30 செப்டம்பர் 2017

ஆஞ்சநேயர்




     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

     அந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.

      கடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.

      நம் கால்களில் மோதி, நம்மைக் கடந்து செல்லும் அலைகள், மீண்டும் கடலுக்குத் திரும்பும் பொழுது, நம் கால்களைச் சுற்றியுள்ள மணலை அரித்துச் செல்வதையும், நம் கால்கள் மிக மெதுவாய் மணலுக்குள் புதைவதையும் உணர்ந்திருக்கிறீர்கள் அல்லவா?

     இந்தத் தத்துவத்தை அன்றே அறிந்திருந்ததால்தான், உணர்ந்திருந்ததால்தான், பெரும் பெரும் பாறைகளை ஆற்று மணலில், ஆற்றிற்குக் குறுக்கே வரிசையாய் போட்டனர்.

     ஆற்றில் பெரும் நீரோட்டம் வந்தபொழுது, இப்பாறைகளைச் சுற்றியும், பாறைகளின் கீழும் இருந்த மணல், மெல்ல மெல்ல அரிக்கப்பட்டு, பாறைகள் மணலுக்குள் புதையத் தொடங்கின.

      பாறைகள் முற்றிலுமாய் மணலுக்குள் மூழ்கப் போகும் நிலையில், அதன் மேல், களிமண் சாந்தினைப் பூசி, வேறொரு பாறையினைப் படுக்க வைத்தனர்.

      நீரோட்டத்தின் மண் அரிப்பில், இரண்டு பாறை வரிசைகளும், முற்றாய் புதைந்து போவதற்கு முன், முன்போலவே, களிமண் சாந்து பூசி, அடுத்த பாறை வரிசைகளை இறக்கி வைத்தனர்.
    

பாறைகள் மணலுக்குள் மூழ்க மூழ்க, மென்மேலும் பாறைகள் அடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

     அதுநாள் வரை, இவ்வுலகு அறியா, புது கட்டுமானம் இது.

     எத்தகைய வெள்ளம் வந்தாலும் சிறிதும் அசையாது, தடுத்து நிற்கும் வல்லமை வாய்ந்த  அணை இவ்வாறுதான் உருவானது.

க ல் ல ணை

     காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பொழுதெல்லாம், உபரி நீரை, கொள்ளிடத்தில் திருப்பி, காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வாழும், மக்களைக் காக்க, கட்டப் பெற்றதுதான் கல்லணை.

     இதனை கலிங்குலா அமைப்பு என்கின்றனர்.

     கலிங்குலா (Calingula) என்றால் நீர் வழியும் அணை என்று பெயர்.

     இவ்வாறு வழிந்தோடிய நீரைக் கொண்ட இடம், கொள்ளிடம் என அழைக்கப்படலாயிற்று.

---
    
      கல்லணையில் இருந்து, கொள்ளிடம் பிரியும் இடத்தில், முகத்துவாரத்தில், கல்லணைக்கும் கீழே, கொள்ளிடம் ஆற்றின் தரையில், நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும் நின்று கொண்டிருக்கிறோம்.

     நிமிர்ந்து பார்த்தால் கல்லணை கம்பீரமாய் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும் காட்சி மனதை கொள்ளை கொள்கிறது.

      எத்துனையோ முறை கல்லணைக்கு வந்திருக்கிறேன், ஆனால், ஒரு முறை கூட, ஆற்றில் இறங்கி நின்று, அணையின் எழிலார்ந்த தோற்றத்தை, அண்ணாந்து பார்த்ததில்லை.

      கடந்த 26.9.2017 செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3.30 மணியளவில், கொள்ளிடத்தின் தரையில நிற்கிறோம்.

      காரணம் ஒரு தமிழறிஞர்.

      அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்.

      இவர் பழந்தமிழ் இலக்கியம், வரலாறுகளில் ஆர்வமும், தமிழர் நல்வாழ்வில் அக்கறையும் உடைய தமிழறிஞர்.

      இவர் தமிழறிஞர் மட்டுமல்ல, சிறந்தப் பொறியாளர்.

      தனது அயரா உழைப்பால், இரு கண்டுபிடிப்புகளை புதிதாய் வான் ஆய்வுத் துறைக்கு வழங்கியவர்.

      இவர்தம் கண்டுபிடிப்புகள், இவர் பெயராலேயே கணேசன் மாதிரி (Ganesan Models)  என அறிஞர் பெரு மக்களால் போற்றப்படுவதோடு, வான் ஆய்வுத் துறையில், தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

        இவர், அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில், இயங்கியல் துறையில் (Notes and Dynamic) மேல் நிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர்.

       நாசாவில் பணியாற்றிய போதும், தனது வலைப் பூ மூலம் உலகை வலம் வருபவர் இவர்.


சொன்னால் வியப்படைவீர்கள்,
தமிழ்த் திரட்டிகளில், முதன்மைத் திரட்டியாய்,
திரட்டிகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாய் ஆட்சிபுரியும்,
தமிழ்மணம்
திரட்டியின்,
நிறுவனக் குழுவில் முக்கியமானவர்.


பொறியாளர் திருமிகு என்.கணேசன்

---

     நண்பர்களே, 1840 இல் கல்லணையைச் சீரமைத்து, கல்லணையின் மேல், பாலம் கட்டியவர் சர் ஆர்தர் காட்டன் என்பதை நாம் அறிவோம்.

     ஆனால் இவருக்கும் முன்பே, 1804 ஆம் ஆண்டிலேயே, கேப்டன் கால்டுவெல் என்பார், கல்லணையின் பெரும் பாறைகளுக்கு இடையே சாந்து பூசி, அணைக்கட்டின் மேல், 2 அடி 3 அங்குல உயரமுள்ள, கல்தூண்களை நட்டு வைத்து, அவற்றின் நடுவே, மணல் மூட்டைகளையும், நாணல் புல் கட்டுகளையும் வைத்து அடைத்து, நீர் மட்டத்தை உயர்த்தினார்.

      இந்த ஆங்கிலேயர், காப்டன் கால்டுவெல், கல்லணையில், ஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?

       இதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள்.

      கேப்டன் கால்டுவெல், கொள்ளிடம் பகுதியில், 19வது மதகுவைச் சீர் செய்த போது, அப்பகுதி, தொடர்ந்து இடிந்து விழுந்து கொண்டே இருந்ததாம். அப்பகுதியைக் கால்டுவெல்லால் சீர் செய்யவே முடியவில்லையாம்.

       இந்நிலையில், ஆஞ்சநேயர் கால்டுவெல்லின் கனவில் தோன்றி, அவ்விடத்தில், தனக்கு ஒரு கோயில் கட்டினால், அணையை உடையாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளித்தாக ஒரு கதை உலா வருகிறது.

       இதனால் ஆங்கிலேயர் கால்டுவெல், கல்லணையின் கீழ்ப் பகுதியில், கொள்ளிடம் ஆற்றில், ஆஞ்சநேயருக்குக் கோயில் கட்டினாராம்.

       கால்டுவெல்லிடம் ஆஞ்சநேயர் ஆங்கிலத்தில் பேசினாரா? அல்லது தமிழில் பேசினாரா? என்று தெரியவில்லை, அஞ்சநேயருக்கு ஆங்கிலம் தெரியுமா? அல்லது கால்டுவெல்லுக்குத் தமிழ் தெரியுமா என்பதும் தெரியவில்லை.

      ஆனால் நாங்கள் இந்த ஆஞ்சநேயர் கோயிலைத்தான் காணச் சென்றோம். இந்த ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டை காணத்தான் சென்றோம்.

       அமெரிக்க வாழ் தமிழன்பரும், தமிழறிஞருமான பொறியாளர் திருமிகு என்.கணேசன் அய்யா அவர்கள், மின்னஞ்சல் வழியே, இந்த ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும், கல்வெட்டின் படத்தினை அனுப்பியிருந்தார்.

     1804 இல் நிறுவப் பெற்ற கல்வெட்டு இது.

    

ஆங்கிலமும் தமிழும் கலந்த கல்வெட்டு.

     இக்கல்வெட்டின் கடைசி வரி, தெளிவில்லாமல் இருப்பதால், தெளிவாக ஒரு படம் எடுத்து அனுப்புமாறு, அன்புக் கட்டளை இட்டிருந்தார்.

     இதைவிட வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது.

     நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களை அழைத்தேன். உடனே தயங்காமல் வருகிறேன் என்றார்.

     இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுக் கல்லணையை அடைந்தோம். 

     கல்லணையின் பாலத்தில் இருந்து, கொள்ளிடம் பகுதியில், கீழ்நோக்கிச் செல்ல ஒரு படிக்கட்டு இருக்கிறது.

     ஆனால் நாங்கள் சென்றபொழுது, பூட்டியிருந்தது.

    

எனவே கல்லணையின் பொதுப் பணித்துறை அலுவலகத்திற்குச் சென்றோம்.    

      அலுவலகத்தில் இருந்தவர், உடனே, வேலு என்னும் பணியாளரை, அலைபேசியில் அழைத்து, கதவினைத் திறந்துவிடச் சொன்னார்.

      மீண்டும் அப் படிக்கட்டினை நோக்கிச் சென்றபோது, பணியாளர் திரு வேலு அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார்.

     எங்களைக் கண்டதும், படிக் கட்டின் கதவினைத் திறந்து விட்டார்.

     படிக்கட்டில் இறங்கி கோவிலை அடைந்தோம்.

     கொள்ளிடம் ஆற்றின் தரைப் பகுதி எங்களை வரவேற்றது.

     கொள்ளிடம் ஆற்றின் தரைப் பகுதி முழுவதும், பாறைகளே, தரைப் பகுதியாய் காட்சியளித்தன.

     


கோவிலில் நுழைந்து கல்வெட்டினைத் தேடினோம்.

      எங்களுக்காகக் காத்திருந்தது வேதனை மட்டும்தான்.

      சுமார் மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ள கல்வெட்டு அது.

      ஒரு புறம் கல்வெட்டும், மறுபுறம் ஆஞ்சநேயர் உருவமும் செதுக்கப்பெற்ற கல்வெட்டு.

      கொடுமை என்னவென்றால், கல்வெட்டு இருந்த பகுதி முழுவதும், வெள்ளை வர்ணம் (White Paint) பூசப்பட்டு முழுதாய் மறைக்கப்பட்டிருந்தது.

     










கோவிலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்ற பொழுது, யாரோ ஒருவர், தெரிந்தோ, தெரியாமலோ, கல்வெட்டின் மீது முழுமையாய் வர்ணம் பூசி மறைத்திருக்கிறார்.

      தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார்த்தோம், சுண்ணாம்பென்றால், கரைந்திருக்கும், ஆனால் வெள்ளை நிற ஆயில் பெயிண்ட் என்பதால், கரைய மறுத்தது.

      இன்னும் ஒரு முறை இதன்மேல் வர்ணம் பூசப்படுமானால், கல்வெட்டு இருந்ததற்கான அடையாளமே முற்றாய் மறைக்கப்பட்டு விடும்.

       நமது அறியாமையாலும், அலட்சியத்தாலும் எத்துனை எத்துனை ஆவணங்களை இதுபோல் இழந்திருப்போம்.

       அணையினைக் காப்பதாக, கால்டுவெல்லிடம் உறுதியளித்த ஆஞ்சநேயர், தானே விரும்பிக் கட்டச் சொன்னக் கோயிலில் இருந்த, கால்டுவெல்லின் பெயர் பொறித்த, கல்வெட்டைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டாரே என்ற வருத்தத்துடன் புறப்பட்டோம்.