05 ஜூன் 2014

கோரா



ஆண்டு 1930. அவர் ஒரு காந்தியவாதி. தேசியப் பற்று, அரிசன முன்னேற்றம் போன்ற காந்தியாரின் கொள்கைகளில் மிகுந்த பிடிப்பு உடையவர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றதோடு மட்டுமன்றி, அக்கால கட்டத்தில் பிறந்த, தன் மகனுக்கு லவனம் எனவும் பெயரிட்டவர். லவனம் என்றால் உப்பு.

      காந்தியவாதிகளில் இப்படி பெயர் வைத்தவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்ன? இப்படிப்பட்ட காந்தியவாதிக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. காந்தியை ஒரு ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும். ஓரிரு வார்த்தைகளாவது அவருடன் பேசிட வேண்டும்.


     இந்திய விடுதலைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, 1930 இல் காந்தியாருக்கு ஓர் கடிதம் எழுதினார். தங்களைச் சந்திக்க விரும்புகிறேன். அனுமதி தாருங்கள்.

     காந்தி மறுத்துவிட்டார்.

     1941 இல் மீண்டும் கடிதம் எழுதினார். காந்தியாரின் வழியில், அரிசன முன்னேற்றத்திற்குத் தான் செய்துவரும் பணிகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதினார். தங்களைச் சந்திக்க வேண்டும். அனுமதி தாருங்கள்.

     மீண்டும் காந்தியார் மறுத்துவிட்டார்.

     மீண்டும், மீண்டும் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். காந்தியார் மறுத்துக் கொண்டே இருந்தார். காந்திக்கும் தனக்கும் பொதுவான நண்பராகிய டி.ராமசாமி என்பவரை அணுகினார். இம்முறை பலன் கிட்டியது. 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், காந்தி, தன்னைச் சந்திக்க, அந்தக் காந்தியவாதிக்கு நேரம் ஒதுக்கினார்.

     நண்பர்களே, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், அல்லது இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை குறித்துக் கூட சந்தேகம் தோன்றலாம். காந்தி, ஒரு காந்தியவாதியைச் சந்திக்க மறுப்பாரா? ஆனால், இந்தச் செய்தி உண்மை. காந்தி, இம் மனிதரைச் சந்திக்க மறுத்தமைக்கு, ஒரே ஒரு காரணம்தான், தடைக் கல்லாய் குறுக்கே நின்றது.

கோரா ஒரு நாத்திகர்.

--

    

கோராவும், சரசுவதியும்
முதநூர் நாத்திக மையம், 1940

கோரா 1902 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பதினைந்தாம் நாள், அன்றைய ஆந்திராவின், இன்றைய ஒரிசா மாநிலத்தின் சத்ரப்பூர் என்னும் சிற்றூரில், நண்பர்களே கவனிக்கவும், ஒரு ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் கோபராஜு ராமச்சந்திர ராவ். மக்கள் இவரைச் செல்லமாக கோரா என்றே அழைத்தனர்.

     பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோசாபிகல் சங்கம் போன்ற அமைப்புகளின் கொள்கைகளால், செயல்பாட்டால், படித்தவர்களிடையே, ஜாதியப் பாகுபாடுகள் பற்றிய, மறு சிந்தனை வளர்ந்து வந்த காலம் அது.

     கோரா மிகச் சிறந்த பக்திமானாகத்தான் வளரத் தொடங்கினார். இந்துக் கடவுள்களைப் பற்றி மட்டுமன்றி, அல்லா, இயேசு பற்றியும் சொந்தமாகப் பாடல்கள் எழுதிப், பாடியும் வந்தார்.

     கோராவின் சட்டைப் பையில் எப்பொழுதும், ஒரு விபூதிப் பொட்டலம் இருக்கும். இந்த விபூதியின் சக்தியால்தான், தான் எழுதும் தேர்வுகளில் எல்லாம், வெற்றி பெற்று வருவதாக உறுதியாக நம்பினார்.

     நண்பர்களே, கோராவின் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் சோகம், கோராவின் கடவுள் நம்பிக்கையை அடியோடு, வேரோடு மண்ணாய் புரட்டிப் போட்டது.

     கோராவிற்குப் பதினெட்டு வயதிருக்கும் பொழுது, அவரது அக்காவின், மூத்த மகன் அம்மை நோய் கண்டு படுத்தான். அவரது குடும்பமே தெய்வத்தை வேண்டியது, தொழுதது, எங்கள் குல விளக்கை, எங்களுக்கு மீட்டுக் கொடு என மன்றாடியது.

     கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என உறுதியாக நம்பினர். ஆனால் கடவுள் கைவிட்டு விட்டார். மூத்த மகன் இறந்தான். குடும்பமே நிலை குலைந்தது. துக்கத்தில் இருந்து மீள்வதற்குள், இரண்டாம் மகனும் அம்மையால் இறந்தான். அழுத கண்கள் வற்றுவதற்குள் மூன்றாம் மகனும் அம்மைக்கு இரையானான்.

     கோராவின் மனதில் இருந்த நம்பிக்கை சுக்கு நூறாய் சிதறியது. அதுநாள் வரைத் தன் சட்டைப் பையில் வைத்திருந்த விபூதிப் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தார்.

     மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பெட்டி படுக்கையுடன் மதுரை வந்தார். தங்குவதற்கு வீடுதான் கிடைக்க வில்லை. கடைசியில் ஒரு பெரிய வீட்டை, மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுக்க, வீட்டின் உரிமையாளர் முன் வந்தார். காரணம், பேய் குடியிருந்த வீடாம் அது. எனவே, வீட்டினுள் நுழையவே அனைவரும் அச்சப் பட்டனர். கோரா மகிழ்ச்சியுடன் குடி புகுந்தார்.

     மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர், கோராவைக் கவனித்துக் கொண்டே வந்தார். கோராவின் கல்வி கற்பிக்கும் ஆற்றலைக் கண்டு வியந்தார். அம் முதல்வர் ஒரு நாள் கோராவை அழைத்தார்.

     தங்களின் ஆசிரியர் பணி எங்களுக்கு மிகுந்த மன நிறைவினை அளிக்கிறது. எனவே மேற்படிப்பிற்காக, தங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். செலவினங்களைக் கல்லூரியே ஏற்கும். அமெரிக்கா செல்லத் தயாரா என்றார்.

தயார்

ஒரே ஒரு நிபந்தனை

என்ன?

முதலில் தாங்கள் கிறித்தவராக மாற வேண்டும்.

     கோரா, அன்றே அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் பணியைத் துறந்தார்

     ஒரு மதத்தை விட, இன்னொரு மதம் நல்லதா? உயர்ந்ததா? எல்லா மதங்களுமே மோசம்தான் என்ற முடிவுக்கு வந்தார்.

     இலங்கையின் ஆனந்தா கல்லூரியில் விலங்கியல் துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். விலங்கியல் ஆய்வு மாணவர்களுக்கு, ஆய்வுக் கூடத்தில், தவளையை வெட்டி அதன் உள்ளுறுப்புகளைக் காட்டி, பாடம்  நடத்தவேண்டும்.

     ஆனால் ஆனந்தா கல்லூரி இதற்குத் தடை விதித்த்து. அஹிம்சை என்பது புத்தமதக் கொள்கை என்று கூறித் தடுத்தது. மனம் நொந்து போனார்.


கோராவின் மனைவி சரசுவதி. கோராவின் மூத்த மகன் லவனம், நான்கு மாதக் கருவாய், தன் தாயின் வயிற்றில், வளர்ந்து வந்த பொழுது, ஓர் சூரியக் கிரகணம்.

     இந்து மதத்தின் நம்பிக்கையின்படி, கருவுற்ற பெண்கள், கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது. காய்கறிகள் நறுக்கக் கூடாது. துணிகளை வெட்டவோ, தைக்கவோ கூடாது. இட்லியை பிட்டுத் திண்ணக் கூடாது. மீறினால் குழந்தை ஊனமாய் பிறக்கும்.

     சூரிய கிரகணத்தன்று, கிரகண நேரத்தில், புத்த, கிறித்தவ, இசுலாமியப் பெண்கள் வழக்கம் போல் தெருவில் நடமாடியதைக் கண்டார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, காலார நடந்து வந்தார். காய்கறி வெட்டச் சொன்னார். இட்லியைப் பிட்டு உண்ணச் சொன்னார்.

     குழந்தை லவனம் முழு ஆரோக்கியத்துடன் பிறந்தான். அதனைக் கண்ட அக்கம் பக்கத்து இந்துப் பெண்கள் தெளிவு பெற்றனர்.

      1928 ஆம் ஆண்டின் ஆவணி அவிட்டம். பூணூல் அணிந்தாக வேண்டும். கோரா மறுத்தார். தந்தை உத்தரவிட்டும் மறுத்தார். இனி இவ்வீட்டில் உனக்கு இடம் கிடையாது என்றார். கோரா தன் மனைவி குழந்தையுடன், வீட்டை விட்டு வெளியேறினார்.

நடுவில் இருப்பவர் கோரா,இடது ஓரத்தில், தோள் பையுடன் லவனம்
கோரா தெலுங்கு மொழியில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். அவரது முதல் நூல் நாத்திகத்துவம். 1941 இல் இந்நூல் வெளிவந்தது.


பூமி தான இயக்கத்தில் வினோபா காந்தியுடன் கோரா
விதவை மறுமணம் செய்து வைக்கும் கோரா
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் கோரா
மூதனூர். கோரா தனது செயல்பாடுகளுக்கு உரியதாக இந்த சிறிய ஊரைத்தான் தேர்ந்தெடுத்தார். இவ்வூரில் முதன் முதலாக ஒரு நாத்திய மையத்தை நிறுவினார். கனுமுரு என்னும் ஊரில் நாத்திக மாநாட்டை நடத்தினார்.

     1947 இல் நாத்திய மையத்தை விஜயவாடாவிற்கு மாற்றினார். சங்கம் என்னும் தெலுங்கு மொழி வார ஏட்டினைத் தொடங்கினார். நாத்திகன் எனப் பொருள்படும் ஆங்கில மாத இதழ் ஒன்றினையும் தொடங்கினார்.

     1972 இல் உலக நாத்திகர் மாநாட்டினை விஜயவாடாவில் நடத்திக் காட்டிய மாமனிதர் இவர்.

      கொஞ்சம் படித்தவர்களின் நிலைதான் வேதனையானது. அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். அறிவு நாணயமே இல்லாதவர்கள் அவர்கள். அறிவியல் ஆய்வகத்தில், அறிவியல் மனதுடன் இருக்கும் அவர்கள், வீட்டிற்குப் போனதும், மூட நம்பிக்கையாளர்களாக வாழ்கிறார்கள்.

நண்பர்களே, இவர்தான் கோரா.


     1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் கடைசி வாரம், தனது மாலை நேர நடைப் பயிற்சியின் போது, பேசிக் கொண்டே நடப்பதற்கு, கோராவிற்கு நேரம் ஒதுக்கியிருந்தார் காந்தி.
மாலை மணி 5.30. தனது ஆசிரமத்தில் இருந்து வெளியே வருகிறார் காந்தி. கோரா, காந்தியிடம் அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார். முகம் மலர்ந்த புன்னகையோடு கோராவைப் பார்த்து காந்தி கேட்டார்.

கடவுள் இல்லை என்பவருடன், நான் எதைப் பேசுவது?

பாபுஜி, நான் கடவுள் மறுப்பாளன் அல்ல. நான் ஒரு நாத்திகன்.

நாத்திகத்திற்கும், கடவுள் இல்லை என்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன?

கடவுள் இல்லை எனச் சொல்வது எதிர்மறை. அது கடவுளை மறுக்கிறது. நாத்திகம் என்பது உடன்முறைக் கொள்கை. கடவுளை மறுத்ததன் மூலம், வாழ்வின் வெற்றிகளை உறுதிப் படுத்தும் உயர் கொள்கை.

நாத்திகம் என்பது எதிர்மறை வார்த்தை இல்லையா?

நாத்திகம் என்றால் தன்னம்பிக்கை, சுதந்திரமான சிந்தனை என்று பொருள். தங்களின் ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சா என்பதெல்லாம், எதிர் மறை வார்த்தைகளாக இருந்த போதிலும், நேர் மறைப் பொருளைத்தானே தருகின்றன. நாம் கூட தைரியமானவன் என்பதற்குப் பதிலாக, பயமற்றவன் என்று சொல்கிறோமல்லவா? அதுபோலத்தான் நாத்திகமும் என்ற கோரா தொடர்ந்தார்.

1943 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில், கல்கத்தா நகரத் தெருக்களில், ஆயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அது அவர்களின் தலைவிதி, தலையெழுத்து என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடவுள் இப்படிப் படைத்துவிட்டாரே? என்று நொந்து கொண்டார்கள். இந்த மாதிரியான காரணங்களே, அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாகிவிட்டது.

இதே தத்துவம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், உயர் ஜாதி மக்களுக்கும் இடையே. இதே தத்துவம்தான், கருப்பு நிற மக்களுக்கும், வெள்ளை நிற மக்களுக்கும் இடையேயும். முன் கூட்டியே தீர்மாணிக்கப் பட்ட, தலைவிதித் தத்துவம், மனிதர்களின் நிலையை, விலங்குகளை விடக் கேவலமாக ஆக்கி விட்டது.

     சமூகத்தில் சமன்பாடான நிலையை மனிதனால் ஏற்படுத்திட இயலாது என்கிற நிலை. மனித குல மாண்புகளும், உயர் கொள்கைகளின் வளர்ச்சியும் நடைபெற வேண்டுமானால், முதலில் கடவுள் மீதும், விதியின் மீதும், மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை போக்கப் பட வேண்டும்.

     சிறிது நேர மௌத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி பேசினார்.

உங்கள் கருத்தில் லட்சிய நோக்கு இருக்கிறது. என்னுடைய ஆத்திகம்தான் நல்லது என்றோ, உங்களது நாத்திகம் தீயது என்றோ, என்னால் கூற முடியவில்லை. நான் உங்கள் வழிக்கு வரலாம், அல்லது நீங்கள் என் வழிக்கு வரலாம், அல்லது இருவருமே மூன்றாவதாக ஒரு வழியில் செல்லலாம்.

   



ஆந்திர முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம
அடுத்த இரண்டே மாதங்களில், மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் நடைபெற இருக்கின்ற, ஆதாரக் கல்வி மாநாட்டை ஒட்டி, ஆசிரமத்தில் தங்கிப் பணியாற்றுமாறு, காந்தி, கோராவைக் கேட்டுக் கொண்டார். கோராவும் தங்கிப் பணியாற்றினார்.


     1975 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 26 ஆம் நாள் விஜயவாடாவில் ஓர் கூட்டம். விவேகானந்தா சமிதியின் சார்பில் ஓர் கூட்டம். கிராமப்புற இந்தியாவில் சமூக மாற்றம் என்னும் தலைப்பில், உணர்ச்சிகரமான உரையினை ஆற்றிக் கொண்டிருந்த, 73 வயதானகோரா, திடீரென்று கீழே விழுந்தார்.  மேடையிலேயே இறந்தார்.
    
தந்தைப் பெரியாருடன் கோரா
அறிவின் உண்மையான எல்லை நாத்திகம் என்பார் பெரியார். அந்த நாத்திகக் கருத்துக்கள், தோற்றம் பெற்றதே இந்தியாவில்தான் என்பது ஆய்வாளர்கள் கருத்து.


நாத்திக மனம் பரப்பி,
மனிதம் காக்க,
ஜாதியம் போக்கப்
போராடியப் போராளி,
கோரா
அவர்களின்
நினைவினைப் போற்றுவோம்,