08 பிப்ரவரி 2016

வலைக்காடு

  



 திரைப்படம் தொடங்கி பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது.

     உங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

       தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

      இதோ இப்படீங்கறதுக்குள்ளாக மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் காலதாமதமாகும் சூழல்.

      உள்ளே புகுந்து தேடலாம் என்று யோசனை வருகிறது. ஆனால் அதைச் செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.

     டேய் டைசன், இங்கே வா, உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.


    டைசன் ஒரு அனாதை. அப்படியே ஏதேனும் நிகழ்ந்தாலும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற தைரியம் எல்லோருக்கும்.

    குழந்தை உள்ளே நுழைகிறான். பெஞ்சுகளின் அடியில், நாற்காலிகளின் அடியில் என்று அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கிறான்.

     கடைசியாக தீ என்று எழுதிய வாளி மணலில் இருந்தது. எடுத்து வெளியே வீசும் போது வெடித்தது. அச்சிறுவன் மயங்கி விழுந்தான்.

     யாரும் கண்டுகொள்ளவில்லை.

     ஒரு ஏழைக் கிழவி, அவனை எடுத்துப் போய் மருத்துவம் பார்க்கிறார். பிழைக்கிறான்.

      பின் இவன் ஆளாகி, தன் குடும்பத்தைத் தேடுகிறான். கண்டும் பிடிக்கிறான். வளமையாய் இருக்கிறார்கள்.

      அவர்களோடு இருக்க வற்புறுத்துகிறார்கள்.

      எல்லோரும் இருந்தபோதே, என்னை அனாதையாக்கினீர்கள். இனி வேண்டாம். நான் ஆனாதைக் குழந்தைகளோடு, அவர்களோடு ஒருவராய், அவர்களுக்காக வாழப் போகிறேன்.

நண்பர்களே,
இது கதையல்ல
உண்மை.

இந்த டைசன்தான்
புதுக்கோட்டை மாவட்டத்தின்
சாரள் இல்லத்தின்
டைசன்.

      இப்பெருமைமிகு டைசனைக் கண்டுபிடித்து, தன் வலையின் வழி, உலகிற்கே, வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஒரு பதிவர்.

      அதுமட்டுமல்ல.

      நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை. என் நோக்கமெல்லாம், நாம் ஒவ்வொரு பதிவரும், ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு, உடை, உதவிகளைச் செய்ய வேண்டும்.

    இது நம் நிலைக்கு மிகச் சிறிய தொகையாகத்தான் இருக்கும்.

     இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு, மூன்று நபர்கள் சேர்ந்தும், ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்.

     ஓர் ஆண்டுக்கு ஆகும் செலவைத் தந்து விட்டால், ஒரு குழந்தை, தன் வாழ்வை, உங்களின் பெயரால் வாழும்.

   வாருங்கள், வடம் பிடிப்போம்.

   நம்மையும் அழைக்கிறார் இப் பதிவர்.

கலையாயினும், வலையாயினும் மக்களுக்காகவே என்று உரத்து சொல்லும் இவர்தான்,



சுரேகா.
http://www.surekaa.com/

     தன் கீழ் பணியாற்றக் கூடிய, அவரது மொழியில் சரியாகச் சொல்வதெனில், தன்னோடு பணியாற்றக் கூடிய ஆசிரியர்களை, மாணவர்களைப் படிப்பிக்க வேண்டுமெனில், முதலில் தாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணரச் செய்தவரின் வலை இது.

     இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது, என்பதை உணரச் செய்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய, தொண்ணூறு விழுக்காடுத் தமிழாசிரியர்களை, இணையத்திற்கு இழுத்து, வலைப் பூ தொடங்கத் தூண்டியவர் இவர்.

     இவரது வலையினை இப்படியும் சொல்லலாம்.

   ஏராளமான வலைகளையும், வலைஞர்களையும் உருவாக்கிய ஒரு விதை வலை.


நடை நமது

இவர்தான்
முனைவர் நா.அருள்முருகன்
முதன்மைக் கல்வி அலுவலர்
http://nadainamathu.blogspot.com/

     யானையை மரமேறச் சொல்வது சரியா?

    இன்றைய தமிழகக் கல்வித் துறையின் பாடத் திட்டம், பயிற்சி முறை, தேர்வு முறை, ஆகியவை குறித்து, மிக அழகாக நகரும் கட்டுரைகளைக் கொண்டது இவரது வலை.

    இவ்வலையின் சிறப்பு என்னவென்றால், வாசிக்க வேண்டியவற்றை, வாசிக்கிற மாதிரி வைப்பதுதான்.


இவர்தான்
கவிஞர் முத்து நிலவன்
இவரது வலை
வளரும் கவிதை

நான் பார்த்து
வளர்ந்தவன் – இப்போது
நகராட்சி கவுன்சிலர்.
இவர் பிறந்தது தெரியுமென்று
சான்று தருகிறான் எனக்கு.

இது போன்ற நறுக்குக் கவிதைகள் ஏராளம், ஏராளம்.

     சிறுமை கண்டு சீறுதல், இறைவனே அறம் பிறழ்ந்தாலும், அதைச் சுட்டிக் காட்டுதல் போன்ற குணங்கள், தமிழுக்கு இருப்பதை, அழகியலோடு சொல்லும் வலை.


இவர்தான்
ஹரணி
இவரது வலை
ஹரணி பக்கங்கள்

     ஏன், என் பிள்ளைகளை மதிப்பெண்களைக் கொண்டு அளவிடுகிறீர்கள்? என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது, ஆச்சரியத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது.

    குறைவான மதிப்பெண்களைப் பெறுகிற குழந்தை ஒருவரின் தந்தை, இப்படிக் கோவப்படுகிறார் என்றால், ஆச்சரியப் படுவதற்கு அதில் ஒன்றுமில்லை. ஆனால் எண்ணூருக்கு எழுநூற்றி எண்பது பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை, மதிப்பெண் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு உரத்த குரலெடுத்து, இப்படிக் கேட்கிறார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா?

    அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து, அதில் கல்வி குறித்த அவரது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார் என்றால், அவரைப் போற்ற வேண்டாமா?


இவர்தான்
ஜோதிஜி


இவரது வலை
தேவியர் இல்லம்

     ஒரு சின்னக் குழந்தை, தனது பெற்றோரிடம், தனக்கு ஜுரம் அடிக்கிறது என்று சொன்னது, அவனது பெற்றோர்களுக்கு, தங்கள் வாழ்நாளில் அதுவரை கண்டிராத மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று சொன்னால், நம்ப முடியுமா? ஆனால் அப்படி நடந்திருக்கிறது.

    அப்பபடியென்றால், அவ்வளவு வித்தியாசமான பெற்றோர்களா அவர்கள்? அவர்கள் அல்ல, அந்தக் குழந்தை, அவ்வளவு வித்தியாசமானக் குழந்தை.

    ஆம், ஆட்டிசம் பாதித்த குழந்தை.

     ஆட்டிசம் குறித்த இவரது பதிவுகள், ஆட்டிசம் மீது நமக்குள்ள மிகையான கருத்துக்களை அழித்துப் போடும்.

      ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகளையும், குழந்தைகளாய் பார்க்கும் பக்குவத்தை நமக்குத் தருகிறது இவரது வலை.


இவர்தான்
யெஸ் பாலபாரதி
இவரது வலை

    ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்பதோடு பாலியல் பிரச்சினைகளில், சிக்கல்களில், நாம் சுருங்கிப் போகிறோம்.

     இவை எதனினும் பெரிதான பாலியல் பிரச்சினைகளையும், சிக்கல்களையும், நாம் உதாசீனம் செய்கிறோம் என்பதைவிட, அந்தச் சிக்கல்கள் குறித்த, எந்த சிறு தெளிவும், புரிதலும் இன்றியே, நம்மில் பெரும்பான்மையோர் வாழ்ந்து சாகிறோம்.

     திருநங்கையர் மற்றும் திருநம்பியர் ஆகியோர் அனுபவிக்கும் பாலியல் சிக்கல்கள், இந்த உலகம் சந்திக்கும், எந்தச் சிக்கலை விடவும், கொடூரமானதும், வலி மிக்கதுமாகும்.

      பிச்சைக்காரர்களாக, பாலியல் ஊழியர்களாக மட்டுமே இவர்களை, ஒரு அசூசையோடு பார்த்தவர்கள், இவரின், வலையைப் பார்த்தால், தாங்களும் மனிதர்களே என்பதற்கான, இவர்களது இருபது வருடங்களுக்கும் மேலான போராட்டத்தின் நியாயத்தை உணர்வார்கள்.

    இவரது வலையின் உள்ளே போய் பாருங்கள், இவர்களை சக மனிதர்களாக பார்க்கும் பக்குவம் வரும், போக வரும் காலத்தில், நம் குடும்பத்தில், திருநங்கையோ, திருநம்பியோ தோன்றினால், அவர்களும் நம் பிள்ளைகள்தான் என்று குடும்பத்திற்குள் அரவணைக்கும் பக்குவத்தை இவரது வலை வழங்கும்.

ஸ்மைல் பக்கங்கள்


அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை,
நேசம் ததும்ப ஒரு சொல்
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென
கொஞ்சமே கொஞ்சம் பிரியம்
இதுதான்
இவ்வளவேதான்

  சற்றும் உலராத ஈரம் சொட்டும் அன்பின் பாய்ச்சலும், அன்பிற்கான யாசித்தலுமே, இந்த வலை நெடுகக் கொட்டிக் கிடக்கின்றது.


ஆழ்மனக் குறிப்புகள்

இயற்கையில் திளைத்தல்
கலைகளை ரசித்தல்
காலார நடத்தல்
நிலத்தோடு வாழல்
புத்தக வாசனை
உண்மையைத் தேடல்
மனிதனாய் வாழ்தல்

என்று இவர் தன்னைப் பற்றிக் கூறுகிறார். இவை முழுக்க முழுக்க உண்மை என்பதை இவரது வலை நிறுவுகிறது.

இவர்தான்
மணிமேகலை


இவரது வலை
அட்சய பாத்திரம்

    நண்பர்களே, சிறு குழப்பம் உங்களது மனதை மெல்ல மெல்ல, சூழ்ந்து கொண்டிருப்பது புரிகிறது.

     என்னடா இவன், வலைச் சரத்திற்கு எழுத வேண்டிய பதிவை, இடம் மாற்றி எழுதி இருக்கிறானே, என்ற உங்களின் எண்ணவோட்டம் புரிகிறது.

     இத்தனை வலைப் பூக்களையும், ஒரு நூலில் கண்டெடுத்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா?

    ஆனாலும் உண்மை இதுதான். இந்நூலில் இன்னும் பல வலைகள் குறித்தும், அறிமுகக் கட்டுரைகள் நிறைந்து நிற்கின்றன.

    யாரிடமும் சொல்ல வேண்டாம், என்னுடைய வலையினைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.

     அனேகமாக, இந்த நூல்தான், வலைகளைப் பற்றிய நூல்களுள் முதலாவதாகவும் இருக்கும் என எண்ணுகின்றேன். இதற்காகவே இந்நூலின் ஆசிரியர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

      இந்நூலாசிரியர், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் சுவாசிப்பது, நட்பினையும், நட்புறவுகளையும மட்டும்தான் என்பதையும் இந்நூல் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

     என் வாழ்வின் இக்கட்டான நேரங்களில், தங்களது அன்பாலும், வார்த்தைகளாலும், சகலவிதமான உதவிகளாலும், என்னை உயிரோடு வைத்திருக்கும் தோழர்கள் மோகனா, கவிஞர் ஜெயதேவன், தோழர் ஹரிஹரன் சோமசுந்தரம் மூவரையும், என் கடைசி மூச்சு நிற்கும் வரை நன்றியோடு நினைத்திருப்பேன் என்கிறார்.

    இவர் தோழமையைப் போற்ற, பதிப்பாளரோ இவரைப் போற்றுகிறார்.

      வாசிப்பதன் வழியாக, ஒரு எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இருக்கும் உறவைவிட, இன்னும் நெருக்கமானதாகவும், இன்னும் பிரியமானதாகவும், ஒரு எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்குமான உறவு ,இருக்க முடியும் என்பதை, இவர் மூலம்தான் உணர்ந்து கொண்டேன் என்கிறார், இந்நூலின் பதிப்பாளர் இளம்பரிதி.

     தோழமையின் வெற்றி தெரிகிறதல்லவா

இதுமட்டுமல்ல
இந்நூலினையே இவர்,
ஒரு பதிவருக்குத்தான்
தோழமையோடு சமர்ப்பித்திருக்கிறார்.

விஷ்ணுபுரம் சரவணன் எப்போதாவது எழுதுவதை,
எப்போதும் பேசிக்கொண்டிருப்பவன் நான்
என்று கூறி,



விஷ்ணுபுரம் சரவணன்
நள்ளிரவுக் காற்று
அவர்களுக்கு
இந் நூலைச் சமர்ப்பித்திருக்கிறார்.

நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான்.
இவரை ஊர் அறியும், இந்த உலகு முழுதும் அறியும்,

வலை உலகோ
இவரின் பெருமையினை
சூறாவளியாய் சூழன்றடிக்கும் மேடைப் பேச்சினை
தென்றலாய் வருடும் இவரது நட்பினை
தளர்வறியாக் கல்விப் பணியினை
எந்நாளும் போற்றும்.

இவர்
வகுப்பறைக்கு வெளியிலும்
ஆசிரியராகவே
வாழ்ந்து கொண்டிருப்பவர்.

விரிவான விடைகளை – நீங்கள்
கண்டு அடைவதன் நிமித்தமாக
எழுதியிருக்கும்
ஒரு வரி விடைகள்தான்
இந்த வலைக்காடு.

சிறந்த வலைத் தளங்கள் குறித்த
அறிமுகமாக மட்டும் இல்லாமல்
சிறந்த வலைப் பதிவர்களின்
நட்பாகவும் நிறைகிறது
இவரின் எழுத்துக்கள்.



இவர்தான்
தோழர் இரா.எட்வின்


இவரது ஏழாவது நூல்தான், இந்த


வலைக்காடு

நண்பர்களே, இவரது வலைக்காட்டில்
காலார நடந்து பாருங்கள்
எழுத்துக்களின் வாசத்தை
மனதார சுவாசித்துப் பாருங்கள்.
எழுத்துக்களில் நிரம்பி வழியும் நேசத்தை
நெஞ்சார அனுபவித்து மகிழுங்கள்.


வெளியீடு
பரிதி பதிப்பகம்,
56சி,பாரதகோயில் அருகில்,
ஜோலார் பேட்டை,
வேலூர் மாவட்டம்-635851
அலைபேசி 72006 93200

விலை ரூ.80