16 ஜனவரி 2022

ஊகம் வேய்ந்த தமிழர்

 


உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்

எச்சம் பிரிவாய் இருபதுபோல் – தச்சளவு

மண் கொள்ளக்கொண்ட கோல் என்கொல் வளவர்கோன்

கண் கொள்ளக் கண்ட கரை.

     கரை புரண்டோடும் காவிரியின் வெள்ளப் பெருக்கை, கட்டுப்படுத்த நினைத்த கரிகாலன், காவிரியுடன் கொள்ளிடம் இணையும் இடத்தில், கொள்ளிடப் படுகை, காவிரியைவிடத் தாழ்வாக இருப்பதைக் கண்டு, அவ்விடத்தில் அணை கட்ட முடிவெடுத்து, காவிரியின் கரைகளை உயர்த்தி, அணை கட்டினான்.

    

அவ்வணையின், கல்லணையின் அளவுகளைப் பறைசாற்றுகிறது, இந்தப் பெருந்தொகை பாடல்.

     உச்சம் என்பது அணையின் மேல் மட்ட அளவு.

     எண்கோல் எனில் எட்டு கோல்.

     ஒரு கோல் எனில் இரண்டு அடி, ஒன்பது அங்குலம்.

     எச்சம் இருபது கோல்.

     எச்சம் என்பது, நீர் பரப்பின் மேல் இருந்து, அணை மட்டம் வரை எஞ்சியுள்ள பகுதி.

     அணையின் எழிலை, திறத்தை மட்டுமல்ல, அணையின் அளவுகளையும், நம் முன்னோரின் பொறியியல் திறனையும், நுட்பத்தையும் பாட்டாய் எழுதி, பதிவு செய்து வைத்தனர் நம் முன்னோர்.

     பொறியியல்.

     தமிழனின் முற்கால வரலாற்றில் பொறியியல் தனியொரு கல்விப் பிரிவாகக் கற்பிக்கப்படவில்லை எனினும், பொறியியல் மரபு வழிப் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

     கோயில்களில் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்திருப்போம்.

     கோயில் சுவர்களில், அக்காலக் கல்வெட்டுச் செய்திகளை, விரல் கொண்டு தடவி களித்திருப்போம்.

     சில கோயில் சுவர்களில், ஒரு கோடு ஒன்றினைக் குடைந்து வரைந்திருப்பதைப் பார்த்திருப்போம்.

     ஒரே ஒரு கோடு.

     எதற்கு இந்தக் கோடு என நமக்குள்ளே, கேள்வி எழுப்பி, விடை தெரியாமல் தவித்திருப்போம்.

     உண்மையில், இந்தக் கோட்டில், தமிழர்களின் கட்டிடக் கலையும், பொறியியல் நுட்பமும் அடங்கி இருக்கிறது.

     இன்று வீடு கட்டுவதாக இருந்தாலும், பெரும் வணிக வளாகம் கட்டுவதாக இருந்தாலும், உயரத்தை, நீளத்தை, அகலத்தை அளக்க அளவுகள் இருக்கின்றன, அளவுக் கருவிகள் இருக்கின்றன.

     ஆனால் அன்று, கோயில்களில் இருக்கும் இந்தக் கோடுதான், அளவுகளுக்கு அடிப்படை.

     அகத்திக் குச்சு ஒன்றினை எடுத்து வந்து, இந்தக் கோட்டின் மேல் பதிய வைத்து, இக்கோட்டின் நீளத்திற்கு, அந்த அகத்திக் குச்சியை ஒடித்து வைத்துக் கொள்வார்கள்.

     வீடோ, மாளிகையோ, இந்த அகத்திக் குச்சியை ஆதாரமாக வைத்துதான், கட்டுமானப் பணியினையே தொடங்குவார்கள்.

     தஞ்சைப் பெரிய கோயிலில், நந்தி மண்டபத்தில், பீடத்திற்கு அருகில் கூட, இந்த அளவுக் கோடு செதுக்கப்பட்டு இருந்தது.

     ஆனால் நம் மக்களின் பொறுப்பின்மையால், இன்று இக்கோடு சிதைந்து போய்விட்டது.

    அளவுகள்.

     நம் முன்னோர், எண்களைக் கணக்கிடுவதிலும், கட்டுமானங்களுக்கு, இக்கணித எண்களைப் பயன்படுத்துவதிலும் திறமை பெற்றிருந்தனர்.

     மிகச் சிறிய எண் முதல், மிகப் பெரிய எண் வரை, தமிழர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

     ஒரு முழு எண்ணை 320 சம பங்குகளாக்கி, அதன் ஒரு கூறுக்கு முந்திரி எனப் பெயரிட்டனர்.

     முந்திரி என்பது 1/320/

     அரைக் காணி என்பது 2/320

     காணி என்பது 4/320

     மிகப்  பெரிய எண்ணை சங்கம் என்கிறது பரிபாடல்.

    தாமரை என்கிறது திருமுருகாற்றுப்படை.

     வெல்லம் என இனிக்க இனிக்கக் கூறுகிறது மதுரைக் காஞ்சி.

     மிகச் சிறிய எண், மிகப் பெரிய எண் மட்டுமல்ல, பூஜ்ஜியத்தை முதன் முதலில் பயன் படுத்தியவர்களும் தமிழர்கள்தான்.

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என

இரண்டு என, மூன்று என., நான்கு என, ஐந்து என.

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என

நால்வகை ஊழி நவிற்றும் சிறப்பினை

எனத் திருமாலைப் போற்றுகிறது பரிபாடல்.

     இங்கு பாழ் என்பது பூஜ்ஜியம்.

     பாகு என்பது அரை அளவைக் குறிக்கிறது.

விட்டமோர் ஏழு செய்து

திகைவர நான்கு சேர்த்து

சட்டென இரட்டி செயின்

திகைப்பன சுற்றுத்தானே

என விட்டத்தின் சுற்றளவைக் கண்டு பிடிக்கும் வழியை அன்றே பாடியது காக்கைப் பாடினியம்.

விட்டம் அதனை விரைவாய் இரட்டித்து

மட்டுநான் மாதவெனில் மாறியே – எட்டதனில்

ஏற்றியே செப்பியிடி லேறும் வட்டத்தளவும்

தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்.

என உரைக்கிறது கணக்கதிகார நூற்பா.

     இங்கு மா என்பது 1/20.

     நான்மா என்பது 4/20.

     இதனை இரட்டித்து 8/20

    இத்துடன் எட்டதனில் ஏற்றி 8 x (8/20) = 64/20

    என பை  [ π ]யின் தோராய மதிப்பை அன்றே கணித்தனர் நம் முன்னோர்.

எழுகோ லகலத் தெண்கோல் நீளத்

தொருகோல் உயரத் துறுப்பின் தாகி

உத்தரப் பலகையோ டரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோ லாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய

என மாதவி நடனமாடிய மேடையின் அழகை மட்டுமல்ல, மேடையின் அளவைக் கூடத் துல்லியமாய் எடுத்து இயம்புகிறது சிலப்பதிகாரம்.

     இலக்கியங்களில் கோயில்கள், அரண்மனைகள் பற்றி பலப்பல குறிப்புகள் இருந்த போதிலும், குடியிருப்புகள் பற்றியும், பிற கட்டுமானங்கள் பற்றியும் ஓரளவே குறிப்புகள் காணப்படுகின்றன.

     கட்டுமானப் பணியாளர்களைப் பழந்தமிழர்கள், கொத்தனார், கொத்தன், நூலறிப் புலவன் எனப் பலவாறு அழைத்துள்ளனர்.

     செங்கல், மணல், செம்மண், மரம், கல், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

     செங்கற்களால் கட்டப்பெற்ற பலி பீடங்கள் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன.

     இதனை இட்டிகை என அழைத்துள்ளனர்.

மணல் குவைஇ, மலர் சிதறி

பலர் புகு மனைப் பலிப் புதவின்

நறவு நொடைக் கொடியோடு

என்கிறது பட்டினப்பாலை.

     கோயில் கட்டுமானங்கள் கோயில், கோட்டம், அம்பலம் எனப் பலவாறு அழைக்கப்பட்டன.

     சுட்ட செங்கற்களால், உத்திரங்களைப் பயன்படுத்தி சங்ககாலக் கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன.

     குடியிருப்புகளைப் பொறுத்தவரை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு நிலத்திற்கும் பயன்படுத்தப்பட்ட, கட்டுமானப் பொருட்கள் பற்றியக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

     அவ்வப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டுமானங்களை அமைத்திருக்கிறார்கள்.

ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்

வரைத்தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு

கடுந் துடிதூங்கும் கணைக் கால் பந்தர்

தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்

     ஊகம் என்பது ஒரு வகை புல் ஆகும்.

     ஊகம்  புல், கணைய மரம் முதலியவற்றால் பாலையிலும் கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர்.

     இவைதவிர, பாதுகாப்பு கட்டுமானங்களைப் பற்றியும் குறிப்புகள், நம் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.

     அரண்மனையினைச் சுற்றி எழுப்பப்ட்ட அரண்களில் பல வகைகள் இருந்துள்ளன.

     மதில் அரண்.

     காட்டு அரண்.

     நீர் அரண்.

     மலை அரண்.

     நில அரண்.

     இவற்றுள் நில அரணும், மலை அரணும் பொறியியல் தொடர்புடையன ஆகும்.

     அகழ முடியாத அகலமும், அழிக்க முடியாத திண்மையும், பிறர் கொள்ளுதற்கு அரிய உயர்வும், அணுகுவதற்கு இயலா அருமையும் கொண்ட அரண்களாக இவை விளங்கியிருக்கின்றன.

     மதிலிலேயே பல வகைகள் இருந்துள்ளன.

     மதில் எனில் உயரம் மட்டுமே உடையது.

     எயில் எனில் உயரத்தோடு, அகலமும் சேர்ந்தது.

     இஞ்சி எனில் உயரம், அகலத்தோடு திண்மையும் இணைந்தது.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரன் என்றுரைக்கும் நூல்

 என்று உரைக்கிறது திருக்குறள்.

     அக்காலத்தில் மதில்களை வலிமையாக்க செம்பைக் காய்ச்சி, உருக்கி, ஊற்றி கோட்டைச் சுவர்களைக் கட்டியிருக்கிறார்கள்.

     இவையல்லாது, தமிழ் இலக்கியங்களில் பழந்தமிழர்களின் இரும்புத் தொழில் நுட்பம் பற்றிய பலப்பல செய்திகள் காணப்படுகின்றன.

     துருத்தி, உலை, வடித்தல், வார்த்தல் போன்றவற்றைப் பயன்படுத்தி போர் கருவிகளையும், வேளாண் கருவிகளையும் வடித்துள்ளனர்.

     பொன், இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக் கொல்லன், உலை, உலைக் கூடம், உலைக் கல், துருத்தி, விசை வாங்கி, விசைத்து வாங்கு துருத்தி, மிதியுலை, ஊது குருகு, குடம், குறடு, குறுக்கு போன்ற தொழில் நுட்பக் கலைச் சொற்கள் சங்க காலத்திலேயே வழக்கில் இருந்துள்ளன.

     இரும்பை உருக்கி, எஃகாக உருமாற்றும் தொழில் நுட்பத்தை, நற்றினைப் பாடல் ஒன்று பறைசாற்றுவதைப் பாருங்கள்.

இரும்பின் அன்க கருங்கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந்தாது உதிர.

     படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது அல்லவா.

     இதுமட்டுமல்ல,

குறிஞ்சிக்கு அருவி, சுணை

முல்லைக்குக் கூவல்

மருதத்திற்கு ஆறு, குளம்

நெய்தலுக்கு கேணி

என நீர் மேலாண்மைப் பற்றியப் புரிதலுடனும், ஏரி, குளங்களின் வடிவமைப்பில் தேர்ச்சியும், பாய் மரக் கப்பல், கட்டுமரம் எனப் பலப்பல கப்பல்களைப் பற்றிய நுணுக்கமான பொறியியல் அறிவும் உடையவர்களாக நம் முன்னோர் இருந்துள்ளனர்.

    


அண்மையில், 1996 ஆம் ஆண்டு, நாகப்பட்டினத்திற்கு அருகில், உலகிலேயே மிகப்  பெரிய, கல் நங்கூரம் கண்டெடுக்கப் பட்டிருப்பது, நம் முன்னோரின், நம் பழந்தமிழரின் பொறியியல் நுட்ப அறிவை  வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

---

கடந்த 9.1.2022 ஞாயிறன்று மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றத்தில்

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக

அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை

இணைப் பேராசிரியர்


முனைவர் இரா.இந்து அவர்களின்

இலக்கியத்தில் பொறியியல்

என்னும் தலைப்பிலானப்

பொழிவானது,

அரசு அறிவித்த முழு ஊரடங்கின் காரணமாக

அரங்கைப் புறந்தள்ளி

இணைய வானில் எழுந்து

காணொலியாய்

இல்லம் தேடி வந்தது.

 

அரசு அனுமதித்தால்

அரங்கம் – இல்லையேல்

இணையம்.

அரங்கமோ, இணையமோ

ஏடகப் பொழிவு தொடரும்,

ஞாயிறு முற்றம்

இணைய முற்றமாய் விரியும்

உலகத் தமிழர்களை

ஆரத் தழுவும் – என

முனைப்போடு முன்னின்று

தொண்டாற்றும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.