12 மார்ச் 2016

கடவுள் கைவிட்டார்


இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினைஉன் னாதே – பருத்ததொந்தி
நம்மதுஎன்று நாம்இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதுஎன்று தாம் இருக்கும் தான்.

என்று பாடுவாரே ஒரு சித்தர் நினைவிருக்கிறதா. இச்சித்தர் இப்புவியில் இறுதியாய் நடமாடிய மண்ணில், கடற்கரை மணலில், கடந்த 4.3.2016 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 11.00 மணியளவில், நானும் கால் பதித்தேன்.

     சித்தர் இறுதியாய் சுவாசித்த, இக்கடற்கரைக் காற்றை நானும் மெல்ல மெல்ல சுவாசித்தேன்.


   பத்து நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இச்சித்தர் இறுதியாய் கால் பதித்த இடத்திற்கு அருகில் உள்ள, மடத்தில், வேதனையோடு அமர்ந்திருந்த வேளையில், அருகிருந்த ஒருவர் கூறினார், அருகில்தான் சித்தர் சமாதியான இடம் இருக்கிறது.

      மெல்ல எழுந்து மெதுவாய் நடந்து வெளியே வந்தேன். தஞ்சையில் இருந்து நாங்கள் வந்த வாடகைக் கார் காத்திருந்தது.

     அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், கடற்கரை மணலில் கால் பதித்தேன்.

     அமைதியான சூழல். ஆனாலும் மனதில் மகிழ்ச்சி இல்லை .வெறுமையான மனதுடன் சுற்றிப் பார்த்தேன்.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென்இ லங்கையிலே
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே

என்று தன் அன்னைக்குத் தீ மூட்டிப் பாடினார் அல்லவா, ஒரு சித்தர், அவர்தம் இறுதி நாட்களை, இறுதி நிமிடங்களைக் கழித்த இடத்தில் அமைதியாய் நின்றேன்.

   

அச் சித்தர் பட்டினத்தார்.

    இடம். சென்னை, திருவொற்றியூர்.

---

    எங்களது வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர்கள் திரு அழகப்பன், சீதாலட்சுமி தம்பதியினர்.

    இவர்களுக்கு இரு பெண்கள். இருவருமே திருமணமாகி, தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்கள்.

    அழகப்பன் சீதாலட்சுமி தம்பதியினர், தெய்வ வழிபாட்டினைத் தம் அன்றாடப் பணிகளுள் ஒன்றாகவே கருதி, பின்பற்றி வருபவர்கள்.

    காசிக்குச் செல்ல வேண்டும், கங்கையில் மூழ்கி எழ வேண்டும், காசி விசுவநாதரை நெக்குருக வணங்க வேண்டும் என்பதில் தீரா ஆர்வமுடையவர்கள்.

   கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காசிக்குச் சென்று வந்தார்கள். இவ்வாண்டும் சென்றே ஆக வேண்டும் என்ற பெரு விருப்பம் இருவருக்கும்.

     உறவினர் பலருடன் இணைந்து, சென்னையில் இருந்து, தொடர் வண்டி மூலம், காசிக்குப் புறப்பட்டும் விட்டார்கள்.

     பயணம் தொடங்கிய சில மணி நேரங்களில், திரு அழகப்பன் அவர்களின் துணைவியார் திருமதி சீதாலட்சுமி அவர்களுக்கு லேசான காய்ச்சல். பின் மெதுவாய் ஒரு நடுக்கம். பயணத்தைத் தொடர முடியாத நிலை.

     ஹைதராபாத் தொடர் வண்டி நியைத்தில் இறங்கி, வண்டி மாறிப் பயணித்து, மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்தார்கள்.

     சென்னையின் புகழ் பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றில், திருமதி சீதாலட்சுமி அவர்கள் சேர்க்கப் பட்டார். பல இலட்சங்கள், படு வேகமாய் கரைந்தன.

திருமதி சீதாலட்சுமி
இரண்டே நாள். வெள்ளைத் துணியால் முகம் தவிர, உடல் முழுவதையும் மூடி, இறுகக் கட்டி, குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, பத்திரமாய் திருப்பிக் கொடுத்து விட்டனர்.

     வெற்றுக் காய்ச்சலுக்காக, நடந்து சென்று மருத்துவ மனையில் சேர்ந்தவர், கண்மூடி, கண்ணாடிப் பெட்டியுடன் திரும்பி வந்திருக்கிறார்.

     சாகிற வயதா என்ன?
 
     அல்லது வந்ததுதான் உயிர் கொல்லி நோயா என்ன?

     காசிக்குச் சென்றவரைக் கடவுளும் காப்பாற்றவில்லை, பணம், பணம் என்று கேட்டுக் கேட்டு வாங்கி, கல்லாவை நிரப்பிக் கொண்ட மருத்துவக் கடவுளர்களும் காப்பாற்றவில்லை.

      அதிர்ந்துதான் போய்விட்டோம்.

      என் மனைவி, எதிர்வீட்டு திரு சுந்தரராசன் அவர்களின் துணைவியார் மற்றும் இந்த திருமதி சீதாலட்சுமி மூவரும் நெருங்கிய தோழிகள்.

     தினமும் மாலை நேரத்தில், மூவரும் ஒன்றாய் அமர்ந்து, மணிக் கணக்கில் பேசிப் பேசி மகிழ்வர். எங்கு சென்றாலும் மூவருமாய் இணைந்தே செல்வர்.

      திருமதி சீதாலட்சுமி மறைந்தார்.

      செய்தி அறிந்து திகைத்துத்தான் போனோம்.

---
     கடந்த 3.3.2016 வியாழன் இரவு 8.00 மணி அளவில் செய்தி அறிந்தோம்.

     இரவு 11.00 மணி அளவில் வாடகைக் காரில் சென்னைக்குப் புறப்பட்டோம்.

    நான், எனது மனைவி, அருகாமை வீட்டைச் சார்ந்த நண்பர் திரு இராபர்ட், எதிர் வீட்டு நண்பர் திரு சுந்தரராசன் மற்றும் அவரது மனைவி, எங்கள் தெருவினைச் சார்ந்த நண்பர் திரு கண்ணன் அவர்களின் தாயார், மற்றும் திரு அழகப்பன் அவர்களின் உறவினர் ஒருவர் என எழுவர் புறப்பட்டோம்.

     அதிகாலை 5.00 மணியளவில், சென்னை வளசர வாக்கத்தை அடைந்தோம். நண்பர் திரு அனந்தராமன் அவர்களின் இல்லத்தில், சிறிது ஓய்வு எடுத்தோம்.

     
காலை 9.00 மணி அளவில், திருவொற்றியூர், காளி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள, திருவொற்றியூர் நகர மடம் சென்றோம்.

      அழகப்பன் சீதாலட்சுமி தம்பதியினர், நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

      இச்சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கான மடம் இது. இம் மடம் 1859 ஆம் ஆண்டு கட்டப் பெற்றதாகும்.

      சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவராகவே அறியப் படுகிறார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரைச் சார்ந்த சிவனேசச் செட்டியார், ஞானக்கலை தம்பதியினரின் மகனாய் பிறந்தவர் இந்தப் பட்டினத்தார். இப்பட்டினத்தார் தன் வாழ்வினைத் துறந்தது, இந்தத் திருவொற்றியூரில்தான்.


     
பட்டினத்தார் பழைய கோயில்
பட்டினத்தார் புதுக் கோயில்

எனவே, பட்டினத்தார் வாழ்வினைத் துறந்த இடத்தில், தங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களின் இறுதிச் சடங்கினைச் செய்வதைப் பெரும் புண்ணியமாக இவர்கள் போற்றுகின்றர்.

      நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் இறுதி யாத்திரைக்காகவே, உருவாக்கப் பட்ட மடம்தான் இந்த திருவொற்றியூர் நகர மடம்.

      மடத்திற்குள் நுழைந்தோம். எதிரில் திரு அழகப்பன் அவர்கள். ஆறுதல் கூற வார்த்தைகள் யாரிடமும் இல்லை.

      கலங்கிய கண்களுடன் கரம் பற்றி அருகில் அமர்ந்தோம்.

     திரு அழகப்பன் மெல்லப் பேசத் தொடங்கினார். தன் மனைவியின் திடீர் மறைவு குறித்து, மெல்லப் பேசத் தொடங்கினார்.

    மருத்துவ மனையில் சேர்த்த பிறகு, இரவு முழுவதும் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. உடலின் நீர் சக்தி முழுவதும், முழுமையாய் வெளியேறி இருக்கிறது.

      வயிற்றுப் போக்கினால் ஏற்படும், நீர் இழப்பினைத் தடுக்க, ஈடு செய்ய, நரம்பு வழியாக, பல பாட்டில்கள், நீர்க் கரைசலை மருந்துடன் செலுத்துவார்கள் அல்லவா. இந்த மருத்துவ முறை, இம்மருத்துவ மனையில் பின்பற்றப் படவே இல்லை என்றார்.

     மறு நாள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயழிலக்கத் தொடங்கி இருக்கின்றன.

     திருமதி சீதாலட்சுமி அவர்கள் சிறு, சிறு உடல் உபாதைகளுக்காக, நாட்டு மருந்தை, தமிழ் மருத்துவ முறையிலான மருத்துவத்தைப் பின் பற்றி வந்தவர். எனவே ஆங்கில மருந்து வேலை செய்யவில்லை என ஒருவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

      நான் அறிந்த மருத்துவர்கள் சிலரிடம் பேசிய பொழுது, இதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிவித்தனர்.

      காரணம் எதுவாக இருப்பினும், சாதாரணக் காய்ச்சலுக்காகச் சென்றவர், கண் மூடியதை மனம் ஒப்ப மறுக்கிறது.

       திரும்பும் திசையெல்லாம், மருத்துவ மனைகள் பல்கிப் பெருகி, ஓங்கி உயர்ந்து வளர்ந்தும், பலன்தான் என்ன?

       விலை மதிப்பிலா உயிரினை, நம் குடும்பத்தின் எதிர்கால நலனை, கடவுளர்கள் என்று எண்ணித்தானே, மருத்துவர்களிடம் ஒப்படைக்கிறோம். அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கிறோம், மறுதலிக்காமல் செய்கிறோம்.

     கேட்ட பணத்தை எல்லாம், எதற்கு இவ்வளவு? என்று வாய் திறந்து கேளாமல், சிறு முனு முனுப்பு கூட இல்லாமல், சுகமானால் போதும், குணமானால் போதும் என்று, கடன் வாங்கியாவது கட்டுகிறோம்

     ஆனாலும் கடவுளர்கள் கைவிட்டு விடுகிறார்களே.

     இது நியாயமா?

     இழப்பு நமக்கல்லவா.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.
-    பட்டினத்தார்