16 மே 2017

விபுலாநந்தர்





     திருக்கொள்ளம் புதூர்

     தஞ்சாவூர், திருவாரூர் சாலையில், கொரடாசேரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, கும்பகோணம் சாலையில் பயணித்தால், சிறிது தொலைவிலேயே, குடவாசல் என்னும் சிற்றூர், நம்மை எதிர் கொண்டு வரவேற்கும்.

      குடவாசலைத் தாண்டி, ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில், இடது புறம் திரும்பிய, சில நிமிடங்களில், கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது ஒரு திருக்கோயில்.

      திருக்கொள்ளம்புதூர் திருக்கோயில்.

      நற்சாந்துப்பட்டி, கோனூர் சமீன்தார் திரு பெ.ராம.ராமன் அவர்களால், பெரும் பொருட் செலவில், முழுவதுமாய், திருப்பணிச் செய்யப் பெற்று, புது உருவமும், புதுப் பொலியும் பெற்ற திருக்கோயில்.


      பலநூறு ஆண்டுகளுக்கு முன், மறைந்துபோன, மக்கள் மறந்துபோன, ஒரு பழம்பெரும் இசைக் கருவி, மீண்டும் உயிர் பெற்று எழுந்து, தன் நரம்புகளை மீட்டி, மீண்டு எழுந்த இடம்.

    திருக்கொள்ளம் புதூர் திருக்கோயில்.

    மீண்டெழுந்த அந்த இசைக் கருவி

   யாழ்.
____

சோழ நாட்டுச் சோறும், காவிரி நீரும், உடலத்தை மாத்திரமல்ல, உள்ளத்தையும் வளர்க்கின்றன. அவற்றினை விட்டு வர மனம் ஒவ்வவில்லை.

      இவர், இலங்கை, மட்டக்களப்பு, காரைத் தீவில் பிறந்தவர்.

      தமிழ்க் கடலில் வாழ்வெலாம் நீந்தியவர்.

      அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் ஆருயிர் தோழர்.

       1941 ஆம் ஆண்டு, வடநாட்டு யாத்திரை சென்ற உமாமகேசுவரனார், தமிழ்நாடு திரும்பாமலேயே, இயற்கையோடு இணைந்த செய்தியறிந்து துடி துடித்துப்போனவர்.

உற்றாரை யான் வேண்டேன், ஊருடன் பேர் வேண்டேன்
எனக் கூறுதற்கு உரிய நிலையினை, ஆண்டவன் அருளினால், ஓரளவிற்கு எய்தினேன் ஆயினும்,
கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும்
எனக் கூறும் உள்ளத் துணிவினை யான் எய்தவில்லை.

      செந்தமிழ்ப் புரவலரும், தமிழவேளும், கண் போல் நண்பருமாகிய உமாமகேசுவரனாரது, பொன்னுடலம், திருவயோத்தி நகரிலே, சரயு நதிக்கரையிலே, தீக்கு இரையாயிற்று என்னுஞ் செய்தி, துயரின்மேற் றுயராயிற்று.

       தமிழவேளின் பிரிவினால் துயர் உற்றவருக்கு, அவரின் அன்பு வேண்டுகோள் நினைவிற்கு வந்தது.

       வேண்டுகோளினை நிறைவேற்ற முடிவு செய்தார்.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து, சங்கத்திலேயே தங்கி, தன் இசை ஆராய்ச்சியின் முடிவுகளை எல்லாம், ஏட்டில் இறக்கி வைத்தார்.

      

       யாழ்

     தமிழிசையின் அடையாளம்.

     நமது தேசிய இசைச் சின்னம்

     நான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.

     தொல்காப்பியத்திலும், பாட்டிலும், தொகையிலும், காப்பியங்களிலும், பன்னார் தேவாரங்களிலும், ஆழ்வார்கள் அருளியவையிலும் பெரிதும் போற்றப்பட்ட யாழ், என்னவாயிற்று?

      அதற்கு விடைகளைத் தேடினார்.

      பன்னெடுங்காலம் தான் கற்ற தமிழ், வடமொழி, ஆங்கிலம், கணிதம், இயற்பியல் துணை கொண்டு, பல காலம் ஆய்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து, பெரு நூல் ஒன்றை வெளிக் கொணந்தார்.

      யாழ் நூல்
    
     இசைத் தமிழ் இலக்கண நூல்.

     பலநூறு ஆண்டுகளாக மறைந்து கிடந்த, பழந்தமிழிசைப் பரப்பின் எல்லையை உணர்த்தும் நூல்.

     இசைத் தமிழ், இயற்றமிழ், விஞ்ஞானம், கணிதம் ஆகிய அறிவுத் துறைகளையெல்லாம் கலந்து, குழைத்து எழுந்த தமிழமுதம், இசையமுதம்.

என்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள், இதன் நிறைவுப் பேற்றினைக் காணுமுன், பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயருறுகிறது.

அவர்களது அன்புக்குரிய நிலையமாகிய, இத்தமிழ்ப் பெருமன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து, இந்நூலினை எழுதி முடித்தமை, அவர்களது பிரிவினாலெய்திய மனத்துயரினை ஓரளவிற்கு நீக்கி விட்டது.


யாழ் நூல்

ஆங்கில மொழிப் புலமையாலே, தமிழைப் புதுமுறையில் வளம் படுத்திய
கணித மேதை
நாவலர்


விபுலாநந்த அடிகளார் அவர்களின்
இசைத் தமிழ் இலக்கண நூல்.

யாழ் நூல்.

    மாபெரும் பணியினை அயராது, தளராது செய்து, இருபத்து நான்கு மணி நேரமும், இதே நினைவில் மூழ்கி, உலகு மறந்து, தன் உடல் நிலை மறந்து, பணியாற்றியதால், சுவாமிகளின் உடல் தளர்வுற்று, பிணியின் பிடியில் வீழ்ந்தது.

       யாழ் நூலின் முதற் பதிப்பினைத் தன் சொந்த, பொருட் செலவில், வெளியிட்டு உதவ, உறுதி பூண்டிருந்த


நற்சாந்துப்பட்டி
திரு ராம. சிதம்பரஞ் செட்டியார் அவர்கள்
நோய் நீங்க, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என விபுலாநந்தரை வினவினார்.

யாழ் நூழை அரங்கேற்றுதலே என் உள்ளத்திற்குப் பெரும் ஆறுதலைத் தரும்.

      யாழ் நூல் அச்சுப் பணி தொடங்கியபோதே, இரண்டாம் உலகப் போரும் தொடங்கியது.

       அச்சிடத் தாளுக்குத் தட்டுப்பாடு வந்தது.

       அச்சுப் பணி, ஓராண்டு, ஈராண்டல்ல, நான்காண்டுகள் தடைபட்டு நின்றது.

       போர் முடிவுற்றபின் தொடர்ந்தது.


திருக்கொள்ளம் புதூர் திருக்கோயில்
ஆளுடைய பிள்ளையார் திருமுன்
5.6.1947 இல்
யாழ் நூல்
அரங்கேற்றம் கண்டது.

      யாழ் நூல் அரங்கேற்றத்திற்காகவே, தன் உயிரினைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு, காத்திருந்தார் போல, நூல் அரங்கேறிய 44ஆம் நாளே, விபுலாநந்த அடிகளார் இயற்கையோடு இணைந்தார்.

திருக்கொள்ளம்புதூர் திருக்கோயில்.

------
  
     



 பலநூறு வருடங்களுக்குப் பின், யாழ் மீண்டும், தன் இன்னிசையைப் பரப்பிய, திருக்கொள்ளம்புதூர் கோயிலில் நின்று கொண்டிருக்கிறேன்.

     ஆளுடைய பிள்ளையாரின் முன் அமைதியாய் நிற்கின்றேன்.

     சுவாமி விபுலாநந்தர், பத்துப் பாடல்களை, தன் நலிவுற்ற உடல் நிலையினையும் பொருட்படுத்தாது, பாடிப் பரவசப் பட்ட இடத்தில் வாய் மூடி அமைதியாய் நிற்கின்றேன்,.

      யாழின் இசை மெல்ல மெல்ல மேலெழுந்து, கோயில் சுவற்றில் மோதி எதிரொலித்து, வின்னையும், மண்னையும், மனிதர்களையும், தன் அற்புத இசையால், இன்னிசையால், கிளர்ந்தெழச் செய்து, மெய்சிலிர்க்க வைத்த இடத்தில், மௌனியாய் வாய் மூடி நிற்கின்றேன்.

      என் செவிகள் மெல்ல மெல்ல, மிருதுவாய், ஒரு அதிர்வினை உணரத் தொடங்கின.

      யாழின் இன்னிசை, இன்றும், இக்கோயிலினுள், எதிரொலித்துக் கொண்டே இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.

       பல்லாண்டு கால கனவு, இன்று நிறைவேறி இருக்கிறது.

        உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.

        என்னை இங்கு அழைத்து வந்த அந்த உன்னத மனிதரைத் தேடுகிறேன்.

        அதோ, அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

        புகைப்படக் கருவியின் மூலம், திருக்கொள்ளம்புதூர் கோயிலையே விழுங்கிக் கொண்டிருக்கிறார்.


முனைவர் மு.இளங்கோவன்

      இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்து, புதுச்சேரியில் புகுந்து, உலகெங்கும் பறந்து, நாம் மறந்து போனத் தமிழறிஞர்களை, கால ஓட்டத்தில் கரைந்து போன, ஆவணங்களை, எல்லாம் மீண்டும் எழுந்து உலகை வலம் வரச் செய்யும் ஆற்றலாளர்.

      தன் குடும்பம் மறந்து, சுற்றம் துறந்து, ஈட்டிய செல்வம் இழந்து, ஆவணப் படம் எழுத்து, பழந்தமிழர் இசையினை, இசை விற்பன்னர்களை, உலகு முழுவதும் உலாவ விடும் வித்தகர்.

பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை சுந்தரேசனாரை
ஆவணப் படம் எடுத்து
அகிலம் முழுதும் பரவ விட்டவர்.


இன்று
சுவாமி விபுலாநந்தரின்
இசைப் பயணத்தை, வாழ்வியலை
குறுந் தகடுகளில், முற்றாய் பதிய வைத்து
இப்புவி எங்கனும்,
தமிழ் வித்தாய் விதைக்க
தமிழ் இசையைப் பரப்ப
பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

           கடந்த 24.12.2016 சனிக்கிழமை மாலை, இதோ, முனைவர் மு,இளங்கோவன் அவர்களுடன், யாழ் நூல் அரங்கேறிய, புண்ணிய பூமியில் நின்று கொண்டிருக்கிறேன்.

       



விபுலாநந்தர் பல மாதங்கள் தங்கி, யாழ்நூலை, யாத்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தை, சங்க நுழைவு வாயிலை, காலை ஒளியில் படமாக்கினார்.






சங்க இலக்கியங்கள் முழுவதையும், தன் நா நுனியில், எப்போதும் போற்றிப் பாதுகாக்கும், சங்க இலக்கியக் கடல்
புலவர் இரா.கலியபெருமாள் அவர்களுடன்
ஒரு நேர்முகம்.

     கவிஞர், எழுத்தாளர். பேராசிரியர், நாவலாசிரியர் ஹரணி, உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் நண்பர் திரு வெ.சரவணன் அவர்களோடு இணைந்து, புலவர் ஐயாவின் நேர் முகத்தை, அலைகடலென ஆர்ப்பரித்து வெளிப்பட்ட, சங்க இலக்கியப் பாடல்களை, கேட்டு நெகிழ்ந்து போய் நின்றேன்.

    


 மாலையில், திருக்கொள்ளம்புதூர் கோயிலில் இதோ, தன்னிலை மறந்து நிற்கின்றேன்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்குத்தான்
நன்றி சொல்ல வேண்டும்.
யாழ் நூல்
அரங்கேறிய
புண்ணிய பூமிக்கு
என்னையும் அழைத்து வந்ததற்காக.

ஏழிரண் டாண்டுகள் இடர்பல துய்த்தும்
ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும்
நுண்ணிதின் ஆய்ந்து நுவல்திப் பெருநூல்
நண்ணுமிம் முயற்சியில் நான்படு துயரம்
எண்ணினும் உடலுளம் எல்லாம் நடுக்குறூஉம்
ஆயிரம் ஆண்டுகள் அறியா வகையில்
வீயுறும் நிலையில் வீழ்ந்து கிடந்த
நற்றமிழ் யாழும் சொற்றமிழ் இசையும்
தெற்றென விளங்கும் திருவிளக்(கு) இந்நூல்
செந்தமிழ்க் கிஃதோர் சீர்சால் பொற்பணி

விபுலாநந்தர் அவணப்படம்
மெல்ல மெல்ல மெருகேறிக் கொண்டிருக்கிறது.

       முனைவரோ ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார். அறிஞர்களை, வயது முதிர்ந்த தமிழறிஞர்களை எல்லாம், தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஆவணப் படத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

        வெள்ளை நிற மல்லிகையோ என்னும் விபுலாநந்தரின் பாடலுக்கு, உயிர் கொடுத்து, உரு கொடுத்து, காணொளியாய் காற்றில் மிதக்க விட்டவர், விரைவில், முழுப் படத்தினையும், இவ்வுலகு வியந்து போற்ற, வெளியிட இருக்கிறார்.

முனைவர் மு,இளங்கோவன் அவர்களின்
எண்ணம் பெரிது
எழுச்சி பெரிது
முயற்சி பெரிது
ஆற்றல் பெரிது
உழைப்பு பெரிது

பெரிதினும் பெரிதாய்
இவ்வுலகு உள்ளவரை
நிலைத்து நிற்க
சுவாமி விபுலாநந்தரை
உருவாக்கி வருகிறார்
பார்த்துப் பார்த்துச் செதுக்கி வருகிறார்.


முனைவர் மு.இளங்கோவன் அவர்களை
வாழ்த்துவோம்  போற்றுவோம்.