செய்திருந்தோம்.

     எங்களுடைய மக்களைக் காப்பாற்ற வேண்டாமா.... எங்களில் யாருக்கும் ஆயுதப் போராளிகளுடன் ஒரு தொடர்பும் இல்லை. ஆயுதப் போராளிகளுடைய அமைப்பிற்கும், இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில், நிரபராதிகளுடைய உயிரைக் காப்பாற்றுவதும், எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதும்தான் எங்கள் இலட்சியம்.

     பெண்களைப் பொறுத்தவரை அது கொஞ்சம் அதிகப்படியானதென்று தெரியும். மனோரமாவிற்கு நடத்தப்பட்ட கொடுமையைப் பற்றி நினைக்கும் பொழுது உண்டான கோபம், பட்டாளக்காரர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்னும் கோபம் மட்டுமே எங்களிடம் இருந்தது. ஆனால் அன்று அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியும், இராணுவ அதிகாரத்தில் எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை. இருந்தாலும் அந்தப் போராட்ட குணத்தை சாகும் வரை கைவிட மாட்டோம்.

     கணவர்களையும், குழந்தைகளையும் இழக்கின்ற கொடுமைகளை, எங்களுடைய உயிரைப் பறிகொடுக்கின்ற, சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எங்கள் பெண்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளை, பயங்கரத்தை... ஒரு நாள் யாராவது கவனிப்பார்கள். மணிப்பூரினுடைய வேதனையை புரிந்து கொள்வார்கள்.

      நண்பர்களே, இதற்கு மேல் படிக்கவோ, எழுதவோ, தட்டச்சு செய்யவோ கைகள் மறுக்கின்றன. என்ன உலகம் இது என்ற ஓர் வெறுப்பு தோன்றுகிறது. ஆனாலும் இந்த உலகத்தில்தான் நாமும் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. இதுதான் மணிப்பூர்.

      நண்பர்களே, இப்பொழுது புரிகிறதா, இரோம் சர்மிளா அவர்களின் உண்ணாவிரதத்திற்காக காரணம்.

    பலமுறை சிறை, பல முறை விடுதலை, மீண்டும் சிறை. பலனில்லை.  உண்ணாவிரதத்தைக் கைவிடவே இல்லை. சிறைச் சாலையிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டுபோய், மூக்கு வழியாக இரைப்பைக்கு குழாய் சொருகி, அதன் வழியாக, திரவ வடிவிலான ஆகாரத்தை உள்ளே செலுத்தினார்கள்.

     இலட்சியத்தை அடைவதற்கு முன்பே இறந்துவிடக் கூடாது என்பதற்காக, சர்மிளாவும், குழாய் வழியாக ஆகாரம் செலுத்துவதை எதிர்க்காமல் இருக்கிறார். அன்று முதல் மருத்துவமனையில், பாதுகாப்பான அறையில் படுக்க வைக்கப் பட்டுள்ளார்.

     சர்மிளாவின் உதடுகளில், ஒரு சொட்டு தண்ணீர் பட்டு, ஆண்டுகள் பதிமூன்று கடந்து விட்டன. உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டு கொண்டே செல்வதால், சர்மிளாவின் உள் உறுப்புகள் பலமிழந்து விட்டன. உடல் மிகவும் தளர்ந்து விட்டது. மாத விலக்கு நின்று விட்டது.

     உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காகப் பஞ்சின் மூலம்தான் பற்கள் சுத்தம் செய்யப் படுகின்றன. தலைமுடியை சீவுவதில்லை.

     ஒரு முறை சிறையில் சர்மிளாவைப் பார்க்க வந்த, அவரது சகோதரர் சிங்ஜித், நாமெல்லாம் இணைந்து போராடலாம். அதனால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு விடு என்றார்.

     என்னை உற்சாகப் படுத்துவதற்கு மட்டும் வா. என் உற்சாகத்தைக் குலைக்க இங்கு வராதே.

      சர்மிளாவின் தாய் சக்திதேவி, சர்மிளா உண்ணாவிரதம் தொடங்கிய அன்றிலிருந்து, கடந்த பதிமூன்று ஆண்டுகளாக, மகளைப் பார்க்கச் சிறைச்சாலைக்கோ, மருத்துவ மனைக்கோ செல்லவேயில்லை.
          
சர்மிளாவின் தாயார் சக்தி தேவி
நான் வந்து என்ன பயன்? என் இதயம் பலமற்றது. அவளை இந்நிலையில் பார்த்தால் என்னால் அழுகையை அடக்க முடியாது. அதனால் அவளுடைய இலட்சியம் நிறைவேறும்வரை நான் போக மாட்டேன்.

     அவள் எதிர்க்கின்ற இந்தச் சட்டத்தை, ஒரு ஐந்து நாட்களுக்காவது திரும்பப் பெற்றுக் கொண்டால், நான் அவளுக்குக் கஞ்சித் தண்ணியிணை ஊட்டி விடுவேன். அதற்குப் பிறகு அவள் இறந்தாலும் கவலையில்லை.

     நண்பர்களே, முறத்தால் புலியை விரட்டியத் தாயைப் பற்றிப் படித்திருக்கிறோம். இதோ அந்தத் தாயையும் மிஞ்சிய வீரத்தாய்

     நமக்கெல்லாம் கூட்டாளிகளும் பங்காளிகளும் வேண்டும். நாம் சாலையில் போகும்போது சுற்றிலும ஆட்கள் கூடவும், பேசவும் வேண்டும். இதெல்லாம் எனக்கு விருப்பமான காரியங்கள்தான்.

     மனம் திறந்து சிரிக்க வேண்டும். கூட்டாளிகளுடன் ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இவையெல்லாம் என் மனதுக்கு பலம் சேர்க்கும் சந்தர்ப்பங்களாகும்.

      மனிதர் என்னும் நிலைக்கு நமக்கு இவையெல்லாம் தேவை. அதிலிருந்து மாறுபட்டவளல்ல நான்.

     குரூரமான சம்பவங்களைப் பார்க்கவோ, கேட்கவோ செய்யும் பொழுது, சில உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தோன்றும்.

     ஆனால் அப்படிப்பட்ட வசதிகளை எல்லாம், இழக்கச் செய்கின்ற தனிமையில் இப்பொழுது என் வாழ்க்கை.

     தெய்வம் எனக்குக் கொடுத்துள்ள கடமையை நான் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதால்தான், இன்னும் உயிருடன் இருக்கிறேன். அதை நிறைவேற்றும் வரை நான் உயிருடன் இருந்தே ஆக வேண்டும். அதற்கான சக்தியையும், தைரியத்தையும் தெய்வம் எனக்குக் கொடுத்திருக்கிறது.

     அதனால், நான் செய்கிற செயல் ஒருமுறை கூட தொந்தரவாய் எனக்குத் தோன்றவில்லை.

     மற்றவர்களைப் போல், இந்த உலகத்தில் வாழ எனக்கும் ஆசை இருக்கிறது. நானும் ஒரு மனுசிதான். மகிழ்ச்சி நிறைந்த ஓர் உலகத்தில் நானும் வாழ வேண்டும் என்று ஆசை உள்ளது.

     நண்பர்களே, சர்மிளாவின் ஆசை நிறைவேறும் நாள் எந்நாளோ?63 கருத்துகள்:

 1. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார், பின் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் என்று இன்று கலையில்தான் செய்தித்தாளில் இவரைப் பற்றி படித்தேன். இரவே தங்களின் கட்டுரையைப் படித்தபின் இத்தகு நெஞ்சுரம் கொண்டவரைப் பற்றி தாங்கள் பதிவு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முதலாக இவர் கைது செய்யப்பட்டது முதல் கடந்த 14 ஆண்டுகளாக இவர் நியாயமான ஒரு கோரிக்கை நிறைவேற உண்ணாவிரதம் இருப்பதும், கைது செய்யப்படுவதும், விடுதலை ஆவதும், மறுபடியும் உண்ணாவிரதம் இருப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் தன் இலக்கு ஒன்றையே குறியாக வைத்து தன் பாதையில் இவர் செல்வதை நினைக்கும்போது இவருடைய நெஞ்சுறுதியை உணரமுடியும். இவருடைய கோரிக்கை வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் இரோம் சர்மிளா அவர்களுடைய கோரிக்கை வெற்றி பெற்றே தீர வேண்டும் ஐயா.
   காந்தி பிறந்த நாடு இது.

   நீக்கு
 2. படங்களை edit செய்து வெளியிட வேண்டிய பதிவல்ல இது. INDIAN ARMY RAPE US என்று எதிர்த்த பெண்களை இது கேவலப்படுத்துவது ஆகாதா எனவே அந்த நிழற்படத்தை மாற்றி உரிய படத்தை வைக்கவும் அல்லது இந்த பின்னுட்டத்தை நீக்கிக் கொள்ளவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே உங்களின் கோபம் புரிகிறது.
   நம் சகோதரிகளை, நம் தாய்க்கு இணையானவர்களை, வீர மங்கையரை அந்த நிலையில், அந்தக் கோலத்தில் வெளியிட மனம் துணியவில்லை நண்பரே
   மன்னிக்கவும்

   நீக்கு
  2. அவர்களே துணிந்து செய்து விட்டனர், மரணத்தையும் எதிர் பார்த்து. பாதாகையில் உள்ள வார்த்தையில் தங்களுக்கு உடன்பாடில்லை. அங்கே கோலம் அலங்கோலமல்ல

   நீக்கு
 3. சர்மிளா அவர்களின் ஆசை விரைவில் நிறைவேற வேண்டும்...

  பதிலளிநீக்கு
 4. அண்ணா ஐரோம் பணபலமோ, செல்வாக்கோ இல்லாதவர் பாவம் நேர்மையை மட்டுமே சொத்தாய் கொண்டதால் தான் கதர்குல்லா பாலிடிக்ஸ் பண்ணாமல் ,உண்ணாவிரதம் இருக்கிறார், ஒரு மாநிலத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வழியற்றவர்கள் இன்னும் அந்த சட்டத்தை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் ! நானும் என் மாணவர்களுக்கு இவரை பற்றி சொல்லிருக்கிறேன் . மாணவர்கள் கேட்கிறார்கள் மக்களுக்காக, மக்களே, மக்களை ஆட்சிசெய்தல் தான் ஜனநாயகம் என்றீர்களே இரோம் மக்களுக்காக தானே போராடுகிறார் அவரது போராட்டத்திற்கு மதிப்பென்ன ? என்று. உங்கள் நடை எனக்கு கண்ணீர் வந்துவிட்டதண்ணா . என் மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று இன்று வரை எனக்கு தெரியவில்லை.பெரியார் நம் சுதந்திரதினத்தை கறுப்புநாளாக கருதியது சரியோ என்று கூட தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் காரணம் என்று எண்ணுகின்றேன் சகோதரியாரே.

   நீக்கு
 5. சுதந்திரத்தை எப்படியெல்லாம் போராடி பெறவேண்டி இருக்கு, வேதனைதான் மிஞ்சுகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே, நினைத்துப் பார்த்தால் மிஞ்சுவது வேதனை மட்டும்தான்

   நீக்கு
 6. மனதை உருக்கி விட்டது பதிவு. ஏற்கனவே ஏதோ செய்தியைப் போல படித்திருந்தேன். அதை உணர்வு பூர்வமாக அற்புதமான எழுத்தாற்றல் விவரித்த விதம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. எல்லா நட்டு ராணுவத்தினரும் இப்படித்தான் இருப்பார்கள் போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காந்தி பிறந்த தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை ஐயா

   நீக்கு
 7. நான் மிகவும் நேசிக்கும் இரும்பு பெண்மணி.நிச்சயம் வெற்றி கிடைக்கும்.இருக்கும் போது கொண்டாட மாட்டார்கள் யாரும்.மனதை நெகிழ வைத்துள்ளது உங்கள் நடை நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது சரிதான் சகோதரியாரே
   நாம் யாரையும் அவர் உயிரோடு இருந்தவரை கொண்டாடியதில்லை

   நீக்கு
 8. // வீர மங்கையரை அந்த நிலையில், அந்தக் கோலத்தில் வெளியிட மனம் துணியவில்லை //

  தங்களின் வார்த்தைகள் - மனிதநேயத்தின் பிரதிபலிப்பு!..

  வீர மங்கை இரோம் சர்மிளா. இவருடைய நெஞ்சுறுதி அசாத்தியமானது. இந்த கொடுமையான செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும் தங்கள் பதிவினால் கண்கள் கசிகின்றன.
  காந்தி பிறந்த தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம் என்பதை நம்பித் தான் ஆகவேண்டும்.

  வீர மங்கை இரோம் சர்மிளா நிச்சயம் வெற்றி பெறுவார்.

  பதிலளிநீக்கு
 9. பதிவு என்றால் இப்படி இருக்க வேண்டும்..
  நன்றி..
  இவற்றை தொகுத்து ஒரு நூலாக போட்டால் எங்கள் பள்ளி நூலகத்தில் வாங்க விருப்பம்...
  நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரோம் சர்மிளா பற்றிய இரு நூல்களைத் தங்களுக்குப் பரிந்துரை செய்கின்றேன் நண்பரே.
   1, Burning Bright
   Irom Sharmila and the Struggle for Peace in Manipur
   penguin Book
   2.இரோம் சர்மிளா
   ஆசிரியர் மு.ந.புகழேந்தி,
   எதிர் வெளியீடு,
   95, நியூ ஸ்கீம் ரோடு,
   பொள்ளாச்சி - 2
   email : ethirveluyedu@gmail.com

   நீக்கு
 10. பணம், அதிகாரம் உள்ளவர்களுக்காக என்றைக்கோ வளைந்து கொடுக்க தயாராகிவிட்டது நமது ஜனநாயகம், அதன் பிரதிபலிப்புகள் நம் கண்முன்னே. உங்கள் பதிவின் வீரீயம் அதிகம் ஐயா.. "Indian army rape us" அதிகார வர்க்கங்களுக்கு சம்மட்டியால் அடி. "இரோம் சர்மிளா" புரட்சி, போராட்டம் என்றால் வரலாற்று நாயகர்கள் தான் நம் நினைவிற்கு வரும். இன்றைய போராளிகளும், புரட்சியாளர்களும் நம் கண்களுக்கு தெரிவது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே. சமகாலத்தவரை, நாம் போற்ற ஆதரிக்க மறந்துவிடுகிறோம். அவர்கள் இறந்தபின் போற்றிப் புகழ்கின்றோம்.

   நீக்கு
 11. நம் நாடு ஜன நாயக நாடு என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது!

  இரோம் சர்மிளா ஒரு இரும்பு மனிதப் பிறவிதான்! அவரைப் பற்றிய செய்திகளை வாசித்து அறிந்து கொண்டாலும், தாங்கள் மிக அழகாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்!

  அவரது போராட்டம் வெற்றி பெற வேண்டும்! நம் நாடு உலக அரங்கில் செல்லவும், பளிச் என்று தெரியவம், புகழ் பெறவும் இன்னும் பல வருடங்கள் ஆகிவிடும்!

  இவரை உலக நாடுகள் ஏன் இன்னும் கண்டுகொள்ளவில்லையோ?!

  பகிர்வுக்கு மிக்க நன்றி! அருமையாகன் பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்டுகள் பல கடந்தாலும், இவரின் போராட்டம் வெற்றி பெற்றே தீரும் நண்பரே

   நீக்கு
 12. ! என்ன கொடுமை! நம் நாடு சுதந்திர நாடா!!! நெஞ்சம் பதறுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா நெஞ்சம் பதறித்தான் போகிறது.
   என்ன உலகம் இது

   நீக்கு
 13. அஹிம்சை போராட்டங்களை அரசு மதிப்பதில்லை ,எனவேதான் நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் வலு பெற்று வருகின்றன என்பதை அரசுகள் உணர்ந்தால் நல்லது !
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களுக்கும் அரசுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதுதான் காரணம் என்று எண்ணுகின்றேன்

   நீக்கு
 14. புரட்சிப்பெண் இரோம் சர்மிளா பற்றி பத்திரிகைகளில் படித்தது கொஞ்சம்தான். உங்கள் பதிவின் மூலம் அவரைப் பற்றி அதிக விவரங்கள், உணர்ச்சிப் பெருக்குடன் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் புரட்சிப் பெண்தான் ஐயா
   காந்திய வழியில் ஒரு பெண் காந்தி

   நீக்கு
 15. இரொம் சர்மிளாவின் உறுதி வியக்க வைக்கிறது! விரைவில் அவர் கனவு நினைவாகட்டும்! அவர் உடல் குணமடையட்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. மிகவும் நெக்குறச்செய்கிற பதிவு/

  பதிலளிநீக்கு
 17. I was a permanent engineer in PWD of Tamilnadu govt in 1961-63.After 1962 war with china I had quit PWD and opted for Army service out of shear patriotism.I had served for 30 years and taken active part in 1965,1971 war.I had served in high altitude deserts and jungles of Arunachel pradesh Nagaland etc.I was leader and station commander on Indian AntarcticResearch station Dakshin gangotri.With all the experience I strongly defend Army.Not because I am an army officer but because Army sacrifices everything for the sake of this country and country men.In many areas mistakes takes place as we can not differentiate between locals and terrorists.SHARMILA'S action is wrong.More for any one who can come on my email.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகிலேயே மிகப் பெரிய இராணுவம் நமது இராணுவம் ஐயா. இராணுவத்தை நம் எல்லைகளைக் காக்க, நாட்டின் அமைதியினைக் காக்க, நாள்தோறும் செய்து வரும் தியாகங்கள் அளப்பறியன. எல்லையிலே இராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தை, தங்ளது மனைவியை, தங்களது குழந்த்களை விட்டுப் பிரிந்து, தூங்கானது, காத்துவருவதால்தான், நாம் நாட்டினுள் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

   தீவிரதாதத் தேடலில் இராணுவம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினையே, உள்ளூர் வாசிகளையும், தீவீர வாதிகளையும் இனம் பிரித்து அறிய முடியாததுதான் என்பதை உண்மைதான் ஐயா. எனது உறவினர்கள் பலரும் இராணுவத்தில் இருக்கின்றார்கள். அவர்களின் நிலையினை நன்கறிவேன் ஐயா.

   நீக்கு
 18. அம்மாவின் பெயர் சக்தி தேவி. என்ன பெயர் பொருத்தம் பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா. தாயின் பெயருக்கேற்ற சக்தி படைத்த மகள்

   நீக்கு
 19. ஐயா, நெஞ்சுருகி கண்ணில் நீராய் வழிந்தது,எவ்வளவு மனதிடம் ஒருவர்க்குஒருவர் மிஞ்சியவர்கள்அம்மாவும் பொன்னும்.இவரின்கோரிக்கை நிறைவேற இந்த கொடுமையில் இருந்து விடுபட பெண்கள் .........இதற்க்குமேல்அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையே, கோரிக்கைநிறைவேரும் நாள் மிகஅருகில் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் இவர்கள் கோரிக்கை நிறைவேறும் நாள் அருகில்தான் இருக்கும் சகோதரியாரே

   நீக்கு
 20. நிச்சயம் வெற்றி கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 21. தங்கள் பதிவின் மூலமே
  முழுமையாகத் தகவல்களை மிகச் சரியாக அறிய முடிந்தது
  படங்களுடன் பகிர்வு உணர்வுப்பூர்வமாக இருந்தது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 22. எனக்கு தட்டச்ச முடியவில்லை..இத்தனை ஆண்குகள் போராடியும் அரசு திரும்பிப் பார்க்காவிட்டால்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் ஓர் நாள் திரும்பிப் பார்க்கும் சகோதரியாரே

   நீக்கு
 23. எனக்கு புரியலை, ஐயா.

  இவர்

  "Having refused food and water for more than 500 weeks, she has been called "the world's longest hunger striker"

  னு சொல்றாங்க. அவர் போராட்டம் வெற்றி பெறட்டும். ஒரு மனிதர் தண்ணீரே அருந்தாமல் ஒரு வாரத்திற்குமேல் உயிரோட இருக்க முடியாதுனு சொல்றாங்க.. இவர் எப்படி இத்தனை வாரங்கள்??? இவரென்ன "தெய்வப் பிறவி"யா?

  Honestly, என்னால எல்லாம் ஒரு 4 மணி நேரம் தண்ணீர் அருந்தாமல் இருக்க முடியாது.. அதனால் இவரைப் பத்தி விமர்சிக்கவே பேசவோ தகுதியில்லாதவன் நான் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன உறுதி மலைகளையும் அசைக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய நெஞ்சுரம் மிக்கவர் இவர்.

   நீக்கு
 24. உதிரத்தை உறைய வைக்கும் பகிர்வு .பெண்ணின் மனத்தை மென்மை
  என்பார் பெண்போல் புனிதமானது எதுவும் இல்லை என்பார் இருந்தும்
  இந்தப் பெண்களின் போராட்டம் இன்னும் நிறைவேற வில்லையே !
  அன்புச் சகோதரியின் உண்ணாவிரதப் போராட்டம் கண்டும்
  நெகிழாத உள்ளங்கள் உலகத்தில் இருந்தென்ன லாபம்?... (ஆட்சிப்
  பீடங்களிலும் ? (:( ) மாசற்ற இந்த மங்கையரின் போராட்டம் விரைவில்
  வெற்றி பெற வேண்டும் .சிறப்பான எழுத்து நடையில் மனத்தைக்
  கட்டிப் போட்ட தங்களின் பகிர்வுக்கு முன்னால் தலை வணகுகின்றேன்
  அன்புச் சகோதரனே .பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரோம் சர்மிளாவின் போராட்டம் விரைவில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் சகோதரியாரே.

   நீக்கு
 25. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் இப்பதிவினை காலதாமதமாக படித்தமைக்கு. இப்பதிவினை படித்து வருகையில் கணினியின் திரையினை மறைத்தது என் விழியினில் ஏற்பட்ட கண்ணீர் திரை. மனம் விம்மியது அந்த சகோதரியினையும் அவரின் அன்னையினையும் நினைத்து. மனம் வெறுத்துப் போனது மனிப்பூரில் அட்டகாசம் செய்யும் அந்த இராணுவத்தினரை நினைத்து. மனம் ஏங்குகிறது இத்துயரம் நீங்கும் நாள் விரைவில் வராதா? என்று. மனம் ரவுத்திரமாகிறது இதனை கண்டும் காணாததைப் போல் ஆட்சி செய்யும் காங்கிரசு அரசினையும் [உண்ணாவிரதத்தால் ஆங்கிலேயர் ஆட்சியினை ஆட்டம் காண வைத்த மகாத்மாவின் பெயரினை பயன்படுத்திக் கொள்வதில் மட்டும் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்,] அதனைப் பின்னணியில் இருந்து இயக்குவது ஒரு பெண்மணியினையும் நினைத்து. மனம் கூசுகிறது இந்த கொடுஞ்செயலினை வேரருக்க இயலாத வீணராக இருப்பதினை நினைத்து. என்னவென்று நான் சொல்வேன் என் மன வேதனையை. பதிவினை படித்து விட்டு ஓர் அரைமணி நேரத்திற்கு பிறகு என் மனம் சற்று ஆறுதல் அடைந்தபின் இக்கருத்தினை தட்டச்சு செய்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவினை படங்களுடன் பதிவிட்டு தங்களின் திறமையை காட்டியுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன நண்பரே. தங்களின் பணியினை அருகில் இருந்தே பார்த்து வருபவனல்லவா நான். இத்துனை பணிகளுக்கு இடையிலும், வலைப் பதிவினைப் படிக்க நேரம் ஒதுக்குவதுதான் ஆச்சரியம் அளிக்கிறது.
   காந்தி தேசத்தில், காந்தியின் போராட்டம் அலட்சியப் படுத்தப்படுவது மிகுந்த வேதனையினை அளிக்கின்றது.
   நன்றி நண்பரே

   நீக்கு
 26. என்னே கொடுமை இது இத்தனை வருடங்களாக இதற்கு ஒரு முடிவும் அரசு எடுக்கவில்லையே வேதனை தரும் விடயம். நெஞ்சுரம் கொண்ட சர்மிளாவின் விருப்பம் வேண்டுகோள் நிறைவேற ஆண்டவன் தான் அருள் செய்யவேண்டும். அவரை பெற்ற வீர தாய்க்கும் ஒரு வணக்கம்!
  இந்த பதிவை இட்ட தங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோதரியாரே
   சர்மிளாவின் போராட்டம் நிச்சயம் வெல்லும்

   நீக்கு
 27. இரோம் சர்மிளாவின் மன உறுதியோடு அண்ணா ஹசாறேயின் உண்ணாவிரதத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறது மனது. இவருக்கு லோக்பால் கிடைத்தது. அவருக்கு? (2) எல்லையோரப் பகுதி மக்களின் பிரச்சினைகள் விசேஷமானவை. அவற்றைப் பொதுவான சட்டங்களுக்குள் கொண்டுவர முடியாது. ஆனால், அதே சமயம், இராணுவத்தின் அத்து மீறல்களை நியாயப்படுத்த முடியாது. (3) நம் ஊரிலேயே, மாங்காய் பறிக்கவரும் சிறுவனை ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி சுடவில்லையா? அவர் மீது நடவடிக்கை எடுக்க எத்தனை வன்மையான பல்முனை எதிர்ப்பு தேவைப்பட்டது! (3) இன்னொரு நிகழ்வில், விசாரணைக்கு அழைத்துச் சென்று, ஒரு சிறுவனை நேருக்கு நேர் சுட்டுக் கொன்றாரே ஒரு போலீஸ் அதிகாரி! அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு தயக்கம் காட்டியது அரசு! இரோம் சர்மிளாவின் நடவடிக்கை, இம்மாதிரி எல்லாத் தரப்பு சீருடைக் காவலர்களையும் எச்சரிப்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். (4) இனி வரப்போகும் மோடி அரசு இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 28. அன்பின் ஜெயக்குமார் , பதிவு அருமை - சரியான தகவல்களைத் தேடிக் கண்டுபிடித்து, தேர்ந்தெடுக்கப் பட்ட படங்களுடன் வெளியிட்டமை நன்று நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 29. அன்பின் ஜெயக்குமார் - பதிவின் கதா நாயகி பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமா ? ஒரு சுதந்திரமான நாட்டின் ஒரு பகுதியில் நாட்டைக் காக்க வேண்டிய இராணுவத்தினர் தனி அதிகாரம் பெற்று அநியாயம் செய்கிறார்கள்.. நாடு எங்கே செல்கிறது ......... பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 30. பெயரில்லா22 மார்ச், 2014

  அவருடைய போராட்டம் மதிக்கப்பட வேண்டியது ஐயா. ஆண்டுகள் பல ஆகியும் அரசுகள் பல ஆண்டும், அமைச்சர்கள் பல மாறியும், ஒரு நியாயமான கோரிக்கை, ஏற்கப்படவில்லை என்பது தான் வேதனையளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 31. தங்களின் இந்த பதிவு மூலம் இரோம் சர்மிளா அவர்களின் நெஞ்சுரம் புரிந்தது. அவரின் போராட்டம் வெரைவில் வெற்றி பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு