15 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 5




பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்தபின் கை விடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையிலாயோ?
                                        பாரதி

    கேப்டன் கணேசன் அவர்களின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மேஜர் ஒருவருக்கு, திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற இருந்தது. எனவே அவர் விடுமுறையில் சென்று விட்டார்.

     இந்நிலையில்தான் கேப்டன் கணேசன் அவர்களுக்கு, சன்னா நல்லூரில் இருந்து தந்தி வந்தது.

அம்மா கவலைக்கிடம்.


     கேப்டன் கணேசன் பதறித்தான் போனார்.

       தனது தாயாரின் உடல் நிலை மெல்ல, மெல்ல உருக்குலைந்து வருவதாக, இதுவரைப் பல கடிதங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பணி, பணி என்றே கதியாய் கிடந்த கேப்டன், விடுப்பு கேட்க மனமின்றி, உழைப்பில் ஒன்றிப் போனார்.

அம்மா கவலைக்கிடம்



      இனியும் தாமதிக்கக் கூடாது. பெற்றத் தாயைக் கண்ணாரக் கண்டே ஆக வேண்டும். தாயின் அமுத மொழிகளை, பாசமிகு சொற்களைக் காதாறக் கேட்டே ஆகவேண்டும்.

 

     தன் இரு கைகளையும், கன்னத்தில் ஒரு சேர வைத்து, அன்பாக, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய வழிய, பாசத்தோடு வருடி விடுவாரே, அந்த பாசமிகு அன்னையை, நேசமிகு தாயை உடனே பார்த்தே ஆக வேண்டும்.

     உள்ளம் துடியாய் துடித்தது.

     சற்றும் தாமதியாமல், விடுப்புக் கடிதம் ஒன்றினை எழுதிக் கொண்டு, தனது மேலதிகாரியைப் பார்க்கச் சென்றார்.

      மேலதிகாரியோ எரிந்து விழுந்தார். பொறுப்பற்ற வார்த்தைகளை உதிர்த்தார்.

திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும், மேஜரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, பொய்யான தகவல்களுடன் வந்திருக்கிறீர்கள். விடுப்பு மறுக்கப் படுகிறது.

     கேப்டன் நொறுங்கித்தான் போனார்.

என்னால் விடுமுறையில் வர இயலாது. இறைவன் அருள் நமக்கு இருக்கும்.

     சன்னா நல்லூருக்கு தந்தி கொடுத்து விட்டு, தன் அறைக்குத் திரும்பினார்.

      தலை எங்கும் ஒரு விநோதமான வலி வந்து குடியேறியது. காதுகளின் பக்கமெல்லாம் மெல்ல மெல்ல ஒரு சூடு ஏறியது. மூளையே கலங்கியது போன்ற ஓர் உணர்வு. படுக்கையில் விழுந்தார்.

      விடியற் காலை நேரம்.

     அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.


எதிரில் அம்மா.

கடிதங்கள் தொடரும்