30 நவம்பர் 2020

பண்டிதமணி நேருவும் பழந்தமிழும்

 


இலக்கியமும் இலக்கணமும்

   கல்வெட்டாய் செப்பேடாய்

   இருந்தினிக்கும்,

வலக்கண்ணாய் இடக்கண்ணாய்

   வாங்குவளி நுரையீரல்

   வகைபடல் போல்,

துலக்கமுறும் எந்நாளும்

   துல்லியமாய் மிகத் தெளிவாய்த்

   துய்த்தவற்றைச்

சொலத் தெரிந்த மிகச்சிறந்த

   காவிரிபோல் தலைச்சுரப்பு

   சொரியும் குன்றம்.

     குடகுமலையில் தோன்றி, தங்கு தடையின்றிப் பயணிக்கும் காவிரிபோல், தான் துய்த்தவற்றை, தான் கற்றவற்றை, தான் அறிந்தவற்றைத், தெளிவாய், மிகத் தெளிவாய், துல்லியமாய் வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர் இவர், எனப் பெருமகிழ்வோடு, தன் கவி வரிகளால், பாராட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன்.

   

  இவர் தஞ்சையின், கரந்தைக்கு அடுத்தப் பள்ளியகரத்தில் பிறந்தவர்.

     இவர் தன் 25வது வயதிற்குள்ளாகவே, கம்பராமாயணம், சங்க இலக்கியம், சைவ நூல்கள் ஆகியவை குறித்த தர்க்கம், அறிவியல், தத்துவம், இலக்கியம் எனப் பரந்த வாசிப்பு கைவரப் பெற்றவர்.

     தமிழோடு ஆங்கிலம், இலத்தீன், சமசுகிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர்.

     சிறுவயதிலேயே, தமிழ் மீது கொண்ட பற்றால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் ஆகத் துடித்தவர்.

     சின்னஞ்சிறு வயது தடுத்தபோதும், சங்கப் பணிகளில் முற்றாய் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

     பின்னாளில் உறுப்பினராகி, சங்க அமைச்சராய் உயர்ந்தவர்.

     இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குள் தன்னை முற்றாய் அடைத்துக் கொள்ள மறுத்தவர்.

     ஒரே நேரத்தில், பல நிறுவனங்களில், பலவிதமானப் பணிகளைத் திறம்படச் செய்தவர்,

     கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு, பிரஞ்சு இந்திய நிறுவனத்தோடு உறவு, சித்த மருத்துவத்தோடு புரிதல் எனப் பணியாற்றியவர்.

     மொழி பெயர்ப்பிலே வல்லவர், பதிப்புத்  துறையிலோ வித்தகர்.

     திருவாசகப் பதிப்பு, தொல்காப்பியப் பதிப்பு, கல்லாடம் பதிப்பு, தாமசு கிரேயின் இரங்கற்பா, பழந்தமிழ் நூற் சொல்லடைவு, சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பெருநூல், நற்றினை ஆங்கில மொழி பெயர்ப்பு. இவையெல்லாம் இவரது படைப்புகளில் சிலவேயாகும்.

     1963 ஆம் ஆண்டு, புதுவை பிரஞ்சு கலைக் கழகத்தில், அகராதியியல் துறையில், இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இக் கலைக் கழகத்தின் பணிகளைப் பார்வையிட வருகிறார், ஒரு மாமனிதர்.

     இவர், தன் வயது எழுபதை தொட்டுவிட்ட நிலையிலும், ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் அயராது பணியாற்றியவர்.

     நான் சிறையில் கழித்த பல ஆண்டுகளை, என் வாழ்வின் சிறந்தவை என்று கூற நான் தயாராக இல்லை.

     இருப்பினும், எல்லாவற்றையும், நான் எளிதாகக் கடந்து வருவதற்கு, படிப்பும், எழுத்தும் மிகவும் துணையாக இருந்தன.

     நான் ஒரு இலக்கியவாதி அல்லன்.

     நான் வரலாற்று அறிஞனும் அல்லன்.

     உண்மையில் நான் யார்?

     இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, எனக்குக் கடினமாக இருக்கிறது.

     பலதுறைகளில், மேலோட்டமான அறிவைக் கொண்டவனாக, நான் இருக்கிறேன்.

     கல்லூரியில் அறிவியல் பயிலத் தொடங்கினேன்.

     பின்னர் சட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

     வாழ்வின் ஏனைய பொருள்களில் நாட்டம் கொண்டேன்.

     இறுதியாக, நாட்டில் மிகவும் செல்வாக்கான, அரசியல் களம் புகுந்து, தற்போதைய சிறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டேன்.

     இந்தக் கடிதங்களில், நான் எழுதியிருப்பவைகளை, இறுதித் தீர்வாக, யாதொரு செயலிலும், நீ எடுத்துக்  கொள்ளக் கூடாது.

     எந்த அரசியல்வாதியும், ஒவ்வொரு துறை குறித்தும், ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவது வழக்கம்.

     மேலும், உண்மையில், தான் அறிந்திருப்பதைக் காட்டிலும், அதிகமாகத் தனக்குத் தெரியும் என்று அவர் நடிப்பார்.

     இவர்களை நன்கு கவனிக்க வேண்டும்.

     இவ்வாறாக, பணிவு பளிச்சிடத் தன் மகளுக்குக் கடிதங்களை எழுதியவர்.

    


ஆம், இந்தியாவின் அன்றையப் பிரதமர், பண்டித ஜவகர்லால் நேரு.

     புதுவை பிரெஞ்சு கலைக் கழகத்தின், பழம்பொருள் ஆராய்ச்சி, வடமொழி, கிழக்கு ஆசிய மொழிகள் முதலியவற்றில் உள்ள இலக்கியம், கலை, தத்துவம், சமயம்  முதலியவற்றைப் பற்றிய நூல் ஆராய்ச்சி, என எல்லா துறைகளையும், பார்வையிட்டு, பணிகளைக் கூர்ந்து கவனித்தவாறு, மேல் தளத்திற்குச் சென்றார்.

     முதல் தளத்தில் இருந்த, பல ஆராய்ச்சிப் பகுதிகளைப் பார்த்தவாறு, மிகுந்த களைப்புடன், அகராதியியல் துறைக்குள் நுழைந்தார்.

     அகராதியியல் துறை

     பள்ளியகரப் பெருமகன் அன்போடு நேருவை வரவேற்றார்.

     தன்னை வரவேற்ற, பள்ளியகரப் பெருமகனாரைப் பார்த்து, நேரு கேட்டார்.

     தமிழ் மொழியில் மொத்தம் எவ்வளவு சொற்கள் இருக்கின்றன?

     சங்க காலத் தமிழில் மூன்று இலட்சத்து, மூன்றாயிரத்து, முன்னூற்று எழுபத்து மூன்று சொற்கள் இருக்கின்றன.

     துல்லியமாய் வெளிவந்த பதிலைக் கேட்டு, நேரு வியந்து போனார்.

     மிகவும் முறையாகத் தாங்கள், தங்களின் பணியினைச் செய்து வருவதால், மிகவும் கணக்காகக் கூறுகிறீர்கள்.

    சரி, ஆங்கிலத்தில் எத்தனை சொற்கள் இருக்கினறன, தெரியுமா?

     1928 ஆம் வருட கணக்குப்படி, ஏறக்குறைய ஐந்து இலட்சம் சொற்கள் இருக்கின்றன.

     பதில் பறந்து வந்தது.

     நேரு கேள்வியைத் தொடர்ந்தார்.

     1928 ஆம் வருடம் என்பது, என்ன கணக்கு?

     ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரகராதி முற்று பெற்ற ஆண்டு 1928 என்பதை மனதில் வைத்துக் கூறுகிறேன்.

     ஆங்கிலப் பேரகராதியில் எப்படி, இவ்வளவு ஈடுபாடு கொண்டீர்கள்?

     அகராதித் துறையில் பணியாற்றும் எவரும், அப்பேரகராதியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஐம்பது வருடங்களாக, அப்பேரகராதியை, ஒரு தெய்வமாகவே வணங்கி வருகிறேன்.

     நேரு விடவில்லை.

     அடுத்த கேள்வியைத் தொடுத்து, மடங்கினார்.

     அப்படியானால், உங்கள் தமிழ் மொழியைவிட, ஆங்கில மொழி பெரியதுதானே?

     பள்ளியகரப் பெருமகனார், நேருவைப் பார்த்துப் பணிவாய் கூறினார்.

     இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் முன், ஒரு கருத்தினைத் தங்கள் முன் வைப்பதற்கு, அனுமதி அளிக்க வேண்டும்.

     சரி, சொல்லுங்கள் என்றார் நேரு.

     சங்ககாலச் சொற்களின் தொகை இவ்வளவு என்று நான் சொன்னபோது, ஏறக்குறைய, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, இன்று வரையில் கிடைத்திருக்கும், நூல்களில் நிலைபெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையினைக் கூறினேன்.

     அதாவது, சங்க நூல்களில் காணப்படும் சொற்கள் அனைத்தையும் கூட்டினால் அவ்வளவுதான்.

     ஆனால், உயர்ந்தவர்களின், அறிஞர்களின், அனைத்துக் கருத்துக்களும், தமிழ் மொழியில் இருக்கும்.

     எம்மொழியைச் சார்ந்த அறிஞராயினும், எக்காலத்தைச் சார்ந்தவராயினும், அவருடைய உயர்ந்த கருத்தைக் கூறுவீர்களேயானால், அவர்களுடைய காலத்திற்கும் முன்பே, அதற்கு ஒத்த கருத்தை, என் தமிழ் மொழியில் இருந்து எடுத்துக் கூற முடியும் என்றவர் தொடர்ந்து பேசினார்.

     அதிகம் போகவேண்டியதில்லை, என் முன் நிற்கும், எங்கள் பிரதமருடைய கருத்துக்களுக்கும், சொற்களுக்கும், எதிரொலி போன்ற சொற்களையும், கருத்துக்களையும், தமிழில் இருந்து, என்னால் எடுத்துக் காட்ட முடியும் என்றார்.

     நேருவின் முகத்தில் ஆச்சரியக்குறி.

     என்னைப் பற்றிப் பேசுகிறீர்களா? எதாவது சொல்லுங்கள் பார்ப்போம்.

     மகாத்மா காந்தி அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தபோது, தாங்கள் மனமுடைந்து, எழுதிய பாடல் , இப்பொழுது எனக்கு உடனடியாக, நினைவிற்கு வருகிறது.

     ஓ, லைட்  ஆஃப் லேண்ட்

     ஓ, ஃபாதர் ஆஃப் தி நேஷன்

     ஹு ஈஸ் தேர் ஃபார் ரைட்டஸ்நெஸ்?

     இது தங்களுடைய பாடல். தங்கள் பாடலின் எதிரொலியைத் தமிழில் கேளுங்கள்.

     தசரதன் இறந்ததை அறிந்து, இராமன் புலம்புவதாக, கம்பன் கூறும் பாடலைக் கேளுங்கள்.

     நந்தா விளக்கு அனைய நாயகனே

          நானிலத்தோர் தந்தாய்

     தனி அறத்தின் தாயே

           தயா நிலையே எந்தாய்

     இகல் வேந்தல் ஏறே

          இறந்தனையோ, அந்தோ

     இனி வாய்மைக்கு ஆர் உளரேமற்று

     செய்யுளையும், செய்யுளின் பொருளினையும் கேட்டு அதிர்ந்தார் நேரு. அடுத்தநொடி வாட்டமுற்று நின்றார்.

     நேருவின் கண்களில் நீர் கசிந்தது.

     தமிழ்.

     இதுதான் தமிழ்.

     இதுதான் தமிழ்குடி.

     கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே

     வாளொடு முன் தோன்றிய மூத்த குடி

     நேருவின் வரிகளாலேயே, தமிழின் பெருமையை, தமிழின் தொன்மையை எடுத்துரைத்த, இந்தப் பள்ளியகரப் பெருமகனார் யார் தெரியுமா?

 

     எந்தசாமிப் பிள்ளையும்

               ஈடிணையற்று உயர்ந்தொருவன்

              எனக் கவர்ந்த

     சொந்தசாமி உண்டென்றால்

           வியப்புறுவீர், மருண்டிடுவீர்

           தூய்த் தமிழ்த்தாய்

     தந்தசாமி தலைச்சாமி

          பழந்தமிழும் புதுத்தமிழும்

           தரமாய்க் கற்ற

      கந்தசாமிப் பிள்ளையவன்

எனப் பாவேந்தரே வியந்து போற்றியவர்

இவர்தான்

மேனாள் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர்


பள்ளியகரம் நீ.கந்தசாமி பிள்ளை

---

 

நன்றி

ஔவை ந.அருள் மற்றும் தினமணி

( தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்

முனைவர் ஔவை ந. அருள் அவர்களால்

எழுதப்பெற்று, தினமணியில்  ( 14.11.2020 சனிக்கிழமை ) வெளியானக் கட்டுரையின்

தழுவல், இப்பதிவு)


 ஒலிப் பேழை