வரும் பகைவர்
படைகண்டு மார்தட்டிக் களம் புகுந்த
மக்களைப் பெற்றோர்
வாழ்க
மனம்கொண்ட
துணைவர்க்கு விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள்
வாழ்க
உரம் கொண்டு போராடி
உதிரத்தில் நீராடி
அறம்காத்த உள்ளம்
வாழ்க
திடமான தோள்களும்
செயல் வீரர் மரபும் வாழ்க
பாவாடை தெய்வானை
பல்லாண்டு பல்லாண்டு
நீடூழி நிறைவோடு
வாழ்க வாழ்க வாழ்க
கடந்த 22.3.2015 ஞாயிற்றுக்
கிழமை காலை நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும்,
நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்களும், திருவாரூர் புறப்பட்டோம்.
பள்ளி அலுவல் தொடர்பாக,
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கத்தான் இப்பயணம். முதல் நாள் தொடர்பு
கொண்டு பேசிய பொழுது, நாளை காலை 10.00 மணிக்கு, திருவாரூர் கோயிலுக்கு
வருகிறேன். கோயிலிலேயே சந்திப்போம் வாருங்கள் என்றார்.
திருவாரூர் கோயிலுக்குச்
சென்றோம். வழக்கறிஞரைச் சந்தித்தோம். பேசினோம். விடை பெற்றோம்.
கோயிலை விட்டு வெளியே வந்த பொழுது,
திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. சன்னா நல்லூருக்குச் சென்று வந்தால் என்ன,
என்னும் ஓர் ஆசை மனதில் உதித்தது.
கரந்தைத் தமிழ்ச் சங்க
மகிழ்வுந்தின் ஓட்டுநரும், நண்பருமான ரமேஷிடம், சன்னா நல்லூருக்குப் போக
வேண்டுமே என்றேன். அருகில்தான் இருக்கிறது தாராளமாகப் போய்வருவோம்
என்றார்.