13 மே 2015

உலகப் பாறை ஓவியங்கள்

   

 பத்து வருடங்களுக்கு முன்னால், அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து வருவதற்காக, ஆயனர் என்னை அனுப்பினார். நானும் அப்படியே செய்வதாக வாக்களித்து கிளம்பினேன். அஜந்தா வர்ணத்தின் ரகசியம், உமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
   
இதோ இந்தச் சுரங்க விஹாரத்தின் சுவர்களிலே கூட, வர்ணச் சித்திரங்களைக் காண்கிறோம். உமக்குக் கட்டாம் இந்த ரகசியம் தெரிந்துதான் இருக்க வேணடும்.

 அதை உடனே சொன்னீரானால், உம்மை உயிரோடு விடுகிறேன், இல்லாவிட்டால், உமது இஷ்ட தெய்வத்தை, உம்மைப் போன்ற கிராதகனுக்குத், தெய்வம் என்று ஒன்று இருந்தால், அந்தத் தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளும்.


     அப்பனே, உன்னுடைய கருணைக்காக மிக்க வந்தனம். என் இஷ்ட தெய்வம் ஒன்றே ஒன்றுதான். அது சிவகாமிதான். அந்தத் தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

 ஆயனரையும், அவர் மகளையும், அஜந்தாவுக்கே அழைத்துப் போய், அழிய வர்ண ரகசியத்தை நேரிலேயே, காட்டி கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.


அந்த அற்புதமான ரகசியத்திற்கு, உலகத்தில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத ரகசியத்திற்கு, என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே, நீ நன்றாக இருக்க வேண்டும்.


சொல்கிறேன் கேள். மரஞ் செடிகளின் இலை, வேர், காய், விதை முதலிய தாவரப் பொருட்களைச் சாரு பிழிந்து, காய்ச்சி, சாதாரணமாக வர்ணங்களைக் குழைப்பது வழக்கம்.


தாவரப் பொருட்கள் காய்ந்து, உலர்ந்து அழிந்து போகக் கூடியவை. ஆகையால் அவற்றில் இருந்து உருவாக்கப்படும் வர்ணங்களும், சீக்கிரத்தில் மக்கி அழிந்து போகின்றன.


ஆனால் மலைகளிலும், பாறைகளிலும், சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன, இந்த வர்ணங்கள் காற்றுக்கும், வெயிலுக்கும், மழைக்கும் மங்குவதில்லை, அழிவதில்லை. ஆகவே இந்த வர்ணப் பாறைகளைப் பொடி செய்து, அதற்கேற்ற பக்குவப்படி அரைத்து, குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது.

இம்மாதிரி வர்ணப் பாறைகளை பொடித்துக் குழைத்த வர்ணங்களைக் கொடுத்துதான் அஜந்தாவில் சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன.

பரஞ்சோதி, சென்ற ஐந்நூறு வருஷ காலமாக, அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிக்சுக்களைத் தவிர, வேறு யாரும் அறியாத, பரம ரகசியத்தை உனக்கு நான் சொல்லி விட்டேன், இனி நான் போகலாமா?

     அடிகளே, உடனே போய் விடுங்கள். அடுத்த நிமிடம் என் மனம் மாறினாலும் மாறிவிடும். நீர் ஓடிப்போக எத்தனித்த கள்ளச் சுரங்க வழியாகவே, இப்போது போய் விடுங்கள். சீக்கிரம், சீக்கிரம்.


     நாகநந்தி சென்று விட்டார். பரஞ்சோதியும், படை வீரர்களும் கூட, ஒவ்வொருவராக, நம் கண்களில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக வெளிச்சம் வருகிறதே, நாம் எங்கிருக்கிறோம். சுரங்கப் பாதையில் இல்லையா?

     இல்லை நண்பர்களே, இல்லை. நாம் சுரங்கத்தில் இல்லை. நாம் இருப்பது அரண்மனையில். என்ன அரண்மனையிலா? பல்லவர்களின் அரண்மனையிலா? இல்லை, தஞ்சையில், மராட்டியர்களின் அரண்மனையில்.

       தஞ்சையிலா? அதுவும் அரண்மனையிலா? எங்கு பார்த்தாலும, பாறைச் சிற்பங்கள் தெரிகின்றனவே.

       ஆம், பாறைச் சிற்பங்கள் தெரிகின்றன. ஆனால் மலைகளைக் காணவில்லையே, பாறைகளையும் காணவில்லையே. ஆனாலும் சிற்பங்கள் மட்டும் தெரிகின்றனவே? எப்படி.

நண்பர்களே,
எத்துனை முறை மீண்டும் மீண்டும் படித்தாலும், சிறிதும் அலுக்காத,
இவ்வுலகில் வாழும் காலம் வரை மறக்க இயலாத
அமரர் கல்கி அவர்களின்
சிவகாமியின் சபதம்.
நூலினையும்
பரஞ்சோதியார் அவர்களையும்
நீண்ட நேரம், நினைத்துக் கொண்டு நின்று விட்டதால்,
ஏற்பட்ட மனக் குழப்பம் என்று எண்ணுகின்றேன்.

      நாம் நின்று கொண்டிருப்பது, தஞ்சை அரண்மனையின், சங்கீத மகால் விழா அரங்கில், நடைபெற்று வரும் உலகப் பாறை ஓவியக் கண்காட்சி மண்டபத்தில்.

       நம்மால் உலகை வலம் வந்து, உலகு முழுவதும் உள்ள பாறை ஓவியங்களைப் பார்ப்பது, ரசிப்பது, அனுபவிப்பது என்பது இயலாத செயல் அல்லவா? இதோ உலகப் பாறை ஓவியங்கள் அனைத்தும், ஓரிடத்தில், நமது கடைக் கண் பார்வைக்காகக் காத்திருக்கின்றன.


இந்திரா காந்தி தேசியக் கலை மையம்,
புது தில்லி
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர்
கலைக் கூடம்,
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சாவூர்
ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பயன், இக் கண்காட்சி.

உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி

     வாருங்கள், மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வருவோம். பாறை ஓவியங்களைக் கண்ணாரக் கண்டு, இன்புற்று மகிழ்ந்து வருவோம்.

     பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த, நம் மனித முன்னோர்கள், தங்களது வளமாக வாழ்விற்க்காகவும், தங்களது சந்ததியினர் தழைத்தோங்கி வளர்வதற்காகவும், தங்களைச் சுற்றியுள்ள உலகம், தங்களது செயல்பாடுகள் முதலியவற்றை, பாறைகளில் ஓவியங்களாகவும், கீறல் பொறிப்புகளாகவும் பதிவு செய்துள்ளனர்.

     சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள், என அறிஞர் பெருமக்களால், ஆய்வு செய்து, ஒரு மனதாக மதிப்பிடப் பட்ட, ஓவியங்கள் மட்டுமே, இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

     நினைக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டு அல்ல, ஓர் ஆயிரம் ஆண்டு, இரண்டாயிரம் ஆண்டு அல்ல, முழுதாய் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள்.

     நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் பேசத் தொடங்கியிருப்பானா என்பது சந்தேகம்தான். எழுத்துக்களை எழுத்துக் கூட்டி, எழுதவாவது தெரிந்திருப்பானா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் வரையக் கற்றுக் கொண்டுள்ளான்.

     பாறைகளில் கல் கொண்டு கீறியும், வர்ணம் கொண்டு பூசியும் ஓவியங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளான்.

     பாறை ஓவியங்கள் பெரும்பாலும், குகைத் தளங்களிலும், இரும்புக் காலத்தைச் சார்ந்த பெரும் கற்படை சின்னங்களிலுமே கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

     மலைத் தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் காணப்படும், பெரும்பாலான பாறை ஓவியங்கள் வேட்டையாடுதல், ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த, மக்களின் அந்நாளையக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

     காலத்தால் முற்பட்ட ஓவியங்கள் செங்காவி கொண்டு தீட்டப் பட்டதாகவும், காலத்தால் பிந்தியவை, வெள்ளை வர்ணம் கொண்டு தீட்டப் பட்டதாகவும் காணப் படுகின்றன.

    தமிழகத்தில் முதன் முதலாக பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்த பெருமைக்கு உரியவர் பேராசிரியர் கே.வி.இராமன் அவர்களாவார். இவர்தான் 1978 இல் மல்லபாடி என்ற இடத்தில் பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தார்.

     தமிழகத்தின் தருமபுரி, கிருட்டினகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இதுவரை நூற்று இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.


புள்ளி மான்களின் ஊர்வலம், உத்திரப் பிரதேசம்


போர்ப்படை வீரர்களின் அணிவகுப்பு, உத்திரப் பிரதேசம்



காண்டா மிருகத்தை வேட்டையாடும் மனிதன், உத்திரப் பிரதேசம்


சத்தீஸ்கர் நகரின் கோட்டு உருவங்கள்



மத்திய பிரதேசத்தின் கோட்டு 
உருவங்கள்




மலைக் குகைகளில் காணப்பட்ட ஓவியங்கள்  பல, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முறையில், வடிவமைக்கப் பட்டு, பாறை வடிவங்களிலேயே, நம் முன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



கேரளாவில் கண்டறியப்பட்ட, கீறல் கோடுகளில் மனித உருவங்கள், நம மனதை கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவை.

இந்த மின்னல் சகோதரர்களைப் பாருங்கள்


இறந்த மனிதர்கள் ஆவிகளாய், உலகை வரும் வருவார்கள் என்று எண்ணி, எண்ணி பயந்த அக்கால மனிதர்கள் ஆவிகளையும் சித்திரங்களாய் வரைந்து வணங்கியுள்ளனர். இக்காட்சியைப் பாருங்களேன். இப்பாறை ஓவியம் இருப்பது இந்தியாவில் அல்ல, ஆஸ்திரேலியாவில்.

    

ஆவிகளை மட்டுமல்ல, அக்காலத்தில், வீர தீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களை, கதாநாயகர்களாய் சித்தரித்து, அவர்களையும் ஓவியமாய் தீட்டி போற்றியுள்ளார்கள். இதோ ஒரு கதா நாயகனின் ஓவியம்.


லிபியாவின் போர் வீரன்.




அல்ஜீரியாவின் மனித, கால் நடை உருவங்கள்


மனிதன் சக்கரத்தினைக் கண்டு பிடித்த பின்னர்தான், அறிவியல் வளர்ச்சி வேகமெடுத்ததாக்க் கூறுவார்கள். இதோ நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அல்ஜீரியாவில், சக்கரம் பூட்டிய வண்டியில் பயணிக்கும் மனிதன்.
ரதமும், ரத ஓட்டியும்.

     பாறை ஓவியங்களைக் காணக் காண, வியப்பு கூடிக் கொண்டே செல்கிறது. ஆதிகால மனிதன், தங்களின் வாழ்க்கை முறையை, வருங்கால சந்த்தியினர் அறிய, உணர விட்டுச் சென்ற, வரலாற்றுச் சுவடுகள் அல்லவா, இந்த ஓவியங்கள்.

நண்பர்களே,
வாய்ப்பு கிடைக்கும் பொழுது
தஞ்சைக்கு வாருங்கள்
இந்த பாறை ஓவியங்களைக்
கண்டு மகிழுங்கள்.

உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி,

சங்கீத மகால்,    தஞ்சாவூர் அரண்மனை,

-------------------------------------------------------.
மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 5 ஆம் தேதி வரை
-------------------------------------------

வாருங்கள் நண்பர்ளே, வாருங்கள்