17 ஜூன் 2017

அறிவுத் திருக்கோயில்




தன் பெண்டு தன் பிள்ளை
சோறு வீடு சம்பாத்யம்
இவையுண்டு தானுண்டு
என வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

     சுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள் பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.

     இவர் ஒரு இராணுவ வீரர்

     இந்த இராணுவ வீரருக்குள் இருப்பதோ, ஒரு பொறியாளர்

    இந்தப் பொறியாளருக்குள் இருப்பதோ, ஒரு எழுத்தாளர்

    இந்த எழுத்தாளருக்குள் இருப்பதோ, ஒரு தமிழறிஞர்.

    இவர் திருவருட்பாவையும்,
          திருமந்திரத்தையும்
          திருவாசகத்தையும்
          தேவாரத் திருமுறைகளையும், முற்றாய் கற்றுத் தேர்ந்தவர்.

          உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்
            வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
            தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
            கள்ளப் புலனைந்தும் காள மணிவிளக்கே
என்னும் கொள்கையினை உறுதியாய் பற்றி நிற்பவர்.

     மனிதனே தெய்வம்
     தெய்வத்தைப் புற வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை என்னும் கருத்துடையவர்.

      இவை யாவற்றையும் விட, தான் பிறந்த மண்ணைத் தன் உயிரினும் மேலாய் நேசிப்பவர், போற்றுபவர்.

      இப்பூமிப் பந்தின் தென் கோடிக்குச் செல்லும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தபோது, ஓட்டமாய் ஓடி, தன் ஊருக்குச் சென்று, தான் பிறந்த மண்ணை, ஒரு பிடி அள்ளி, எடுத்துச் சென்று, தென் கோடியில் தூவியவர்.

       தென் கோடியில், பனிப் பள்ளத்தாக்குகளுக்கும் அடியில், அரை கிலோ மீட்டருக்கும் அதிகமாய் தோண்டி, சூரிய ஒளியினையேப் பார்த்திராதப், பாறைகளை வெட்டி எடுத்து வந்த, நவீனச் செங்குட்டுவன் இவர்.

        தான் பிறந்த ஊரில், தன் சொந்த நிலத்தில், பெருந்தூண் ஒன்றினை எழுப்பி, அதன் உச்சியில், அண்டார்டிகாப் பாறையினைப் படுக்க வைத்து, அகத் தூண்டுதல் பூங்காவை அமைத்து, நம்மைத் தலை நிமிர்த்திப் பார்க்க வைத்தவர்.

        இன்று தன் சொந்தப் பணத்தில், பல இலட்சங்களை வாரி இறைத்து, ஒரு அறிவுத் திருக்கோயிலை எழுப்பி, தான் பிறந்த மண்ணுக்குக் காணிக்கையாய் அளித்திருக்கிறார்.

       இவர் இரண்டு இந்தியப் போர்களில் பங்கு பெற்று, துப்பாக்கிக் குண்டினைப் பரிசாய் பெற்றவர். இதற்காக விழுப்புண் விருதும் பெற்றவர்.

இதுமட்டுமல்ல,
குடியரசுத் தலைவரின்
வசிஷ்ட சேவா விருதும்
பெற்றவர்


கர்னல் பா.கணேசன்

.---
     கடந்த 17.5.2017 புதன் கிழமை காலை, நண்பரும், கரந்தைக் கலைக் கல்லூரியின் ஆய்வக உதவியாளருமாகிய திரு கா.பால்ராஜ் அவர்களும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஓவிய ஆசிரியருமான திரு சு.கோவிந்தராஜ் அவர்களும், நானும், தஞ்சையில் இருந்து மகிழ்வுந்தில் புறப்பட்டு, பாபநாசம், சுந்தரபெருமாள் கோயில், வலங்கைமான், நன்னிலம் வழியாக, சன்னா நல்லூரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

      இதோ சன்னா நல்லூர்

      சாலையின் இருமருங்கிலும் பதாகைகள்

      வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.


அகத் தூண்டுதல் பூங்கா

      மகிழ்வுந்தில் இருந்து இறங்கி, பூங்காவிற்குள் நுழைகின்றோம்.

      அண்டார்டிகா கல், தன் நெஞ்சம் நிமிர்த்தி எங்களை வரவேற்கிறது.

      விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      அமைதியாய் அமர்ந்தோம்.

      முனைவர் அழகர் ராமானுஜம் அவர்களின் அற்புத உரையினைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

      கர்னல் கணேசன் அவர்களை, அவரது மனைவி கணவராய் அறிவார், அவரது பிள்ளைகள், இவரைத் தந்தையாய் அறிவர், உறவினர்கள் இவரைத் தங்களின் உறவாய் அறிவர்.

      ஆனால் உண்மையான கர்னல் கணேசன் அவர்களை, உங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன் என்று கூறித், தன் உரையினைத் தொடங்கினார்.

       அரங்கினுள் குழுமியிருந்தோர், வியப்புடன் நிமிர்ந்து அமர்ந்து, காதுகளைத் தீட்டி, கூர்மையாய் கவனிக்கத் தொடங்கினர்.

      கர்னல் கணேசன் அவர்களை,

      Nationalist

      Rationalist

      Humanist

      Socialist

என்று பெருமை பொங்க அறிமுகப் படுத்தி, கர்னல் கணேசன் அவர்களின், பன்முகத் தன்மையினை, ஒவ்வொன்றாய், பாங்குற, அழகுற, எழிலுற, இனிமையான வார்த்தைகளால் விவரிக்க விவரிக்க, அனைவரும் நெகிழ்ந்துதான் போனார்கள்.

     






தொடர்ந்து அறிவுத் திருக்கோயிலின் திறப்பு விழா.

      அறிவுத் திருக்கோயிலினுள் திரும்பும் திசையெல்லாம் நூல்கள், நூல்கள்.

      தான் பிறந்த மண்ணிற்காக, தான் தவழ்ந்த மண்ணிற்காக, தன்னை வளர்த்த மண்ணிற்காக, தன் சொந்த நிலங்களை மட்டுமல்ல, தன் உழைப்பால் ஈட்டிய செல்வத்தையும், தன் வாழ்நாள் முழுதும் பார்த்துப் பார்த்துச் சேகரித்த நூல்கள் முழுவதையும் பெரு வள்ளலாய் வாரி வழங்கி இருக்கிறார்.

      சன்னா நல்லூர்

     


கர்னல் கணேசன் அவர்களால், சன்னா நல்லூர் புதுப் பொலியும், புது மெருகும் பெற்றிருக்கிறது.




தான் பிறந்த மண்ணை
மறவாது போற்றும்,
பாசமிகு மனிதரை
மாமனிதரை
கர்னல் கணேசன் அவர்களை
நாமும்

போற்றுவோம், வாழ்த்துவோம்.