17 நவம்பர் 2019

இதழ் அறம்




காரிருள் அகத்தில் நல்ல
    கதிரொளி நீதான் இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
    பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினைக் காட்ட இந்த
     உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்நில்
     பிறந்தபத் திரிக்கைப் பெண்ணே
என்று பத்திரிகையை, ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வார் பாவேந்தர் பாரதிதாசன்.

     பத்திரிகை

     தமிழர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருபவைப் பத்திரிகைகளாகும்.


     குழந்தைப் பிறந்தவுடன் எழுதுவது சாதகம். இந்த சாதகத்தின் பெயர் ஜனனப் பத்திரிகை.

     பெண் வயதிற்கு வந்துவிட்டால், ருது பத்திரிக்கை

     திருமணத்திற்கோ சுபமுகூர்த்தப் பத்திரிகை

     ஒருவன் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாமல், நீதி மன்றத்தில் கொடுப்பதோ, மஞ்சள் பத்திரிகை.

     குற்றம் செய்தவனுக்குக் காவல் துறை தருவதோ குற்றப் பத்திரிகை.

     மனிதன் இறந்த பிறகும் வருவதுதான் காரியப் பத்திரிகை.

     பத்திரிகை

     தமிழ்ப் பத்திரிகைகளால் இலக்கியம் வளர்ந்து தழைத்தது என்றால் அது மிகையாகாது.

     இலக்கியம்

     இலக்கு + இயம்

     இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் இலக்கியம்.

     இலக்கியம் என்பது பாதரசம் போன்றது

     கண்ணாடியில் தடவினால் நம் முகத்தைக் காட்டும்.

     குடுவையில் தடவினால், சூடோ, குளிர்ச்சியோ அப்படியே பாதுகாக்கும்.

     குப்பியில் ஊற்றினால், தட்ப வெட்பத்தைக் காட்டும்.

     இப்பாதரசத்தைச் சிதறவிட்டாலோ, மீண்டும் சேர்ப்பது என்பது இயலாத காரியம்.

     இலக்கியமும் பாதரசத்தைப் போன்றதுதான்

     இலக்கியம் சமூகத்தின் முகத்தைக் காட்ட வேண்டும்

     இலக்கியம் சமூகத்தில் ஏற்படக் கூடிய கொந்தளிப்பையும், அமைதியையும் வெளிப்படுத்த வேண்டும்.

     இலக்கியம் சமூகத்தின் மாற்றத்தை அளந்து காட்ட வேண்டும்.

     இலக்கியம் சிதைந்தாலோ சிதறினாலோ சமூகமே சின்னாபின்னமாகி விடும்.

     பத்திரிகைகள் தன் எழுத்துக்களால், சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை.

     Magazine

     பத்திரிகை என்பதை ஆங்கிலத்தில் மேகஸின் என்பர்

     மேகஸின் என்றால் வெடி மருந்துக் கிடங்கு என்று பெயர்.

     நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்ததை பத்திரிகைகள்.

     எழுதி எழுதி மக்களின் மன நிலையை செம்மைப் படுத்துவதும் பத்திரிகைகள்தான்.

    பத்திரிகைகள் வெகு சன மக்களின் மொழியில் பேசின.

     இதனால் தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலந்துவிட்டன எனத் தனித் தமிழ் ஆர்வலர்கள் வருத்தமுறத்தான் செய்தனர்.

      ஆனாலும் இந்த வெகுசன மொழியால்தான், பல வட்டார நாவல்கள் தோற்றம் பெறத் தொடங்கின

     பத்திரிகை

     பத்திரிகை என்பதே ஒரு வடமொழிச் சொல்தான்

சாமான் வாங்க வீட்டை பூட்டிவிட்டுப் போனபோது, ஜன்னல் வழியாக வீட்டினுள் புகுந்து, பீரோவை உடைத்து, வெளியே வரும்போது, போலிசார் மடக்கி, துப்பாக்கியால் சுட்டதில், தோட்டா பாய்ந்து இறந்தான்.

     வெகுசன மொழி

     நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள்.

     மேலே கண்ட மூன்று வரிகளில், ஐந்து மொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன.

     சாமான் என்பது அரபுச் சொல்

     பீரோ எனும் சொல் பிரான்ஸில் இருந்து இறக்குமதியானது

     ஜன்னலோ சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது

     போலிஸ் ஆங்கிலம்

     துப்பாக்கியோ துருக்கி மொழிச் சொல்

     மூன்று வரிகளில் ஐந்து மொழிச் சொற்கள்

     பிற மொழிச் சொற்களைத் தமிழ் தன் வசப்படுத்திக் கொண்டது.

     பிற மொழிச் சொற்கள் கலவாததால்தான் சமஸ்கிருதம் பேச்சு மொழியாகாமல், செத்த மொழியாகவே தொடர்கிறது.

     தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்களைக் கலந்து நீர்த்துப் போகச் செய்தாலும், தமிழ் மொழியை அழியாமல் காத்தவை பத்திரிகைகள்தான்.

கூடியவரை பேசுவது போல எழுதுவதுதான் உத்தமம். இங்கிலீஷ் தெரியாத ஒருவரிடம், நீ எழுதியதை வாசித்துக காட்டினால், அவன் கேட்டுவிட்டு, சபாஷ் என்று சொன்னால்தான், உன்னுடைய எழுத்து தமிழ் நாட்டுக்குப் பயன்படும்.

     எழுத்து என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, அன்றே இவ்வாறு வரையறுத்தவர் யார் தெரியுமா?

     பாரதியார்

     சுதேசமித்திரன் இதழில, இவ்வாறுதான் எழுத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்.

     இதுதான் வெகுசன மொழி

     இதுதான் வெகுசன இலக்கியம்.

     இந்த இலக்கியத்திற்கு அடிப்படை அறம்

     அறம்

     ஒரு சொல் எப்பொழுது இலக்கியமாக மாறுகிறது என்றால், அது அறத்தைப் பேசும் பொழுதுதான்.

     தமிழ்ப் பத்திரிகைகள் காலந்தோறும், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அறத்தோடு செயல்பட்டு வந்திருக்கின்றன.

     இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த கட்டுமானங்கள் எல்லாம், நமக்கு  எதிரானதாக, நமது அன்பிற்கும், விடுதலைக்கும் பொருந்தாததாக இருக்குமானால், அவற்றை தகர்ப்பதில் தவறில்லை என்பதை சிறுகதைகள் வழி உணர்த்தியவை பத்திரிகைகள்தான்.

     ஜெயகாந்தனின் அக்கிப் பிரவேசமும், புதுமைப் பித்தனின் பொன்னகரமும், எழுத்து என்ற ஆயுதத்தின் மூலம் படிப்பினையை ஊட்டியவையாகும்.

     சிற்றிதழ்கள் வழி அறிமுகமான பாலகுமாரன், சுந்தர ராமசாமி, ஞானக் கூத்தன், கல்யாண்ஜி போன்ற பல எழுத்தாளர்களை, வாரி அணைத்து, முழு உலகிற்கும் வெளிச்சமிட்டு அடையாளம் காட்டியவை பத்திரிகைகள்தான்.

     காலந்தோறும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அறத்தோடு செயல்பட்டுவரும் பத்திரிகைகள் போற்றுதலுக்கு உரியவையாகும்.

---
கடந்த 10.11.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்,

தமிழ்ப் பத்திரிகைகளின் போக்கும் இலக்கிய வளர்ச்சியும்

என்னும் தலைப்பிலான இவரது உரை,
இதழியல் தொடர்பான, பெரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

     இவருக்குப் பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட முதல் அனுபவமே, பத்திரிகைகளின் அறத்தை, நமக்கு முழுதாய் பறைசாற்றுகிறது.

     கவிஞரான இவர், 2008 ஆம் ஆண்டில்தான், இந்த வாராந்திர பத்திரிகையினுள் நுழைந்தார்.

     இதழின் ஆசிரியர் தங்களது பத்திரிகைக்கு வந்த 200 நகைச் சுவைத் துணுக்குகளை இவரிடம் கொடுத்து, அச்சிடத் தகுந்த துணுக்குகளைத் தேர்ந்தெடுக்கும் பணியினை இவரிடம் ஒப்படைத்தார்.

     இதுதான் இவரது முதல் பணி

     ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் நான்கு நாட்கள், 200 துணுக்குகளையும், குறைந்தது 200 முறையாவது படித்திருப்பார்.

     படித்துப் படித்து, சிரித்து சிரித்து, ரசித்து ரசித்து, இருபது நகைச் சுவைத் துணுக்குகளைத் தேர்ந்தெடுத்தார்.

     பத்திரிகையின் ஆசிரியரைச் சந்தித்தார்

     இருபது துணுக்குகளையும் கொடுத்தார்.

     பத்திரிகையின் ஆசிரியர் ஒவ்வொன்றையும் படித்தார்.

     படிக்கப் படிக்க, ஒவ்வொரு துணுக்காகக் கிழித்துக், குப்பைக் கூடையில் போட்டுக்கொண்டே வந்தார்.

     இவரோ திகைத்துப் போய்விட்டார்

     இவர் தேர்ந்தெடுத்த அத்துணை துணுக்குகளும், குப்பைக் கூடையில் இருந்து, இவரைப் பார்த்துச் சிரித்தன.

     நீங்கள் தேர்ந்தெடுத்த எல்லா, துணுக்குகளுமே, வீட்டு வேலைக் காரியையும், வீட்டு உரிமையாளரையும், ஏதோ ஒரு விதத்தில், தொடர்பு படுத்துபவையாக இருக்கின்றன.

     இந்தத் துணுக்குகள் நமது இதழில் அச்சேறி, அவற்றை, ஏதேனும் ஒரு வீட்டில், வேலை செய்பவரின் மகன், படிப்பாரேயானால், அவர் எத்துணை வேதனைப்படுவார் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுபோன்ற நகைச்சுவைத் துணுக்குகள் நமது இதழுக்குத் தேவையில்லை.

     நண்பர்களே, வியப்பாக இருக்கிறது அல்லவா?

     இந்த இதழ் எது தெரியுமா?

     கல்கி

     இதழின் ஆசிரியர்

     அமரர் கல்கியின் பெயர்த்தி சீதா ரவி

     அதுசரி, இந்த நகைச்சுவைத் துணுக்குகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா?

     இவர், நூறு வயது வரை வாழ்ந்த, தன் பாட்டியின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட, முதல் தமிழ் இலக்கியவாதி.

     இவரது பாட்டியின் பெயர் அமிர்தம்.

     இவர்

    



கவிஞர் அமிர்தம் சூர்யா.

     கல்கி வார இதழின் தலைமை துணை ஆசிரியர்.

     இவரது சொற்பொழிவால் ஏடகம் களை கட்டியது.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

ஏடகம் அமைப்பின் நிறுவுநரும், தலைவருமான
முனைவர் மணி.மாறன் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற,
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை


புதிய தலைமுறை இதழின் நிருபர்
திரு சு,வீரமணி அவர்கள்
வரவேற்றார்.


சுவடியியல் மாணவி
திருமதி செ.அபிநயா அவர்கள்
நன்றிகூற, பொழிவு இனிது நிறைவுற்றது.


ஏடகப் பொருளாளர்,
திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

திங்கள் தோறும்
தித்திக்கும்  பொழிவுகளைத்
திகட்டத் திகட்ட வழங்கி
செவிகளுக்கு இன்பம் சேர்க்கும்


ஏடகம் நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
அயரா பணி
போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்.