28 ஏப்ரல் 2015

எழுதுகோலே இவர் தெய்வம்


எல்லாரும் வாருங்கள்
எழுந்து நடக்கலாம்
இத்தனை நாள் நடந்ததெல்லாம்
என்னவென்று பார்க்கலாம்
என்று நம்மை அழைத்தவர் ஜெயகாந்தன்.

     சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள், அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி.

இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். நீங்கள், நல்ல மனிதராயிருந்து, நல்ல இதயத்தோடு, இந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்
எனஇளைஞர்களை அழைத்தவர் ஜெயகாந்தன்.

சிறுகதை மன்னனா நான்?

என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதை சக்கரவர்த்திகளையேச் சந்தித்துவிட்டு வந்தவன்.


யார் அந்த சக்கரவர்த்திகள்?

கிராமப் புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடை பாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

     வாழ்வைப் படித்தவர் ஜெயகாந்தன். வறுமையைப் படித்தவர் ஜெயகாந்தன். மக்கள் மனங்களைப் படித்தவர் ஜெயகாந்தன்.

      இத்தனையையும் படித்தவர், பள்ளி சென்று படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.

     நான் வாழ்வின் மகத்துவத்தை மகாகவி பாரதி மூலம் பயின்றேன். நான் படிக்காத காலத்திலும் கூட என் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அது மகாகவி பாரதி புத்தகம். அதன் மூலம் வாழ்க்கையை நான் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும், ஆத்மார்த்தமாகவும் அறிய முடிந்தது.

எழுதுகோல் என் தெய்வம்
என்றே வாழ்ந்தவர் ஜெயகாந்தன்.

கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன்
காசு தராவிட்டால்தான் என்ன?
பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன்
எழுத்து எனக்கு சிவனமல்ல
அது என் ஜீவன்

என்று முழங்கிய ஜீவன் இன்று இல்லை.

வாழ்வதன் முன்னம்நான் செத்திருப்பேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்

என்று முன்னமே எழுதிய,
தமிழ் எழுத்தாளர்களின்
கம்பீர முகம்
ஜெயகாந்தன்

இன்றும், என்றும், என்றென்றும்
தமிழ் எழுத்துக்களில் வாழந்து கொண்டேயிருப்பார்.