25 மார்ச் 2016

மது விலக்கு நாயகர்




     ஆண்டு 1947, மார்ச் 23.

      தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் மகத்தான ஆதரவுடன், அம்மனிதர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்ற நாள். நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

     பதவி ஏற்றவுடன் கட்சிக்காரர்களை அழைத்தார். உத்தரவு போட்டார்.

    பாராட்டு விழாக்கள் கூடாது, கூடவே கூடாது.


   அப்படியும் தொண்டர்களும், கட்சிக்காரர்களும் அழைக்கத்தான் செய்தார்கள்.

நான் அரசாங்கத்தை நடத்துவதா? இல்லை இம்மாதிரிக் கூட்டங்களில் கலந்து பேசிக்கொண்டே இருப்பதா? திடமாக மறுத்தார்.

       ஒரு முறை உயர் நீதி மன்ற நீதிபதியைக் கூட சந்திக்க மறுத்தார்.

    சந்திப்பதற்காக எழுதிக் கொடுத்த அனுமதிச் சீட்டில், சந்திக்க விரும்புவதன் காரணம் என்ற இடம் நிரப்பப் படாமலேயே இருந்தது. அதனால் தவறான சிபாரிசுக்காக வருகிறார் என முடிவு செய்து, அவரைச் சந்திக்க மறுத்தேன். அமைச்சர்களும் நீதிபதிகளும் மற்றவர் கடமைகளில் குறுக்கிடாமல் இருந்தால்தானே, அரசு இயந்திரம் செம்மையாக, நேர்மையாக இயங்கும்.

      மக்களுடைய நன்மைக்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும், நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்கு அல்ல.

     எத்துனை நேர்மையான மனிதர்.

     இவர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்னமே, ஒரு திடமான முடிவில் இருந்தார்.

மது விலக்கு.

     மது விலக்கினை அமல் படுத்தியாக வேண்டும்.

     மதுவின் பிடியில் இருந்து, நாட்டு மக்களை, போதையின் கரம் பற்றித் தள்ளாடும் இளைஞர்களை மீட்டே ஆக வேண்டும்.

     மதுவில்லா தேசமாக மாற்றிக் காட்டியே ஆக வேண்டும்.

      இப்படிப்பட்ட உயரிய மனிதர், மக்களின் மகத்தான ஆதரவுடன், பிரதம மந்திரியாகவும் ஆகிவிட்டார். பிறகென்ன.

      25 மாவட்டங்களைக் கொண்ட நாட்டில், எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு, பெயரளவில் இருந்த காலம் அது.

      குடிகாரர்கள் மதுவைத் தேடி, மற்ற மாவட்டங்களுக்கு நடையாய் நடந்து, தள்ளாடியபடி, திரும்பிக் கொண்டிருந்த காலம் அது.

25 மாவட்டங்களிலும் மது விலக்கு.
இன்று முதல் அமல் படுத்தப் படுகிறது.

      அரசு அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துரைத்தனர். பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல. குடிகாரர்களைத் திருத்த முடியாது. அவர்களின் மனதை மாற்ற முடியாது.

     முயன்றால் முடியாதது இல்லை. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சிற்றூரிலும், சிற்றூரின் ஒவ்வொரு தெருவிலும், மதுவின் வாடை கூட வீசக் கூடாது.

   கண்டிப்பாய் உத்தரவு போட்டார்.

    அன்றே தேயிலைக் கழகத்தாரை அழைத்தார். கலந்து பேசினார். அடுத்த நாள் அடுத்த அறிவிப்பு வந்தது.

    இனி அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து சிற்றூர்களிலும், நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேநீர் இலவசம்.

     ஊரெங்கும் தேநீர் கடைகள் திறக்கப் பட்டன. விரும்பும் மக்கள், ஒரு நாளைக்கு எத்துனை முறை வேண்டுமானாலும், இலவசமாகவே தேநீர் அருந்தலாம்.

மதுவை மனம் நாடுகிறதா?
வா, வா, வந்து தேநீர் குடி. எவ்வளவு வேண்டுமானாலும் குடி.

     நண்பர்களே, எப்படி இந்தத் திட்டம். குடிப் பழக்கத்திற்கு மாற்றாக, தேநீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

     அனேகமாக இதுதான், இந்நாட்டின் முதல் இலவசத் திட்டமாக இருக்கும்.

    எத்துனை பயனுள்ள, பொருள் பொதிந்த இலவசத் திட்டம்.

    இது மட்டுமல்ல, மது அருந்துவதைக் கைவிடுவதால், ஏற்படும் பயன்கள் பற்றி ஊர் தோறும் நாடகங்கள், கதாகாலேட்சபங்கள், பஜனைகள் நடத்தப் பெற்றன.

      இதற்கே வியக்கிறீர்களே இன்னும் இருக்கிறது.

      சடுகுடு, பிள்ளையார் பாண்டு, கிளித் தட்டு, தெருக் கூத்து முதலிய கிராமிய விளையாட்டுக்களும், கலைகளும் கிராமப்புற மேம்பாட்டு அலுவலர்கள் மூலமாக கிராமம் தோறும் மீண்டும் உயிர்பிக்கப் பெற்றன.

      மக்கள் மதுவை மறந்தனர்.

     உடல் நலனில் தேறினர்.

      குடும்பமே உயர்வென்று போற்றத் தொடங்கினார்.

      குடும்பங்கள் செழித்தன. நாடு தழைத்தது.

     நண்பர்களே, படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கிறது அல்லவா, வாசிக்க வாசிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா, நினைக்க நினைக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது அல்லவா.

     இதைச் சாதித்துக் காட்டிய பிரதம மந்திரி எந்த நாட்டைச் சார்ந்தவர் தெரியுமா?

     நமது நாட்டைச் சார்ந்தவர்.

     என்ன என்ன, நமது நாட்டைச் சார்ந்தவரா?

     நமது நாடேதான். இம் மாமனிதர் அரியனை ஏரிய காலத்தில், அதாவது, நமது நாட்டு விடுதலைக்கு முன், மாநில முதல்வர்களை பிரதம மந்திரி என்றுதான் அழைத்தார்கள்.

     நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான், மத்தியில் ஆள்பவரை பிரதம மந்திரி என்றும், மாநிலத்தை ஆள்பவரை பிரிமியர் என்றும் அழைக்கத் தொடங்கினார்கள்.

     1950 ஆம் ஆண்டு சனவரி 26 இல், அரசியல் நிர்ணய சபை, நிறைவேற்றிய சுதந்திர இந்தியாவின், அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்த பிரிமியர்கள், முதலமைச்சர்கள் ஆனார்கள்.

     நமக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனாலும் நம்மில் பலர் மறந்து போன செய்தி.

     அப்படியானால், அடுத்த கேள்வி, நம் முன்னே தோன்றுகிறது அல்லவா? நாட்டின் பிரதம மந்திரி இல்லை என்றால், இவர் மாநிலத்தின் பிரதம மந்திரி அல்லவா?

      ஆம், அப்படியானால், எந்த மாநிலத்தின் பிரதம மந்திரி இவர்.

     சொல்லட்டுமா? சொன்னால் நம்புவீர்களா?

      நம்பித்தான் ஆக வேண்டும்.

     ஏனெனில் இது வரலாற்றின் பக்கங்களில் உளி கொண்டு, செதுக்கப் பெற்ற உண்மை.

      ஒரு முறை மூச்சை, இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்.

இவர், நம்
சென்னை மாகாணத்தின்
பிரதம மந்திரி

ஆம்
சென்னை இராஜதானியின்
பிரிமியர்

நம் பெருமைமிகு தமிழ் நாட்டின்
முதலமைச்சர்


இவர்தான்

ஓமந்தூரார்

ஓ.பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூரார், பெரிய வளைவு, ராமசாமி ரெட்டியார்.

ஓமந்தூராரின் நினைவினைப் போற்றுவோம்.