06 பிப்ரவரி 2020

காற்றின் பேரோசை



செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உஙங்கட் கெல்லாம்?

வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றி தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ?
-    பாவேந்தர் பாரதிதாசன்

     அது ஓர் காட்டுப் பகுதி.

     கேரளக் காட்டுப் பகுதி

     ஒரு சிறு கூட்டம், மூட்டை முடிச்சுகளோடு, மகிழ்வோடு, காட்டுப் பாதையில் பயணிக்கிறது.

     திடீரென ஒரு கள்வர் கூட்டம், இவர்களைச் சுற்றி வளைக்கிறது.

     ஒவ்வொருவர் கைகளிலும் பயங்கரமான ஆயுதங்கள்.

     நீங்கள் தோளில் சுமந்துவரும் மூட்டைகளை எல்லாம், கீழே இறக்கி வையுங்கள்.

     கள்வர்களின் உத்தரவுக்கு இணங்க, மூட்டைகள் கீழே இறக்கப்படுகின்றன.

     கள்வர்கள் ஒவ்வொரு மூட்டையாகப் பிரித்துப் பார்க்கிறார்கள்.

     சில மூட்டைகளில் இசைக் கருவிகள்

     பல மூட்டைகளில் பொன்னும், மணியும் என தங்க ஆபரணங்கள் மின்னுகின்றன.

     கள்வர்களின் கண்கள் வியப்பால் விரிகின்றன.

     இன்று நல்ல வேட்டை.

     மூட்டைகளைக் கட்டுங்கள், ஒரு சிறு பொருளைக் கூட விட்டுவிடாதீர்கள்.

     பொன்னையும், மணிகளையும், இசைக் கருவிகளையும், பறிகொடுத்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர், மெல்லப் பேசுகிறார்.

    

கொள்ளையர்களே, எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பிடில் பெட்டியை மட்டும், தயவு செய்து கொடுத்து விடுஙகள் என வேண்டினார்.

     பிடில் பெட்டி வேண்டுமா?

     பொன்னையும், பொருளையும் விட இதன் மதிப்பு அதிகமோ? என எண்ணிய கள்வர் தலைவன், யார் நீ? எனக் கேட்டான்.

     ஐயா, நான் தஞ்சாவூர் வடிவேல் ஓதுவார்

     ஏன் இந்தப் பிடில் கருவியை மட்டும் கேட்கிறாய்?
   
     ஐயா, நாங்கள் தமிழ் இசைக் கலைஞர்கள். கேரள அரசர் சுவாதித் திருநாள் மகாராஜா அவர்களுக்குமுன், இந்தப் பிடிலை இசைத்தபடி நான் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான், இந்த தங்க ஆபரணங்களை எல்லாம் பரிசாகக் கொடுத்தார்.

     நீங்கள் பொன் பொருளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பிடில் கருவியை மட்டும் கொடுத்தால் போதும். இந்தப் பிடிலை வாசித்தபடி மீண்டும் பாடி, இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டு விடுவேன்,

     கொள்ளையர் தலைவன் வியந்து போனான்.

     இந்தப் பிடிலில் அப்படி என்ன இசை வரும் என்றான்.

      பிடில் கருவியைக் கள்வனிடம் இருந்து பெற்ற அடுத்த நொடி, தஞ்சாவூர் வடிவேல் ஓதுவார், தன் காந்தக் குரலால் பாடத் தொடங்குகிறார்.

     பிடில் இசையோடு எழுந்தப் பாடல் கேட்டு, அந்த அடர்ந்த கானகத்தின் விலங்குகள், பறவைகள்கூட மெய்மறந்து நிற்கின்றன,

     தமிழிசையால் விலங்குகளே மெய்மறந்து நிற்கும்போது, கள்வர்கள் எம்மாத்திரம்.

     கள்வர்கள் இசையால் மனம் மாறினர்.

     தங்களின் செயலுக்கு வருந்தி, பரிசுப் பொருட்களைத் திரும்பக் கொடுத்ததோடு, தங்கள் பகுதியில் விளைந்த, காய், கனிகளையும் வழங்கி, கேரள எல்லை வரை காவலுக்கும் வந்தனர்.

ஆறலைகள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின்பாலை
கொடுமையான மனம் படைத்தக் கள்வர்கள்கூட, இனிமையான இசையினால் பண்பட்டுவிடுவர் என்று பொருநராற்றுப் படையில் பாடும், முடத்தாமக்கண்ணியாரின் பாடல், இக் கேரளக் காட்டில் உண்மையாயிற்று.

காற்றின் பேரோசை

     இசை என்பது தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று என்பதை தெளிவாய் விளக்கும் அருமையானக்  கட்டுரை.

காற்றின் பேரோசை

பேரிகை படகம் இடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழா தக்கை கணப்பறை
தமருகம் தண்னுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொத்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை யடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு
பாகம் தொக்க உபாங்கி துடிபெரும்
பறையென மிக்க நூலோர்
விரிந்துரைத் தனரே.

     நண்பர்களே, இவையெல்லாம் என்ன தெரியுமா? தமிழர்களின் இசை பரப்பும் தோல் இசைக் கருவிகள்.

காற்றின் பேரோசை

     இசை என்பது தொன்றுதொட்டு தமிழர் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இயைந்து வருவதை உணர்த்தும், இந்த அற்புதக் கட்டுரையினை எழுதியவர் யார் தெரியுமா?

     இசைக் கலைஞர் அல்ல

     காக்கிச் சட்டைக்குச் சொந்தக்காரர்.

     காவல் கண்காணிப்பாளரையும், இசை மயக்கி, தன்னைப் பற்றி எழுத வைத்திருக்கிறது.

காற்றின் பேரோசை



காற்றின் பேரோசையைச் சுமந்துவரும்
முனைவர் த.செந்தில்குமார் அவர்களது 
எழுத்தோவியத்தால் உருவான நூல்
பெரிதினும் பெரிது கேள்.
---

பெரிதினும் பெரிது கேள்
விகடன் பிரசுரம்
விலை ரூ.420

ஆன் லைனில் வாங்க