28 செப்டம்பர் 2015

துர்கா தேவி


    

ஆண்டு 1928, டிசம்பர் 17. நேரம் காலை 10.00 மணி. லாகூர்.

     காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார், அந்த ஆங்கிலேய அதிகாரி.

     காவல் நிலையத்திற்கு அருகில் நின்று, நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல் நிலையத்தை நெருங்குகிறார்கள்

     மொட்டை அடித்து மீசையினையும் மழித்து, அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.


     ஆங்கிலேய அதிகாரி இரத்த வெள்ளத்தில் சரிகிறார். சில நொடிகள்தான், அவரது உயிர் உடலை விட்டுப் பிரிகிறது.

     காவல் நிலைய வாயிலிலேயே சுட்டுக் கொல்லப் பட்ட, அந்த ஆங்கில அதிகாரியின் பெயர் சாண்டர்சு. காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர்.

     இளைஞர்கள் கொல்ல வந்தது என்னவோ, மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளர் ஸ்காட் என்பவரைத்தான். ஆனால் அன்றைய தினம், அவர் அலுவலகத்திற்கு வராததால், உதவிக் கண்காணிப்பாளரை, ஸ்காட் என்று எண்ணிச் சுட்டனர்.

     அந்த இளைஞர்களைப் பொறுத்தவரை இவரும் கொல்லப்பட வேண்டியவர்தான்.

     லாலா லஜபதிராய் அவர்களின் மரணத்திற்கு பழிக்குப் பழி வாங்கவே, இந்த துப்பாக்கிச் சூடு.

     இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற, சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில், தடியடி நடத்தி, லாலா லஜபதிராயின் மண்டையைப் பிளந்தவர்கள் அல்லவா இவர்கள் இருவரும்.

     லாலா லஜபதிராய் நவம்பர் 17 இல் மறைந்தார். சரியாக ஒரே மாதம், அதே தேதியில், டிசம்பர் 17இல் சாண்டர்சு சுட்டுக் கொல்லப் பட்டார்.

      சாண்டர்சுவைச் சுட்டவர் யார் தெரியுமா?
      

மாவீரன் பகத் சிங்.

       உடன் இருந்தவர்கள் ராஜ குரு, ஆசாத் மற்றும் ஜெய் கோபால்.

      சாண்டர்சுவைக் கொன்றதோடு விடாமல், ஊர் முழுக்க போஸ்டர் அடித்தும் ஒட்டினார்கள்.

      ஆங்கிலேய அரசு விடுமா? லாகூரையே சல்லடை போட்டு சலித்தது.

      பகத் சிங்கும் அவரது நண்பர்களும், தங்களது நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தனர். ஆனால் அந்த நண்பரோ கல்கத்தா சென்றிருந்தார். நண்பரின் மனைவிதான் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுத்தார்.

      எப்படியாவது லாகூரை விட்டு வெளியே சென்றாக வேண்டும்.
   
      நான் உதவுகிறேன் என்றார் நண்பரின் மனைவி.

      இவர் யார் தெரியுமா?

---

    லாகூர் புகை வண்டி நிலையம். எங்கு பார்த்தாலும் காவலர்கள், காவலர்கள். புகை வண்டியில் பயணிக்க வந்தவர்களை விட, பகத்சிங்கைப் பிடிக்க வந்த காவலர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

     ஆங்கிலேய அதிகாரி சண்டர்சுவைக் கொன்றவர்களை தப்ப விடக் கூடாது, பிடித்தே ஆக வேண்டும். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு காவல் துறை தேடிக் கொண்டிருந்தது.

      ஒரு ஆங்கிலேய அதிகாரி, தொப்பியுடன், நிமிர்ந்த நெஞ்சும், நேர் கொண்ட பார்வையுமாய், அலட்சிய நடை நடந்து, புகை வண்டி நிலையத்திற்குள் வருகிறார். காவலர்கள் ஒதுங்கி வழி விடுகின்றனர்.

     அருகிலேயே அவரது மனைவி. விலை உயர்ந்த ஆடை, குதிகால் உயர்ந்த செறுப்பு, மிடுக்கான பார்வை.

      இருவரையும் பின் தொடர்ந்து, ஒரு பணியாள். இவர்களது குழந்தையையும், உடமைகளையும் சுமந்தவாறு, பணிவோடு பின் தொடர்கிறார்.

      முதல் வகுப்புப் பெட்டியில் ஏறுகின்றனர். புகை வண்டி புறப்படுகிறது.

      கல்கத்தா சென்றாக வேண்டும். ஆனாலும் கான்பூரிலேயே இறங்குகிறார்கள். அருகில் உள்ள விடுதியில் தங்கி, மறுநாள் பயணத்தை தொடருகின்றனர்.
---

      கல்கத்தாவில் வசித்து வரும் சுசீலாவிற்கு, அவரது சகோதரியிடமிருந்து, அப்பொழுதுதான் அந்த தந்தி வந்தது. பிரித்துப் படிக்கிறார்.

சகோதரருடன் வருகிறேன்.

     சுசீலா குழம்பித்தான் போனார். சகோதரனா? எங்களுக்கு ஏது சகோதரர்?

     கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், கலந்து கொள்வதற்காக வந்து, தன் மனைவியின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த, அந்த வாலிபரும், தன் மனைவியின் தந்தியைப் படித்து குழம்பித்தான் போனார்.

என் மனைவிக்குத்தான் சகோதரர் யாரும் இல்லையே.

    குழப்பம் அடுத்த நாள் தீர்ந்தது.

    புகை வண்டியில் பயணித்த ஆங்கிலேய அதிகாரியும், அவரது மனைவியும், குழந்தையும் மற்றும் பணியாளரும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த, அடுத்த நொடி, குழப்பம் மறைந்து, மகிழ்ச்சி மலர்ந்தது.

    ஆங்கிலேய அதிகாரியாய் வந்தவர் பகத் சிங். பணியாளராய் வந்தவர் ராஜ குரு.

பகவதி சரண் வோரா.

கல்கத்தாவில் மாநாட்டிற்காக வந்து தங்கியிருந்து, இவர்களை வரவேற்றவர், பகத்சிங்கின் நெருங்கிய தோழர் பகவதி சரண் வோரா.

     பகத்சிங்கின் மனைவியாய் வந்தவர், பகவதி சரணின் அன்பு மனைவி, காதல் மனைவி.

     குழந்தை இவர்களது காதலில் மலர்ந்த அரும்பு. மூன்றே மூன்று வயதுடைய மழலை சச்சீந்திரா.

      பகவதி சரண் அவர்களின் மனைவி யார் தெரியுமா?

---

       1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8. நாடாளுமன்றத்தில் வெடி குண்டுகள் வீசப் பட்டன. வெடி குண்டினை வீசிவிட்டு, தப்பி ஓடக் கூட முயற்சிக்காத, பகத் சிங்கும் அவரது நண்பரும் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவரது நண்பர்கள் ஒவ்வொருவராய் கைது செய்யப் பட்டனர்.

      ஆங்கிலேயருக்குப் பிடிபடாமல் மறைந்து வாழ்ந்து வந்த, பகவதி சரண் வோரோ அவர்களின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

      பகத் சிங்கையும் நண்பர்களையும் மீட்டாக வேண்டும். எப்படி மீட்பது?

     சிறைச் சாலையில் இருந்து, நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது, வெடி குண்டு வீசுவேன், தோழர்களை மீட்டே தீருவேன்.

     தனது தோழர்களுடன் ஒருங்கிணைந்து, வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார் பகவதி சரண் வோரா.

      காட்டுப் பகுதியில், ராவி நதிக் கரையில் குண்டு தயாரித்து, வெடித்தும் சோதனை செய்தார். பயிற்சியும் செய்தார்.

      பகத் சிங்கை மீட்டே ஆக வேண்டும்.

       ஆனால், வெடிகுண்டு சோதனையின் போது, அந்த பரிதாபம் அரங்கேறியது. தவறுதலாய் வெடித்த ஒரு குண்டு, பகவதி சரண் வோராவை, நார் நாறாய் கிழித்து எறிந்தது.

       செய்தி அறிந்து ஓடி வந்த அவரது மனைவியால், வாய் விட்டு அழக்கூட முடியவில்லை. ஊரறிய இறுதிச் சடங்கு கூட செய்ய முடியவில்லை.

      பகத் சிங்கை மீட்டாக வேண்டும். வெடி குண்டு செய்தி பரவினால், ஆங்கிலேயர்கள் சுதாரித்துக் கொள்வார்கள், நிலைமை மாறிவிடும்.

      என்ன செய்வது?

      மீதமிருக்கும் தோழர்களைக் கொண்டு, பகத் சிங்கை மீட்டே ஆக வேண்டும்.

     என்ன செய்வது?

     மனதைக் கல்லாக்கிக் கொண்டார்.

     யாராலும் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாத ஒரு செயலைச் செய்தார்.

பகவதி சரண் வோரா தன் மனைவி, மகளுடன்
தன் கணவனை, தன் காதல் கணவனை, தான் காதலித்துக் கரம் பற்றிய, தன் காதல் மணாளனை, வெடித்துச் சிதறியது போக, மீதமிருந்த, தன் கணவனின் எஞ்சிய உடலை, இறுதியாய் ஒரு முறை, ஒரே ஒரு முறை, கரம் பற்றி, தரைதேய இழுத்துச் சென்று, ராவி நதியில், ஓடும் நீரில், மூழ்கச் செய்து, நீர் சமாதி செய்தார்.

     எத்துனை நெஞ்சுரம் வேண்டும்?

     இவர் யார் தெரியுமா?

---

     வெடி குண்டினால் மீட்க முடியாத பகத் சிங்கை, காந்தியுடன் பேசி மீட்டிடலாம் என்று எண்ணினார் பகவதி சரண் வோராவின் வீர மனைவி.

     காந்தியைச் சந்தித்தார். பேசினார், பேசினார் நீண்ட நேரம் பேசினார்.

     நிமிடக் கணக்கில், மணிக் கணக்கில் நீண்டது விவாதம்.

     புரட்சியைக் கைவிட்டு, அனைவரும் காவல் துறையினரிடம் சரணடையுங்கள் என்றார் காந்தி.

     புரட்சியைக் கைவிடுதல், எம் தற்கொலைக்குச் சம்ம் என்று காந்தியின் முகத்திற்கு எதிரிலேயே முழங்கி, வெளியேறினார் இவ்வீரப் பெண்.

     நண்பர்களே, இவர், பகவதி சரண் வோராவின் மனைவி யார் தெரியுமா?

---
    

1931, மார்ச் 23.

     பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் மூவரும் தூக்கிலடப் பட்டனர்.

     புரட்சித் தோழர்கள் ஒவ்வொருவராய் தங்களின் இன்னுயிரை, நாட்டுக்காக இழந்த போது, இப் புரட்சிப் பெண்ணின் தனிமை வாழ்வு தொடங்கியது.

      ஆயினும் தளரவில்லை இவர்.

      1939 இல் சென்னை, அடையாறு, மாண்டிசோரி கல்வி நிலையத்தில், ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியரானார்.

      1940 ஆம் ஆண்டு லக்னோ நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றினைத் தொடங்கினார். நான்கே, நான்கு மாணவர்களைக் கொண்டுதான் அந்த ஆரம்ப்ப் பள்ளியைத் தொட்ங்கினார்.

       அந்த ஆரம்ப்ப் பள்ளி சில ஆண்டுகளிலேயே, 2500 மாணவர்களைக் கொண்ட, தனிப் பெரும் கல்லூரியாய் விரிவடைந்தது.

      புரட்சியில் அரசியல் புரட்சி, சமூக புரட்சி, இரண்டில் எது நடந்தாலும், எப்போதும், அதில் ஒரு அழகு பிறக்கிறது. மகிழ்ச்சியையும், பேரழகையும் புரட்சி பிரசவிக்கிறது என்றார் இவர்.


நண்பர்களே, இவர்தான்
இந்தப் புரட்சிய வாதிதான்
இந்த வீரமிகு பெண்ணியவாதிதான்
துர்கா தேவி.

ஈடு இணையற்ற நாட்டுப் பற்று
அசாதாரணத் துணிச்சல்
தியாகத்தின் திருவுரு
இவற்றின் மறுபெயர்தான்
துர்கா தேவி.

இவர் இவ்வுலக வாழ்வினைத் துறந்தது, சமீபத்தில்தான், மிகச் சமீபத்தில்தான்.
1999 ஆம் ஆண்டு,
அக்டோபர் 15 ஆம் நாள்தான்
தனது 92வது வயதில்
ஓய்வெடுக்கத் தொடங்கினார்.


துர்கா தேவி பிறந்த
அக்டோபர் 7 ஆம் நாளும்
மறைந்த
அக்டோபர் 15 ஆம் நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இவ்வுலகு மறந்த
துர்கா தேவியின்
நினைவினை நாமாவது போற்றுவோம்
வாழ்க வாழ்கவென்று வாழ்த்துவோம்.

-----------------------