24 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 7





ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதேபரிந்துஎடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
                         பட்டினத்தார்

வாரணாசி,
4.4.1970
அண்ணன் அவர்களுக்கு,

        விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, எதுவுமே பேசாமல் இருக்கிறாயே என்று எல்லோரும் கேட்டீர்கள். என்ன பேசுவது என்று தோன்றாததால்தான் மௌனம் சாதித்தேன்.

      ஆனாலும் நானும் மனிதன்தானே, மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிக் குமுறல்களை முறையாக வெளிப் படுத்தாவிட்டால், ஒரு பூகம்பம் போல் வெடித்துச் சிதறிப் போய் விடுவேனோ என்று பயப்படுகிறேன்.


      உண்மையிலேயே அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்றால், பெரிய அண்ணன் ஒரு தந்தி கொடுத்தால் போதும், புரிந்து கொள்வேன் என்று சொல்லி இருந்தேன்.

      அப்படித்தான் எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி Mother Serious என்று தந்தி வந்தது. ஆனால் என் உயர் அதிகாரி, நான் பொய் தந்தி வரவழைத்துள்ளேன் என்று விடுமுறை மறுத்து விட்டார்.

       24ஆம் தேதி நான் ஊருக்கு வர முடியாது என்று உங்களக்கு தந்தி கொடுத்திருந்தேன்.

       அந்த தந்தி உங்களுக்கு 25 ஆம் தேதி மாலைதான் கிடைத்துள்ளது.

        ஆனால் எனது தந்தி உங்களக்குக் கிடைப்பதற்கு முன்பே, 25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அம்மா இறந்துவிட்டதாக எனக்கு, இரண்டாவது தந்தி கொடுத்துள்ளீர்கள்.

        நான் முதலில் கொடுத்த தந்தி, தாமதமாக உங்களுக்குக் கிடைத்த பொழுது, அது உங்களது இரண்டாவது தந்திக்குப் பதில் தந்தி என முடிவு செய்துவிட்டீர்கள்.

       கணேசன் வரமுடியாது என்று தந்தி கொடுத்து விட்டான் என்று எண்ணி, உடனடியாக இறுதி  யாத்திரைக்கு ஏற்பாடு செய்து, அம்மா என்ற அந்த பொற்கோயிலை மயானம் எடுத்துச் சென்று எரியூட்டிவிட்டீர்கள்.

     

இதற்கிடையே ஷில்லாங்கில், எனது அன்னை இறந்து விட்டார் என்ற செய்தி, இராணுவத்தினரிடையே, ஒரு பெரிய அதிர்ச்சியாக உருவானது.

      அம்மா கவலைக்கிடம் என்று தந்தி வந்தும், விடுமுறை தர மறுத்த, எனது மேலதிகாரியிடம் எல்லோரும் போய் கடுமையாகத் திட்டி வாதாடி இருக்கிறார்கள்.

      அவருக்கும் மேலுள்ள அதிகாரிகளும், அவரை கண்டபடி திட்டி, ஒரு மேலதிகாரியாக இருந்தும், எந்த நேரத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாத முட்டாள் என்று அவரை பரிகசித்திருக்கிறார்கள்.

      இதனால் கலக்கமடைந்த எனது மேலதிகாரி, உடனே எனது அலுவலகம் வந்து, எனது கைகளைப் பற்றிக் கொண்டு, வருத்தம் தெரிவித்தார்.

       மேலும் உடனடியாக நான் விடுமுறையில் போய் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

       நான், விடுமுறை வேண்டாம் என்றும், இனி நான் போய் ஆவது ஒன்றுமில்லை, எனது தாயின் இறுதிச் சடங்கை, எனது சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லி விடுமுறையினை மறுத்து விட்டேன்.

      ஆனால் அவர், நான் விடுமுறையில் போகாவிட்டால், அவர் குற்ற உணர்வில் வாழ்நாள் முழுதும் கஷ்டப் பட நேரிடும் என்று மிக மிக வருத்தப் பட்டார்.

      சரி, இவர் முகத்தில் விழிக்காமல் சில நாட்கள் இருக்கலாமே என்று நானும் விடுமுறையை ஏற்றுக் கொண்டேன்.

      ஆனால், நான் ஊர் வந்து சேர்வதற்குள் நீங்கள் எல்லோரும், மயானத்திலிருந்து திரும்பி இருந்தீர்கள்.

     பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.

     இப்படியும் விதி என் வாழவில் விளையாட வேண்டுமா?

     கடைசியாக அம்மாவைப் பார்த்தோம், என்ற நிம்மதி என் வாழ்வில் என்றுமே ஏற்படாதா?

      25 ஆம் தேதி அதிகாலை, அம்மா என்னைப் பார்க்க வந்தது போல் ஏற்பட்ட, உணர்வை நினைத்துப் பார்க்கிறேன்.

      ஆம், என்னைப் பொறுத்தவரை அம்மா இறக்கவில்லை. அம்மாவின் பூதவுடல்தான் அழிந்ததே தவிர, அம்மா சூக்கும உடலில் எப்பொழுதும் நம் கூடவேதான் இருப்பார், குறைந்தது என் கூட இருப்பார்.

     மறு நாள் 27 பிப்ரவரி 1970, முந்தித் தவமிருந்து, முன்னூறு நாள் சுமந்து, பெற்று எடுத்துப் பின்னைப் பாலூட்டிச் சீராட்டி, கண்ணே மணியே, என் கட்டிக் கரும்பே எனச் சொல்லி, வளர்த்து தன் சுகமெல்லாம் தந்து வாழுங்களப்பா, நான் வருகிறேன் எனச் சொல்லிச் சென்று விட்ட, நமது அன்னைக்குப் பாலூட்டினோம்.

    எரிந்த சாம்பலை ஒவ்வொன்றாக எடுக்கையில், எலும்புக் கூடு, அப்படியே பொடியாகிக் கிடந்தது.

     என்னைப் பார்க்கவில்லையே அம்மா? எனக் கதறினேன்.

      உடல் வலிமையும், உள வலிமையும் பெற்ற நீ, வளமும் நலமும் பெற்று என்றென்றும் சீரும் சிறப்புமாய் வாழ்வாயப்பா.

      உன் வாழ்க்கை ஒளி வீசும் என, நான் உறுதியுடன் நம்பினதால்தான், உன்னைப் பற்றிக் கவலையேப் படவில்லை.

      நீ ஏன் கலங்குகிறாய் என் செல்வமே. என்பது போல், அந்த மண்டை ஓடும், இதயக் கூடும், பிரிப்பவர்கள் கை பட்டு ஆடுவதை உணர்ந்தேன்.

மீண்டும் எழுதுவேன்,
பா.கணேசன்.

விதி என்னும் குழந்தை கையில் உலகம் தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
வீழ்த்திவிடும் மேல்கீழாய் வியந்திடாதே


       பொறியியல் படித்துப் பொதுப் பணித் துறையில் புகுந்து, அங்கிருந்து இராணுவத்தில் நுழைந்து, 2/LT ஆகப் பணியினைத் துவக்கி, கேப்டனாக வளர்ந்து, இன்று கர்னல் ஆக உயர்ந்து நிற்கிறார் கர்னல் கணேசன்.

      இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இன்று 73வயது இளைஞராக உலகை வலம் வருகிறார் கர்னல் கணேசன்.





கர்னல் கணேசன் 
அவர்களைப் போற்றுவோம்