15 பிப்ரவரி 2020

அத்தை நடத்தை




     நிறை மாத கர்ப்பிணி.

     மெல்ல மெல்ல வயிற்றில் வலி தோன்றியது.

     மெல்லத் தோன்றிய வலி, நொடிக்கு நொடி அதிகரிக்கத் தொடங்கியது.


     தாங்க இயலாத வலி.

     நமது வீட்டுப் பெண்களாக இருந்தால், கதறித் துடித்திருப்பாளர்கள்.

     ஆனால், இது மனித இனம் அல்லவே.

     விலங்கினம் அல்லவா.

     அதிலும் குரங்கினம்.

     ரீஸஸ் வரை குரங்கினம்.

     கதறவில்லை, துடிக்க வில்லை.

     மெல்லச் சுழன்றது

     நின்ற நிலையிலேயே, பம்பரம் போல் சுற்றத் தொடங்கியது.

     நிறை மாதக் கர்ப்பிணிக் குரங்கு, சூழலுவதைப் பார்த்ததுமே, மற்ற குரங்குகள் புரிந்து கொண்டன.

     ஆண் குரங்குகள் விலகிச் சென்றன.

     பெண் குரங்குகளோ, நெருங்கி வந்து, நிறைமாதக் கர்ப்பிணிக் குரங்கைச் சுற்றி, வட்டமிட்டு அமர்ந்தன.

     சில நிமிடங்களில் பிரசவம்.

     தாய் குரங்கு, தன் குட்டிக் குரங்கை, அந்த நொடி பிறந்தத் தன் குழந்தையைக் கையில் எடுத்து, தொப்புள் கொடி அறுத்து, உச்சி முகர்ந்தது.

     ஆசை தீர முத்தமிட்டது.

     தன் பச்சிளங் குழந்தையை முத்தமிட்டு மகிழ்ந்த தாய் குரங்கு, தன் குழந்தையை, சுற்றிலும் வட்டமிட்டு அமர்ந்திருந்த, பெண் குரங்குகளில், ஒரு குரங்கின் கையில், கொடுத்தது,

     ஆசையோடு குரங்குக் குட்டியை வாங்கிய அந்தப் பெண் குரங்கு, அந்தக் குரட்டியை, மார்போடு அணைத்து, ஆசையோடு தடவி, முத்தமிட்டு, அடுத்தக் குரங்கிடம் கொடுத்தது.

     அடுத்தக் குரங்கும், ஆசையோடு தடவி, முத்தமிட்டு மகிழ்ந்து, தனக்கு அடுத்திருந்தக் குரங்கிடம் கொடுத்தது.

     குட்டிக் குரங்கு, ஒவவொரு கையாக மாறி, மாறி, முத்தங்களை, அன்பு முத்தங்களைப் பரிசாய் பெற்று, இறுதியாய், தன் தாயின் கரங்களை வந்தடைந்தது.

     சற்று தொலைவில், மரங்களிடை மறைந்து, இந்நிகழ்வினைக் கண்ட, அந்த விலங்கின ஆய்வாளர், குரங்குகளின் அத்தை நடத்தை கண்டு  நெகிழ்ந்துதான் போனார்.

---

     மரம்.

     ஓங்கி உயர்ந்து, கிளைகள் பல பரப்பிய ஒரு மரத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்.

     ஓர் அறிவியல் அறிஞர், ஒரு மரத்தின் மதிப்பு முப்பது இலட்சம் ரூபாய் என மதிப்பீடு செய்துள்ளார்.

     ஆச்சரியமாக இருக்கிறதா?

     ஒரு மரம் முப்பது இலட்சமா?

     ஒரு மரம் தன் வாழ்நாள் முழுவதும், நமக்காக வெளியிடும் பிராணவாயு, அதில் குடியிருக்கக் கூடிய புழுக்கள், பூச்சிகளுக்கான வாடகை, அதில் வந்து தங்கக்கூடிய பறவைகளுக்கான உணவுத் தேடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து முப்பது இலட்சம் என மதிப்பிட்டுள்ளார்.

     மரம், அதனைச் சார்ந்து இருக்கக்கூடிய பூச்சிகள், புழுக்கள், அதில் வரக்கூடியப் பறவைகள், இவையெல்லாம் சேர்ந்ததுதான், சுற்றுச் சூழல் வலை, சுற்றுச் சூழல் சங்கிலி.

---

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

     பாதுகாக்கப்பட்ட நீரும், வளமான மண்ணும், குளிர் நிறைந்த காடும் உள்ளடக்கியதே அரண் என்பார் திருவள்ளுவர்.

     எவ்வித பரபரப்பும் இல்லாமல், பாதுகாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி, வளமான மண்ணில் பயிர்த் தொழில் செய்து, காடுகளைக் காத்து வாழ்ந்த நம் இனம், இன்று பரபரப்பு மிகுந்த சமுதாயமாக மாறிவிட்டது.

     சூழல் மாறிவிட்டது

     சுற்றுச் சூழல் மாறிவிட்டது

     சுற்றுச் சூழல் என்ற அறிவியலுக்குள் உள்ளடங்கி நிற்கும் விசயம்தான் என்ன?

     மனிதனுக்கும் இயற்கைக்குமானத் தொடர்பு.

     இந்த உறவை நாம் புதுப்பிக்கத் தவறியதால் அல்லது புரிந்து கொள்ளத் தவறியதால், ஏற்பட்டதுதான் சுற்றுச் சூழல் மாசு.

     சுற்றுச் சூழல் அறிவியல் என்பது நீராகவும் இருக்கலாம், நிலமாகவும் இருக்கலாம், மண்ணாகவும் இருக்கலாம், இவ்வளவு ஏன்? நாம் பேசும் மொழியாகவும் இருக்கலாம்.

     நாம் தமிழில்தான் பேசுகிறோம்

     ஆனாலும் தஞ்சாவூர்காரர் ஒருமாதிரிப் பேசுவார். திருநெல்வேலிக்காரர் வேறுமாதிரிப் பேசுவார்.

     தஞ்சாவூர் சூழல் வேறு

     திருநெல்வேலி சூழல் வேறு

     இன்று கலாசாரத்தையும் கூட ஒரு சுற்றுச் சூழலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

     நம்முடைய ஆற்றல், நீர், நிலம் எல்லாவற்றையும் இந்தச் சுற்றுச் சூழலுக்குள் கொண்டு வரலாம்.

     எந்த மொழியையும் சுற்றுச் சூழலுக்குள் கொண்டு வரலாம்.

     ஆங்கிலத்திலே zoology விலங்குகள் குறித்தும், Botony தாவரவியல்குறித்தும், Physics இயக்கவியல் குறித்தும், Chemistry தனிமங்கள் குறித்துமானச் சுற்றுச் சூழலைப் பேசுகிறது.

     சுற்றுச் சூழல் அறிவியல் என்பது வேறு

     சுற்றுச் சூழல் அறிவு என்பது வேறு

     சுற்றுச் சூழல் அறிவியல் வளர்ந்துள்ளது

     படிப்பு, பட்டங்கள் பெருகி உள்ளன

     ஆனால் சுற்றுச் சூழல் பற்றிய, தனி மனித அறிவுதான் வளராமலேயே நிற்கிறது.

     நாம் படித்த அறிவியலைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.

     என்றைக்குத் தொழிற்புரட்சித் தொடங்கியதோ, அன்றே சுற்றுச் சூழல் மாசுவும் தொடங்கிவிட்டது.

     இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு 1970 வரை சுற்றுச் சூழல் பற்றித் தெரியவே இல்லை.

     மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ற உணவு உற்பத்தி, அந்த உணவைப் பெருக்குவதற்கானச் செயல்பாடுகள் எல்லாம் அறுபதுகளில் தொடங்கின.

     1972 இல் ஸ்டாக்ஹோம் நகரில், உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசின.

     ஏதோ ஒன்று உலகைப் பாதிக்கப் போகிறது என்று உணர்ந்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று அறிவித்தார்கள்.

     அதன்பிறகுதான் நம் அரசும், சுற்றுச் சூழல் பற்றி யோசிக்கத் தொடங்கியது.

     நமது அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள், கோடிகளைக் கொட்டி இறைத்து, காடுகளைப் பாதுகாக்க Tiger Project  என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

     புலிகளைப் பாதுகாத்தால், மான்களின் உற்பத்திப் பெருகும், மான்கள் பெருகினால் காடு செழிக்கும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம், இருபது ஆண்டுகள் தொடர்ந்து செயல்படத்தான் செய்தது. ஆனால் பலன்தான் இல்லை.

     1985 க்குப் பிறகு உலகமயமாதல் தொடங்கியது.

     விரைவான மாற்றங்கள் வந்தன

     புதுப்புதுத் தொழிற்சாலைகள் முளைத்தன

     மின்னனு கருவிகள் உலகை ஆளத் தொடங்கின

     மரக்காடுகள் கணிசமாய் குறைந்தன

     கான்கிரீட் காடுகள் வின்னை நோக்கி எழுந்தன

     விளைவு, உலக வெப்பமயமாதல் தொடங்கியது

     வட, தென் துருவப் பனி மலைகள் கண்ணீர் விட்டுக் கதறத் தொடங்கின

     வட, தென் துருவங்கள் அழுவதால், கடல் மட்டங்கள் உயரத் தொடங்கின.

     மீண்டும் உலக நாடுகள், பாரிஸில் ஒன்று கூடின

     வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளைப் பார்த்து, அறிவுரைகளை அள்ளித் தெளித்தனவே தவிர, மாற்றம் ஒன்றும் ஏற்படவேயில்லை.

     நகர மேம்பாடு, மக்கள் தொகைப் பெருக்கம் இவற்றால் நாம் இயற்கையைவிட்டு விலகித்தான் போய்விட்டோம்.

     உலகையே வெப்பப் பெருமூச்சு விட வைத்து, ஓசோன் படலத்தையே உடைத்தும் விட்டோம்.

     வானில் இருந்து கீழிறங்கும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும், கேடயத்தை, ஓசோனை உடைத்து, புற ஊதா கதிர்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிட்டோம்.

     நம்முன்னோர், ஓசோனை புரிந்து வைத்திருந்தனர், அறிந்து வைத்திருந்தனர்.

     அதனால்தான், மார்கழி மாதத்தில், ஓசோனை நம் மகளிர் பெறுவதற்காக, ஓசோன் மண்டலத்திலிருந்து வரும் ஆக்ஸிஜனைப் பெறுவதற்காக, நல் வாழ்வு வாழ்வதற்காக, அதிகாலை வேளையில், வண்ணமயமானக் கோலங்களைப் பொறுமையாய், நிதானமாய் பெருநேரமெடுத்துப் போட வைத்தனர்.

     இன்று நம் மகளிர் கோலங்களையே மறந்துதான் போய்விட்டனர்,

     புவி வெப்பமடைகிறது

     வட, தென் துருவங்கள் உருகுகின்றன

---

வரலாற்றில் சுற்றுச்சூழல்
என்னும் தலைப்பில்
ஏடகம் ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில், சொற்பெருக்காற்றியவர்
ஒரு கதையையும் கூறினார்.

     ஒரு விதவைத் தாய்

     ஒரே மகன்

     அள்ள, அள்ளக் குறையாத செல்வம். ஏராளமானச் சொத்து.

     தன் ஒரே மகனுக்கு, ஊரே மெச்சத் திருமணம் செய்கிறார்.

     மருமகள் வருகிறார்

     வாழ்வு மகிழ்வோடுதான் நகர்ந்தது

     இருப்பினும் மருமகளுக்கு ஒரு மனக்குறை

     உனக்கு என்ன மனக்குறை? என்ன வேண்டும் கேள்? உலகையே உன் காலடியில் கொண்டுவந்து வைக்கிறேன். என்றான் மகன்.

     உன் தாயின் இதயத்தைக் கொடு என்றார் மனைவி

     தாயோ, என் மருமகளின் மகிழ்ச்சிய எனக்கு முக்கியம், எனவே எடுத்துக் கொள் என் இதயத்தை என்றார்.

     மகன் வாளை எடுத்துத் தன் தாயை கூறு போட்டு, இதயத்தை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்தான்.

     இதுதான் அந்தக் கதை.

     தாய்தான் நாம் வாழும் பூமி

     கணவன்தான் கலாசார வாழ்க்கையை பின்னனியாகக் கொண்டு மாறிக் கொண்டிருக்கிற நம் சமுதாயம்.

     மனைவிதான் இன்றைய அறிவியல் வளர்ச்சி என்றார்.

     அரங்கு அமைதியில் உறைந்தது

     இனியேனும் நாம் படித்த அறிவியலை, பயன்படுத்த  முன் வரவேண்டும்

     மீதமிருக்கும் சுற்றுச் சூழலையாவது காக்க வேண்டும்

     நம் அடுத்தத் தலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு, சுற்றுச் சூழலைக் கற்றுக் கொடுத்து, கரை சேர்க்க வேண்டும்.

     முதலில் தூய்மையைக் கடைபிடிக்க நம் குழந்தைகளைப் பழக்குவோம்

     மெல்ல, மெல்ல குழந்தைகளோடு, சுற்றுச் சூழலையும் வளர்ப்போம் என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்
விலங்கின ஆய்வாளர்


முனைவர் பா.ராம்மனோகர் அவர்களின்
பொழிவு கேட்டு
அரங்கின் சுற்றுச் சூழலே மாறித்தான் போய்விட்டது.

கல்வியாளர் மற்றும் ஏடகப் புரவலர்
திரு எம்.வேம்பையன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றப்
பொழிவிற்கு வந்திருந்தோரை,

ஏடகச் செயலாளர்
திருமதி பா.விஜி அவர்கள்
வரவேற்றார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினைச் சார்ந்த
திருமதி பா.மகேஸ்வரி அவர்கள்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் தி.ஹேமலதா அவர்கள்,
தன் அழகுத் தமிழால்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

மாசற்றப் பொழிவுகளால்
ஞாயிறு முற்றத்தைத்
தூக்கிப் பிடித்து,
தமிழ் உரம் தூவி
ஏடகச் சூழலைச் செழிப்பாக்க
நாளும் துவளாது
பாடுபட்டுவரும்
ஏடகம் நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
அரும் பணி
போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம் வாழ்த்துவோம்