06 மார்ச் 2022

ஓய்வெடுங்கள் ஐயா

 

     முதன் முதலில் என்னை, ஏடெடுத்து எழுதச் சொன்னவர் இன்று இல்லை.

     எங்கோ ஒரு மூலையில், ஒரு மெட்ரிக் பள்ளியில், மிக மிகக் குறைந்த ஊதியத்தில் உழன்று கொண்டிருந்த எனக்கு, அரசு ஊதியத்தில், ஆசிரியர் பணி வழங்கி, என் வாழ்வை வளப்படுத்தியவர் இன்று இல்லை.

    

ஜெயக்குமார் என் மகன் மாதிரி, அவனுக்கு வேலை தரவேண்டியது என் பொறுப்பு, திருமணத்தை நடத்துங்கள், எனப் பெண் வீட்டாரிடம் கூறி, என் திருமண வாழ்விற்கு வழி வகுத்தவர் இன்று இல்லை.

     என் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில், எதிர்பாரா விபத்தினைச் சந்தித்து, அடிபட்டு விழுந்தபோது, செய்தி அறிந்து, சட்டை கூடப் போடாமல், வேட்டி, பணியனோடு, எனக்காகப் பதறி, சாலையில், தன்னையும் மறந்து ஓடிவந்து, அரவணைத்துக் காத்தவர் இன்று இல்லை.

     மிகக் குறைந்த நாட்களில் திருமண ஏற்பாடு.

     திருமண மண்டபமோ கிடைக்கவில்லை.

     மண்டபம் எதற்கு? நம் வளாகத்திலேயே நடத்துவோம் எனக் கூறி, தமிழ்ப் பெருமன்றத்திலேயே என் திருமணத்தை நடத்தி வைத்தவர் இன்று இல்லை.

     என் சங்கச் செயல்பாடுகளால் மகிழ்ந்து, ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை, தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தவர் இன்று இல்லை.

     சில மாதங்களுக்கு முன், நோயின் பிடியில் சிக்குண்டு, வீட்டில் படுத்திருந்தபோது, என்னைப் பார்த்து, ஓய்வு பெற்றவுடன் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்துவிடாதே, சங்கத்திற்கு வா, சங்கப் பணிகளையும் பார் என்று சொன்னவர் இன்று இல்லை.

     எனக்கு வாழ்வளித்தத் தங்களையும், சங்கத்தையும் எப்படி ஐயா மறப்பேன்.

     சங்கத்தை விட்டால், எனக்கு வேறு என்ன தெரியும்?

அதுவும், என் பள்ளித் தோழர், கல்லூரித் தோழர், இன்றும் தோழர் என, கடந்த நாற்பத்து எட்டு வருடங்களாக, என் மேல் அன்பைப் பொழியும், தங்களின் அன்பு மகனார்,

திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராய் அமர்ந்து, சீரிய பணியாற்றிவரும் பொழுது, அவருக்கு உதவியாய், சங்கத் தொண்டனாய் இருப்பதைவிட, வேறு என்ன வேலை? எனக்கு இருக்கிறது.

     1969 முதல் 1982 வரை செயல் இழந்து, தமிழக அரசால், முடக்கப்படுவதாக அறிவிக்கப் பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தலைவராய் 1983 ஆம் ஆண்டு பொறுப்பேற்று, சங்கத்தை மீட்டெடுத்த, தங்களின் அயரா உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா.

     தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், 1938 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரியானது, அவர் தொடங்கிய பி.லிட்., படிப்போடு மட்டுமே, தொடர்ந்து இயங்கி வந்த நிலையினை மாற்றி, எம்.ஏ., எம்.ஃபில்.,  பிஎச்.டி., என தமிழ் வகுப்புகளைப் புகுத்தி, மேலும் பல்வேறு துறைகளையும், புத்தம் புதிதாய் நுழைத்து, தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி என்ற புதுப் பெயரும், புதுப் பொலியும் கொடுக்க, தாங்கள் ஆற்றிய அயராப் பணிகளுக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.

     இது மட்டுமா,

தி.ச.பழனிச்சாமி பிள்ளை தொழிற் பயிற்சி மையம்,

உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரி

எனப் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தை, ஒரு கல்வி வளாகமாக உயர்த்தியவர் தாங்கள் அல்லவா.

     சங்க வளாகம் எங்கும், புதுப் புது கட்டடங்கள் எழுந்தது தங்களால் அல்லவா.

     தமிழ் மொழியைச் செம்மொழியாக்க, ஒரு கோடிக் கையெழுத்து இயக்கம், பன்னிரு திருமுறை பாதுகாப்பு மாநாடு, கரந்தைத் தமிழ்ச் சங்க நூற்றாண்டு விழா, தமிழறிஞர்களுக்கு நூற்றாண்டு விழாக்கள், விருது வழங்கு விழாக்கள் என எண்ணற்ற தமிழ் விழாக்களால், சங்க வளாகத்தையே மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தவர் தாங்கள் அல்லவா.

     இதனால் அல்லவா, செயல் மாமணி, கரந்தைத் தமிழ்ச் செம்மல், ஔவை விருது, சிறந்த மாமனிதர், செம்மொழி வேளிர், செம்மொழிச்  செம்மல், செம்மொழிப் புரவலர், ராஜ கலைஞன் விருது எனப் பலப்பல விருதுகள் தங்களை நாடி வந்து பெருமையடைந்தன.

     82 ஆண்டுகளில் எண்ணூறு ஆண்டுகாலப் பணியினைச் செய்தவர் தாங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

மேனாள் செயலாளர்,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

இந்நாள் தலைவர்

கரந்தைத் தமிழ்ச் செம்மல், செம்மொழி வேளிர்


திரு ச.இராமநாதன் அவர்கள்.
( 24.10.1940 - 5.3.2022 )

ஓய்வெடுங்கள் ஐயா.

வீர வணக்கம்.