27 மார்ச் 2015

அறிவுத் திருக்கோயில்


வரும் பகைவர் படைகண்டு மார்தட்டிக் களம் புகுந்த
மக்களைப் பெற்றோர் வாழ்க
மனம்கொண்ட துணைவர்க்கு விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க
உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம்காத்த உள்ளம் வாழ்க
திடமான தோள்களும் செயல் வீரர் மரபும் வாழ்க
பாவாடை தெய்வானை பல்லாண்டு பல்லாண்டு
நீடூழி நிறைவோடு வாழ்க வாழ்க வாழ்க

     கடந்த 22.3.2015 ஞாயிற்றுக் கிழமை காலை நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்களும், திருவாரூர் புறப்பட்டோம்.

     பள்ளி அலுவல் தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கத்தான் இப்பயணம். முதல் நாள் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, நாளை காலை 10.00 மணிக்கு, திருவாரூர் கோயிலுக்கு வருகிறேன். கோயிலிலேயே சந்திப்போம் வாருங்கள் என்றார்.

     திருவாரூர் கோயிலுக்குச் சென்றோம். வழக்கறிஞரைச் சந்தித்தோம். பேசினோம். விடை பெற்றோம்.

     கோயிலை விட்டு வெளியே வந்த பொழுது, திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. சன்னா நல்லூருக்குச் சென்று வந்தால் என்ன, என்னும் ஓர் ஆசை மனதில் உதித்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்க மகிழ்வுந்தின் ஓட்டுநரும், நண்பருமான ரமேஷிடம், சன்னா நல்லூருக்குப் போக வேண்டுமே என்றேன். அருகில்தான் இருக்கிறது தாராளமாகப் போய்வருவோம் என்றார்.


      திருவாரூரில் இருந்து, மயிலாடுதுறை செல்லும் சாலையில் பயணித்தோம்.

     நண்பர்களே, எதற்கு இந்தப் பயணம் தெரியுமா?

     வலைப் பூ நமக்கு உலகு முழுவதும், எண்ணற்ற உறவுகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

     ஆண், பெண் என்னும் பால் வேறுபாடின்றி, இளையவர், முதியவர் என்னும் வயது வித்தியாசமின்றி, அனைத்து உறவுகளையும், சகோதரர், சகோதரி என்னும், இரு அன்பார்ந்த உறவுக்குள் அடக்கும் உன்னத பந்தத்தை, வலைப் பூ ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

     வலைப் பூ மூலம்தான் இப்பெரியவருடன், இம்மாமனிதருடன், பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை. ஆயினும் என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

குடியரசுத் தலைவரின் கரங்களால்,
1994 ஆம் ஆண்டு
வஷிஸ்ட் சேவா
என்னும்
உயரிய விருதினைப் பெற்றவர்.


கர்னல் பா.கணேசன்

இந்த இராணுவ வீரர் பிறந்த ஊர்தான்

சன்னா நல்லூர்.

     நாகப்பட்டினம் கும்பகோணம் சாலையும், திருவாரூர் மயிலாடுதுறை சாலையும், ஒன்றை ஒன்று சந்திக்கும், நான்கு முனைச் சந்திப்பில் அமைந்திருக்கும் எழில் மிகு சிற்றூர் சன்னா நல்லூர்.

     இச்சிற்றூரில் பிறந்து, பள்ளிப் படிப்பை இவ்வூரிலேயே பயின்று, செட்டிநாடு அண்ணாமலைப் பாலிடெக்னிக்கில் தொழிற் கல்வியைத் தொடர்ந்தவர்.

     இரண்டாண்டுகள் பொதுப் பணித் துறையில் பணியாற்றி, பின் நெஞ்சம் நிறைந்த கனவுகளோடும், உயர் இலட்சியத்தோடும், இந்திய இராணுவத்தில் இணைந்தவர்.

     மகராஷ்டிர மாநிலம், புனே இராணுவக் கல்லூரியில், பி.டெக்., படிப்பினை, அக்கல்லூரியிலேயே அதிக மதிப்பெண் பெற்று, முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, பொறியாளர் பட்டமும் பெற்றவர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பது ஆண்டுகள், முழுதாய், முழுமனதுடன் இராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

     நண்பர்களே, அடுத்த மாநிலத்திற்குச் சென்று வந்ததையோ, அல்லது அடுத்த நாட்டிற்குச் சென்று வந்ததையோ, வாழ் நாள் சாதனையாக, பெருமை பொங்கப் பேசும், மக்கள் நிறைந்த இப்புவியில், பூமிப் பந்தின் தென் துருவமாம், அண்டார்ட்டிக்காவில், ஒரு வருடத்திற்கும் மேல் குடியிருந்தும், ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் இருப்பவர் இவர்.

உண்மை, நண்பர்களே, உண்மை.

அண்டார்ட்டிக்கா

     நாற்புறமும் கடலால் சூழப்பட்ட, 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி. எங்கு பார்த்தாலும், நீண்ட நெடிய பணி மலைகளைக் கொண்ட உறை பணி மண்டலம்.

     அண்டார்ட்டிக்காவில் கடல் நீரின் மேல் மிதக்கும் பணித் தரைகளின், உயரம் என்ன தெரியுமா? சுமார் 2 கி.மீ. எப்பொழுதும் தொடர்ந்து வீசும் பணிப் புயலின் வேகம், ஒன்றும் அதிகமில்லை, 350 கி.மீ வேகம் மட்டும்தான்.

     ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பகல் பொழுதுகளையும், அடுத்த ஆறு மாதங்களுக்கு விடாமல் நீடிக்கும் இரவுப் பொழுதுகளையும் கொண்ட வினோத துருவம் அண்டார்ட்டிக்கா.

     பென் குயின், சீல் போன்ற மிகச்சில பணிப் பிரதேச விலங்கினங்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதி.


Dakshin Gangothri

இத்தகு கடும் உறை பணி உலகில்,
இந்தியா அமைத்திட்ட,
முதல் தென்துருவ ஆய்வுத் தளத்தின் பெயர்
தக்ஷிண் கங்கோத்ரி

இந்த ஆய்வுத் தளத்தின் தலைவராக,
இந்திய அரசால் நியமிக்கப் பட்டவர்தான்,
கர்னல் பா.கணேசன்.

ஒன்றல்ல, இரண்டல்ல, 480 நாட்கள் இந்த உறை பணி உலகில், கால் பதித்து, நின்று, நிதானித்து, திறம்படப் பணியாற்றியவர்தான்
கர்னல் பா.கணேசன்.

     நண்பர்களே, தென் துருவ முதல் ஆய்வுத் தளத்தின் தலைவராக, நியமிக்கப் பட்டவுடன், இவர் செய்த முதல் செயல் என்ன தெரியுமா?

     தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, சொந்த ஊருக்கு, சன்னா நல்லூருக்குச் சென்றார். அவ்வூரின் மண்ணை ஓர் பெரும் பையில் அள்ளி, மூட்டையாய் கட்டி, தனது உடமைகளுடன், தனது ஊர் மண்ணையும், தென் துருவத்திற்கு எடுத்துச் சென்றார்.

     தென் துருவத்திற்குச் சென்றதும், சன்னா நல்லூர் மண்ணை, தென் துருவத்தில், விதை போல் தூவி மகிழ்ந்தார்.

     இன்று அண்டார்ட்டிக்கா உறை பணியில், சன்னா நல்லூர் மண்ணும் இரண்டறக் கலந்திருக்கிறது.

     தக்க்ஷிண் கங்கோத்ரியில், தன் பணி முடிந்து, கிளம்பும்போது, 50 கோடி ஆண்டுகளாக, 5000 மீட்டர் ஆழத்தில், உறை பணியில் மூழ்கியிருந்த, ஓர் கற் பாறையினைப் பெயர்த்து, தன்னுடனே எடுத்து வந்தார்.

    அக்கற்பாறையினை என்ன செய்தார் தெரியுமா?

     வாருங்கள். பார்ப்போம்.
--
    திருவாரூரில் இருந்து புறப்பட்ட நாங்கள், முப்பது நிமிடங்களுக்குள் சன்னா நல்லூரை அடைந்தோம். சாலையின் இடது புறம்




அறிவுத் திருக்கோயில்

     அறுகோண அமைப்பில், ஆறு வட்ட வடிவ, தூண்களுடன் கூடிய ஒரு சிறு திறந்த வெளி மண்டபம்.



    


ஆறு பக்கங்களிலும், மூன்றடி உயரச் சுவர். சுவற்றில் இந்திய தேடியக் கொடி, இன்றுதான் வரையப் பட்டதைப் போல், புதிதாய், பளிச்சென்று காட்சி தருகின்றது.

     அறுகோணத்தின் மையத்தில், அறுகோண வடிவில் ஓர் தூண். தூணின் மேல், ஒரு அறுகோண சிமெண்ட் பலகை.

     அப்பலகையின் மேல், சிங்கம் போல், கம்பீரமாய், தென் துருவமாம் அண்டார்ட்டிக்காவில் இருந்து, கொண்டு வரப் பெற்ற கல்.

சிலிர்த்துப் போய்விட்டேன்
நண்பர்களே,
சிலிர்த்துப் போய்விட்டேன்.

     சேரன் செங்குட்டுவன், இமயம் வென்று, அங்கிருந்து கல் எடுத்து வந்து, பத்தினித் தெய்வமாம், கண்ணகிக்குக் கோயில் கட்டினான் என்று படித்திருக்கிறேன்.

    ஆனால், இன்றோ, இந்த நவீனச் செங்குட்டுவன், கர்னல் பா. கணேசன் அவர்கள், அதையும் தாண்டி, பூமிப் பந்தின் தென் கோடிக்கேச் சென்று, கல் எடுத்து வந்து, தான் பிறந்த ஊரில், ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறார், அறிவுத் திருக்கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்கோயிலின் கருவறைத் தெய்வமாய், அக்கல்லினைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில  ஊனுடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே

என்னும் திருமூலரின் வாக்கிற்கு இணங்க,

மனிதனே தெய்வம், எண்ணங்களே வாழ்க்கை

என்னும் உயரிய, உன்னத தத்துவத்தை, எளியோர்க்கும் உணர்த்தும் வகையில், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, இந்த அறிவுத் திருக்கோயில்.

     நண்பர்களே, வாய்ப்பு கிடைக்கும் பொழுது, சன்னா நல்லூருக்கு, ஒரு முறை சென்று வாருங்கள், அறிவுத் திருக்கோயிலைக் கண்டு வாருங்கள்.

தக்ஷின் கங்கோத்ரி வெற்றிப் பயணத்திற்காக , இந்திய அரசு வெளியிட்ட தபால் உறை