04 மே 2017

தேடப்படுபவர்




நாளும் பொழுதும்
தமிழ்தான் தமிழரின்
முகவரியென்று உரைப்பவர்.


உறவுக்கும் நட்புக்கும்
உப்பாகக் கரைபவர்.

நிலவாகச் சிரித்தாலும்
நித்திலமாய் ஜொலித்தாலும்
சந்தணமாய் கமழ்ந்தாலும் – கைகுலுக்கித்
தென்றலாய் தவழ்ந்தாலும்
முதுகு சொரிவதை
முகமன் கூறுவதை தவிர்ப்பவர்.

முன்னுக்குப் பின்
முரணாக நடப்போரை வெறுப்பவர்.

அதிகாரத்தால் அந்தஸ்தால்
அவலம் நிகழ்ந்தால் துடிப்பவர்.

அவ்வப்பொழுது
பாட்டெழுதி பட்டாசாய் வெடிப்பவர்.




     பட்டாசாய் வெடித்ததனால், முகமண் கூறுவோரை வெறுத்ததனால், முரணாக நடப்போரைத் தவிர்த்ததனால், இவரைச் சிலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.




நேரெதிரில் கண்டு
கைகுலுக்கி வாழ்த்தும்
வாய்ப்பிருந்தும்
விரைந்து கடப்பதைப்போல்
விலகி நடக்கிறான்
அன்பிற் சிறந்த
ஆறறிவு நண்பன்.

    
ஆறறிவு என்றாலே, ஆறாவது அறிவு சிலருக்கு, அழுக்காறாய் அமைந்து விடுகிறது. அழுக்காறை வெற்றி கண்ட, ஒப்பற்ற வீரராய் இருப்பதாலேயே, இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வந்தார்கள்
அமர்ந்தார்கள்
தேநீர் அருந்தினார்கள்.

இல்லாததையெல்லாம்
சேர்த்தும்

கோர்த்தும்
அவனை ஏராளம் புகழ்ந்து
புல்லரிக்க வைத்தார்கள்.

…………………………………………….
……………………………………………

விடைபெறும் முன்
இன்னொரு முறை
உச்சத்திற்குப்
புகழ்ந்து வைத்தார்கள்.

அவனைக் கடந்தவுடன்
அவர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து
அவர்களுக்குள்
சிரித்துக் கொண்டார்கள்.

அவர்களை நினைத்து
அவனும்
சிரித்துக் கொண்டான்.

     நாவினிக்கப் பேசினாலும், உதடுகளைத் தாராளமாய்த் திறந்து, ஏராளமாய்ச் சிரித்தாலும், அகத்தின் உண்மை நிலையினை உணர்ந்ததாலேயே, இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அகற்ற அகற்ற
குவிகின்றன
குப்பைகள்.

வெட்ட வெட்ட
மண்டுகின்றன
களைகள்.

கழுவக் கழுவ
படிகின்றன
அழுக்குகள்.

துடைக்கத் துடைக்க
படர்கின்றன
ஒட்டடைகள்.

வடிக்க வடிக்க
நிலைக்கின்றன
கசடுகள்.

ஆயினும்
சற்றுமுன்தான் அறிவித்தனர்
ஞானிகள் பட்டியலில்
என்னையும்.

       குப்பைகளையே தோரணங்களாய், களைகளையே வளர்ச்சியாய், அழுக்குகளையே வர்ணங்களாய், போற்றி வாழ்வோருக்கு இடையில், இவற்றை எல்லாம் களைந்ததனால், ஞானியானவர் இவர். ஞானியானதாலேயே இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.



மகள் சம்பாத்தியத்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கும்

அப்பன்களுக்கு.

மனைவி சம்பாத்தியத்தில்
வீதியில் அலையும்
வெட்டி பந்தா புருசன்களுக்கு

எண்பது வயதுத் தந்தை
உழைத்து வாங்கிய
பைக்கில்
ஊர் சுற்றும்
தறுதலை மகன்களுக்கு

வழங்கலாம்
இவ்வாண்டின்
உழைப்பாளர் தின
விருதுகள்.





        இவ்வாறு, உண்மைகளை ஏடெடுத்து எழுதுவதாலேயே, உரக்கச் சொல்லி முழங்குவதாலேயே, இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மனுக்களை வாசித்து
கண்ணீரால் நிரம்பித்
ததும்புகின்றன
குப்பைத் தொட்டிகள்

---------------

உச்சி வெய்யிலில்
வேகத் தடைகளுக்கருகில்
வெள்ளரிப் பிஞ்சும் கொய்யாவும்
விற்றுக் கொண்டிருக்கும்
பெண்களின்
வியர்வைத் துளிகளுக்குள்
விழுந்து கிடக்கிறார்கள்
குடிகாரக் கணவன்கள்.

……………………………….

தேர்வுகளின்
கடைசிநாள் கொண்டாட்டத்தில்
சட்டைகளில்
இங்க் அடித்துக் கொண்டிருந்தவர்கள்
இப்போது
சந்துகளில்
பீர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

       இன்றைய வாழ்வியல் அவலங்களை, சிறிதும் தயக்கமின்றி, எழுத்தாக்கி, முரசறைந்து, கண்டனக் குரல் எழுப்புவதாலேயே, இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      அதையும் அவரே கூறுகிறார், செவி கொடுத்துக் கேளுங்கள்.

நான்
காலமெனும்
பெருங்கடலில்

ஓரிறகு.

சுழற்
காற்றடித்துத்
தவித்தாலும்
தனியழகு.

சுடும்
பாலைவன
நெடுமணலில்
நான் வசிப்பேன்.

கவி
படைப்பதனால்
வாழ்க்கையினை
நான் ஜெயிப்பேன்.

      வாழ்க்கையில் வென்று விட்டதனால்தான், அவர்கள், இவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பார்வை
மங்கலாத் தேரியுதேப்பா
என்றார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு
இவ்வளவு வெளிச்சமானதா
இவ்வுலகம் என்றார்.

இப்பொழுது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு.

அம்மாவுக்கு.

என்றுரைத்து, தன் நூலைத், தன் அன்பு அம்மாவிற்குப் படையலாய், படைத்திட்ட, தங்க மகனைத்தான் , சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


யார் தேடுகிறார்கள்?

மனிதர்கள் அல்ல

இவரைத்
தேவதைகள் தேடுகின்றன.

என்ன, என்ன, தேவதைகளா

ஆம்
இவர்


தேவதைகளால் தேடப்படுபவர்.

இவரை எப்படி அழைக்கலாம்?

கவிஞர்
பேச்சாளர்
எழுத்தாளர்
கல்வியாளர்
மனித நேயர்
என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
இவர்

அத்தனைக்கும் உரியவர், உன்னதமானவர்

மொத்தத்தில்
தங்கம்
சொக்கத் தங்கம்


புதுகை ஈன்றெடுத்த

கவியருவி


கவிஞர் தங்கம் மூர்த்தி.

----------------------