19 மே 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம்



     பதினாறாம் நூற்றாண்டு.

     இராமேசுவரம்.

     நான்கு பேர் அந்தப் பல்லக்கினைச் சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

     பல்லக்கிற்கு முன்னும் பின்னும் சில வீரர்கள் காவலுக்குச் செல்கிறார்கள்.

    பல்லக்கில் சிவகாமி நாச்சியார்.


     எதிரே சிலர் பல்லக்கை நோக்கிப் பதைபதைப்புடன் ஓடி வருகிறார்கள்.

     பல்லக்கு நின்றது.

     ஓடி வந்தவர்களுள் ஒருவர், பல்லக்கின் அருகில் சென்று, கைகட்டிப் பணிவுடன்  அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.

     செய்தியினைக் கேட்டு அதிர்ந்த சிவகாமி நாச்சியார், பல்லக்கை கீழே இறக்கச் சொல்லி, பல்லக்கில் இருந்து  வெளியே வருகிறார்.

     கண்கள் கலங்க, ஒரு நிமிடம் யோசித்தவர், வீரர்களை அழைத்துக் கட்டளை இடுகிறார்.

     கட்டளையினைக் கேட்டு வீரர்கள் தயங்குகின்றனர்.

     ஏன் தயங்கி நிற்கிறீர்கள், உடனே நான் சொன்னதைச் செய்யுங்கள் என வலியுறுத்த, அருகில் இருந்த ஊருக்குள் புகுந்த வீரர்கள், விறகுகளைக் கொண்டு வந்து அடுக்குகின்றனர்.

     விறகுகளின் மீது எண்ணெய் ஊற்றி நனைக்கின்றனர்.

    பின் ஒரு சிறு நெருப்பைக் விறகுகளின் மீது உட்கார வைக்க, தீ கொழுந்து விட்டு எழுந்து, எரியத் தொடங்குகிறது.

     சிவகாமி நாச்சியார் மெல்ல நடந்துத் தீயினுள் நுழைகிறார்.

     நாச்சியாரைத் தன் அனைத்துக் கரங்களாலும், ஆசைதீர வாரி அணைத்த தீ, மேலே மேலே எழும்பி வின்னைத் தொடுகிறது.

     சில நிமிடங்களில் நாச்சியார் சாம்பலானார்.

     சிவசாமி நாச்சியார் தீ புகுந்த இடத்திலிருந்து, சிறு தொலையில், வேரொரு பல்லக்கு வந்து கொண்டிருக்கிறது.

     ராஜலட்சுமி நாச்சியார்.

     எதிரே சிலர் ஓடி வருகின்றனர்.

    பல்லக்கு நிற்கிறது

     செய்தியறிந்த இந்த நாச்சியாரும், அதே கட்டளைகளை இடுகிறார்.

     விறகுகள் அடுக்கப்படுகின்றன.

     எண்ணெய் ஊற்றப்படுகிறது.

     தீ வைக்கப்படுகிறது

     ராஜலட்சுமி நாச்சியாரும் தீ புகுகிறார்.

     சாம்பலாகிறார்.

---

     இராமநாதபுரம்.

     விஜயரகுநாத சேதுபதி.

    
     1713 ஆம் ஆண்டு முதல் 1725ஆம் ஆண்டு வரை இவர்தான் இராமநாதபுர மன்னர்,

      மந்திரிகள் சூழ அரசவையில் வீற்றிருக்கிறார்.

     ஒரு முதியவர், வடநாட்டில் இருந்து வந்த ஒரு ஆன்மிகப் பயணி, அரசர் முன் பணிவோடு வணங்கி நிற்கிறார்,

   
  மன்னா, நான் ஒரு துறவி. வட நாட்டில் இருந்து வருகிறேன். காசிக்குச் சென்று புனித நீராடி, இராமேசுவரத் திருத்தலத்தில் நீராடி புனிதம் பெற வேண்டி வந்துள்ளேன்.

     என்னிடம் பொன், பொருள் ஏதுமில்லை.

     நடந்தே பயணப்பட்ட நான், வழியில் இருக்கும் அன்ன சத்திரங்களில் கிடைக்கும் உணவை உண்டே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.

     ஆனால் இங்கு, இராமநாத புரத்தில் இருந்து, இராமேசுவரத்திற்குப் படகினில் செல்ல, நான்கு அணா கட்டணம் கொடுத்தால்தான் அழைத்துச் செல்வேன் என்கிறார்கள்.

     துறவியிடம் ஏது காசு.

     எனவே தங்களின் உதவி நாடி வந்துள்ளேன்.

     துறவி பேசப் பேச, மன்னரின் முகம் மாறுகிறது.

     என்ன மந்திரியாரே, என்ன சொல்கிறார் இவர்? இவர் சொல்வது உண்மையா?

     இராமேசுவரம் செல்ல, இறைவனைத் தரிசிக்க, அரசுப் படகுகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றல்லவா உத்தரவிட்டிருக்கிறேன். இவரோ நான்கு அணா வசூலிக்கப்படுவதாகக் கூறுகிறாரே, இது உண்மையா?

     அரண்மனையே ஒரு கணம் அதிர்ந்து போகிறது.

     ஆமாம் மன்னா. உண்மைதான்., மந்திரி மெல்ல பதில் உரைக்கிறார்.

     என்ன?

     அரசரின் கோபக்குரல் அரண்மனை எங்கும் எதிரொலிக்கிறது.

     இராமேசுவரத்தின் ஆளுநராகத் தங்களால் நியமிக்கப்பட்டிருக்கும், தங்களின் மருமகனார் தண்டபாணித் தேவர் அவர்களின் உத்தரவுப்படியே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை கோயிலின் பராமரிப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

     தங்களின் மருமகனாயிற்றே, தங்களின் அனுமதி பெற்றுத்தான் வசூலிக்கிறார் என்று எண்ணி இருந்துவிட்டோம்.

     அரசரின் கண்கள் சிவக்கின்றன.

     வீரர்களே, உடனே சென்று, தண்டபாணித்தேவரை கைது செய்து அழைத்து வாருங்கள்.

     வீரர்கள் பறக்கின்றனர்.

     தண்டபாணித்தேவர், விஜயரகுநாத சேதுபதியின் அக்காள் மகன்.

     சேதுபதிக்குத் தன் அக்காள் மகன் மீது அளவுகடந்த பாசம்.

     எப்படிப்பட்டப் பாசம் தெரியுமா?

     சிவகாமிநாச்சியார், ராஜலட்சுமி நாச்சியார் என்னும் தன் இரு மகள்களையும், தண்டபாணித்தேவருக்கே  திருமணம் செய்து வைக்கிற அளவிற்குப் பாசம்.

     ஆனால், தவறு என்று வந்துவிட்டபிறகு, மகனாவது, மாப்பிள்ளையாவது.

     அடுத்த சில மணி நேரங்களில், தண்டபாணித் தேவர், மன்னர் முன் நிறுத்தப்படுகிறார்.

     எனது உத்தரவிற்கு மாற்றாக, படகில் பயணிப்பதற்குக் கட்டணம் வசூலித்தது உண்மையா?

     ஆம், உண்மை.

     மன்னிக்க முடியாத குற்றம். தேசத் துரோகமே செய்திருந்தாலும், நாடு கடத்தித் தங்களை மன்னித்திருப்பேன். ஆனால் தாங்கள் சிவத் துரோகம் செய்துவிட்டீர்கள். மன்னிப்பே கிடையாது.

     வீரர்களே, இவரை இழுத்துச் சென்று, சிரச்சேதம் செய்யுங்கள்.

     மாமனாரின் உத்தரவின்பேரில், மருமகனாரின் தலை துண்டிக்கப்பட்டது.

---

     அரசரின் கட்டளையின்படி தங்கள் கணவரைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதை அறிந்த மறு நொடியே, சிவகாமி நாச்சியாருக்கும், ராஜலட்சுமி நாச்சியாருக்கும் புரிந்து விட்டது.

     தங்கள் கணவரின் தலை தப்பாது என்பது தெளிவாய் தெரிந்து விட்டது.

    உடனே இருவரும், பல்லக்கு ஏறி, இராமநாதபுரம் புறப்பட்டனர்.

     உயிரோடு இருக்கும் பொழுதே, தங்களின் கணவர் முகத்தை ஒரு முறையாவது, பார்த்துவிட மாட்டோமா என்னும் ஏக்கத்துடன் புறப்பட்டனர்.

     பாதி வழிவிலேயே செய்தி வந்துவிட்டது.

     கணவர் தண்டிக்கப்பட்டார், சிரம் துண்டிக்கப்பட்டது என்னும் செய்தி வந்துவிட்டது.

     செய்தி அறிந்த அவ்விடத்திலேயே, இருவரும் தீயிடைப் புகுந்து வெந்து மாய்ந்தனர்.

    

அக்காள் சிவகாமி நாச்சியார் அணலிடைப் புகுந்து, தீயில் கரைந்து சாம்பலான இடம் அக்காள் மடம்.

     தங்கச்சி ராஜலட்சுமி நாச்சியார் தீயில் கலந்து, காற்றில் கரைந்துபோன இடம் தங்கச்சி மடம்.

     இராமநாத புரத்தைக் கடந்து, கடல்மேல் பாம்பன் பாலத்தில் பயணித்து, தரையிறங்கி, இராமேசுவரம் செல்லும் வழியில், இன்றும் அக்காள் மடமும், தங்கச்சி மடமும், ஒரு பெருந்துயரின் சாட்சியாய், நீதி வழுவா நெறி முறையின் மாட்சியாய் நிமிர்ந்து நிற்பதைக் காணலாம்.

     அடுத்தமுறை, இராமேசுவரம் செல்லும்பொழுது, அக்காள் மடத்திலும், தங்கச்சி மடத்திலும், மகிழ்வுந்தில் இருந்து சற்றுக் கீழிறங்கி நடந்து பாருங்கள்.

     ஒருவேளை அக்காளும், தங்கச்சியும் விட்ட கடைசி மூச்சுக் காற்றை நீங்களும் சுவாசிக்கலாம்.

     பெருந்தீயில் வெந்து காற்றில் கலந்த இவர்களின் சாம்பல், தங்களுக்குமேல் தவழ்ந்து கொண்டிருக்கலாம்.








அக்காள் மடம் தங்கச்சி மடம்
ஒலிப் பேழை