22 மே 2014

பஞ்சர் மாயா

     

நண்பர்களே, உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், பொருளீட்டித்தான் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்று உரைத்து, தொழிலைத் தெய்வத்திற்கு நிகரான நிலையில் வைத்தனர் நம் முன்னோர்.

     தொழிலில்தான் எத்தனை எத்தனை வகைகள், எத்தனை எத்தனை முறைகள். செய்யும் தொழிலைக்கூட சேவையாகச் செய்பவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதரைக் கடந்த வாரம் சந்தித்தேன்.


      கடந்த 12.5.2014 திங்கட் கிழமை இரவு 7.00 மணியளவில், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக, எனது மனைவியுடன், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கடைகளில் பொருட்களை வாங்கிய பிறகு, என் மனைவி பின் இருக்கையில் அமர்ந்தவுடன், வண்டியைக் கிளப்பினேன்.

     சிறிது தூரம் கூட செல்லவில்லை. வண்டி பிடி கொடுக்காமல், இடது புறமாகவும், வலது புறமாகவும், தன்னிச்சையாய் திரும்பி முரண்டு பிடித்தது. வண்டியை நிறுத்துவதற்குள், பின்னால் வந்த ஒருவர், சார், பின் சக்கரத்தில் காற்று இல்லை என்றார். ஆம் வண்டி பஞ்சராகிவிட்டது.

      நாங்கள் இருந்ததோ, தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில். சுற்றிலும் எத்தனை எத்தனை நகைக் கடைகள், மருந்து கடைகள். ஆனால் வாகன பழுது நீக்கும் கடை ஒன்று கூட கிடையாது. எந்த திசையில் சென்றாலும், ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றுதான், கடையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

     கடையைக் கண்டுபிடித்தாலும், அங்கிருந்து ஒருவரை அழைத்து வந்து, பின் சக்கரத்தைக் கழற்றி, மீண்டும் அதைக் கடைக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். கடையில் பஞ்சர் ஒட்டியவுடன், மீண்டும் சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, வண்டியில் பொருத்தியாக வேண்டும். எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்.

     நண்பர்களே, பள்ளியில் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவர், வண்டி பஞ்சரானால், அவ்விடத்திற்கே வந்து, பஞ்சர் ஒட்டித் தருபவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறியது நினைவிற்கு வந்தது. அப்பொழுதே, அந்த நண்பரிடம், பஞ்சர் ஒட்டுபவரின் அலைபேசி எண்ணைப் பெற்று, என் அலைபேசியில் பதிவு செய்தும் வைத்திருந்தேன். அந்த எண்ணைத் தேடி எடுத்து, அவரை அழைத்தேன்.

ஹலோ, பஞ்சர் மாயாவா?

ஆமாம் சார்

சார், எனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. ஒட்ட வேண்டுமே

எங்கு இருக்கிறீர்கள்?

நான் தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில், திருவள்ளுவர் திரையரங்கிற்கு அடுத்துள்ள, இராசராசன் வணிக வளாகத்திற்கு எதிரில் நிற்கின்றேன்.

இதோ வருகிறேன்.

      அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் வந்து சேர்ந்தார் பஞ்சர் மாயா. ஐம்பது வயதிருக்கும்.

      வணிக வளாகத்திற்கு எதிரில் வண்டியை நிறுத்தி இருந்த போதிலும் போதிய வெளிச்சம் இல்லை. பையில் இருந்து ஒரு பாட்டரி விளக்கை எடுத்தார். நண்பர்களே, சில ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்போம், குகைகளுக்குள் பயணிப்பவர்கள், வெளிச்சத்திற்காக, தலையில் விளக்கினைப் பொருத்திக் கொண்டு செல்வார்கள் அல்லவா? அது போன்ற ஒரு விளக்கை எடுத்து, தலையில் தொப்பி போல் அணிந்து கொண்டு, அதன் வெளிச்சத்தில், சக்கரத்தைக் கழற்றி, ட்யூபை வெளியில் எடுத்தார்.

       அவ்வழியாகச் சென்றவர்கள் எல்லாம், தலையில் விளக்கினைப் பொருத்திக் கொண்டு வேலை பார்க்கும் காட்சியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.




கொத்தனார்கள் வேலை செய்யும் பொழுது, சிமெண்ட் கலவையை வைத்துக் கொள்ள, பாண்டு என்ற பெயரில், வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைத்திருப்பார்கள் அல்லவா? அது போன்ற ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்தார்.

     கூடவே ஒரு பத்து லிட்டர் கேன் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். அந்தக் கேனின் மூடியைத் திறந்து, அதில் இருந்த நீரை, வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றினார். மிதி வண்டிக்கு காற்று அடிப்போமல்லவா, அந்த கை பைப்பைக் கொண்டு, ட்யூபில் சிறிது காற்றடித்து, ட்யூபை தண்ணீரில் அழுத்தி, பஞ்சரான இடத்தைக் கண்டு பிடித்து, ஒட்டினார்.

     பிறகு ஒரு புணலை எடுத்து, கேனில் சொருகி, வாய் அகன்ற பாத்திரத்தில் இருந்த தண்ணீரை, ஒரு சொட்டுக் கூட வீணாகாமல், மீண்டும் கேனில் ஊற்றி பத்திரப் படுத்திக் கொண்டார்.

     பத்து நிமிடம் கூட ஆகவில்லை. வண்டி தயார்.

     பஞ்சர்  மாயா என்று சொல்கிறார்களே, உங்களது பெயர் என்ன, என்றேன்.

     எனது பெயர் மாய கிருஷ்ணன். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இப்பணியினைச் செய்து வருகிறேன். முன்பெல்லாம் கடையில் இருப்பேன், கடைக்கு வந்து யார் அழைத்தாலும், அவர்களுடன் சென்று, சக்கரத்தைக் கழற்றிக் கொண்டு, பஞ்சர் ஒட்டி, திரும்பவும் கொண்டு சென்று மாட்டுவேன்.

      பின்னர் சில காலம் கழித்து, வண்டி பஞ்சர் ஆன இடத்திற்கு சென்று, அங்கேயே ஒட்டிக் கொடுத்தால், எனக்கும் அலைச்சல் மிச்சம், மற்றவர்களுக்கும் நேரம் மிச்சமாகுமே என்று தோன்றியது. அன்றிலிருந்து இப்படித்தான் இந்த வேலையை செய்து வருகிறேன்.

     செல்போன் வந்த பிறகு, என் பணி மேலும் சுலபமாகிவிட்டது. யார் அழைத்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் அங்கிருப்பேன். எந்த வண்டி எனக் கேட்டு, அவ்வண்டிக்கான ட்யூபையும் உடன் கொண்டு செல்வேன். தேவைப் பட்டால், ட்யூபை உடனே மாற்றிக் கொடுத்துவிடுவேன் என்றார்.

எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்

எண்பது ரூபாய் கொடுங்கள் என்றார்.

     நண்பர்களே, எனது வியப்பு மேலும் அதிகரித்தது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று, கடையைக் கண்டுபிடித்து, ஆளை அழைத்து வந்தாலே ஐம்பது ரூபாய் கேட்பார்கள். சில சமயம் இரண்டு பஞ்சர் சார், நூறு ரூபாய் கொடுங்கள் என்பார்கள். இவரோ அலைபேசியில் அழைத்தவுடன், நாமிருக்கும் இடத்திற்கே வந்து, பஞ்சர் ஒட்டிக் கொடுத்தும், கேட்கும் தொகை குறைவாகத்தான் தெரிந்தது.

பணம் போதுமா என்றேன்.

எண்பது ரூபாய் போதும் சார்

     எனது அலைச்சலைக் குறைத்து, அதிக நேரம் காக்கவும் வைக்காமல், விரைந்து வந்து, நேரத்தையும் மிச்சப் படுத்தி, தொகையையும் குறைத்துப் பெற்றுக் கொண்டு, விடைபெற்றுச் சென்ற, அந்த நண்பரை, எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

     தனது பணியினைக் கூட, ஒரு சேவையாகச் செய்து வரும், பஞ்சர் மாயா பாராட்டுக்கு உரியவர்.

நண்பர்களே,
தாங்கள் என்றாவது தஞ்சைக்கு வந்து,
இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால்
அழையுங்கள்
பஞ்சர் மாயா

93 60 12 10 78