01 பிப்ரவரி 2016

கல்லூரிப் பேராசான்




     ஆண்டு 1981. ஜுன் மாத இறுதி. தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கல்லூரி. அக்கல்வி ஆண்டின் முதல் நாள்.

     இளங்கலை கணித வகுப்பு

     தஞ்சாவூர், கரந்தை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற நான், இதோ, இளங்கலை கணித வகுப்பில், கடைசி வரிசையில்.


கடந்த ஆண்டு நான் பயின்ற வகுப்பறைக்குச் சென்று அமர்ந்து எடுத்துக் கொண்ட படம்

      பள்ளிக் காலத்தில் இருந்தே, முதல் வரிசையிலோ, இரண்டாம் வரிசையிலோ அமர்ந்த பழக்கமே கிடையாது. எப்பொழுதுமே இறுதி வரிசைதான்.

       ஏனோ தெரியவில்லை, கடைசி வரிசையே பழக்கமாகி விட்டது. கல்லூரிக்கு வந்தும், இறுதி வரிசையில்தான் இடம் பிடித்தேன்.

        வகுப்பில் அனைவருமே புது முகங்கள். ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டு, சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் அமர்ந்திருந்த வேளையில், மணி ஒலித்தது.

       முதல் நாள், முதல் வகுப்பு தொடங்கி விட்டது. சிறிது நேரத்தில், திடீரென்று வகுப்பறை அமைதி ஆனது.

      ஆசிரியர் வந்து விட்டார்.

       எல்லா மாணவர்களும் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். நானும் எழுந்து நின்றேன். ஆனால் ஆசிரியரைக் காணவில்லை.

        எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆசிரியர் வராத பொழுது, ஏன் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள் என்பது புரியவில்லை.

        அப்பொழுதுதான் கவனித்தேன். முதல் இரு வரிசைகளில் அமர்ந்திருந்த மாணவர்கள், கீழ் நோக்கிப் பார்த்த வண்ணம் நிற்பதைக் கவனித்தேன்.

        இப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை.

        திடீரென்று மேசை நகரும் சத்தம்.

         ஓசை வந்த திசையைப் பார்த்தேன்.

         வகுப்பறையில், கரும் பலகையை ஒட்டியபடி இருந்த மேசை, தானே நகர்ந்தது.

         திகைத்துப் போய் பார்த்தேன். கரும் பலகைக்கும் மேசைக்கும் இடையே, ஒரு கை, ஆமாம் நண்பர்களே, ஒரு கை மட்டும், மெல்ல மெல்ல மேலே வந்தது.

      மேலே வந்த கை, மேசையின் விளிம்பினைப் பற்றிக் கொள்ள, கையினைத் தொடர்ந்து, ஓர் உருவம், மெல்ல மேலெழும்பியது.

       கண்கள் இமைக்க மறந்தன. நான் கண்ட காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை.

       தன் இரண்டாவது கையினையும் மேசையில ஊன்றிய அந்த உருவம், இரு கைகளையும் மேசையில், முட்டுக் கொடுத்தபடி எழுந்து நின்றது.

Sit down

குரல் ஓங்கி ஒலித்தது.

   மயக்கம் கலைந்து எழுந்த உணர்வுடன், தலையை உதறியபடி பார்த்தேன்.

    செயலிழந்து சூம்பிப் போன, இரு சிறு, கால்களுடன், மேசையில் கையூன்றி, கைகளின் வலிமையால், கீழே விழுந்து விடாமல், நிற்கிறார் அம் மனிதர்.

உண்மையில், மாமனிதர்


இவர்தான்
பேராசிரியர் எஸ்.வி. பலராமன்.

---

      பிறந்த பொழுதே, செயலிழந்த கால்களுடன் பிறந்தவர்.

       பிறந்த குழந்தைகள் அனைத்தும, தவழ்ந்து, பின் எழுந்து நடக்கத் தொடங்குகையில், இவர் மட்டும், தவழ்ந்த நிலையிலேயே இன்றும் வாழ்ந்து வருபவர்.

        தவழ்ந்த சிறுவர்கள், எழுந்து நடை பயிலத் தொடங்கும் பொழுது, குழந்தைகளுக்கு, அக்காலத்தில், மரத்தினால் ஆன, ஒரு மூன்று சக்கர நடை வண்டி என்ற ஒன்றினை வாங்கிக் கொடுப்பார்களே, நினைவிருக்கிறதா?


      நடை பயிலும் வரை பயன் படுத்துவோம், பின் நம் வீட்டு விறகாக மாறுமே, அந்த நடை வண்டி, இதுவே இவரது வாழ்நாள் வாகனமாய் மாறிப் போனது.

      இயற்கை தனக்கு இழைத்த, மாபெரும் கொடுமையினைக் கண்டு கலங்காது, மூலையில் முடங்கி விடாமல், இரு கைகளாலும் அந்த நடை வண்டியைப் பற்றிய படி, எழுந்து நின்று, அதனைத் தள்ளிக் கொண்டே, தோளில் பள்ளிப் பையினைச் சுமந்தபடி, பள்ளியில் சேர்ந்தார்.

   படித்தார். சிறு வயதிலேயே ஓர் எண்ணம். ஓர் உண்மை, இவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போனது.

    கல்வி ஒன்றுதான் தம்மை கரை சேர்க்கும் என்பது புரிந்து போனது.

    தெருவில் மற்ற பிள்ளைகள் எல்லாம், ஓடியாடி விளையாடும் பொழுது, வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி புத்தகத்துடன் இவர் விளையாடுவார். கணிதத்தில் கரைந்து போவார்.

     கணிதப் பேராசிரியர் ஆனார்.

     இவரது வீடு, தஞ்சையின் மானம்புச் சாவடி என்னும் பகுதியில் இருந்தது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் பயணித்துதான் கல்லூரிக்கு வந்தாக வேண்டும்.

     படித்து முடித்த பின், இவரது நடை வண்டி, மூன்று சக்கர மிதிவண்டியாக மாறியது.

      நண்பர்களே, மூன்று சக்கர மிதி வண்டியைப் பார்த்திருக்கிறீர்களா? இதை மிதி வண்டி என்று சொல்வது கூட தவறுதான்.


    ஒருவர் மட்டும் அமரக் கூடிய இருக்கை. இருக்கையின் இருபுறமும் இரு சக்கரங்கள். இருக்கைக்கு முன் ஒரு சக்கரம். முன் சக்கரத்திற்கும் மேலே, சாதாரண சைக்கிளை மிதிக்கப் பயன்படும், பற் சக்கரத்துடன் இணைந்த, ஓர் இரும்பு உருளை, அதன் மையத்தில், இருபுறமும் கைப் பிடிகள்.

        இருக்கையில் அமர்ந்து கொண்டு, இரு கைகளாலும், இரு கைப் பிடிகளையும் பற்றி, அழுத்திச் சுழற்றி, சுழற்றி, வண்டியை இயக்கியாக வேண்டும்.

       அசராமல் கைகளால் வண்டியை இயக்குவார். முப்பதே நிமிடங்களில், ஐந்து கிலோ மீட்டர் தொலைவினைக் கடந்து, கல்லூரிக்கு வந்து விடுவார்.

       கணித வகுப்புகளோ மாடியில். மாடிப் படியின் கீழ், வண்டியை நிறுத்திவிட்டு, கைகளைத் தரையில் ஊன்றியபடியே, படிகளில் ஏறி வகுப்பிற்கு வருவார்.

       வகுப்பில் மேசையில், இடது கையை ஊன்றியவாறு நின்று கொண்டு, வலது கையால், கரும் பலகையில், கணக்குகளை எழுதி விளக்குவார்.

       கல்லூரி வகுப்புகள் தொடங்கிய, ஓரிரு வாரங்களிலேயே, ஆசிரியர் மாணவர் என்ற எல்லையினைக் கடந்த உறவில், என்னை இணைத்துக் கொண்டார்.

இளங்கலை இறுதி ஆண்டில் எடுத்துக் கொண்ட படம் (1984)
       மூன்று வருடங்கள் இப்பேராசிரியரிடம் கணிதம் கற்றேன். பின் அஞ்சல் வழியில், முதுகலை கணிதம், ஆசிரியர் படிப்பு என, என் படிப்பு இடம் மாறிப் போனது.

       அஞ்சல் வழியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களிலேயே, மருந்து விற்பனைப் பிரதிநிதி, இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில், உதிரிப் பாகங்களின் விற்பனையாளர், ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியர் என, என் வாழ்வும் தடம் மாறிப் போனது.

         பின் மெல்ல மெல்ல வாழ்வு, நான் பயின்ற பள்ளி வளாகத்தை நோக்கியே, என்னைத் திருப்பியது.

       கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியில் எழுத்தராய், ஊதியம் ஏதுமின்றி இரண்டாண்டுகள், பின் தொழிற் பயிற்சி மையத்தில் ரூ.300 மாத ஊதியத்தில் எழுத்தர், அதனைத் தொடர்ந்து, நான் பயின்ற உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், அலுவலக உதவியாளர் என நகர்ந்த என் வாழ்வு, அப்பள்ளியிலேயே பட்டதாரி நிலை கணித ஆசிரியராய் உயர்ந்தது.

    வாழ்க்கைப் பயணத்தில் ஆண்டுகள் பல கடந்தாலும், பேராசிரியருடனான என் உறவு, என் தொடர்பு, தொடர்ந்தே வந்தது.

     கல்லூரியில் இருந்து படித்து முடித்து வெளியேறி, ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், 1993 இல் எனது திருமணம். நான் பயின்ற, பணியாற்றுகின்ற பள்ளி வளாகத்திலேயே என் திருமணம். யாருக்குக் கிடைக்கும் இப்படி ஓர் வாய்ப்பு.

எனது திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தும் என் பேராசான்(1993)
     என் திருமணத்திற்கு முதல் நபராய் வருகை தந்து, மணிக் கணக்கில் அமர்ந்திருந்து, கடைசி நபராய் என் கரம் பற்றி வாழ்த்துக் கூறியவர் எனது பேராசிரியர் எஸ்.வி.பலராமன்.

     தஞ்சையில் பணியாற்றியவர் மாற்றலாகி வேலூர் சென்றார், பின் அங்கிருந்தும் மாற்றலாகி திருப்பத்தூர் சென்றார்.

        ஆண்டுகள் பல கடந்த நிலையில், என் பள்ளி முகவரிக்கு, ஒரு கடிதம் வந்தது.

        எனது பேராசிரியரிடமிருந்து, எனக்கு ஓர் மடல்.

அன்பின் ஜெயக்குமார், அரசுக் கலைக் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

   பிரமித்துத்தான் போனேன்.

    வாழ்வில் எத்தனைத எத்தனைத் தடைகள், எத்தனை எத்தனைச் சோதனைகள், எத்தனை எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், உள்ளத்தில் உண்மை உறுதியோடு அயராது, தளராது முயன்றால், முன்னேறலாம், முன்னேறி முன்னேறி, வாழ்வின் உச்சத்தினையும் தொடலாம் என்பதைச் சாதித்துக் காட்டியவர் என் கல்லூரிப் பேராசான்.

---

      கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக, பேராசிரியரின் மனைவியைச் சந்தித்தேன்.

ஜெயக்குமார் தானே, எப்படி இருக்கீங்க என முகம் மலர விசாரித்தார்

சார் ஓய்வு பெற்று விட்டார். தஞ்சையில் மாரியம்மன் கோயிலுக்கு அருகில்தான் இருக்கிறோம் என்றார்.

   அன்றில் இருந்தே, பேராசிரியரைப் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக்கத் தொடங்கியது.

    ஆயினும் பல்வேறு அலுவல்கள், பல்வேறு பிரச்சினைகள், நாளானது கடந்து கொண்டே இருந்தது.

    கடந்த 12.9.2015

    எனது திருமண நாள்.

    என் மனைவி ஆலயத்தில் உறையும் தெய்வங்களை வணங்குவதில் அதிக ஆர்வமுள்ளவர். நானோ, ஆலயத்திற்கு வெளியில், தெய்வங்களாய் நடமாடும் மனிதர்களைப் போற்றுவதில் ஆர்வமுள்ளவன்.

      திருமண நாளன்று என் மனைவி, மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றார். மாரியம்மன் கோயிலுக்கு அருகில்தான், என் கல்லூரிப் பேராசானும் இருக்கிறார், அவரை நான் பார்த்தாக வேண்டும், செல்வோம் என்றேன்.

       முதலில் கோயிலுக்குச் சென்றோம். பின் என் பேராசானின் இல்லத்திற்குச் சென்றோம்.

       சற்றேரக்குறைய இருபது வருடங்களுக்குப் பிறகு, எனது பேராசானைப் பார்க்கிறேன்.

     தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

     வீட்டினுள் நுழைந்து, சார் வணக்கம் என்றேன்.

     ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவர்,

     ஜெயக்குமார்தானே, வா, வா என்றார்.

      அருகில் அமர்ந்தேன்.

     பேராசான் பேசத் தொடங்கினார்.

     பேசினார் , பேசினார் பேசிக் கொண்டே இருந்தார்.

     இரண்டு மணி நேரம் கடந்து சென்றதே தெரியவில்லை.

    கல்லூரி நாட்கள் குறித்துப் பேசினார். என் கல்லூரிக் காலத்தில், நானே மறந்த பல நினைவுகளைக் கூட, எனக்கு மீட்டுக் கொடுத்தார்.

       உடல் நிலை எப்படி இருக்கிறது என்றேன்.

       முன்பெல்லாம், கால்களை மடக்காமல், நேராக வைத்துக் கொண்டு, உடலினை மட்டும், கீழ்நோக்கி வளைத்து, கைகள் இரண்டையும், தரையில் ஊன்றி நடப்பேன்.

        இப்பொழுது அதுபோல் நடக்க முடிவதில்லை என்றார். எனக்காகவே நடந்தும் காட்டினார்.



      உட்கார்ந்த நிலையிலேயே, கைகளை இரு புறமும் தரையில் ஊன்றி, இடுப்பை மெல்ல, மெல்ல, அசைத்து, அசைத்து, அமர்ந்த நிலையிலேயே பக்க வாட்டில் நகருகிறார்.

        உடல் நிலை நலிவடைந்திருப்பதைக் காண வருத்தமாக இருந்தது. ஆனாலும் மன நிலை, மாறவே இல்லை.

        சுமார் 32 ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில் பார்த்த அதே மன நிலையில் இருக்கிறார்.

        உங்களோடு சேர்ந்து ஒரு புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமே என்றேன்.




        அருகில் வா என்றவர், வாஞ்சையுடன், தோழன் போல், தோளில் கை போட்டுக் கொண்டு, சிரித்த முகத்துடன், புகைப் படத்திற்குத் தயாரானார்.

        என் மனைவி புகைப்படம் எடுத்தார்.

        நேரம் கடந்து கொண்டே இருந்ததால், வருகிறேன் ஐயா எனக் கூறி விடை பெற்றேன். நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் வா என்றார்.

        நிச்சயம் வருவேன் ஐயா.