14 ஜூலை 2020

மோடி ஆவணங்கள்




     பாண்டிச்சேரி.

     காரைக்கால்.

     ஏனாம்.

     மாஹே.


     இந்த நான்கு பகுதிகளும் ஒன்றிணைந்து, பாண்டிச்சேரியைத் தலைநகரமாகக் கொண்டு, இந்திய அரசின் ஒன்றியப் பகுதியாக, அதாவது யூனியன் பிரதேசமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம்.

     பாண்டிச்சேரி தமிழக அரசின், எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி.

     ஆனால், காரைக்காலோ, தமிழகத்திற்குள் இருக்கும் பகுதி.

     தனித் தனியான, இவ்விரு பகுதிகளும், எப்படி பிரெஞ்சு ஆதிக்கத்தின் எல்லைக்குள் வந்து, இன்று ஒன்றியப் பகுதிகளாக உள்ளன என்ற குழப்பம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

     நம்மில் பலருக்கும் கூட இந்த எண்ணம் உள்ளத்தே எழுந்திருக்கலாம்.

     காரைக்கால், பாண்டிச்சேரியுடன் இணைய, தஞ்சைதான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா?

     நம்பித்தான் ஆகவேண்டும்.

     வாருங்கள், சற்று பின்னோக்கிப் பயணிப்போம்.

    ஆற்காடு நவாப் அல்லது கர்நாடகா நவாய் என்றழைக்கப்பட்ட, சந்தா சாகிப்பிற்கும், சதாரா மன்னனுடைய போர்ப்படைத் தளபதி முராரி ராவிற்கும் இடையே ஒரு போர்.

     இப்போரில் சந்தா சாகிப் தோல்வியைத் தழுவக்கூடிய நிலை.

     இந்த சந்தா சாகிபை, தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டால், ஆங்கிலேயர்களுக்கு இணையாக, நாமும், இந்தியாவை ஆளலாம் என்ற எண்ணம் பிரெஞ்சுக் காரர்களுக்கு.

     சூழ்ச்சி செய்தனர்.

     சந்தா சாகிப்பிற்கு, தங்களே முன் வந்து, உதவி செய்து, தங்கள் வலையில் விழ வைத்தனர்.

     பிரெஞ்சுக் காரர்களுக்கு, ஆம்பூர் மீது ஒரு கண்.

     எனவே, ஆம்பூர் நவாபை வீழ்த்த, ஒரு பெரும் படையினைக் கொடுத்து, அப்படையினை வழி நடத்திச் செல்லும் பொறுப்பினையும், சந்தா சாகிப்பிடம் கொடுத்தனர்.

     சந்தா சாகிப் ஆம்பூர் நவாபை வெற்றி கொள்கிறார்.

     நவாபின் மகனோ, சாகிப்பிடம் இருந்து தப்பி, திருச்சிப் பகுதிக்கு ஓடுகிறார்.

    ஆம்பூரில் ஆட்சி நிலைக்க வேண்டுமானால், நவாபின் மகனைத் தீர்த்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை உணர்கிறார் சந்தா சாகிப்.

     எனவே, நவாபின் மகனைத் தேடிப் புறப்படுகிறார்.

     வழியில், கொள்ளிடக் கரை.

     கொள்ளிடக் கரையில் முகாமிட்ட சந்தா சாகிப், தஞ்சை மன்னருக்கு ஒரு தகவல் அனுப்புகிறார்.

     எங்களுக்கு ஆதரவாக, உதவியாக இருக்க வேண்டும்.

     இனி நீங்கள், எங்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும்.

     அன்று தஞ்சையை ஆண்ட, மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

     பிரதாப சிம்மனுக்கு ஓர் எண்ணம்.

     ஆங்கிலேயருடன் இணைந்து, சந்தா சாகிபை, அடித்துத் துரத்தினால் என்ன என்கிற எண்ணம்.

     எப்படியோ, பிரதாப சிம்மனின் எண்ணத்தை மோப்பம் பிடித்துவிட்ட, சந்தா சாகிப்,  சினம் கொண்டு, தஞ்சை அரண்மனையினைச் சுற்றி வளைக்கிறார்.

     தன்னால், சந்தா சாகியை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது என்பது பிரதாப சிம்மனுக்குப் புரிகிறது, தெளிவாய் தெரிகிறது.

     என்ன செய்யலாம்?

     கப்பம் கட்டக் கூடாது.

     அடங்கியும் போகக் கூடாது.

     என்ன செய்யலாம்?

     யோசித்தார்.

     யோசித்து, ஒரு முடிவிற்கு வந்தார்.

     சந்தா சாகிபை அழைத்துச் சமாதானம் பேசினார்.

     ஓர் உடன் படிக்கை செய்து கொண்டார்.

     ஓர் அடமானப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

     தஞ்சை மராட்டிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட, 81 ஊர்களை உள்ளடக்கிய, காரைக்காலை, பிரெஞ்சுக்காரர்களுக்கு அடமானமாகத் தாரை வார்த்தார்.

     தஞ்சை எனக்கு.

     காரைக்கால் உங்களுக்கு.

     1749 ஆம் ஆண்டு, காரைக்கால், இப்படித்தான், பிரெஞ்சு ஆளுகைக்குள் போனது.

     இப்பொழுது புரிகிறதா, காரைக்கால், பாண்டிச்சேரியோடு இணைந்த கதை.

     தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் எழுதிக் கொடுத்த, அடமான ஒப்பந்தம், இன்றும், ஒரு ஆவணத்துள் ஒளிந்து கிடக்கிறது.

     மோடி ஆவணம்.

     மோடி ஆவணமா?

     அப்படியென்றால் என்ன? எனும் கேள்வி எழுகிறதல்லவா?

     மோடி ஆவணம்.

     மராட்டிய மொழியை எழுதப் பயன்படும், ஒரு சுருக்கெழுத்து முறைதான் மோடி எழுத்து முறை.

     கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில், மகாராஷ்டிரா பகுதிகளை ஆண்ட, தேவகிரி யாதவ அரசர்களின், முதன்மை அமைச்சராக விளங்கிய ஹேமாத் பந்த் என்பாரின் முயற்சியால் உருவாக்கப் பட்டதுதான், மோடி எழுத்துரு.
    

அன்று நடைமுறையில் இருந்த, தேவநாகரி எழுத்துக்களை மாற்றி, குறில், நெடில் எழுத்துக்களே இல்லாத வடிவில், சில எழுத்துக்களை உடைத்து, சிதைத்து, உருமாற்றி, புத்தம் புதிய எழுத்துக்களை உருவாக்கினார்.

     பேச்சு வழக்கில் இல்லாமல், எழுத்துருவில் மட்டுமே இருக்கும் வகையில், இந்த எழுத்துருக்களைக் கட்டமைத்தார்.

     மோடணே என்ற மராட்டியச் சொல்லுக்கு உடைத்தல் என்று பொருள்.

     தேவநாகரி வடிவத்தை, உடைத்து உருவாக்கப்பெற்ற எழுத்துரு என்பதால், இந்த எழுத்து முறையானது, மோடி எழுத்து என அழைக்கப் படலாயிற்று.

     மராட்டிய அரசர்கள் வழி வந்த, வெங்கோஜி, 1676 ஆம் ஆண்டு, தஞ்சையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது, மோடி எழுத்துருவை, அலுவல் மொழியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

     இந்த மோடி எழுத்தில் அமைந்தவை, மோடி ஆவணங்களாகும்.

     இதனை ஒரு ரகசியக் குறியீட்டு ஆவணம் என்றும் அழைக்கலாம்.

     பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே, இந்த மோடி ஆவணங்களைப் படிக்க முடியும்.

     மோடி ஆவணங்கள்.
    
     1885 ஆம் ஆண்டு, தஞ்சையில், மராட்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தபின், மோடி ஆவணங்கள் அனைத்தும், ஆங்கிலேயர் வசம் சென்றது.

     ஆங்கிலேயர், தங்களது ஆங்கிலேய ஆவணங்களுடன், மோடி ஆவணங்களையும் பராமரிக்கத் தொடங்கினர்.

     1931 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முயற்சியால், இந்த மோடி ஆவணங்களுக்கு, விளக்க அட்டவணைத் தயாரிக்கும் பணி தொடங்கியது.

     1934 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசானது, ஆங்கில ஆவணங்களைத் தனியாகவும், பிற மொழி ஆவணங்களைத் தனியாகவும், வட்டார மொழி ஆவணங்களைத் தனியாகவும், அட்டவணைப் படுத்த ஆணையிட்டது.

     எனவே, அதுநாள் வரை, அட்டவணைப் படுத்தப்பட்ட, ஆவணங்கள், 2074 மூட்டைகளில், தஞ்சையில் இருந்து, சென்னை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப் பட்டன.

     அன்று, ஆவணக் காப்பாளராக விளங்கிய டாக்டர் பாலிகா என்பார், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைத் தனியாகவும், கோயில்கள், சத்திரங்கள் பற்றிய ஆவணங்களைத் தனியாகவும், நில மானியம், கொடை குறித்த ஆவணங்களைத் தனியாகவும் பிரித்து, இவைகளைச் சென்னையிலேயே வைத்துப் பாதுகாப்பது எனவும், மற்ற ஆவணங்களை, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கு அனுப்புவது எனவும் முடிவெடுத்தார்.

     எனவே, முக்கிய ஆவணங்கள் சென்னையில் தங்கின.

     மற்ற ஆவணங்கள், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தை வந்தடைந்தன.

     இந்நிலையில், தஞ்சைக்கு வந்த, ஜாதுநாத் சர்க்கார் என்னும் வரலாற்று அறிஞர், மோடி ஆவணங்களை ஆராய்ந்தார்.

     ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் நிகழ்ந்த, பல வரலாற்று நிகழ்வுகளின் குறிப்புகள், மோடி ஆவணங்களில் இருப்பதை கண்டார்.

     வெளி உலகிற்கும் அறிவித்தார்.

     இந்த அறிவிப்பானது, மோடி ஆவணங்களைப் பற்றியப் புதிய புரிதலை உண்டாக்கியது.

     இதன் தொடர்ச்சியாக, 1945 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இருந்த, மோடி ஆவணங்களை, முறையாகப் படிக்கத் தெரிந்தவர்களின் துணை கொண்டு, ஆவணப் படுத்தி, அட்டணைப் படுத்தும்  செயலில் இறங்கினார்.

     பிறகுதான் தெரிந்தது, மோடி ஆவணங்களைப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை, தஞ்சையில், சொற்பத்திலும் சொற்பம் என்று புரிந்தது.

     அசரவில்லை ஆட்சியர்.

     மகாராஷ்டிரா முழுவதும், நாளிதழ்களில் விளம்பரம் செய்தார்.

     மோடி ஆவணங்களைப் படிக்கத் தெரிந்த ஆட்கள் தேவை. உங்களுக்குப் படிக்கத் தெரியுமா? வாருங்கள் தஞ்சைக்கு என அழைத்தார்.

     இக்காலகட்டத்தில், இந்தூரில் ஒரு மாநாடு நடைபெற்றது.

     இம்மாநாடு, மோடி ஆவணங்கள் பற்றிய, ஒரு விரிவான அறிக்கையை, ஆங்கில அரசிற்குக் கொடுத்தது.

     மோடி ஆவணங்கள் மிக, மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய ஆவணமாகும். எனவே இவற்றைப் பாதுகாக்கவும், அட்டவணைப் படுத்தவும், அரசு ஆவண செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளினை முன் வைத்தது.

     அறிக்கையினைப் பெற்றுக் கொண்ட ஆங்கிலேய அரசு, ஓரிரு ஆண்டுகளில், மூட்டை, முடிச்சைக் கட்டிக் கொண்டு புறப்பட, இந்தியா சுதந்திரம் பெற்றது.

     1948 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, மோடி ஆவணங்கள் குறித்து ஆராய, ஒரு குழுவினை அமைத்தது.

     1950 ஆம் ஆண்டு, மேஜர் நாராயண பாலகிருஷ்ண கர்தே என்னும் மிகச் சிறந்த அறிஞர், வரலாற்று ஆய்வில் தோய்ந்த அறிஞர், மோடி ஆவணங்களை விரிவாய் ஆராய்ந்தார்.

     மோடி ஆவணங்களை ஏ, பி மற்றும் சி என மூன்று வகையாகப் பிரித்துத் தரவரிசைப் படுத்தினார்.

     முதன்மைத் தரவுகளை உள்ளடக்கிய ஏ மற்றும் பி பிரிவு ஆவணங்களை,  சென்னை, ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்கவும், சி பிரிவு ஆவணங்களை அழித்து விடவும் பரிந்துரை செய்தார்.


தேவையில்லை, வேண்டாம், அழித்து விடலாம் என்று கருதப்பட்ட சி பிரிவு ஆவணங்கள், எப்படியோ, தப்பிப் பிழைத்து, தஞ்சைக்கு வந்து தஞ்சமடைந்தன.

     தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த, வேங்கட ராமையா என்பவர், தேவையில்லை, அழித்துவிடலாம் என்று கருதி, ஒதுக்கப்பட்ட சி பிரிவு ஆவணங்களை ஆராய்ந்து, தஞ்சை மராட்டியர் ஆட்சியின் சமுதாய நிலையை, ஆட்சி முறையை வெளிப்படுத்தும், மிகப் பெரிய ஆய்வு நூலை வெளிக் கொணர்ந்தார்.

     இதன்பிறகுதான், மோடி ஆவணங்களின் மீதான முக்கியத்துவம் அதிகரித்தது.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், மோடி ஆவணங்களை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், அரிய கையெழுத்துச் சுவடித் துறைக்குக் கொண்டு வந்து, ஆய்வினை முடுக்கி விட்டார்.

     இன்றும், சென்னை ஆவணக் காப்பகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் என மூன்றிலும், மோடி ஆவணங்களின் ஆய்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

     மோடி ஆவணத் தரவுகளின் மூலம், ஏராளமான வரலாற்று நிகழ்வுகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.

     உங்களுக்குத் தெரியுமா?

    

கி.பி. 17 ஆம் நூற்றாண்டின், மிகப் பெரும் ஆளுமையாக விளங்கிய, வீர சிவாஜி, தஞ்சையில் ஆட்சி செய்த, தன் சகோதரர், ஏகோஜிக்கு எழுதிய இரு கடிதங்கள், இன்றும், புனே நகர், அருங்காட்சியகத்தில், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றன, என்பதை அறிவீர்களா.

     முதல் கடிதம், சிவாஜி ஆரணிப் பகுதியில் வெற்றி பெற்றபின், தன்னை வந்து பார்க்கும்படி, எழுதிய கடிதம்.

     காரணம், பாகப் பிரிவினை.

     தங்களது, தந்தை இறந்தபின், தனக்கு வந்து சேர வேண்டிய, பல நிலப் பகுதிகள், ஏகோஜியின் வசம் இருந்ததால், என் பகுதியை எனக்குக் கொடு என்று கேட்க, அழைத்த கடிதம்.

     பார்த்தீர்களா, சகோதரர்களுக்குள் பெரும் பிணக்கு இருந்திருக்கிறது, என நிருபிக்க, இக்கடிதத்தை மேற்கோள் காட்டுவார்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.

     சிவாஜியின் கடிதத்தை கண்ட ஏகோஜி, கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்று, அங்கு தங்கியிருந்த, தன் சகோதரர் சிவாஜியைப் பார்க்கிறார்.

     பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

     முறைப்படி பாகத்தை பிரித்துக் கொடுக்கிறார்.

     இவை அனைத்தும், மோடி ஆவணங்களில் முகம் காட்டுகின்றன.

     இதேபோல், 1680 ஆம் ஆண்டு, வீர சிவாஜி மறைந்த ஆண்டில், ஒரு கடிதம்.

     அநேகமாக, சிவாஜி, தன் சகோதரருக்கு எழுதியக் கடைசி கடிதமாகக் கூட இருக்கலாம்.

     இக்கடிதம், முதல் கடிதத்தால் எழுந்த, வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தைத் தகர்த்து எறிகிறது.

     தன் சகோதரனிடத்து, சிவாஜி கொண்டிருந்த, உண்மை அன்பை, பற்றை, பாசத்தை, இக்கடிதத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு எழுத்தும் உணர்த்துகிறது.

     சிவாஜி அவர்களுக்கு உரிய நிலப் பரப்பை, அவருக்குப் பிரித்துக் கொடுத்த ஏகோஜி, தன் பகுதி குறைந்து விட்டதே என்று மனமொடிந்த நிலையில் வாடுகிறார்.

     இதனை அறிந்த சிவாஜி, தன் சகோதரனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

     ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கடிதம்.

     ஒரு ஆட்சியாளன் எந்தவொரு, சூழ்நிலையிலும் சோற்வுற்றவனாக இருக்கக் கூடாது.

     ஒரு ஆட்சியாளன், தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கு, எந்தெந்தப் பணியினை, எவ்வாறு கொடுக்க வேண்டும், என்பதை அறிந்து செயல்படுபவனாக இருக்க வேண்டும்.

     ஒரு ஆட்சியாளன், மிகவும் சுறுசுறுப்பாகவும், வருவாயைப் பெருக்குபவனாகவும், மிகச் சிறந்த ஆட்சியை வழங்கி, மக்களிடம், புகழை நிலை நிறுத்துபவனாகவும் இருக்க வேண்டும்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?.

     மாவீரன் சிவாஜி நம் சிந்தையில் உயர்ந்து போகிறார் அல்லவா?

     இப்படி ஏராளமான செய்திகளை, தன் ரகசிய எழுத்துக்களில் மறைத்து வைத்திருக்கின்றன மோடி ஆவணங்கள்.

     தேவநாகரி வடிவத்தை உடைத்து எழுந்த, மோடி எழுத்தின், மாறு வேடத்தைக் கலைத்து, மோடி ஆவணங்களில் மறைந்திருக்கும் வரலாற்று நிகழ்வுகளை, ஏடு தாண்டி வெளிக் கொணரும் ஆய்வுகள் தொய்வின்றித் தொடர வேண்டும்.

     அதுவரை சுவடிகள், கால வெள்ளத்தில் கரைந்து விடாமல், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின விருப்பமாகும்.

---
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு.

கடந்த 12.7.2020 ஞாயிறன்று மாலை,
முகநூல் வழி,
முகிழ்த்தெழுந்தப் பொழிவு.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
இணைப் பேராசிரியர்


முனைவர் த.ஆதித்தன் அவர்கள்,

ஆவணங்கள் காட்டும் வரலாறு
என்னும் தலைப்பில்,

கன்னியாகுமரிக் கடற்கரையில்,
ஓங்கி உயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவரையும்,
வீரத் துறவி விவேகானந்தர் மணி மண்டபத்தையும்
எழிலோடு காட்டி,
கடற்கரையில், ஆர்ப்பரிக்கும் அலைகளில் குரலையும்
கடற்காற்றின், ஈர வாசத்தினையும்,
ஒருங்கே சுமந்து வந்து, கொட்டிய
அற்புதப் பொழிவில்,
மகிழ்ந்து, நெகிழ்ந்து, கரைந்து போனேன்.

ஊரடங்கினாலும்
உலகடங்கினாலும்
தமிழடங்காது,
எங்கள் ஏடகம்
என்றும் உறங்காது
என்று முழங்கி,
ஏடகப் பொழிவினைக்
குமரிக் கடல் காற்றோடு
அழைத்து வந்து, விருந்து வைத்த
ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணியினைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்.















நண்பர்களே, வணக்கம்.

     தங்களின், தொடர்ந்த உற்சாக வார்த்தைகளாலும், வாழ்த்துகளாலும், மேலும் இரண்டு மின்னூல்கள், அமேசான் தளத்தில் இணைந்துள்ளன.

வாழ்க்கையே போராட்டமாய்



குறையோடு பிறந்த இருவரும், அழகோடு பிறந்த ஒருவரும், தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம், எதிர்த்துப் போராடி வாழ்வில் வென்ற கதை

வீரமங்கை வேலு நாச்சியார்


ஆங்கிலேயரிடம் இழந்த மண்ணைப் போராடி மீட்டெடுத்த, வீரத் தமிழச்சியின் வீரம் செறிந்த வரலாறு

     இவ்விரு நூல்களையும், 15.7.2020 புதன் கிழமை நண்பகல் முதல் 17.7.2020 வெள்ளிக் கிழமை நண்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து மகிழலாம்.

           தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்



     வலைச் சித்தருக்கு ஜெ…