20 மே 2012

நாகத்தி





       தமிழகப் பள்ளிக் கூடங்கள் கோடை வெயிலில் சற்று இளைப்பாறுகின்ற தருணம் இது. மாணவர்கள், கோடை விடுமுறையினைப் பயனுள்ள வகையில் செலவிட, வெளியூர்களில் வசிக்கும் தங்களது உறவினர்களின் இல்லங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிக்கும் இன்பம் மிகு காலம் இது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம வகுப்பு மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளையும், பெறப்போகும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளவும், எதிர்கால இலட்சியங்களைத் திட்டமிடவும், இலட்சியங்களை நடைமுறைப் படுத்தவும், ஆவலுடனும், ஒருவிதப் பதட்டத்துடனும் காத்திருக்கும் திக், திக் நேரமிது.
     உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியர்களான எங்களுக்கோ, அடுத்தக் கல்வியாண்டிற்கானப் பணிகளைத் திட்டமிட வேண்டிய காலமே இக்கோடை காலம்தான். மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகப் படுத்துவது என்றும். சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று, கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளிக்குச் செல்லாத மாணவர்களையும், பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தோம்.
     கடந்த இருபது நாட்களாக, ஆசிரியர்கள் பத்து அல்லது பதினைந்து பேர் ஒன்றிணைந்து, நாளொன்றுக்கு ஒரு கிராமம் என, தஞ்சையின் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று வருகின்றோம். ஒவ்வொரு கிராமத்திலும், தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து, படிக்கின்ற மாணவர்கள் யார், யார், படிப்பினைப் பாதியில் விட்ட மாணவர்கள் யார் யார் என விசாரித்துக் கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துப் படித்திட ஊக்கப் படுத்தி வருகின்றோம்.
     கடந்த 18.5.2012 வெள்ளிக் கிழமை காலை 6.30  மணிக்குப் புறப்பட்டு, பள்ளியக்கிரகாரம், காந்தி நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் போன்ற பகுதிகளுக்குச் சென்று பெற்றோர்களையும், மாணவர்களையும் சந்தித்தோம்.  இப்பகுதியில் அன்றைய பணி நினைவுற்றவுடன், பள்ளியக்கிரகாரம் செல்வம் தேநீர் விடுதியில், நண்பர் பள்ளியக்கிரகாரம் அரசு அவர்களுடன் இணைந்து தேநீர் அருந்தியவாரே, அடுத்த நாள் செல்ல வேண்டிய கிராமம் குறித்துப் பேசினோம்.
    உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்கள், நாளைக்கு நாகத்திக்குச் செல்வோம் என்றார். நாகத்தி என்ற பெயரினைக் கேட்டவுடன் என்னையுமறியாமல், என்னுடலில் ஓர் சிலிர்ப்பு.
   நாகத்தி. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் குல தெய்வமான அய்யனார் அருள் பாலிக்கும் புண்ணிய பூமி. இலங்கைக்கு அனுமன் கட்டிய பாலத்தைப் பற்றிப் படித்திருக்கின்றோம், பார்த்ததில்லை. ஆனால் நாகத்தி சென்றால தமிழவேள் கட்டிய பாலத்தைப் பார்க்கலாமே என மனம் பரபரக்கத் தொடங்கியது.
     19.5.2012 சனிக் கிழமை காலை 6.30 மணியளவில், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து  ஒரு குழுவாய்ப் புறப்பட்டோம். திருவாளர்கள் அ.சதாசிவம்,  வெ.சரவணன், மு.பத்மநாபன், த.இளங்கோவன், கோ.விஜயக்குமார், க.ஹரிசங்கர் பாபு, டி.பாபு, மு,சுகுமாறன், எஸ்.செந்தில்குமார், எம்.மணியரசு, ஆர்.கோபாலகிருட்டினன் முதலான பன்னிரெண்டு பேருடன் நானும் இணைந்து பதிமூன்று பேர் அடங்கிய குழுவாக நாகத்தி நோக்கிப் புறப்பட்டோம்.
     கரந்தையிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சென்று, அம்மன் பேட்டை அருள்நெறி உயர்நிலைப் பள்ளியினைக் கடந்தவுடன், இடது புறம் திரும்பி, வெட்டாற்றின் வட கரையில் பயணித்தோம். சுமார் ஐந்து கி.மீ கடந்ததும், இடது புறமாகத் திரும்பினோம். இதோ நாகத்தி பாலம்.

     நாகத்திப் பாலத்தினைக் கண்டவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கிப் பறக்கத் தொடங்கின. உமாமகேசுரனார் பற்றி ஏட்டில் படித்த எழுத்துக்கள், ஒவ்வொன்றும் உயிர்பெற்று கண்முன்னே வலம் வரத் தொடங்கின. தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், பொதுவாக கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் என்ற நிலையிலேயே, இன்றைய மக்களால் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் உமாமகேசுவரனார் அவர்கள் சங்கத் தலைவராக மட்டுமல்ல, தஞ்சாவூர் தாலுக்கா போர்டு தலைவராகவும் பன்னிரெண்டாண்டுகள் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர்.
       உமாமகேசுவரனார் காலத்திலேதான் திருவையாற்று ஏழூர் திருவிழா ஏற்றம் கண்டது. தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 40 இல் இருந்து 170 ஆக உயர்ந்தது.
     தஞ்சை வட்டத்தில் இரண்டு தீவுச் சிற்றூர்கள் உண்டு. ஒன்று நாகத்தி, மற்றொன்று தொண்டரையன் பாடி. இவை நாற்புறமும் ஆறுகள் சூழ, ஆறுகளின் இடையினில் தீவாக அமைந்த ஊர்களாகும். நாகத் தீவு என்பதே பின்னாளில் நாகத்தி என்று மருவிற்று. இவ்வூர்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, ஊரின் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றாலும், கோடைக் காலங்களில் பொசுக்கும் ஆற்று மணலில் நடக்க வேண்டும்,ஆற்றில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில் நீந்தித் தான் கடக்க வேண்டும். உமாமகேசுவரனாரின் குல தெய்வமும் இவ்வூரில் இருப்பதால், சிறு வயது முதலே, இப்பகுதி மக்களின் நிலையினை நன்கு உணர்ந்தேயிருந்தார்.
    எனவே, வட்டக் கழகத் தலைவராய் பொறுப்பேற்றவுடன், நாகத்தி மற்றும் தொண்டரையன் பாடி என்ற இவ்விரண்டு ஊர்களுக்கும் தனித் தனியே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். நாகத்திப் பாலமானது உமாமகேசுவரனார் காலத்திலேயே கட்டி முடிக்கப் பெற்றுவிட்டது. தொண்டரையன் பாடி பாலம், உமாமகேசுவரனார் காலத்தில் தொடங்கப் பட்டு, பின்னர் மாவட்டக் கழகத்தால் கட்டி முடிக்கப் பட்டது.
பாலத்தில் பழைய படம்
     நாகத்திப் பாலத்தைக் கண்டவுடன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி அனைவரும் கிழே இறங்குகிறோம். பலவாறு சுழன்ற நினைவலைகளிலிருந்து மீண்டு, நிகழ் காலத்திற்கு வந்து பாலத்தைப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு சிறு நினைவு. சுமார் பதினேழு வருடங்களுக்கு முன் இப்பாலத்திற்கு வந்திருக்கிறேன். உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நூலாகத் தொகுத்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலம் அது.ஆசிரியர்கள் திரு சிவ.திருஞானசம்பந்தம், திரு ஆ.இராமகிருட்டினன், திரு துரை.பன்னீர்செல்வம் அகியோருடன் இப்பாலத்திற்கு வந்துள்ளேன். பூதலுர் பகுதி முழுக்க தொண்டரையன் பாடி பாலத்தைத் தேடி அலைந்திருக்கிறோம். ஆனால் அப்பாலத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.அங்கிருந்த பல ஊர்களைச் சார்ந்த பெரியவர்களுக்கும் தெரியவில்லை.மறதி என்னும் கொடிய நோயின் தாக்கத்தினால், கால ஓட்டத்தில் அப்பாலம் கரைந்தே போய்விட்டது.
    இதோ, நாகத்திப் பாலத்தின் கரையில் நிற்கின்றோம். என்னுடன் பயணித்த ஆசிரியர்கள் பலரும், உமாமகேசுவரனார் கட்டிய பாலம் இது என்பதை அறிந்தவுடன்,வியப்பு மேலிட பாலத்தைப் பார்க்கின்றார்கள்.தயங்கித் தயங்கிப் பாலத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். இது வெறும் பாலமாகப் படவில்லை. வரலாற்றின் பக்கங்களில் கரையான் அரித்துவிடாமல், எஞ்சி நிற்கும்,ஓர் உன்னத வரலாற்றின் நினைவுச் சின்னமாக, கோவிலின் கருவறை போல, புனிதத்துவம் வாய்ந்த தலமாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. பாலத்தின் இருபுறமும், இரும்புப் பட்டையால் ஆன, வீட்டுச் சன்னலைப் போன்ற கைப்பிடிச் சுவர்கள். கைப் பிடிச் சுவற்றைப் பற்றி நிற்கின்றோம்.. உமாமகேசுவரனாரும், இந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பாரல்லவா? எத்துனை முறை,இப்பாலத்தில் குறுக்கும் நெடுக்குமாக மகிழ்வுடன் நடந்திருப்பார். நாங்களும் பாலத்தில் நடக்கிறோம். உமாமகேசுவரனார் எங்களின் தோள்களில் கைபோட்டு, பாலத்தில் எங்களுடன் நடப்பதைப் போன்ற ஓர் உணர்வு, உடல் சிலிர்க்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. அமைதியாய் நடக்கின்றோம்.
     சிறிது நேரத்த்தை பாலத்தில் செலவிட்டபின் அனைவரும் வண்டிகளிலேறி புறப்பட்டோம். இப்பாலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் நாகத்தி கிராமம் உள்ளது.
     உமாமகேசுவரனாரின் குல தெய்வமான அய்யனரைத் தரிசிக்க மனம் பரபரக்கவே, நாகத்தி கிராமத்தைக் கடந்து, ஒரு கி.மீ. வயல்வெளிகளுக்கிடையில் பயணித்து அய்யனார் கோவிலை அடைந்தோம். நாற்புறமும் வயல் வெளிகள் மற்றும் ஒன்றிரண்டு மரங்களைத் தவிர வேறொன்றுமில்லாத வெற்றிடத்தில், அய்யனார் கோவில் கம்பீரமாகக் காட்சியளித்தது. கோவிலுக்குள் சென்று ஆசிரியர்கள் அனைவரும் அய்யனாரை வணங்கினோம்.
     உமாமகேசுவரனார் எத்தனை முறை இக்கோவிலுக்கு வந்திருப்பார் என நினைத்துப் பார்க்கின்றேன். உடனே உமாமகேசுவரனார் அய்யனாரிடத்து என்ன வேண்டியிருப்பார் என்ற கேள்வி, முன் வந்து நின்றது. ஒன்று மட்டும் நிச்சயம், உமாமகேசுவரனார் தனக்காக, தனது குடும்பத்திற்காக எதையுமே இறைவனிடம் யாசித்திருக்க மாட்டார் என்ற உணர்வு உறுதியாக எழுந்தது.
     ஆம். தமிழ் வாழ வேண்டும், தமிழர்தம் வாழ்வு உயர வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, வேறு சிந்தனையே இல்லாதவரல்லவா உமாமகேசுவரனார். தமிழ்ர்தம் வாழ்வு மலரவே மனமுருகி வேண்டியிருப்பார்.
     உமாமகேசுரனார் வணங்கிய அய்யனாரை நாங்களும் வணங்குகிறோம். உமாமகேசுவரனாரின் திருப்பெயர் தாங்கி நிற்கும் பள்ளியில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எங்களது பிறவிப் பயனாகும். உமாமகேசுவரனார் மேனிலைப் பள்ளி வளர்ந்து செழிக்க வேண்டும், பள்ளியின் புகழ் திக்கெட்டும் பரவ வேண்டும். இராமனுக்கு உதவிய அணில் போல, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும், ஒரு சிறிதேனும் நாங்களும் காரணமாக விளங்க வேண்டும்.அய்யனாரே அருள் புரிவாயாக என வணங்கி விடைபெற்றோம்.

உமாமகேசுவரனாரும், அய்யனாரும் அருள் புரிவார்களாக
    

01 மே 2012

நட்பின் முகவரி ...



செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
130 வது பிறந்த நாள்
(7.5.2012)

  வான விரிவைக் காணும்போ  தெல்லாம் .- உமா
  மகேக்சுரன்  புகழேஎன் நினைவில் வரும்

  ஆன  தமிழ்க் கல்லூரி  நிறுவினோன் மக்கள்
  அன்பினோன், அறத்தினோன்  ஆன்ற அறிவினோன்

  பெற்ற அன்னையை  அன்னாய் என்றுவாய்
  பெருக அழைக்கவும்  நேரமே யில்லை
  உற்றார்  உறவினர்க்  காக  உழைக்க
  ஒருநாள்  ஒருநொடி  இருந்ததே  இல்லை
  கற்றவர்  தமிழர்  என்னுமோர்  உயர்நிலை
  காண வேண்டி  இல்லந்  துறந்து
  முற்றுங்  காலத்தைத்  தமிழ்த் தொண்டாக்கினோன்
  வாழ்க  தமிழ் முனிவன் திருப்பெயர்

                             

மனைவியுடன் உமாமகேசுவரனார் 
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதை வரிகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழர்தம் முன்னேற்றத்திற்காகவும் ஆற்றியுள்ள பணிகளை அனவருக்கும் எளிதில் உணர்த்தும் வல்லமை வாய்ந்தவை.

     அன்றைய நாளில் தமிழும், சமஸ்கிருதமும் கலந்த பேச்சு நடையே வழக்கில் இருந்தது. தூய தமிழில் பேசுதல் இழிவாகக் கருதப்பெற்ற அக்காலத்தில், தூய தமிழ் நடையாம் கரந்தை நடையை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

மன்னார்குடி கௌமார குருகுல முதியோர் கல்வி இயக்க இரண்டாம் ஆண்டு விழா.முதல் வரிசையில் நாற்காலியில் வலப்புறம் இறுதியாக அமர்ந்திருப்பவர் உமாமகேசுவரனார்.முதல் வரிசையில்  நடுவில் ஊன்று கோலுடன் அமர்ந்திருப்பர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் (அநேகமாக தலைப் பாகை அணியாத உ.வே.சா அவர்களின் புகைப் படம் இது ஒன்றாகத் தான் இருக்கும்) 
     இன்று திரு, திருமதி, செல்வன், செல்வி, திருமண அழைப்பிதழ் என்னும் பல தூய தமிழ் வார்த்தைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். அன்றைய நாளில் வழங்கிய ஸ்ரீமான், ஸ்ரீமாட்டி, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை போன்ற சொற்களுக்குப் பதிலாக திரு, திருமதி, செல்வன், செல்வி, திருமண அழைப்பிதழ் முதலிய தூய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 28 ஆம் அண்டு விழாவின் போது எடுக்கப் பட்ட படம். படத்திலிருப்போர் (இடமிருந்து வலமாக) 1. ஔவை துரைசாமி பிள்ளை 2.ச.சு.கோவிந்தபிள்ளை  3. டாக்டர் மா.இராசமாணிக்கனார்  4. தமிழவேள்  5. சு.நடேச பிள்ளை 6.பண்டித மணி மு.கதிரேசச் செட்டியார்  7. விபுலாநந்த அடிகளார்  8. நாலவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார 9. கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை
     நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

       வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழவேள் அவர்களின் பெயர் தாங்கி நிற்கும் அன்றைய வட்டக் கழக அலுவலகம். இன்றைய சுகாதாரத் துறை அலுவலகம்,(காந்திஜி சாலை,  எல்.ஐ.சி. கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடம்)
     தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இவையெல்லாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சிலவேயாகும்.

        7.5.2012 ஆகிய இந்நாள், மூச்செல்லாம் தமிழ் மூச்சு, பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு, பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி என வாழ்ந்து காட்டிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின்  அவர்களின் 130 வது பிறந்த நாள் ஆகும்.

இந்நன் நாளில்
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


--------------------------------------------



செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
60 வது நினைவு நாள்
(9.5.2012)

     கவி இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனத்தைக் கண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையும், அந்நிகேதனம் போல் விளங்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் ,1941 ஆம் ஆண்டு வடபுலப் பயணம் மேற்கொண்டார்.  வடபுலப் பயணத்தை நிறைவு செய்து, தமிழகம் திரும்பும் வழியில், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

       உமாமகேசுவரனாருடன் உடன் சென்றிருந்த அன்பர் திரு அ.கணபதியா பிள்ளை அவர்கள், அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் ஊரிலுள்ள குறசி மருத்துவமனையில் உமாமகேசுவரனாரை சேர்த்தார் உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்தார்.

     மிகவும் கலங்கிய மனதுடன் இருந்த கணபதியா பிள்ளை அவர்களை தேற்றிக் கொண்டும் மேலும் செல்ல வேண்டிய ஊர்களைப் பற்றியும், கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றடைந்தபின் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்த தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் மே திங்கள் 9 ஆம் நாள் மாலை 3.50  மணிக்கு இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

     உடனிருந்த கணபதியா பிள்ளை பதறினார். புரண்டார். அழுதார். அரற்றினார்.  ஆயினும் என்ன? மாண்டவர் மீள எழுந்து வரப் போவதில்லை அல்லவா?. தமிழவேளின் திருமேனியை சரயு நதிக் கரையில் தீயிடையிட்டு, தம் தலைவருக்கு தம் கைகளாலேயே இறுதிக் கடனாற்றினார்.

தமிழவேள் உமாமசேசுவரனார்
நம்மை விட்டுப் பிரிந்து 60ஆண்டுகள் ஆகின்றன.
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.

             தாயாகி உண்பித்தான், தந்தையாய்
             அறிவளித்தான், சான்றோ  னாகி
             ஆயாத  நூல்பலவும் ஆய்வித்தான்
             அவ்வப்போ  தயர்ந்த  காலை
             ஓயாமல்  நலமுரைத்து  ஊக்குவித்தான்
             இனியாரை  உறுவோம்  அந்தோ
             தேயாத  புகழான்தன்  செயல்  நினைந்து
             உளம்  தேய்ந்து  சிதைகின்றே  மால்
-          ஔவை துரைசாமி பிள்ளை

--------------------


                                   பெற்றோர்
             இழந்தான் இல்லத்
             துணையாள் இழந்தான் உடன்
             பிறந்த தமையன்
             சங்கம் நிறுவிய துங்கன்தனை
             இழந்தான் அருமை
             மகன் பஞ்சாபகேசன்தனை
             இழந்தான்.


             துன்பங்கள்
             தொடர்ந்து வரினும்
             துயரங்களைச்
             சுமந்து வரினும் உள்ளம்
             தளராதிருந்தான் என்றும்
             தமிழ் நினைவோடிருந்தான்
             எங்கள்
             முண்டாசு முனிவன்
             உமாமகேசன்.
                            - கரந்தை ஜெயக்குமார்
 -----------------------------------------------------.


நட்பின் முகவரி ...




            இன்னிசைத்தேர்  யாழ்நூ  லிசைபரப்பி  னான்புலமை
                                          மன்னுவிபு  லாநந்த  மாமுனிவன்  -  தொன்மைத்
                                         தமிழ்ப்புலமை  மல்கத்  தமிழ்வளர்த்து  வாழ்க
                                        இமிழ்கடல்சூழ்  ஞாலத்  தினிது
                                                - நீ.கந்தசாமி



        நட்பு


     நட்பு என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தையில்தான் எவ்வளவு அழகு, எவ்வளவு கம்பீரம், எவ்வளவு வசீகரம்.

     நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டிய சான்றோர் பலரைப் பற்றிப் படித்துப் பரவசப்பட்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால் அறிந்து, உணர்ந்து நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புப் பற்றிப் படித்து மெய்சிலிர்த்திருக்கிறோம்.

     இவர்களின் நட்பிற்குச் சிறிதும் குறையாது, பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த பழந்தமிழிசைப் பரப்பின் எல்லை கண்டு, யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலினை இயற்றி, நட்பிற்குக் காணிக்கையாக்கிய, அற்புத நிகழ்வினை,நிகழ்த்திக் காட்டிய மாமனிதரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
            
          ஆறுமுக நாவலர் போன்று, ஈழநாட்டில் பிறந்து, இலங்கையிலும், தமிழகத்திலும், தமிழ் வளர்த்த பெருமகனார் விபுலாநந்த அடிகள் ஆவார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும்.

     இராமகிருட்டினச் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தால், அம் மடத்தின் தொண்டருள் ஒருவராய் மாறி, தனது பெயரினை விபுலாநந்த அடிகள் என்னும் துறவு நிலைப் பெயராக மாற்றிக் கொண்ட மாமனிதர்.

உமாமகேசுவரனார்
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களிடம் அளவிலா நட்பு கொண்டவர்.

     1933 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆம் ஆண்டு விழாவின் தலைவர் விபுலாநந்த அடிகளேயாவார்.

     விபுலாநந்த அடிகள் அவர்கள் 1936 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பழந்தமிழரின் இசை, ஓவியம், கலையறிவு என்னும் பொருள் பற்றி பல சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பண்டைத் தமிழ் மக்கள் இசைத்ததும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மறைந்து போனதுமாகிய யாழின் உருவத்தினை, சங்க இலக்கிய சான்று கொண்டு ஓவிய வடிவில் முதன் முதலில் வெளிப்படுத்தினார்.

     1937 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் அவர்கள் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டார். திருக்கயிலாய யாத்திரையினை நிறைவு செய்து திரும்பும் வழியில், சில காலம் விபுலாநந்த அடிகள் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கினார்.

மகர யாழ் (காமன் கொடி)
     உமாமகேசுவரனாரின் உயரிய குணமும், விருந்தோம்புதல் பண்பும், தணியாத் தமிழ்த் தாகமும், விபுலாநந்தரை நெகிழச் செய்தன. இதனால் விபுலாநந்தர் உமாமகேசுவரனார் மீது கொண்டிருந்த நட்பானது, மேலும் வளர்ந்து, இருவரும் உடன் பிறவாச் சகோதரர்களானார்கள்.

மகர யாழ் வருணன் ஊர்தி
     இந்நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் விபுலாநந்த அடிகளிடம், அவரது இசைத் தமிழ் ஆராய்ச்சியினை, ஒரு நூலாக எழுதித் தருமாறு அன்புடன் வேண்டினார். இதன் காரணமாக அடிகளார் அவர்களும், இசைத் தமிழ் பற்றிய தனது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளைக் கட்டுரைகளாக எழுதி, தமிழ்ப் பொழில் இதழில் வெளியிடுவதற்கு அனுப்பத் தொடங்கினார்.

     1941 ஆம் ஆண்டு வடநாட்டு யாத்திரை மேற்கொண்ட உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்நாடு மீளாமலேயே, இறைவன் திருவடியை அடைந்தார்கள்.


 உற்றாரை யான்வேண்டேன்  ஊருடன் பேர் வேண்டேன்
எனக் கூறுதற்கு உரிய நிலையினை ஆண்டவன் அருளினால் ஓரளவிற்கு எய்தினேன் எனினும்,
       கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும்
எனக்கூறும் உள்ளத் துணிவினை யான் எய்தவில்லை. பண்டைக்குலத் தொடர்பினை நீத்தேனாகிய யான், தமிழ்த் தெய்வத்திற்கு ஆட்பட்டு, அன்னைத் தமிழ்ப் பணி செய்யும் அன்பர் குழாமாகிய தொண்டர் குலத்திற்கு உரியவனாகையினால், தமிழ்ப்  புலவர் பிரிவு ஆறத் துயரினை அளிக்கின்றது.
                           முத்தமிழ் நூல் கற்றார் பிரிவும், கல்லாதாரிணக்கமுங்
                           கைப்பொருளொன்  றற்றாரிளமையும் போலக்
                           கொதிக்கும் அருஞ்சுரம்
என ஔவை கூறிய பிரிவு என்னும் பாலையுட்பட்டு துன்புறுகின்றேன்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ் கருவி
     செந்தமிழ்ப் புரவலரும், தமிழவேளும் கண்போல் நண்பருமாகிய உமாமகேசுவரனாரது பொன்னுடலம் திருவயோத்தி நகரிலே சரயு நதிக்கரையிலே தீக்கு இரையாயிற்று என்னுஞ் செய்தி துயரின்மேற் றுயராயிற்று.

     இமயம் நோக்கிச் சென்று, திரும்பும் வழியில் தஞ்சையிலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டுவிழாவிலே, வாழ்த்துரை கூறி விடையளித்துப் பிரியாது பிரிந்த செந்தமிழ்ப் புரவலர், இத்துணை விரைவிலே மண்ணுலகை நீத்து வானவர்க்கு விருந்தாவாரெனக் கனவிலும் நினைத்தேனல்லேன். நமது புரவலரது தகுதியினை ஓராது,
             நினையாக்  கூற்றம்  இன்னுயிருய்த்தன்று
             பைதலொக்கற்ற  ழீஇ யதனை
             வைகம்  வம்மோ வாய்மொழிப் புலவீர்
எனப் புலவர் குழாத்தை விளித்தக் கூறுவதொன் றன்றி வேறு செய்வதறியாது திகைப்புறுகின்றேன், எனப் பலவாறு வருந்திய விபுலாநந்தருக்கு, உமாமகேசுவரனாரின் அன்பு வேண்டுகோள் நினைவிற்கு வந்தது.
 
     இசைத் தமிழ் ஆராய்ச்சிகளை ஒரு நூலாக எழுதித் தருமாறு நண்பர் உமாமகேசுவரனார் வேண்டினாரே? நாம் சில கட்டுரைகளை மட்டும்தானே எழுதிக் கொடுத்தோம். உமாமகேசுவரனாரின் பிரிவுத் துயரினைப் போக்க, யான் செய்ய வேண்டியது, இசைத் தமிழ் ஆராய்ச்சியை நூல் வடிவில் எழுதி, உமாமகேசுவரனார் தன் உயிரினும் மேலாய் போற்றி வளர்த்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே தங்கி இப்பணியினைச் செய்வது என்றும் முடிவு செய்து கரந்தை நோக்கிப் புறப்பட்டார்.

யாழ் நூல் அரங்கேற்றத்திற்காக விபுலாநந்த அடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்படும் காட்சி
     கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் உள்ள அறை, விபுலாநந்தருக்காக ஒதுக்கப்பெற்றது. விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் வசதிகளை அன்புடன் செய்தளித்த, சங்கப் பேரன்பர் அ.கணபதியா பிள்ளை அவர்கள், அடிகளாருக்கு உடனிருந்து தொண்டாற்றும்படி, கரந்தைப் புலவர் கல்லூரி விரிவுரையாளர் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

     கணபதியா பிள்ளையின் வேண்டுகோளைப் பெரும்பேறாக எண்ணிய வெள்ளைவாரணன் அவர்களும், விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் உதவிகளை உடனிருந்து செய்யத் தொடங்கினார். யாழ்நூல் என்னும் பெயரில் தனது இசைத் தமிழ் ஆராய்ச்சிகளை நூல் வடிவில் எழுத எண்ணிய அடிகளார், தமது நூலின் அமைப்பு குறித்து, வெள்ளைவாரணன் அவர்களிடம் அடிக்கடி எடுத்துரைப்பார்கள். இசை நூலில் அமைவதற்குரிய தெய்வ வணக்கப் பாடலாக, காத்தற் கடவுளாகிய திருமாலின் வணக்கமே முதலிடம் பெறும் என அடிகளார் தெரிவித்தார்.இதனைக் கேட்ட வெள்ளைவாரணன் அவர்கள், எல்லா இடர்களையும் நீக்கி அருளும் மூத்த பிள்ளையார்க்கு உரிய வணக்கமே முதலில் அமைதல் வேண்டும் என அடிகளாரை வேண்டினார். அதற்கு அடிகளார், தம்பி, நீ பிற்கால வழக்கத்தை நினைத்துக் கூறுகின்றாய், நீ விரும்பியபடி மூத்த பிள்ளையாருக்கும் வணக்கம் சொல்வேன். ஆனால் அது திருமாலின் வணக்கத்திற்குப் பின்னரே அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.

 யாழ் நூல் ஆசிரியர் நூல் அரங்கேற்றும் தோற்றம்
     அன்றிறவு வீட்டிற்குத் திரும்பிய வெள்ளைவாரணன் அவர்கள், வழக்கம் போல் மாறுநாள், அதிகாலையில் அடிகளாரைக் காணச் சென்றார். வெள்ளைவாரணன் அவர்களைக் கண்ட அடிகளார், தம்பி, நீ சொல்லியபடியே மூத்த பிள்ளையாருக்கு முதலில் வணக்கச் செய்யுளைப் பாடியிருக்கின்றேன், அவர் என்னைக் கீழ விழ வைத்து வேடிக்கைப் பார்த்துவிட்டார் எனறு கூறி, யார் நூலின் தெய்வ வணக்கப் பாடலாகத் தான் இயற்றிய,

   உழையிசை  இபமென  உரவுகொள்  பரனை  உமைதிரு உளநிறை அமிழ்துரு மழலை
   மொழியுறு  குழவியை  ஆழகறி  விளமை  மழுதியல்  வரதனை  முறைமுறை  பணிவாம்
   புழைசெறி  கழைகுழ  விசைமொழி  பொதியப்  புகழுறு  வளருறு  புலமள்  பணுவல்
   இழையணி  தமிழ்மகள்  எமதுளம்  உறையும்  இறைமகள்  இசையியல்  உளமுறு  கெனவே

என்னும் பாடலை ஆர்வமுடன் படித்துக் காட்டினார்.இப்பாடலினைக் கேட்டு மகிழ்ந்த வெள்ளைவாரணன் அவர்கள், அடிகளாரைப் பார்த்துப் பிள்ளையார் செய்த வேடிக்கை யாது என அறியும் குறிப்புடன் நின்றார். இரண்டு மாதங்களாகக் கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் வாயிலில் அமைந்த அறையில் தங்கியிருக்கும் நான், என்றும்
யாழ் நூல் இரண்டாம் பதிப்பு
போல, விடியற்காலம் நாலு மணியளவில், வடவாற்றுப் பக்கம் சென்று திரும்பும் பொழுது, அரச மரத்தடியில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையாருக்கு முன்புறம் உள்ள மின் விளக்குக் கம்பத்தின் கம்பி தடுக்கி கீழே விழ இருந்தேன். எனது இரு கைகளையும் ஊன்றிக் கீழே விழாமல் தப்பித்தேன். எனது இருகைகளையும், மூத்த பிள்ளையாரின் திருவடிகளில் ஊன்றிக் கீழே விழாது உய்த்த திறத்தைப் பின்னரே உணர்ந்தேன்.  திருமாலுக்கு வணக்கம் சொல்லிய பிறகுதான், மூத்த பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லுவேன் என்று கூறிய மறுநாளே, முத்த பிள்ளையார் என்னைத் தன் திருவடிகளில் விழுந்து வணங்கச் செய்துவிட்டார். பிள்ளையார் அருளால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி யாழ் நூலின் தொடக்கமாய் அமைந்தது எனக்கு மன மகிழ்வைத் தருகின்றது எனறு கூறி கம்பி தடுத்தமையால் தனது காலில் ஏற்பட்ட உராய்வினையும் அடிகளார் காட்டினார்.


     இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்க அரசமரத்தடியில் அமர்ந்திருந்த மூத்த பிள்ளையார் வணக்கத்துடன் தொடங்கப் பெற்ற யாழ்நூலினை, விபுலாநந்த அடிகள் அவர்கள் 1943 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் எழுதி முடித்தார்.

    யாழ்நூலின் முகவுரையில் விபுலாநந்தர் பின்வருமாறு எழுதுகிறார்.

    என்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் திரு த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இதன் நிறைவு பேற்றினைக் காணுமுன் பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயருறுகின்றது. அவர்களது அன்புக்குரிய நிலையமாகிய இத் தமிழ்ப் பெரு மன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து இந்நூலினை எழுதி முடித்தமை அவர்களது பிரிவினாலெய்திய மனத்துயரினை ஓரளவிற்கு நீக்கிவிட்டது.

கரந்தைத் தமிழ்ச் சங்க மணிவிழாவின்போது விபுலாநந்த அடிகளின் படத்திறப்பு
அன்றைய சங்கத் தலைவர் திரு தனகோடி அவர்களும், பேரா க.வெள்ளைவாரணன் அவர்களும்
     ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத் தமிழாகிய அருங்கலை நிதியத்தின் பெருமையினை, இனிது புலப்படுத்தும் யாழ்நூல், 1947 ஆம் ஆண்டு சூன் திங்கள் ஐந்தாம் நாள் திருக்கொள்ளம் புதூர் திருக்கோயில் ஆளுடைய பிள்ளையார் திருமுன் , கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாக, அரங்கேறியது.

                 சேர  மானும்  சுந்தரரும்
                 சிறந்த  சோழன்  பிரிராந்தை
                 ஏர்கொள்  வாரும்  தமக்கெவரும்
                 இணையில்  புலவர்  கபிலரொட
                 பாரி  வேளும்  என்னுமிவர்
                 பண்டு  கொண்ட,  நட்புரிமை
                 நேரும்  திறத்தான்  எல்லோர்க்கும்
                 நேர்தல் இயலும்  நிலைமையதோ?
                                             -பண்டித ந.ரா.சுந்தரராசன்

என்று நட்பின் பெருமையினைப் பற்றிப் புலவர் பாடுவர். இவர்களின் நட்பிற்குத் தங்களின் நட்பு சிறிதும் குறைந்ததல்ல என் முரசறைவதைப் போல், தமிழவேளின் பிரிவுத் துயரைத் தாங்க இயலாமல், தமிழவேளின் அன்பு வேண்டுகோளினை நிறைவேற்றுவதற்காக மட்டுமே, இப்புவியில தங்கியிருந்ததைப் போன்று, விபுலாநந்தரின் ஆன்மாவானது, யாழ்நூல் அரங்கேற்றம் கண்ட 44 ஆம் நாள், 1947 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 20 ஆம் நாள், மண்ணுலகிலிருந்து புறப்பட்டு, தனது  நண்பர் உமாமகேசுவரனாரைத் தேடி விண்னுலகு பயணித்தது.

              ஏழிசை  நூற்  றிறங்கண்டீர்   யாழியலை
                      வகுத்தருள்மின்  என்ன முன்னம்
              ஆழியஅன்  பினற்றமிழ  வேள்  புகல
                      அதற்கிசைந்தே  அவன்காண்  சங்கச்
              சூழலிலே  யாழ்நூலைத்  தொடங்கியநின்
                      அன்புரிமைத்  தொடர்பை  யாண்டு
              வாழுமவற்  குரைத்திடவோ  வளர்கயிலை
                       யடைந்தனைநீ  வகுப்பா  யண்ணால்

-          க.வெள்ளைவாரணன்


விபுலாநந்தர் உமாமகேசுவரனார் நட்பினைப் போற்றுவோம்.