30 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 5


தக்ஷின் கங்கோத்ரி


தக்ஷின் கங்கோத்ரி.

       கர்னலும் மற்றவர்களும், கப்பலில் இருந்து இறக்கப் பட்ட வண்டிகளில், தக்ஷின் கங்கோத்ரி நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

        வாருங்கள், அவர்களுக்கு முன்னே சென்று, தக்ஷின் கங்கோத்ரியை ஒரு முறை நன்றாக பார்த்து விடுவோம்.



நம் இந்திய அரசால், 1982 ஆம் ஆண்டிலேயே, பணிகள் தொடங்கப் பெற்ற போதிலும், 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதிதான், தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுத் தளம் முறையாகச் செயல் படத் தொடங்கியது.

      ஆய்வுத் தளம் இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிளாக் ஏ. மற்றொன்று பிளாக் பி.

     முதலில் தங்குமிடம். ஒன்றிரண்டு அதிகாரிகள் தங்குவதற்கான தனித் தனி அறைகள். அதனைத் தொடர்ந்து, ரயில்வேயின் முதல் வகுப்பு பெட்டி போன்ற, இருவர் இருவராகத் தங்குவதற்கான அறைகள்.

       ஒரு ரேடியோ அறை. ரேடியோ மூலமாகவும், தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாகவும், வெளி உலகைத் தொடர்பு கொள்வதற்கான தனி அறை. தகவல் தொடர்பு சார்ந்த அத்தியாவசிய உதிரிப் பாகங்களுக்காக, தனியே ஒரு கிடங்கு.

    ஒரு சிறிய மருத்துவ மனை.

    விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ள ஒரு விசாலமான ஆய்வகம்.

    ஒரு அற்புதமான நூலகம்.

    அருமையான சமையலறை. சாப்பிடுவதற்குத் தனியே ஒரு பெரிய அறை.

    உறை பனியைத் தொட்டிக்குள் தள்ளவும், பின் அத்தொட்டியில் உள்ள பனிக் கட்டிகளை உருக வைத்து, தண்ணீராக மாற்றி, அத் தண்ணீரை மேல் நிலைத் தொட்டியில் நிரப்புவதற்கான வசதி.

     இவை அனைத்தும் சேர்ந்தது பிளாக் ஏ.

     தொழில் நுட்பப் பணிகளுக்காக ஒரு பெரிய தொழிற் கூடம். நான்கு ஜெனரேட்டர்கள். ஒரு ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, இரண்டாவது ஜெனரேட்டர், ஓடுவதற்கான தயார் நிலையில் இருக்கும். முதல் ஜெனரேட்டர் நின்று விட்டால், இரண்டாவது ஜெனரேட்டர், தானே, சுயமாய் உடனடியாக இயங்கத் தொடங்கும்.

     மூன்றாவது ஜெனரேட்டர் ஏற்கனவே ஓடியது. பராமரிப்புப் பணிகளுக்காகக் காத்திருக்கும். எதற்கும் இருக்கட்டுமே என, உபரியாய் நான்காவது ஜெனரேட்டர். ஒரு வாரத்திற்குத் தேவையான எரி பொருள்.

     என்ன? ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருள் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? நியாயமான கேள்விதான். ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேவையான சுமார் ஆறு இலட்சம் லிட்டர் எரிபொருளும், ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், பீப்பாய் பீப்பாயாக, பெட்டி பெட்டியாக, ஆய்வுத் தளத்திற்கு வெளியே, உறை பனியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

     ஒரு வாரத்திற்கு ஒரு முறை, எரிபொருளையும், உணவுப் பொருட்களையும், வெளியே இருந்து எடுத்து, ஆய்வகத்திற்கு உள்ளே கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

     ஆய்வுத் தளத்தில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவது என்பது, எப்பொழுதுமே ஒரு சவாலான வேலைதான்.

     பெரும்பாலும் கதவைத் திறக்க இயலாதவாறு பனி நிறைந்தே இருக்கும். ஹாட்ச்  
(Hatch) என்று சொல்லக் கூடிய, தரை மட்டத்தில் இருந்து, உயரே இருக்கும் கதவினைத் திறந்து கொண்டுதான், பெரும்பாலும் வெளியே வர இயலும்.

     சில சமயங்களில், அக் கதவினையும் பனி மூடி விடுமானால், இருக்கவே இருக்கிறது புகைப் போக்கி.

     என்ன புகைப் போக்கி வழியாக, வெளியே வருவதா? வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனாலும் வேறு வழியில்லை.

              ஆய்வுத் தளத்தின் கூரை மீது, புகை போக்கி போன்று, நீண்டு உயர்ந்த, ஒரு கட்டுமானம் உண்டு. அதன் உட்புறமும், வெளிப் புறமும் ஏணி பொறுத்தப் பட்டிருக்கும்.

     பனி அதிகமாகி, எந்தக் கதவினையும் திறக்க இயலாவிட்டால், புகை போக்கியின் ஏணி வழியே, மேலே ஏறி, வெளிப் புற ஏணி வழியே இறங்கியாக வேண்டும்.

     பின்ன்ர் வெளிப்புறம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், புல்டோசரை இயங்கி, பனியினை அற்புறப்படுத்தியாக வேண்டும்.

    ஒவ்வொரு நாளுமே போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான் அண்டார்டிகா வாழ்க்கை.
   



கர்னல் கணேசன் குழுவினர் தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்தபோது, அவர்கள் கண்ட காட்சி, திகைப்பைத்தான் வாரி வழங்கி வரவேற்றது.

    சற்றேறக்குறைய முழு தக்ஷின் கங்கோத்ரியும், பனியில் மூழ்கி மூச்சு விட திணறிக் கொண்டுதான் கிடந்தது.

     வெளியே ஒரு சிறிய மூங்கிலில் இந்திய தேசியக் கொடி.

       கொடிக்கு அருகே மூவர் நின்றிருந்தனர். சற்று தள்ளி மூவர், அங்கொருவரும், இங்கொருவருமாய் நின்றிருந்தனர். அனைவருமே முகத்தை மறைக்கும் தாடிகளுடனும், சோகம் நிறைந்த முகங்களுடனுமே காணப்பட்டனர்.

       இவர்கள்தான் ஏற்கனவே, கர்னலுக்கு முன்பாக, தங்கியிருக்கும், நான்காவது குளிர் காலக் குழுவினர்.

     நூற்றுக் கணக்கான பீப்பாய்கள், பெட்ரோலுடன், ஓர் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடந்தன.

     ஒருவர் மட்டும் முன் வந்து, கர்னலின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

     பல்வேறு ஆசைகளையும், கனவுகளையும் நெஞ்சில் சுமந்து வந்த கர்னல் அவ்ரகளுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கிடைத்த வரவேற்பு இதுதான்.

     பாவம், அவர்கள்தான் என்ன செய்வார்கள். அவர்கள் அனுபவித்த வாழ்க்கை அப்படி.

    கர்னல் கணேசன், தக்ஷின் கங்கோத்ரியில் தன் முதல் வேலையாக, தான் உடன் கொண்டு வந்த பையினைப் பிரித்தார். உள்ளே சன்னா நல்லூர் மண்ணும், சென்னை அண்ணா நகர் மண்ணும், ஜம்மு காஷ்மீர் மண்ணும் மெதுவாய் எட்டிப் பார்த்தன. மண்ணை மெதுவாய் விரல்களால் எடுத்து, விதைபோல், அண்டார்டிகா பனியில் தூவினார்.

இங்கும் என் தாய் மண். 
இங்கும் என் தாய் மண். 
இனி இதுவும் என் தாய் மண்.

    கர்னல் கணேசன் குழுவினர், தங்களது தினசரி செயல்பாடுகள், மேற்கொள்ளப் பட வேண்டிய ஆய்வுகள் குறித்து, நான்காவது குளிர்காலக் குழுவினரிடம் பயிற்சி பெற்றனர்.

  கர்னலும் அவர்தம் குழுவினரும், தக்ஷின் கங்கோத்ரிக்கு வந்துவிட்ட போதிலும், அவர்களோடு பயணித்த, பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் கப்பலிலேயே இருந்தன.

      காரணம் பனிப் புயல். உறை பனிக் காற்று வேகமாய் வீசூம் பொழுது, கப்பலை கரையை ஒட்டி நிறுத்துவது என்பது ஆபத்தான செயலாகும். அவ்வாறு நிறுத்தினால், கப்பலானது, காற்றின் வேகத்தால் தள்ளப்பட்டு, உறை பனியில் மோதி உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

      எனவே கிரேன் உதவியுடன் இறக்கப்பட வேண்டிய பொருட்கள் எல்லாம், இறக்கப் படாமல் கப்பலிலேயே இருந்தன.

      1988, சனவரி 13. காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கப்பலானது, கரையை ஒட்டி நிற்பதாக தகவல் வந்தது.

     கர்னல் கணேசன் அவர்களும், அவர்தம் குழுவினர் ஐவரும், இரு வண்டிகளில், கப்பலை நோக்கிப் புறப்பட்டனர்.

      கர்னல் அவர்கள் முதல் வண்டியைத் தானே ஓட்டிச் செல்ல, இரண்டாவது வண்டி சற்று தொலைவில் பின் தொடர்ந்தது.

       சிறிது நேரம்தான் பயணித்திருப்பார்கள். திடீரென்று ஒரு பலத்த சத்தம்.

      வண்டியை கிறீச்சிட்டு நிறுத்திய கர்னல், பின் புறம் பார்த்தார்.

      இரண்டாவது வண்டியைக் காண வில்லை.

                                                                                                                    தொடரும்.