18 செப்டம்பர் 2014

நண்பா, விரைந்து முன்னேறு



 சங்கங்களால் – நல்ல
சங்கங்களால் – மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள் போல் – இளஞ்
சிங்கங்கள் போல் – பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

எங்கும் சொல்க – கொள்கை
எங்கும் சொல்க – இதில்
எது தடைவந்த போதிலும் அஞ்சற்க
                         - பாரதிதாசன்

     நண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு. முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான், கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும் நிலைத்து நிற்கிறது நம் மொழி.

     சங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால், எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல் உழைப்பு வேண்டும்.


    திரையில் தோன்றி, பெரும் பணம் குவித்து, புகழேணியின் உச்சியில் இருக்கும், நடிக நடிகையர்க்கு, சங்கம் கண்டு, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும், கனவுலக நாயகருக்கேக் காணிக்கையாக்கி, தன் குடும்பம் காணாது, தன் சுற்றம்  நோக்காது, நம் மொழியின் பெருமை அறியாது, உழைக்கும் இளைஞர்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார் நம் நாட்டில்.

     இதுபோன்ற இளைஞர்களுக்கு மத்தியில், திரையுலகு கண்டு மயங்காது, தொலைக் காட்சியே சரணம் எனத் தங்கள் வாழ்வைத் தொலைத்திடாது, தாங்கள் வியர்வை சிந்தி உழைத்துப் பெருக்கிய, வருவாயினைக் கூட, சமூக அக்கறையோடு, சமுதாய முன்னேற்றத்திற்காகச் செலவிடும், அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்று நினைத் தாயோ?

என வீறு கொண்டு எழுந்து முழங்குவானே, முண்டாசுக் கவிஞன் மகா கவி பாரதி, அப் பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, வீழ்ந்து விடாமல்,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
   சம்பாத்யம் இவையுண்டு தானுன்டு

என்று இருந்து விடாமல், சமூக அக்கறையோடு, தாங்கள் உழைத்துச் சம்பாதித்த செல்வத்தை முன்னிறுத்தி, அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, அரும் பணியாற்றிவரும், எனது நண்பர்களைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.

     நான் பயின்ற, தற்பொழுது நான் பணியாற்றி வருகின்ற, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின், முன்னாள் மாணவர்கள் இவர்கள். என்னைவிட வயதில் இளையோர். மனதிலோ மூத்தோர்.    
இராஜராஜன், அருண் குமார்

ஐந்தே, ஐந்து நண்பர்கள், ஒன்றிணைந்து ஒரு நாள் பேசினார்கள். நாம் அனைவருமே நன்கு படித்தோம், நன்கு உழைத்தோம், நன்கு பொருளீட்டியும் வருகிறோம். ஆனால் மனதில் ஓர் நிறைவில்லையே, மகிழ்ச்சி இல்லையே, மனம் வெறுமையாக , வெற்றிடமாக இருக்கின்றதே, என்ன காரணம் என விவாதித்தனர்.


     நாம் பயின்றதும், பொருளீட்டுவதும், நமக்கும், நம் குடும்பத்திற்கும் மட்டும்தானா? அல்லது படித்ததே, பணம் சேர்க்கத்தானா என்று சிந்தித்தனர்.

     படிக்கும் காலத்தில், நம்மோடு உற்ற துணையாய், ஆரூயிர் தோழனாய், கூடவே வந்து, நம்மோடு பழகியது வறுமை மட்டும்தானே.

     நாம் வறுமையோடு உறவாடிய போது, கைக் கொடுத்து மீட்க, யாரும் முன் வராத போது, எப்படித் தவித்தோம்?. அன்று நாம் இருந்த நிலையில், இன்று பல மாணவர்களைக் காணும் பொழுதெல்லாம் நெஞ்சு துடிக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

     சங்கம் ஒன்று தொடங்கலாம், ஆனால் ஒரு சிலர் மட்டும் கூடிச் சங்கம் தொடங்குவதா? வேண்டாம். சங்கம் என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் பணி. நாமோ நால்வர்தான் இருக்கின்றோம். எனவே அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவோம், நம்மால் இயன்ற அரும் பணிகளைச் ஆற்றுவோம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர்.
     
மணிமாறன், ராஜன், சதீஷ்

நண்பர்களே, சொன்னால் நம்பமாட்டீர்கள், சகோதரர்கள் இருவர், நண்பர்கள் ராஜன், சதீஷ் மற்றும் மணிமாறன்  என, ஐவரும் இணைந்து, ஆறாவதாய் ஒருவரைத் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர். அவர் யார் தெரியுமா? அருமைச் சகோதரர்களின் அன்புத் தந்தையார் திருவாளர் பாலசுப்பிரமணியன்.
     
திருமிகு பாலசுப்பிரமணியன்

தனது குலம் தழைக்கத் தோன்றிய அன்பு மகன்களின், பாசமிகு தொண்டினை, நேசத்தோடு நோக்கி, நெகிழ்ந்து நிற்கிறார் இவர்களின் தந்தை. எந்தத் தந்தைக்குக் கிடைக்கும் இப்படி ஓர் பேரானந்தம். கொடுத்து வைத்த தந்தைதான்.


ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை

     இராஜராஜன், அருண்குமார் இருவரும் சகோதரர்கள். இவர்களின் சொந்த ஊர், தியாகராசரின் ஆராதனை விழாவினைக் காணும், திருவையாற்றிற்கு அருகில் உள்ள திருப்பழனம்.

     இவர்களின் தாத்தா, மிகப் பெரிய பக்திமான். ஒரு காலத்தில் வளமையுடன் திருப்பானத்தில் கொடி கட்டிப் பறந்தவர். ஆனால் இவரது தந்தையோ வறுமையினையே சுவாசித்தவர். அரசுப் பணியில் எழுத்தராய் சேர்ந்து, தன் பிள்ளைகளைக் கரை சேர்த்தவர்.

     நண்பர்களே, இராஜராஜனும், அருண் குமாரும் இளமையில் இருந்தே, வறுமையோடு உறவாடியவர்கள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, இவர்களுக்குக் கல்விச் செல்வத்தை வாரி, வாரி வழங்கியது.

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர்மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் யாவும்
அமைபவன் நூலுறை ஆசிரியனே

என நன்னூல், நல்லாசிரியருக்கான இலக்கணத்தைக் கூறும்.

     இத்தகு நல்லாசிரியர்கள் பலர், இவர்களுக்கு ஆசிரியராய் வாய்த்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கமல்லவா.

     புலவர் மீ.இராமதாசு, புலவர் சிவ.திருஞான சம்பந்தம், ஆங்கில ஆசிரியர் திரு டி.சச்சிதானந்தம், தாவரவியல் ஆசிரியை திருமதி ஆண்டாள், வேதியியல் ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இந்நாள் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் எனப் பல ஆசிரியர்கள் இவர்களைச் செதுக்கி, செம்மைப் படுத்தி, நல் வழி காட்டினர்.

     ஆசிரியர்கள் காட்டிய பாதையில் பயணித்து இருவரும் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றனர்.

     வற்றாத கல்விச் செல்வத்தைப் பெற்றதால், வளம் கொழிக்கும் நாடுகளில் பணியாற்றும் வாய்ப்புகள் பலவும், இருவரையும் நாடி வந்தன.

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
     யிருந்தது மிந்நாடே – அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
     முடிந்தது மிந்நாடே – அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
     சிறந்தது மிந்நாடே – இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
     வாயுற வாழ்த்தேனோ? – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
     என்று வணங்கேனோ?

                           - மகா கவி பாரதி

     அசைந்து கொடுக்கவில்லை இருவரும். கரந்தை எம் மண். எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் கரந்தையே என்று முடிவு செய்து,
ருத்ரன் கணினியகம், ருத்ரன் இசைப் பள்ளி
என இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

நண்பர்களே, இவர்களின் உழைப்பால், செல்வத்தால் உருவானதுதான்
ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை

கோயில் திருப்பணி என்பர் – அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே

வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
தாயென்ற பாவனை யோடும் – உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். சகோதரர்கள் இருவரும் தங்களின் உழைப்பின் பயனை கோயிலுக்கும் ஈந்து வருகின்றனர், ஏழைகளையும் காத்து வருகின்றனர்.

     நண்பர்களே, இவர்கள் இருவருமே மிகப் பெரிய பக்தியாளர்கள், ஆன்மீகவாதிகள். நான் இவர்களை வியந்து நோக்குவதுண்டு. எப்படி இத்துனை சிறுவயதிலேயே, இத்துனை பெரும் பக்தி என்று?

     பிறகுதான் தெரிந்தது, இவர்களது தாய் வழித் தாத்தாவும், தந்தை வழித் தாத்தாவும், பக்தியில் கரை கண்ட ஆன்மீகச் செம்மல்கள் என்று. ஆன்மீகம் இவர்கள் உதிரத்தோடு உதிரமாய் இரண்டறக் கலந்த உணர்வாகிவிட்டது.
    









ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களிடையே, மழை நீர் சேகரிப்பு, நீர் நிர்வாகம், ஓசோன் படலம் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பசுமை பாரதத்தை உருவாக்கிட, மரம் நடுதல். மரங்களின் இன்றியறியாமையை மக்களுக்கு எடுத்துரைத்து சுற்றுச் சூழலைக் காத்தல் என இவர்களின் பணி விரிவடைந்து கொண்டே செல்கிறது.

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம், ஆங்கே
    சண்டையில்லை, தன்னலந்தான் தீர்ந்ததாலே

என்னும் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, அன்புள்ளத்தோடு, தாயுள்ளத்தோடு பணியாற்றும் சகோதரர்கள் இருவரையும், இச் சகோதரர்களுக்குத் துணை நிற்கும், ஆருயிர் நண்பர்கள் இருவரையும், பிள்ளைகளோடு இணைந்து, நெகிழ்ந்துப் பணியாற்றும் இவர்களின் தந்தையையும் வாழ்த்துவோமா நண்பர்களே, இவர்களின் சீரிய பணி தொடர போற்றுவோமா நண்பர்களே.

ஏறு முன்னேறுதி ராவிடனே
இன்னலை நீக்குதல் உன்கடன் – விரைந்தேறு
வீறுகொண் டேறுவி ரைந்துமுன் னேறுவி
ழாக்கண்ட பிள்ளையைப் போல் மகிழ்ந்தேறு.
                                   - பாவேந்தர் பாரதிதாசன்..