07 ஏப்ரல் 2024

ஆற்றோரம் வாரீர்

 


நீரின்றி அமையாது உலகென்று அதனை வகைப்படுத்த

ஆறின்றி இயலாது என உணர்ந்தனர்.

ஆறு கண்டார், அதனால் சோறு கண்டார் – எத்தனை

ஆறு இத்தரைமீது, பத்தரை மற்றும் முத்திரைப் பொன்னால்

சித்திரை நெல்லை சிரிக்கச் செய்தது

பச்சைப் பட்டு விரிக்கச் செய்தது.

வீட்டோரம், நாட்டோரம், தேர்தல் ஓட்டோரம் இருக்கும் நல்லார்

சிறிது ஆற்றோரம் வாரீர் இன்று

என் பாட்டோரம் பாரீர் இன்று.

     நீர்.

     பெய்யும்போது மழை. வீழ்ந்தால் அருவி, ஓடினால் ஓடை, பாய்ந்தால் ஆறு, நின்றால் குளம், நிறைந்தால் ஏரி, கடந்தால் கடல்.

     தண்ணீர் ஒன்றுதான்.

     பெயர் மட்டும் வேறுவேறு.

     ஒரு நாட்டின் வலிமைக்கும், வளமைக்கும் அடிப்படையாகத் திகழ்வது நீர் ஆதாரமே ஆகும்.

     நீர் வளம்பெற்ற நாடே கலை, பண்பாடு, நாகரிகத்தில் சிறந்து விளங்கும். இதனால்தான்,

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோய் உயரக் கோன் உயர்வான்

என குலோத்துங்கச் சோழனை வாழ்த்திப் பாடினார் ஔவை.

     தெற்கிலிருந்து வீசுவது தென்றல் காற்று.

     வடக்கிலிருந்து வீசுவது வாடை காற்று

     கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று

     மேற்கிலிருந்து வீசுவது மேலக் காற்று

என காற்று வீசும் திசையைப் பொறுத்து பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்.

     1 கி.மீ., வேகத்தில் வீசினால் மென் காற்று

     6 கி.மீ., வேகத்தில் வீசினால் இளந் தென்றல்

     12 – 19 கி.மீ., வேகத்தில் வீசினால் தென்றல் காற்று

     20 – 20 கி.மீ., வேகத்தில் வீசினால் புழுதிக் காற்று

     30 – 39 கி.மீ., வேகத்தில் வீசினால் ஆடிக் காற்று

     100 கி.மீ., வேகத்தில் வீசினால் கடுங் காற்று

     101 – 120 கி.மீ., வேகத்தில் வீசினால் புயல் காற்று

     120 கி.மீ., க்கு மேல் வேகத்தில் வீசினால் சூறாவளி

என வேகத்தினைப் போறுத்தும் காற்றிற்குப் பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்.

     வறட்சி, சாரல், தூறல், குறைவான மழை, சுமாரான மழை, மிதமான மழை, அதிக மழை, மிக அதிக மழை, கடும் மழை எனப் பெய்கின்ற மழைக்கு அதனை அளவைப் பொறுத்தும் பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்.

     மழை குறித்தத் தெளிவானப் பார்வையும், மழையினால் கிடைக்கும் நீரையும், பிற வகைகளில் கிடைக்கும் நீரையும் எவ்வாறு பயன்படுத்துவது என்னும், நீர் மேலாண்மையினையும் அறிந்தவர்கள் தமிழர்கள்.

     கையில் இருப்பதைக் கொண்டு, நினைத்த செயலைச் சிறப்புடன் செய்து முடிப்பதுதான் மேலாண்மை.

     பெய்யும் மழை நீர், பூமிக்கு அடியில் செல்லும் மழை நீர், நிலத்தால் உறிஞ்சப்படும் மழை நீர், நிலத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் மழை நீர், எல்லாவற்றையும் கணக்கிட்டு, கிடைத்திருக்கும் நீரை எப்படிப் பயன்படுத்துவது, மழை நீரை எப்படிச் சேமிப்பது, சேமித்த நீரைத் திறம்பட எப்படிப் பயன்படுத்துவது, பகிர்வது என்பதைக் கூட சங்க காலம் தொட்டு தோன்றிய, தமிழ் இலக்கியங்கள் முழங்குகின்றன.

     ஏரிகளைக் கூட எப்படி அமைக்க வேண்டும் என்பதைக் காரியாசான், தன் சிறுபஞ்ச மூலத்தில் தெளிவாய் குறிப்பிடுகிறார்.

குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து

உளம் தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்று இவ்ஐம்பால் படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது.

     குளத்தை வெட்டி, மரத்தை நட்டு, தெரு போட்டு, தரிச நிலத்தைக் கழனியாக்கி, கிணற்றை வெட்டினால் சுவர்க்கம் போகலாம் என்கிறது இப்பாடல்.

     அகழி, அசும்பு, அலந்தை, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏம்பல், எந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கபடம், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை, குட்டம், குண்டு, குண்டம், குழி, குளம், கூவல், கூடம், கேளி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூமி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கள்மடு, மடுவு முழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி இவையெல்லாம் அன்று தொட்டு, இன்றுவரை நீர் நிலைகளைக் குறிப்பிடும் பெயர்களாகும்.

     தமிழர்கள் வாழ்வு நீரோடு, எந்த அளவிற்கு ஒன்றியிருந்தது என்பதை, தொடர்ந்து நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.

நிலன்நெறி மருங்கின் நீர்நிலைப் பெருகத்

தட்டோர் அம்ம, இவண்தட் டோரே

தள்ளா தோர்இவண் தள்ளா தோரே

     நிலம் எங்கெங்குப் பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி, கரை அமைத்த மன்னர்களே, இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்று வாழ்வார்கள் என்று உரைக்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.

     ஆழம் காண இயலாத ஆற்றுப் படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை, கல்லணையைக் கட்டியவர்களிடம் இருந்துதான் நாம் தெரிந்து கொண்டோம்.

     இந்தப் பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக் கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம்.

     எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த, பெயர் தெரியாத, அந்நாளைய தமிழ் மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம் எனத் தன் நூலில் எழுதியுள்ளார் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்.

---

நீர் மேலாண்மை

அன்றும் இன்றும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, நீர் மேலாண்மையில், தமிழன் சாதித்ததையும், இனி வேளாண்மைப் பெருக்கத்திற்காகச் செய்ய வேண்டியப் பணிகளையும் ஒன்று திரட்டி, ஒரு நூலாக்கி இருக்கிறார், வேளாண்மைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்.

வேளாண் அறிஞர் திரு வ.பழனியப்பன் அவர்கள்


நீர் மேலாண்மை

அன்றும், இன்றும்

நூலின் வெளியீட்டு விழா, கடந்த 25.3.2024

திங்கட் கிழமையன்று காலை,

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது.

குறள் நெறிச் செம்மல்

முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற விழாவில்


தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்

மாண்பமை முனைவர் வி.திருவள்ளுவன் அவர்கள்

நூலினை வெளியிட,

தஞ்சை மூத்த இளவரசர்

திருமிகு பாபாஜி ராஜத பான்ஸ்லே அவர்களும்

தஞ்சாவூர், தொழில் வர்த்தக சங்கத் தலைவர்

தமிழ்ச் செம்மல் பழ.மாறவர்மன் அவர்களும்

நூலின் படிகளைப் பெற்று மகிழ்ந்தனர்.

     பொதுவாக புத்தக வெளியீட்டு விழாக்களிள் கலந்து கொள்பவர்களுக்கு வடையும், தேநீரும் கொடுத்து, வெளியீட்டு விழா சலுகை விலை என அறிவித்து, ஒரு குறிப்பிட்டத் தொகையினைத் தள்ளுபடி செய்து நூலினை விற்பனைக்கு வைப்பதுதான் வழக்கம்.

     ஆனால், இவ்விழாவில், வடையும் தேநீரும் கொடுத்ததோடு, தமிழர் நீர் மேலாண்மை குறித்த செய்திகள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்னும் உயரிய நோக்கில், அனைவருக்கும் நூலினையும் அன்பளிப்பாகவே வழங்கி மகிழ்ந்தார்

வேளாண் அறிஞர் வ.பழனியப்பனார்.

வேளாண் அறிஞரை வாழ்த்துவோம், போற்றுவோம்.