12 மார்ச் 2020

எழுத்துக்காரன்




நடக்கக் கற்று
நாலடி வைப்பதற்குள்
ஓடு என்றார்கள்
ஓடலானேன் –

கைதட்டல்கள், வாழ்த்துக் கூச்சல்கள்
வேகம், வேகம், இன்னும் வேகம்

அன்னை மடியும்
இளமைக் கூத்தும்
ஓட்டத்தினூடே ஓடி மறைந்தன

ஓடும்போதே கல்யாணம் பண்ணி
கடமைகள் முடித்து
குழந்தைகள் பெற்று
குடும்பம் சுமந்து –
அடைந்தால் சிரித்து
இழந்தால் அழுது

பக்தியில் நனைந்து
பயத்தில் உறைந்து
நரைக்க, நரைக்க
நாட்கள் பறக்க
இறைக்க, இறைக்க
ஓடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் எனக்கு
உண்மை புரிந்தது –
பந்தயம் என்றோ
முடிந்து போனது

நான் வெறும்
பழக்க தோஷத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்.

     பழக்கதோஷத்தில் ஓடுகிற பந்தயக் குதிரையாக, இன்றைய வாழ்வு நம்மை மாற்றியிருக்கிறது அல்லது இன்றைய வாழ்விற்காக நாம் மாறியிருக்கிறோம்.

     இது நல்லதல்ல

     வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வோம்

     இலக்கியத்தோடு இயைந்த வாழ்க்கையாய் வாழ்வோம்

     ஏன், இலக்கியத்தோடு இயைந்து வாழ வேண்டும்?

     இலக்கியம் என்ன செய்யும் ?

     என்னதான் செய்யாது

     இலக்கியம் ஒரு தனி மனிதனையோ, ஒரு நாட்டையோ என்ன வேண்டுமானாலும் செய்யும்.

     இலக்கியம் மனிதனை உயர்த்தும்

     வாழும் நெறிமுறைகளை உணர்த்தும்

     ஏதென்சு நகரில் ஒரு மாபெரும் கண்காட்சி நடைபெற்றது

     விலையுயர்ந்த, கண்கவர் பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு வைக்கப்பெற்று, காண்போரை சுண்டி இழுத்தன.

     ஒரு சிறு கூட்டம், இளைஞர்களின் கூட்டம், கண்காட்சியைக் காணாமல், கண்காட்சிக்கு வருபவர்களைக் கவனிக்கத் தொடங்கியது.

     யார் இந்த ஊரிலேயே அதிகப் பணக்காரர் என்பதைத் தீர்மானிக்கக் கவனித்தார்கள்.

     யார் விலையுயர்ந்த பொருட்களை, அதிக எண்ணிக்கையில் வாங்குகிறார்களோ, அவரே பெரும் பணக்காரர் என்று முடிவு செய்து, அந்தப் பெரும் பணக்காரரை அடையாளம் காண, அந்தக் குழு காத்திருந்தது, கவனித்துக் கொண்டிருந்தது.

     சாக்ரடீஸ் வந்தார்

     இளைஞர்களைக் கண்டார்

     நோக்கம் அறிந்தார்

     சிரித்தார்

     நான்தான் ஏதென்சிலேயே பெரும் பணக்காரன் என்றார்

     இளைஞர்கள் குழு திகைத்தது

     பரம ஏழையான இவரா பெரும் பணக்காரர்?

     புரியவில்லையே

     எப்படி? என்றது

     எனக்கு இங்கிருக்கும் பொருட்கள் எதுவுமே தேவையில்லை.

     தேவைகள்தான் ஒரு மனிதனை ஏழையாகவோ, பணக்காரனாகவோ மாற்றுகிறது.

     எனவே நான்தான் பணக்காரன் என்றார்.

     இதுதான் இலக்கிய மனம்

     இலக்கிய மனம்தான் பெரும் செல்வம்

     அடக்கமுள்ளவனாக, பணிவுள்ளவனாக ஒருவரை மாற்றுவதுதான் இலக்கியம்.

     இலக்கியம் நம்மை குழந்தையாக்கும்

ஜன்னல் வழியே -  வேடிக்கை பார்
எனக் காட்டினேன்
ஜன்னலைக் கண்டு
சிரித்தது குழந்தை.

     இதுதான் இலக்கிய மனம்.

     மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தால் சிரிப்பு வரும். குழந்தைத் தன்மை வளரும்.

     என் பெயரன் ஒரு யானைப் படம் வரைந்து கொண்டிருந்தான்

     யானைக்கு கருப்பு நிறம் கொடுப்பதற்கு பதில், பல்வேறு வண்ணங்களால், யானைக்கு நிறம் கொடுத்தான்.

     யானை கருப்பாகவல்லவா இருக்கும் என்றேன்

     இது Rainbow Elephant என்றான்

     வானவில் யானை என்று ஒன்று எங்கும் கிடையாதே என்றேன்

     இதோ இருக்கிறதே என்று, தான் வரைந்த படத்தைக் காட்டினான்.

     இதுதான் இலக்கியம்.

     இலக்கியம் என்பது புத்தக வாசிப்போடு மட்டும் சம்பந்தப்பட்டது கிடையாது.

     புத்தகங்களை மட்டும் வாசித்தால் போதாது

     மரம், சொடி, கொடிகளையும் வாசிக்க வேண்டும்

     இந்த உலகை வாசிக்க வேண்டும்

எழுத்துக் கூட்டிப்
புத்தகத்தை வாசிப்பது போல
இலைகளைக் கூட்டி
மரங்களை வாசிக்க வேண்டும்

ஒவ்வொரு கிளையாகப் – பிரித்து
வாசிக்க வேண்டும்

ஒவ்வொரு மரத்தையும் – அதன்
காயங்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டும்

மரங்களை
கீழிருந்து மேலாகவும்
மேலிருந்து கீழாகவும்
வாசிக்க வேண்டும்

மரங்கள்
பூச்சிகளின் பிரபஞ்சம் – நீ
பூச்சியாய் மாறினால் – இலைகளின்
நுனிவரை செல்லலாம்

இலைகளில் இருப்பவை
நரம்புகள் அல்ல
அவை தாவர லிபி (எழுத்துக்கள்)
அவ்வளவும்
பாட்டு, பாட்டு, பாட்டு

இலைகளின் பாடலை
காற்று இசைக்கும்
பூச்சியாகி உற்று கேள் புரியும்.

பறவைகளின் பாட்டெல்லாம்
இலைகளிடம் கற்றதுதான்

பாட்டு முடிந்தவுடன் – இலையும்
பழுத்து விழுந்து விடும்

மரத்தின் அர்த்தத்தை
நிழலில் தேட வேண்டாம்
அங்கே இளைப்பாறு

மரத்தின் அர்த்தத்தை
இலக்கியமாக்கி
மரத்தை வாசித்தபடி
ஒரு பூச்சிபோல்
நகர்ந்து கொண்டே இரு

வாழ்க்கை மாறிவிடும்
மரப்பிரசாதம்.

     இலக்கியங்களை வாசியுங்கள்

     இலக்கியத்தின் ஏதோ ஒரு சொல், ஒரு வரி, உங்கள் வாழ்க்கையையே முற்றாய் புரட்டிப் போடலாம்.

     எனவே இலக்கியத்தை வாசியுங்கள்

     இலக்கிய வெளிச்சத்தில் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள், நலமாக்கிக் கொள்ளுங்கள்

தஞ்சாவூர்க்  கவிராயர் அவர்களின்
இலக்கியம் என்ன செய்யும்?
என்னும் தலைப்பிலான
அருமையானப் பொழிவு
ஞாயிற்றுக் கிழமையின்
மாலைப் பொழுதைப்
பயனுள்ளதாக்கியது.

     இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதை தமிழுலகம் நன்கறியும்.

     ஆனால் இவரது ஆளறி அட்டை அல்லது வருகையாளர் முகவரிச் சீட்டு (Visiting Card) இவரை எழுத்துக்காரன்  என்று அறிமுகம் செய்கிறது.

     எழுத்துக்காரன்

     வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

     இதற்கும் இவர் ஒரு கதை வைத்திருக்கிறார்

     இவரது முன்னோர், தஞ்சையில், மராட்டிய மன்னர் காலத்தில், தெலுங்குச் சுவடிகளைப் பிரதியெடுக்கும் பணியினைச் செய்துள்ளனர்.

     இவ்வாறு பிரதியெடுக்கும் பணியாளர்களுக்காக, தஞ்சை மாரியம்மன் கோயிலுக்கு அருகில், ஒரு தெருவையே மராட்டிய மன்னர், தானமாக வழங்கி இருக்கிறார்.

    அன்றும் மட்டுமல்ல, இன்றும் இத்தெருவின் பெயர் என்ன தெரியுமா?

     எழுத்துக்காரத் தெரு

     எழுதுபவர்களுக்காக, ஓலையில் எழுதுபவர்களுக்காக வழங்கப்பட்டதால் இது எழுத்துக்காரத் தெரு.

      எனவே இவர் எழுத்துக்காரன் என்னும் சொல்லைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

எழுத்துக்காரன் தஞ்சாவூர்க் கவிராயர்

     இந்த எழுத்துக்காரரோடு, ஒரு ஓவியக்காரரும் வந்திருந்தார்.

     இவர் ஓவியர் மணியன் குடும்பத்தைச் சார்ந்தவர்.

     ஓவியர் மணியம் செல்வனிடம் உதவியாளராகப் பணியாற்றிப் பயிற்சி பெற்றவர்

     அமரர் கல்கியின் அமரத்துவம் பெற்ற படைப்பான, பொன்னியின் செல்வன், மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல், கல்கியின் பக்கங்களை நிரப்பத் தொடங்கியபோது, ஏற்கனவே இந்தக் கதைக்குப் பிரமாதமாக ஓவியம் வரைந்திருக்கும் ஓவிய மேதைகளின்  படங்களில் இருந்து மாறுபட்டும், அதே சமயம் கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் பொருத்தமாகவும், படங்களை வரைந்து அசத்தியவர்.

ஓவியர் வேதா

     காட்சிக்கு எளியராய், அமைதியின் திருஉருவாய் அமர்ந்திருந்தவர், எழுத்துக்காரரிடம், தஞ்சை மக்களைப் பற்றி, இரத்தினச் சுருக்கமாய் ஒரு வரி உரைத்திருக்கிறார்.

தஞ்சையில் மனிதத் தன்மையுள்ள முகங்களைப் பார்க்கிறேன்

     எழுத்துக்காரரின் வாய் வழி உதிர்ந்த, ஓவியக்காரரின் உணர்வு வார்த்தைகளைக் கேட்டு, அரங்கே அகம் மகிழ்ந்துதான் போனது.

---

ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு.

கடந்த 8.3.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை.
ஏடகப் பொருப்பாளர்
திரு பி.கணேசன் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற
ஏடகப் பொழிவினைச்
செவிகொடுத்துக் கேட்க வந்தவர்களை,

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை தமிழ் மாணவி
செல்வி சோ.விஜயலட்சுமி அவர்கள்
வரவேற்றார்.


எழுத்துக்காரன் தஞ்சாவூர் கவிராயரின்
அருவியென ஆர்ப்பரித்தப் பொழிவு கேட்டு.
மனம் மகிழ்ந்திருந்த ஏடக அன்பர்களுக்கு

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை தமிழ் மாணவி
செல்வி சி.பெரியநாயகி அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் ப.ரேவதி அவர்கள்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

யாழ் பல்கலைக் கழகத்
தமிழ்ச் சுவடிகளைப் பாதுகாக்க,
வழிமுறைகளை எழுத்தியம்பவும்- உடனிருந்து
செயல்முறையில் செய்துகாட்டவும்,
இரண்டாம் உலகச் சித்த மருத்துவ மாநாட்டினை
மங்கல விளக்கேற்றித் துவக்கி வைத்திடவும்,
ஏடக நிறுவுநர், தலைவர்
விமானம் ஏறி
இலங்கைக்குப் பறந்து சென்றபோதிலும்,


தலைவர் இல்லா குறையே
தெரியா வண்ணம்
நிறைவாய் பொழிவினை நடத்திட
ஏடகப் பொறுப்பாளர்களை
முழுமையாய்ச் செதுக்கி
செப்பம் செய்து வைத்திருக்கும்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.