19 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 6





பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
                                       பட்டினத்தார்

       அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.

எதிரில் அம்மா.

       மெதுவாக, மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து, கட்டிலை நெருங்குகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதே, எப்படியம்மா இங்கு வந்தாய்?

என்னவோ போவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதுதான் வந்தேன். நீ நன்றாக இருப்பாய். எதற்கும் கவலைப் படாதே.

      கேப்டன் கணேசன் மெல்லத் தன் கரம் உயர்த்தி, தாயின் அன்புக் கரங்களைப் பற்றிக் கொள்ள முயல்கிறார். முடியவில்லை. தாயின் கரங்கள் நீண்டிருந்தாலும் தொட முடியவில்லை.

      சற்றே எக்கி கைகளைத் தொட முயன்ற போதுதான், திடுக்கிட்டு விழித்தார்.

      கண்டது கனவா?

      மெய் சிலிர்க்க எழுந்து அமர்ந்தார். நெஞ்சினில் படபடப்பு, உடலெடங்கும் வியர்வை வெள்ளம்.

தாயே, நான், உன்னைக் காண வராததால்,
என்னைத் தேடி வந்தாயோ?
தாங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் தாயே,
நூறாண்டு வாழ்வீர்கள்
தங்களைக் காண விரைவில் வருவேன் தாயே,
விரைவில் வருவேன்

     மீதமிருந்த அன்றைய இரவு, உறங்கா இரவாகவே கழிந்தது.

     பகல் பொழுது புலர்ந்ததும், வழக்கம் போல் அலுவலகம் சென்றார்.

     பிற்பகல் 3.30 மணி. இரண்டாவது தந்தி வந்தது.

அம்மா இறந்துவிட்டார்

     25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, சன்னா நல்லூரில் கொடுக்கப் பெற்ற தந்தி, ஆமை போல் ஊர்ந்து வந்து, பிற்பகல் 3.30 மணிக்குத்தான் மேகாலயாவை வந்தடைந்திருக்கிறது.

      இதை விடப் பெரிய கொடுமை ஒன்றும், கேப்டன் அறியாமலேயே அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

அம்மா கவலைக்கிடம்

என்று தந்தி வந்ததும், விடுமுறை மறுக்கப் பட்ட நிலையில்,
என்னால் விடுமுறையில் வர இயலாது, இறைவன் அருள் நமக்கு இருக்கும்
என்று 24ஆம் தேதி ஒரு தந்தி அனுப்பினார் அல்லவா.

     அந்தத் தந்தி ஆமையினும் மெதுவாய், மிக மெதுவாய் ஊர்ந்து சென்று, அடுத்த நாள் 25 ஆம் தேதி பிற்பகல்தான் சன்னா நல்லூரைச் சென்றடைந்தது.

அம்மா இறந்துவிட்டார்

என 25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அனுப்பிய தந்திக்கு, பதில் தந்திதான் இது என்று எண்ணிய கேப்டனின் சகோதரர்கள், கணேசன் வரமாட்டார் என நினைத்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.


கடிதங்கள் தொடரும்