22 மார்ச் 2019

நில மகள்




    ஆண்டு 2006.

    இந்தோனேசியா.

    சுமத்ரா தீவு

    2004 ஆம் ஆண்டில் ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் எழுந்து, சுனாமி என்னும் பெயரால், உலகையே புரட்டிப் போட்டதல்லவா? அச்சுனாமி, உயிர் பெற்று, பெரும் உக்கிரத்தோடு எழுந்த இடம்தான், இந்த சுமத்ரா தீவு.

     வேகமாய் வீறுகொண்டு எழுந்து, ஓங்கி உயர்ந்து, தன் பெரு வாய் திறந்து, விளை நிலங்களையும், வாழ்விடங்களையும், எண்ணற்ற உயிர்களையும், தன் கோரப் பசிக்கு இரையாக்கி ஏப்பம் விட்ட சுனாமி, மீண்டும் கடலுக்குள் திரும்பி ஓய்வெடுக்கத் தொடங்கி, மாதங்கள் பனிரெண்டு கடந்து விட்டன.

     ஆனாலும் சுமத்ரா தீவு, தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வழியில்லாமல் தவித்தது.

     விளை நிலங்கள் எல்லாம், உவர் நிலங்களாய் மாறிப் போய்விட்டன.

     விவசாயத்திற்கு, விளைச்சலுக்கு, இனி வழி பிறக்குமா, வாழ்வில் இனி ஒளி பிறக்குமா என்று புரியாத நிலைமை.

      சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் என அனைவரும் களமிறங்கி, ஆராய்ந்து ஆராய்ந்து அலுத்துப் போய்விட்டனர்.

      விளை நிலங்களின் உப்புத் தன்மை, 23 மடங்கு அதிகமாய் கூடித்தான் போய்விட்டது.

     உவர்ப்பைக் குறைக்கவே முடியவில்லை.

     என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.

     உவர்ப்பு குறையவே இல்லை.

     வழக்கமானத் தாவரங்களை நட்டு, தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் செய்து பார்த்தார்கள்.

     தாவரங்கள் மெல்ல உயிர் பெற்று வளரும், மெல்ல மெல்ல உயரும். மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும். பின் வெகு வேகமாய் கருகிப் போய், நம்பிக்கையைக் குலைக்கும்.

     எத்தனை முறை, நட்டாலும். அத்துனை முறையும், ஒவ்வொரு தாவரமும், கருகிக் கொண்டே இருந்தது.

      திகைத்துத்தான் போனார்கள்.

      என்ன செய்வது என்று தெரியவில்லை.

      விவசாயம் வீழ்ந்து விட்டால், உணவுக்கு வழி.

      கதிகலங்கி நின்றவர்களுக்கு, ஒரு நற்செய்தி வந்தது.

      கலங்க வேண்டாம்.

      உவர் நிலைங்களை, மீண்டும் விளை நிலங்களாக மாற்ற வருகிறது ஒரு குழு என்ற செய்தி வந்தது.

       எங்கிருந்து என வினவினர்

      இந்தியாவில் இருந்து என்ற பதில் வந்தது.

       பனிரெண்டு மாதங்களாய், முயன்று முயன்று, பார்த்தோமே, முடியவில்லையே, இந்தியர்கள் வந்து என்ன செய்துவிடப் போகிறார்கள்.

        வரட்டும் பார்க்கலாம் என்று காத்திருந்தனர்.

        இந்தியக் குழு, சுமத்ரா தீவில் இறங்கியது.

        சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சுமத்ரா தீவின் விவசாயிகள் மட்டுமன்றி, பல நாட்டு விஞ்ஞானிகளும், பாழ்பட்ட நிலங்களின் அருகில், இந்தியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

       குழுவினரும் வந்தனர்.

        குழுவிற்குத் தலைமையேற்று, ஒரு பெண், 34 வயதே நிரம்பிய ஒரு பெண், தன் கால்களைத் தரையில் திடமாய் ஊன்றி நடக்க இயலாதவராய், விந்தி விந்தி நடந்து வந்தார்.

        இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட இரு கால்களுடன் குழுத் தலைவி.

       80 சதவீதம் செயல் இழந்த வலது கால்.

       30 சதவீதம் செயல் இழந்த இடது கால்.

        என்ன செய்யும் இந்த வாதம்?

        வாதத்தை வென்ற வீர மங்கையாய், குழுத் தலைவி மெல்ல நடந்து வந்தார்.

        இச்சிறு பெண்ணா, நம் நிலங்களை மீட்க வந்திருக்கிறார்.

        நமது அனுபவத்தைவிட, குறைந்த வயதல்லவா இந்தப் பெண்ணுக்கு?

       குழுமியிருந்தோர், சற்று நம்பிக்கையின்றித்தான் பார்த்தனர்.

       மெல்லிய புன்னகையுடன், அங்கிருந்த அறிஞர்களிடம், தன்னை அறிமுகம் செய்து கொண்ட, அந்தப் பெண், பாழ்பட்ட விளை நிலங்களைப் பார்வையிட்டார்.

       பாழ்நிலங்களைப் பார்த்த சில நொடிகளிலேயேக் கூறினார்.

       இந்த மண் உங்கள் மண் அல்ல.

        இந்த மண் உங்கள் சொந்த மண்ணே அல்ல.

                                                                           தொடரும்......