16 ஜூன் 2022

கோளி

 


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய் பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்னும் தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே, இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.

நிலங்களை நான்காய் பிரித்த தொல்காப்பியர், ஒட்டுமொத்த தாவர வகைகளையும், இரண்டே இரண்டாய் பிரித்தார்.

     புறக்கால்.

     அகக்கால்.

புறக்கால் என்பது புல் என மொழிப

அகக்கால் என்பது மரம் என மொழிப என்றார்.

     புல் இனமானது மரத்தின் தோற்றத்தில் இருக்கும். ஆனால் உள்ளீடு இருக்காது. திண்மை இருக்காது. மரத்தின் தன்மை இருக்காது.

     புல், நெல், கோரை, மூங்கில், பப்பாளி, முருங்கை போன்றவை எல்லாம் புறக்கால் தாவரங்கள் ஆகும்.

     அகக்கால் என்பது உள்ளீடு உடையது. திண்மை உடையது. வலிமை உடையது.

     புறக்கால் தாவரங்கள் அனைத்தும் சல்லி வேர்களை உடையது.

     ஆனால், அகக்கால் தாவரங்களோ, ஆணி வேர்களை உடையன.

     மேலும், தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதனையும், அன்றே நம் முன்னோர் அறிந்திருந்தனர்.

     அதுமட்டுமல்ல, உயிர் என்பதற்கு ஒரு வரையரையினையும் நம் முன்னோர் வகுத்து வைத்திருந்தனர்.

     உணவு, நீர், இளமை,  முதுமை, இனப்பெருக்கம்.

     இதுவே, நம் முன்னோரின் உயிர் வரையறை.

     தொடர் பயிர் சாகுபடி முறை.

     ஊடு பயிர் சாகுபடி முறை.

     கலப்பு பயிர் சாகுபடி முறை

     மறுதாம்பு பயிர்சாகுபடி முறை

எனப் பலப்பல சாகுபடி முறைகளை, சங்க இலக்கியங்கள் விரிவாய் எடுத்துரைக்கின்றன.

     அறுவடை செய்யப்பெற்ற பயிர்களின் அடிக்கட்டைகளை, மீண்டும் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்துதல் மறுதாம்பு எனப்படும்.

     மதுரைக் காஞ்சியில் கலப்புப் பயிர் சாகுபடி பற்றியச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

     இரு விதைகளைக் கலந்தால், கலப்புச் சாகுபடி.

     இரு பயிர்களை ஒரே நேரத்தில் விதைத்தால், பாதிப்பு வராதா?

     ஒரு பயிரின் வளர்ச்சியை, அடுத்த பயிர் தடுக்காதா? குறைக்காதா? எனப் பல கேள்விகள் எழலாம்.

     ஆனால் குறைக்காது, தடுக்காது என்பதே, நம் முன்னோர் கண்டுபிடித்த உண்மையாகும்.

     வேறுபட்ட வளர்ச்சிக் காலங்களை உடைய இரு பயிர்களை, ஒரே நேரத்தில் பயிரிடுவார்கள்.

     ஒரு பயிர் 130 நாள்கள்.

     மற்றொரு பயிர் 80 நாள்கள்.

     ஒரு பயிரின் வேர், அரை அல்லது முக்கால் அடிக்கும் கீழே, செல்லவே செல்லாது.

     மற்றொரு பயிரின் வேரோ, ஒரு அடி அல்லது ஒன்றரை அடிவரை செல்லும்.

     எனவே சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்வதில் போட்டி இருக்காது.

     ஒரு பயிர் இன்னொரு பயிரை பாதிக்காது.

     இதுதான் கலப்புப் பயிர்.

     ஊடு பயிர் சாகுபடியில் அதிகம் பேசப்படுவது மிளகே ஆகும்.

     மாமரத்தோடு, மிளகினையும் சேர்த்தே விதைப்பார்கள்.

     மிளகு மாமரத்தின் மீதே தவழ்ந்து படரும்.

     நெல்லுக்குப் பிறகு, தமிழர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது கரும்பிற்குத்தான்.

     அன்று இனிப்புச் சுவையை கொடுத்தவை தேனும், பழங்களும் மட்டும்தான்.

     எனவே, கரும்பின் வரவு தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

     சொல்லப்போனால், தமிழர்கள் கண்டுபிடித்த, பயன்பாட்டில் வைத்திருந்த முதல் இயந்திரமே, கரும்பு அரவை இயந்திரம்தான்.

கரும்பமல் படப்பைப் பெரும் பெயர் கள்ளூர் என்கிறது அகநானூறு.

     கரும்பின் சாற்றினை எடுக்கும்போது, இயந்திரத்தில் இருந்து வெளிப்படும் ஒலியானது, யானையின் பிளிரலோடு ஒத்திருந்தது என்பதை,

கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்

என்று பாடுகிறார் ஓரம்போகியார்.

அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும்

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

நீர்அக இருக்கை ஆழி

எனப் புறநானூற்றில் பாடுகிறார் ஔவையார்.

     கரும்புப் பாகின் பதம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, கரும்பை அதிகாலை வேளையில் காய்ச்சுவது பற்றியும், அப்பொழுது எழும் புகையினைப் பற்றியும் பதிற்றுப் பத்து அழகாய் எடுத்து இயம்புகிறது.

     பல்வேறு சாகுபடி முறைகளை அறிந்து, தெளிந்து பயன்படுத்தி வந்த, நம் முன்னோர், சாகுபடிக்கு அடிப்படையாய் விளங்கும், விதைகளை ஒருபோதும் விற்றதும் இல்லை, காசு கொடுத்து வாங்கியதும் இல்லை.

     விதைகள் விற்பனைக்கு அல்ல.

     அல்லவே, அல்ல.

     எனவேதான்,

வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக இனிதே

வித்தை, அதாவது விதையை குற்றி உண்ணாத இயல்பு மிக இனியதாகும் என்கிறது, இனியவை நாற்பது.

     விதையை சேமித்து வைத்த நம் முன்னோர், விதைத்தலுக்கு முன், விதையின் தன்மையை பரிசோதிக்க, விதையின் முளைப்புத் திறனை அறிய, கடைபிடித்த முறைதான் முலைப்பாரி.

விதை பாதி, வேலை பாதி

என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த நம் முன்னோர், கலயத்தில், மண் இட்டு, நீர் தெளித்து, விதையினைப் போடுவார்கள்.

     அடுத்த நாளே, விதை முளைத்து எழும்.

     இதுவே முலைப்பாரி.

     இவ்வாறாக விதையின் முளைப்புத் திறனை அறிந்தே, விதை தெளித்து சாகுபடி தொடங்குவார்கள்.

     விதையின் முளைப்புத் திறனை மட்டுமல்ல, மண்ணின் வளத்தையும் அறிந்த பிறகே. காடு அழித்து, பயிர் செய்யத் தொடங்குவார்கள்.

     ஒரு காட்டை அழித்து, மரங்களை வேரோடு சாய்த்து, பல வருடங்கள் உழுது, உழுது, மண்ணை, விளைச்சலுக்குத் தயார் செய்த பிறகு, அந்நிலம், விளைச்சலுக்குத் தகுதியற்ற நிலம், உவர் நிலம், களர் நிலம் என்பது தெரிய வருமானால், பல வருட உழைபபு வீணாகி விடும் அல்லவா?

     எனவே மண்ணின் தன்மையை சோதித்து அறிந்த பிறகே, மண்ணைத் தயார் படுத்தும்  பணியினைத் தொடங்கி இருக்கிறார்கள்.

மெல் என்ற நீரான் அறிப மடுவினை

என்று உரைக்கிறது நான்மணிக் கடிகை.

     மழை பெய்யும் பொழுது, வானில் இருந்து இறங்கும் நீர், அனைத்துமே நல்ல நீர்தான், தூய நீர்தான்.

     ஆனால், விழும் இடத்தைப் பொறுத்து, நீரின் தன்மை மாறுகிறது.

     உவர் மண் எனில், உப்பு நீராக மாறும்.

     எனவே ஊற்று தோண்டி, நீரின் சுவை கண்டு, நிலத்தின் தன்மையை அறிந்த பிறகே, பணியினைத் தொடங்கியிருக்கிறார்கள்.

     இதுமட்டுமல்ல, உவர் மண் எனில், அது நீரை உள்வாங்காது, வெப்பத்தைக் கடத்தாது, எனவே என்ன விதை போட்டாலும், அவ்விதை வெந்து அழுகிவிடும் என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.

     இருப்பினும் புளிய மரம், ஈச்ச மரம் போன்ற மரங்கள் களர் மண்ணில் வளரும் என்பதையும் அறிந்து வளர்த்திருக்கிறார்கள்.

     உவர் நிலத்தில் விளையக்கூடிய உவர் நெல் என்று ஒரு நெல் விதையே இருந்திருக்கிறது.

     ஆனால் எந்த இலக்கியத்திலும், இந்தப் பயிரை இந்த நோய் தாக்கியது, இந்தப் பயிரை இந்தப் புழு சீரழித்தது, விவசாயிகள் மனமொடிந்து போனார்கள் என்பது போன்ற செய்திகள் இல்லவே இல்லை.

     காரணம், நல்ல மண், நல்ல நீர்.

     மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.

     அன்றைய மக்கள் இயற்கைக்கு ஏற்றவாறு, தங்களை மாற்றிக் கொண்டார்களே தவிர, நம்மைப் போல், தங்களுக்கு ஏற்றவாறு இயற்கையை வளைக்க வில்லை.

     நம் முன்னோர் பூச்சுக் கொல்லியைப் பயன்படுத்தியதே இல்லை.

     தேவைப்படும் பொழுது பூச்சி விரட்டியைத்தான் பயன்படுத்தினார்கள்.

     விலங்குகளிடம் இருந்து பயிரைக் காக்க, பறை இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.

     நம் முன்னோர் உற்று நோக்கலில், வல்லவராய் இருந்திருக்கின்றனர்.

     பூவாது காய்க்கும் மரமும் உள என்று உரைக்கிறது சிறுபஞ்சமூலம்.

     பூவாது காய்க்கின்ற மரங்கள் இருந்ததை, உற்று நோக்கலால் அறிந்திருக்கின்றனர்.

     இம்மரங்களுக்கு கோளி என்று பொதுப் பெயர் இட்டு அழைத்து இருக்கின்றனர்.

     விதையில்லா கனிகளையும் உணர்ந்திருக்கின்றனர்.

     எள்ளுக்கு அதிகம் நீர் பாய்ச்சினால் பொக்கு விழும் என்பதனையும், கரும்பிற்கு அதிகம் நீர் பாய்ச்சி பூத்து விட்டது எனில், அக்கரும்பில் சத்து இருக்காது, சுவையும் இருக்காது என்பதை அறிந்து பதிவு செய்திருக்கின்றனர்.

     வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது வேளாண்மை என்பர்.

     வேள் என்பதன் பொருள் கொடை, ஈகை ஆகும்.

     நிலமானது தரும், கொடையே வேளாண்மை.

     வேளாண்மை எனில் விருப்பத்துடன், பிறரைப் பேணுதல் என்று பொருள் கூறுவாரும் உளர்.

     இதனால்தான் மகாகவி பாரதி பாடுவார்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

    உழவும், தொழிலும் எனத் தனித் தனியாகப் பிரித்துப் பாடுவார்.

    உழவைத் தொழிலோடு சேர்க்கவில்லை.

    உழவு தொழில் அல்ல.

    லாப, நட்டக் கணக்குப் பார்க்கக் கூடிய வணிகம் அல்ல.

     மக்களின் வாழ்வோடு இணைந்த ஒர் அங்கம்.

     வேளாண்மை போற்றுவோம்.

---

கடந்த 12.6.2022 ஞாயிறு மாலை,

ஏடகம்

ஞாயிறு முற்றம்

பொழிவு.

திருச்சி,

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய,

சமூக அறிவியல் துறை, தமிழ்ப் பேராசிரியர்

முனைவர் ம.மணிமேகலை அவர்கள்,


இலக்கியத்தில் வேளாண்மை

என்னும் பொருளில் ஆற்றிய உரை, வயல் வெளிகளில் இறங்க நடக்க வேண்டும், வயற் காற்றை சுவாசித்து மகிழ வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியது.

ஏடகம் அமைப்பின் பொருளாளர்


திருமதி கோ.ஜெயலெட்சுமி அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் த.அமுதஜோதி அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் க.வெண்ணிலா அவர்கள்

நன்றி கூற


விழா இனிது நிறைவுற்றது.

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி ச.பிரியதர்சி அவர்கள்

விழா நிகழ்வுகளை

அழகுத் தமிழில்

சொல்லோவியமாய்

தொகுத்து வழங்கினார்.

 

இலக்கியங்களின்

இனிய வரிகளுள்

பொதிந்திருந்த

வேளாண் செய்திகளை

ஏடகத்திற்குக் கொண்டுவந்து

வித்தாய் தூவி

இதயங்களை ஈரப்படுத்திய

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.