03 பிப்ரவரி 2017

ஹைபேஷா




கி.பி. 415

     அலெக்ஸாண்ட்ரியா. எகிப்தின் தலைநகர்.

     இருள் சூழும் நேரம்.

     அகன்று நீண்டிருந்த அந்தச் சாலையின் வழியே, அந்தத் தேர் வேகமாய், வெகு வேகமாய் வந்து கொண்டிருக்கிறது.

      அந்தச் சாலையின் ஒரு திருப்பத்தில் பலர், அந்தத் தேரின் வரவினை எதிர் நோக்கியபடி காத்திருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும், நெடிது வளர்ந்திருந்த மரங்களின் பின்னே, மேலும் பலர் மறைந்து நிற்கின்றனர்.


     சற்று அருகே சென்று உற்றுப் பார்த்தால், ஒவ்வொருவரின் கண்களும் வெறுப்பை உமிழ்ந்தவாறு சாலையினைப் பார்க்கின்றன,

     ஒவ்வொருவரின் உள்ளத்திலும் புதைந்து மறைந்திருக்கும் வன்மமும் வெறுப்பும் முகங்களில் வழிந்தோடுகின்றன.

   குதிரைகள் பூட்டிய தேர் அருகே வந்ததும், சிலர் சாலையின் குறுக்கே நின்று தேரினை, வழி மறிக்கின்றனர்.

      நீண்ட அங்கி அணிந்து தேரினை ஓட்டி வந்த அந்த நபர், சாலையின் குறுக்கே நிற்கும் மனிதர்களைக் கண்டவுடன், கடிவாளத்தை இழுத்துத் தேரினை நிறுத்துகிறார்.

    தேரினை ஓட்டி வந்த நபரின் முகம் நிலவொளியில் பளிச்சிடுகிறது.

     நீண்ட அங்கி அணிந்திருந்தாலும், அவர் ஆண் அல்ல என்பதை அறியும்போது வியப்புதான் மேலிடுகிறது.

        

ஒரு பெண். பெண் என்றால் சாதாரணப் பெண்ணல்ல. அழகுப் பதுமை. அறிவுக் கலை ததும்பும் முகம்.

       எதிரே நிற்பவர்களின் கண்களை ஊடுருவி, மனத்தின் எண்ண ஓட்டங்களை, ஒரு நொடியில் உணரும் திறன் வாய்ந்த கண்கள்.

       இப்படியும் ஒரு அழகா என வாலிபர்களை ஏங்க வைக்கும் அழகு.

      இரதத்தை நிறுத்திய அந்தப் பெண், அந்த அழகுப் பெட்டகம், சாலையின் குறுக்கே நிற்பவர்களை கேள்விக்குறியுடன் நோக்குகிறார்.

      சாலையின் இரு மருங்கிலும் மறைந்த நின்றவர்கள், வெளியே வந்து, மெல்ல மெல்லத் தேரினைச் சுற்றி வளைக்கிறார்கள்.

      இருவர் தேரின் மேல் பாய்ந்து ஏறி, அப்பெண்ணின், தலை முடியைப் பற்றி இழுத்து, கீழே தள்ளுகிறார்கள்.

       தரையில் விழுந்த அப்பெண்ணைச் சுற்றி வளைத்த அனைவரும், வெறி கொண்டு தாக்குகிறார்கள்.

      முகத்திலே ஓங்கி மிதித்தான் ஒருவன்.

      மார்பிலே ஓங்கி, ஓங்கி பலங்கொண்ட மட்டும் மிதித்தான் மற்றொருவன்.

      உச்சி முதல் உள்ளங்கால் கரை ஓரிடம் விடாமல், உதைக்கின்றனர், மிதிக்கின்றனர்.

-------



அலெக்ஸாண்ட்ரியா.

     எகிப்தின் தலைநகர்.

     கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே கல்வி, அறிவியல். அரசியல் என அனைத்திலும் உச்சத்தை எட்டிப் பிடித்த நகரம் அலெக்ஸாண்ட்ரியா.

     உலகின் மிகப் பெரிய நூலகத்தையும், ஆய்வுக் கூடத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றிய நகரம் அலெக்ஸாண்ட்ரியா.

     நூலகம் என்றால் ஓராயிரம், ஈராயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் அல்ல.

   
அலெக்ஸான்டிரியா நூலகம்
நூலகத்தின் வரைபட பிரிவு


முழுதாய் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்ட, கடல் போல் பரந்து விரிந்த அற்புத நூலகம்.

    

இம்மாபெரும் நூலகத்தின் நிருவாகியாகவும், ஆசிரியராகவும் சிறந்து விளங்கியவர்தான் தியோன்.

     கிரேக்கப் பகுத்தறிவுப் பரம்பரையைச் சார்ந்தவர்.

     இவரது ஒரே மகள், அழகு மகள், அறிவு மகள்தான் ஹைபேஷா.

     சிறுமியாக இருந்த பொழுதே, கணிதம், தத்துவம், வானவியல், இலக்கியம் என பல்துறைகளையும் உணவோடு, கலந்து அமிழ்தமாய் ஊட்டி ஊட்டி வளர்த்தார், இவரது தந்தை தியோன்.

      ஹைபேஷா பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கிரேக்கம் சென்றார், இத்தாலி சென்றார், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் சென்றார்.

      உயர் கல்வி எங்கெல்லாம் கிட்டுகிறதோ, அங்கெல்லாம் சென்று படித்தார்.

      பல நாடுகளில் கல்வி, பல நாட்டு மனிதர்களுடன் சந்திப்பு என ஏராளமான அனுபவங்களுடன் தாய் நாடு திரும்பினார்.

     அலெக்ஸாண்ட்டிரியாவின் கிரேக்கத் தத்துவப் பள்ளியில் ஆசிரியையாய் ஆனார்.

         பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகளின் தத்துவங்களைப் போதித்தார்.

         கணித ஆய்வையும் தொடர்தார்.

       தனது இடையறா கணித ஆய்வின் பயனாய், பாய் மரங்களின் ஓப்பீட்டு அடத்தியைக் கண்டறிவதற்கான ஹைட்ரோ மீட்டர் கருவியைக் கண்டு பிடித்தார்.

        இதுமட்டுமல்ல, நட்சத்திரங்களின் தன்மையைக் கண்டறிவதற்காக ஆஸ்ட்ரோலோப் கருவியையும் கண்டு பிடித்தார்.

      ஹைபேஷாவின் புகழ் மெல்ல மெல்லப் பரவியது.

       ஹைபேஷா அலெக்ஸாண்ட்ரியா நகரின் முக்கியப் பெண்ணாகச் செல்வாக்கு பெற்றார்.

   பல நாட்டு மன்னர்களும், அறிஞர்களும், செல்வந்தர்களும், தங்களது பிள்ளைகளை ஹைபேஷாவிடம் கல்வி கற்க அனுப்பினர்.

     
ஹைபேஷா.

      வழக்கமாய் பெண்கள் அணியும் உடைகளை அணியாமல், நீண்ட அங்கியையே அணிந்து வந்தார். தன் இரதத்திற்கு ஆண் தேரோட்டியை அமர்த்தாமல், தானே குதிரைகள் பூட்டிய இரத்தினை ஓட்டியும் செல்வார்.

     

அலெக்ஸாண்ட்ரியாவில் ஹைபேஷாவின் செல்வாக்கும் புகழும் உச்சத்தை எட்டியபோது, அலெக்ஸாண்ட்ரியாவின் தலைமை குரு பிஷப் ஸைரில் உள்ளத்தில் வெறுப்பும், வஞ்சகமும் உச்சத்தைத் தொட்டது.

         கி.பி. நான்காம் நூற்றாண்டில், எகிப்து ரோமப் பேரரசின் ஓர் அங்கமாய் விளங்கியது.

        அதன் விளைவாய், மதத் தலைவர்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் கூடிக் கொண்டே சென்றன.

        பகுத்தறிவு என்பது இவர்களுக்குப் பகையாய் மாறியது.

       

எகிப்தின் ஆளுநர் ஓரிஸ்டஸ்.

        இவர் ஹைபேஷாவின் சிறந்த நண்பர்.

        இவர்கள் இருவரும் பகுத்தறிவை வளர்க்கிறார்கள், மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள், மத நம்பிக்கைகளை முடக்குகிறார்கள் என்னும் கோபம் மெல்ல, மெல்ல தலைமை மதகுரு பிஷப் ஸைரிலுக்குள் அனலாய் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

         ஓரிஸ்டலின் ஆளுநர் பதவியைப் பறித்தார். எனினும் கோபம் அடங்கவில்லை. ஆட்களை ஏவி, ஓரிஸ்டலை துடிக்கத் துடிக்கப் படுகொலையும் செய்தார்.

     அப்படியும் அடங்கவில்லை கோபம்.

     இம்மத குருவின் பார்வை மெல்ல மெல்ல ஹைபேஷாவின் பக்கம் திரும்பியது.

-----

     
ஹைபேஷா.

      ஹைபேஷா என்னும் அழகுப் பதுமையை, அறிவுப் புதையலை, இரதத்தில் இருந்து தரையில் வீசி எறிந்த, அந்த மத வெறியர்கள், ஹைபேஷாவை மாறி மாறி மிதித்தனர்.

      உடல் முழுதும் ரணமாகி, இரத்தம் சொட்ட சொட்ட, ஹைபேஷாவின் தலைமுடியைப் பற்றி, தர தரவென, அருகில் இருந்த ஆலயத்திற்குள் இழுத்துச் சென்றனர்.

     வெறி கொண்ட கும்பல், ஆளுக்கொரு பக்கமாய் ஹைபேஷாவின் உடைகளைக் கிழித்து எறிந்து, அவரை முழு நிர்வாணமாக்கியது.

      மத வெறியர்களின் கோபம் அடங்கவில்லை.

      கரடு முரடான சிப்பிகளாலும், ஓடுகளாலும் ஹைபேஷாவின் உடலைக் குத்திக் குத்தி, நார் நாராய் கிழித்தனர்.

       இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து, ஆலயத்திற்குள் ஓடத் தொடங்கியது.

       கோபம் அடங்கவில்லை.

      கைகளைத் தனியே துண்டித்து எடுத்தனர்.

      அப்படியும் கோபம் அடங்கவில்லை.

      கால்களைத் தனியே துண்டித்து எடுத்தனர்.

      அப்படியும் கோபம் அடங்கவில்லை.

      மீதமிருக்கும் உடலோடும், மிஞ்சியிருந்த உயிரோடும் ஹைபேஷாவைத் தீயிட்டுக் கொளுத்தினர்.



அன்பை மட்டுமே போதிப்பதாய், இம்மதத் தலைவர்கள் பறைசாற்றும், இறைவன் உறையும் ஆலயத்திற்குள், ஹைபேஷாவின் உடல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

          ஆலயத்தின் சுவரெங்கும் ஹைபேஷாவின் சாம்பல் படர்ந்தது.



பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கலீலியோ, நியூட்டன் இப்படியாய் நீளுகின்ற அறிஞர்களின் வரிசையில் முதல் பெண்ணாய் இடம்பெற வேண்டியவர்தான் ஹைபேஷா.

         காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட மனிதர்களின் வரிசையில் முன்னனியில் இருப்பவர்தான் ஹைபேஷா.

         மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப் பெற்றதுதான் மதம் என்னும் நிலைமாறி, மதத்திற்காகத்தான் மக்கள் என்னும் ஓர் இழி நிலை பிறந்ததன் காரணமாய், வரலாற்றின் இருட்டுப் பக்கங்களில், இருளோடு இருளாய் கலந்தவர்தான் ஹைபேஷா.

        கதைகளை கதைகளாகவே சொல்லிக் கொடுங்கள். புராணங்களை புராணங்களாகவே கூறுங்கள். மூட நம்பிக்கைகளை, உண்மைகளைப் போல் ஒரு போதும் குழந்தைகளுக்குச் சொல்லித் தராதீர்கள். மூட நம்பிக்கைகள் உண்மையை ஒழித்துவிடும் என வாய்விட்டு உரக்க முழங்கிய குற்றத்திற்காக எரிந்து சாம்பலானவர்தான் ஹைபேஷா.

ஹைபேஷாவின் நினைவினைப் போற்றுவோம்
மூட நம்பிக்கைகளை விலக்குவோம்.