02 செப்டம்பர் 2017

படிக்கச் சோறிட்டவர்




    ஆண்டு 1897.

    சென்னை.

     இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.

     மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.

     நீண்ட வெண்ணிற மேலங்கி.

     எட்டு முழ வேட்டி

     ஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.

      கம்பீரமான முகம்

      அடர்ந்த மீசை

      கனிவானப் பார்வை

      இளகிய மனம்

      அள்ள அள்ளக் குறையாத செல்வம்

      சில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.


      இப்பெருமகனார் வாழ்ந்த பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்த, குடும்பங்களைச் சாரந்த சிறுவர், சிறுமிகள் எந்நேரமும் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்.

       ஏன் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுகிறார்கள்.

      விசாரித்தார்.

      வண்ணாரப் பேட்டையில் இருந்த சீனிவாச ராகவாச்சாரியார் கீழ் நிலை செகண்டரிப் பள்ளி என்னும் தொடக்கப் பள்ளியை, இழுத்து மூடிவிட்டார்கள்.

      காரணம், போதிய நிதி வசதி இன்மை.

      யோசித்தார்

     வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை, சஞ்சீவிராயன் பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய பகுதியினைச் சார்ந்த மாணவர்களின் கல்வி. இப்பள்ளியை மூடியதால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.

      என்ன செய்யலாம்?

      யோசித்தார்

      நாமே ஒரு பள்ளிக் கூடத்தைத் தொடங்கினால் என்ன?

      முடிவெடுத்தார்.

      1897 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மூன்றாம் நாள், தன் இல்லத்திலேயே, தன் தமையனாருடன் இணைந்து, ஒரு பள்ளியைத் தொடங்கினார்.

      வட சென்னை இந்து செகண்டரிப் பள்ளி

      ஏழை மாணவர்களுக்காகத்தான் தொடங்கினார்.

       கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் படித்தால் போதும் என்று எண்ணினார்.

       ஆனாலும் மிகக் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர்.

       பள்ளியில் படிப்பதற்குத்தான் கட்டணம் எதுவுமே வாங்குவதில்லையே? அப்படியிருந்தும், ஏன் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறார்கள்?

        விசாரித்தார்.

        ஏழ்மையில் வாடும் குடும்பங்கள்.

        சாப்பாட்டிற்கே வழியில்லாத போது படிக்கவா வருவார்கள்.

        இளகிய மனமும், வள்ளல் குணமும் படைத்த அம்மனிதர், அன்றே முடிவெடுத்தார்.

         இனி ஒவ்வொரு நாளும், மாணவர்கள் அனைவருக்கும், பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படும்.

         பிள்ளைகளை அனுப்புங்கள்.

        படிப்பும் தருகிறோம், சோறும் போடுகிறோம்.

        சொந்தப் பணத்தை வாரி இறைத்து உணவிட்டு, கல்வியை ஊட்டினார்.

       கர்மவீரர் காமராசருக்கும் முன்னே, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தி வெற்றி கண்ட, மாமனிதர் இவர்.

       பின்னாளில், நீதிக் கட்சியைத் தொடங்கிய போதும், இவர் அதிகம் வலியுறுத்தியது கல்வியைத்தான்.

அன்பர்களே, நம்மை நாமே எவ்வாறு உயர்த்திக் கொள்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

நமது தேவைகளில் முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் நிற்பது கல்வியே.

நமது சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.

பள்ளிக்குச் செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.

     நண்பர்களே, 1897 இல் இவர், தன் இல்லத்தில் தொடங்கிய பள்ளி, மெல்ல மெல்ல வளர்ந்து, கல்லூரியாய் உயர்ந்து, இன்று இவரது பெயரையேத் தாங்கி, நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றது..


தியாகராயர் கல்லூரி


இவர்தான்
வெள்ளுடை வேந்தர்
சர் பிட்டி தியாகராயர்

     சென்னையில் டி.நகர், டி.நகர் என்று நாம் செல்லமாக அழைக்கிறோமல்லவா? முழுப் பெயரினையும் உச்சரிக்க மறந்தோ அல்லது முழுப் பெயரையே மறந்தோ, உச்சரிக்கிறோமல்லவா, அந்த டி.நகர், இவரது பெயரைத்தான் தாங்கி நிற்கின்றது.

தியாகராய நகர்

     டி.நகர், டி.நகர் என்று கூறிக் கூறி, தியாகராயரை நாம் மறந்தே போய்விட்டோம்.

சர் பிட்டி தியாகராயரைப் போற்றுவோம்.


அலைபேசியில் தமிழ் மணம் வாக்களிக்க