21 பிப்ரவரி 2020

மேக்னில் அண்ட்ரப்




     சென்னை, கிறித்துவக் கல்லூரி

     முதுகலைத் தமிழ் வகுப்பு

     பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்

     ஷேக்ஸ்பியர் பற்றியப் பாடம்

     மாணவர்கள் சிலர் சந்தேகங்களைக் கேட்கின்றனர்

     பேராசிரியர் விளக்கமளித்தார்

     ஒரு மாணவனுக்கு மட்டும், பேராசிரியரின் விளக்கம் முரண்பட்டதாகத் தோன்றியது.


     உடனே அம்மாணவன் எழுந்து, ஐயா, தங்களின் விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தவரை, இதுதான் சாரியான விளக்கமாக இருக்கும் எனக்கூறி, தன் விளக்கத்தினைக் கூறினான்.

     மாணவன் கூறிய விளக்கம் சரியானதாகத்தான் தோன்றியது, ஆனாலும் பேராசிரியரால் ஒத்துக் கொள்ள இயலவில்லை.

     அன்றைய வகுப்பு முடிந்ததும், விரைவாக கல்லூரி நூலகத்திற்குச் சென்று, அண்மையில் வெளியிடப்பெற்ற, மேக்னில் அண்ட்ரப் என்பார் எழுதிய ஷேக்ஸ்பியர் உரை நூலை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

     நூலில் இருந்த விளக்கம், வகுப்பில் மாணவன் கூறிய விளக்கத்துடன் முழுவதுமாய் ஒத்துப்போனது கண்டு வியந்தார்.

     அடுத்தநாள் வகுப்பிற்கு வந்தவர், அம்மாணவனைப் பாராட்டி, அம்மாணவன் கூறிய விளக்கமே பொருத்தமானது என்று கூற, அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

     ஆனால் அந்தப் பேராசிரியருக்கு அப்பொழுது தெரியாது, அந்த நூலை எழுதியதே, அந்த மாணவன்தான் என்பது, அப்பொழுது தெரியாது.

     தான் கல்லூரியில் படிக்கும் பொழுதே, தன் பாடத்திற்கே உரையெழுதியிருக்கிறார் ஒரு மாணவர் என்பது வியப்பினும் வியப்பிற்குரிய செய்தி அல்லவா?

     இம்மாணவர் திருநெல்வேலி, முன்னீர் பள்ளத்தில் பிறந்தவர்.

     ஏழ்மையான குடும்பம்

     பள்ளிப் படிப்பை முடித்ததும், தன் குடும்ப வறுமையைப் போக்க, பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

     இவரது படிப்பு ஆர்வத்தையும், இவரது தமிழ் மொழி ஆர்வத்தையும், ஆங்கில மொழிப் புலமையையும் அறிந்த, திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் முதல்வர் லிங்ளேர் என்பவர், இவரைக் கல்லூரிக்குப் படிக்க வருமாறு அழைத்து, தன் கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்.

     இளங்கலைப் பட்டத்தை திருநெல்வேலியில் படித்தவர், பட்ட மேற்படிப்பிற்காக, சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

     படிக்கும் காலத்திலேயே, தமிழ் இலக்கியம் குறித்த பல கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியபோது, பல ஆசிரியர்கள் இவரது ஆங்கில அறிவை ஒப்புக் கொள்ளவே இல்லை.

     சிறுவன் ஆங்கிலக் கட்டுரை எழுதுகிறானா? எனக் கட்டுரையினைப் படித்துக்கூடப் பார்க்காமலேயே ஒதுக்கித் தள்ளினர்.

     ஆனாலும் இம் மாணவன் எழுதுவதை நிறுத்தவில்லை.

     ஆங்கில இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு, ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதி, எழுதி ஆங்கில இதழ்களுக்கு அனுப்ப, ஒவ்வொரு கட்டுரையும் அச்சு வாகனம் ஏறியது.

     மேக்னில் அண்ட்ரப்

     மேக்னில் அண்ட்ரப் என்னும் புனைப் பெயருக்குள், தன்னை ஒளித்துக் கொண்டு, தான் ஒரு மாணவன் என்பதை துளியும், வெளிக்காட்டாமல், எழுதி எழுதி பெரும் புகழ் பெற்றார்.

     வளமும் பெற்றார்.

     பின்னாளில் தன் உண்மைப் பெயரிலேயே, திருக்குறளின் 1330 குறள்களுக்கும் தெளிவான, எளிமையான, அழகான ஆங்கிலத்தில் உரை எழுதினார் இவர்.

     இவர் எழுதிய 50 நூல்களுள், 32 நூல்கள் ஆங்கில நூல்கள் ஆகும்.

     தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கியத்தின் அருமையை, பெருமையை, ஆங்கிலேயர்களும் அறிந்து கொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலேயே எழுதினார்.

     இந்திய வரலாற்றையும், தமிழக வரலாற்றுப் பண்பாட்டையும் இணைத்து, இவர் எழுதிய TAMIL INDIA   எனும் நூல், வெளிவந்த காலத்தில், பரபரப்பாகப் பேசப்பட்ட நூலாகும்.

     தமிழரான இவர் ஆங்கிலத்தில் எழுதிய, இந்த நூலை, ஓர் ஆங்கிலேயர் தமிழில் மொழிபெயர்த்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?

     உலகெங்கினும் இதுபோன்ற அதிசயம் நடத்திருக்க வாய்ப்பே இல்லை.

     ஆனாலும், தமிழகத்தில் நடந்தது

     நம்பித்தான் ஆக வேண்டும்

     தமிழில் மொழிபெயர்த்த ஆங்கிலேயர், லேசுபட்டவர் அல்ல.

     திருக்குறன், நாலடியார், திருவாசகம் மூன்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

     இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என அழகுத் தமிழில், தன் கல்லறையில் எழுத வைத்தவர்.

     ஜி.யு.போப்

     அது சரி, அந்தத் தமிழ் எழுத்தாளர் யார் தெரியுமா?

     மேக்னில் அண்ட்ரப்

    

இவர்தான் தமிழறிஞர் பூரணலிங்கம் பிள்ளை

     பூரணலிங்கம் பிள்ளை எப்படி, மேக்னில் அண்ட்ரப் எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா-

     தன் பெயரை, ஆங்கிலத்தில் எழுதி, அதை அப்படியே, வலமிருந்து இடமாகத் திருப்பிப் போட்டார்.

     PURNA LINGAM

     MAGNIL ANRUP

     ஆசிரியர்கள் பாடம் நடத்த பாட நூல்கள், உரை விளக்க நூல்கள் எழுதிய மாணவராக, தமிழறிஞர் பூரணலிங்கம் பிள்ளை போன்ற மாபெரும் அறிவார்ந்த பெருமக்கள், சொற்பொழிவாற்றிய இடம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனப் படித்தபோது, மெய்சிலிர்த்துப் போனேன்.

     மாமலைகளின் மோதல் என்னும் பெயரில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றிய, ஒரு நீண்ண்ண்ட கட்டுரை.

     கிரவுன் அளவு நூலில், நாற்பது பக்கங்கள் வரை நீளும் கட்டுரை.

     இந்த ஒரு கட்டுரையினை மட்டுமே, எடுத்துத் தனியொரு நூலாக வெளியிடலாம்.

     இந்தக் கட்டுரையினை மட்டுமல்ல, இந்நூலில் இடம் பெற்றுள்ள 16 கட்டுரைகளையுமே, தனித்தனி நூலாக வெளியிடலாம்.

     பதினாறு புத்தகங்களை உள்ளடக்கிய, ஒரு புத்தகம், ஒரே புத்தகம் எப்படி இருக்கும்.

     பெரியதாகத்தானே இருக்கும்.

     நூல் மட்டுமல்ல, நூலின் பெயரும் பெரிது, பெரிது எனப் பெரிதினைத்தான் பறைசாற்றுகிறது.

பெரிதினும் பெரிது கேள்

திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்களின்
அற்புதப் படைப்பு.
பெரிதினும் பெரிது கேள்.