07 பிப்ரவரி 2019

தொல்லிசையும் கல்லிசையும்




தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என்னும் சுயநல வட்டத்திற்குள் சுருண்டு முடங்காமல், வெந்ததைத் திண்று, விதிவந்தால் சாவதற்குக் காத்திருக்கும், தன்னலம் மிகுந்த மனித வட்டத்திற்குள் சுழலாமல், வீறு கொண்டு எழுந்து வெளி வந்தவர் இவர்.

     இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்து, புதுச்சேரியில் புகுந்து, உலகெலாம் பறந்து, மக்கள் மறந்து போனத் தமிழறிஞர்களை, கால வெள்ளத்தில் மூழ்கி மறைந்துபோன ஆவணங்களை எல்லாம், மீட்டெடுத்து, உலகை வலம் வரச் செய்த ஆற்றலாளர்.

பன்னாராய்ச்சி வித்தகர்
குடந்தை சுந்தரேசனாரையும்

யாழ்நூல் ஆசிரியர்
சுவாமி விபுலாநந்த அடிகளாரையும்
ஆவணப் படங்களாக்கி
மறுபிறவி எடுக்க வைத்தவர்.

     தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரிய புராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதர் பாடல்கள் முதலான எண்ணற்ற, நம் தமிழ் நூல்களிலும், கல்வெட்டுகளிலும், இசை குறித்தும், இசைக் கருவிகள் குறித்தும், புதைந்து கிடக்கும் அரிய செய்திகளை, அகழ்வாராய்ச்சி செய்து, வெளிக் கொணர்ந்து, நல் ஆவணப் படமாக்கி, வருங்காலத் தலைமுறையினருக்கு, தமிழிசைப் பொக்கிசத்தை அன்பளிப்பாய் வழங்கிட களமிறங்கி இருக்கிறார்.

தொல்லிசையும் கல்லிசையும்
ஆவணப் படத்தின்
தொடக்க விழா,
எதிர்வரும் 11.2.2019 திங்கட் கிழமை
அந்தி மாலையில்,
புதுச்சேரி செயராம் உணவகத்தில்
அரங்கேற இருக்கின்றது.

தொல்லிசையினையும் கல்லிசையினையும்
குறுந் தகட்டில் பதித்தும்,
இறக்கை இல்லா இணையத்தில் ஏற்றியும்
இப்பூமிப் பந்தைச் சுற்றிவர வைக்க
பெரு முயற்சி மேற்கொண்டிருக்கும்
இவரைத் தாங்கள் நன்கறிவீர்கள்.

இவர்தான்,
குடியரசுத் தலைவரிடம்
செம்மொழி இளம் அறிஞர்
விருது பெற்ற


முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.

---



தொல்லிசையும் கல்லிசையும்
தொடக்க விழாவிற்குத்
தங்களை
அன்போடு அழைக்கின்றேன்.

வாருங்கள், வாழ்த்துங்கள்.