23 அக்டோபர் 2026

இருவேறு உலகத்து இயற்கை

  


     இயற்கை சக்திகள் இருவேறு சூழ்நிலைகளில் செயல்படும்.

     இருவேறு தன்மைகளில் அமையும்.

     சமூக முன்னேற்றத்திற்காக, சக மனிதர்களை மதித்து வாழ்வதற்காக, நாம் சில விதிகளை வகுத்துள்ளோம்.

     விதிகளைப் பின்பற்றும்போது, சமூக நல்லிணக்கம் வளரும்,

     ஒரு அமைதியான சமூகம் மலரும்.

     அதேபோல் இந்த பிரபஞ்சத்திலும், ஒவ்வொன்றின் இயக்கத்திற்கும் பின்னால் சில நியதிகள் இருக்கின்றன.

     புனலுக்குத் தண்மை

     நிலத்திற்குத் திண்மை

     நெருப்பிற்கு வெம்மை

     காற்றிற்கு உணர்வு

     விண்ணிற்கு அணு தத்துவம்.

     இந்த நியதிகள், பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை உணர்த்தக் கூடியவை.

     இந்தக் கூற்றைத்தான், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் அறிந்துதான் பார்க்கும்போதே என ஔவையார் கூறினார்.

     இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய பிரபஞ்ச சக்தியை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

     நிலம்

     நீர்

     நெருப்பு

     காற்று

     ஆகாயம்

     நமது பிண்டத்திலும், இதே ஐம்பெரும் சக்திகள்தான்.

     நமக்கு வெளியில் உள்ள பிரபஞ்சமாகிய அண்டத்தைப் பற்றி ஆய்வு செய்ய, நமக்கு உள்ளே இருக்கக்கூடிய பிரபஞ்சமாகிய, இந்த பிண்டத்தை ஆய்வு செய்தாலே போதும் என்பதுதான் நம் முன்னோர்களினுடைய அகத்தாய்வு.

     அதற்காகவே அவர்கள் அகத்தாய்வில் ஈடுபட்டார்கள்.

     இயற்கையின் பேருண்மையைப் புரிந்து கொண்டார்கள்.

     அவற்றைப் பதிவும் செய்து வைத்திருக்கிறார்கள்.

     அத்ததைய ஒரு மகத்தான உண்மை, ஒரு மந்திரச் சொற்றொடர், ஒரு மகா வாக்கியம், காலத்தை வென்ற கருத்துதான்,

     இருவேறு உலகத்து இயற்கை.

     இருவேறு உலகத்து இயற்கை என்பதற்கு திருவள்ளுவரே, பல குறள்களில் கூறிச் சென்றுள்ளார்.

     உலக மக்களுள் அறிவை விரிவு செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்கள் ஒரு சாரார் இருக்கிறார்கள்.

     செல்வத்தைத் தேடுவதிலேயே நாட்டம் கொண்டவர்கள் ஒரு சாரார் இருக்கிறார்கள்.

     செல்வம் நிலையற்றது, நிலையற்றது என்று சொல்லிக்கொண்டே, அதையே தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு

     செல்வ நாட்டம் கொண்ட, உலக மக்களும் உண்டு, அறிவு நாட்டம் கொண்ட மக்களும் உண்டு.

     பண்புடையார் கண் பட்டுண்டு உலகம்

     உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு

     இதெல்லாம் வாழ்வியல் நெறிகள்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

     இது பண்பாட்டியல் தொடர்பான தன்மையைச் சொல்லக் கூடியது.

     பெருமை வாய்ந்தவர்களுக்கு, அருமை வாய்ந்தவர்களுக்கு பணிவு, அடக்கம், பொறுமை, நன்றியுணர்வு, மன்னித்தல் போன்ற அற்புதமான குணங்கள் இருக்கும்.

     அவர்களைப் போற்றுவதாலோ, புகழ்வதாலோ அவர்களுடைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது.

     அதனால்தான், பெரியோரை வியத்தலும் இலனே என்றனர்.

     அது அவர்களுடைய இயல்பு, இயற்கை குணம்.

     அதற்கு நேர் எதிராக, சிறியோரை இகழ்தலும் இலனே.

     உயர்தர குணங்கள் இல்லாதவர்களிடம், அதைச் சுட்டிக் காட்டுவதாலும், பெரும் பயன் இல்லை, தற்காலிகமாக ஒரு மாற்றம் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் பின்னாளில் அவர்களுடைய இயல்பு மாறாது.

     பண்பாட்டியல் ரீதியாக, இருவேறு உலகத்தைக் காட்டக்கூடிய காட்சி இது.

     இல்லறம் அல்லது நல்லறமன்று.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

     ஒரு திறன் வாய்ந்த இல்லறத்தை நடத்தக்கூடிய, ஒரு குடியானவனுடைய வாழ்க்கை, தவ வாழ்க்கையைவிட மேம்பட்டது.

     பொருளாதார ரீதியாக, அந்த இல்லற வாழ்க்கை சிறப்படைவதற்கு, இருவேறு தன்மையைக் கூறுகிறார்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை

     வரவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, செலவு கட்டுக்கடங்கி இருக்க வேண்டும், அளவில் மீறிப் போகக்கூடாது.

     அப்படி இருந்தால்தான், குடும்பம் குடும்பமாக இருக்கும்.

     இனிய இல்லறமாக இருக்கும்.

     பொருளாதார ரீதியாகவும், ஒரு பொருளாதார நிபுணராக இருந்து இருவேறு உலகத்தைக் காட்டியுள்ளார்.

     இருவேறு உலகத்து இயற்கை என்னும் மந்திரச் சொற்றொடரில், இன்றைய உலகத்திற்கு அறிவியலின், வெவ்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய, வியத்தகு முன்னேற்றத்தைப் பொருத்திப் பார்ப்போம்.

---

     உணவே மருந்து.

     இதன் உண்மைப் பொருள் தெரியவேண்டும்.

     மகத்தான உணவு என்பது நீரும், காற்றும்.

     இதனைச் சரியாக எடுத்துக் கொண்டால், சரியாகக் கையாளும்போது மட்டும்தான், உணவே மருந்து என்ற நிலையை எட்டலாம்.

     சித்தர்கள் சொன்ன 4448 நோய்களில் இருந்து விடுபட முடியும்.

     எனவே, உணவே மருந்து என்பதில், இரண்டு உலகமாக நீரையும், காற்றையும் பார்ப்போம்.

     நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு.

     இதன் பொருள் என்ன?

     நீரின்றி வேளாண்மை  இல்லை.

     வேளாண்மை இன்றி உணவில்லை.

     உணவினிறி உயிரில்லை.

     எனவேதான், நீரின்றி அமையாது உலகு.

     புறநானூற்றில், இதனையே சற்று மாறுபட்டு சொல்லியிருக்கிறார்கள்.

நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

     இது கொஞ்சம் அறிவியல் கண்ணோட்டத்தோடு இருக்கிறதல்லவா?

     நீரின்றியமையா யாக்கைக்கெல்லாம், எந்த உயிரினமாக இருந்தாலும், உடலில் உயிரை உருவாக்குவதில் நீரின் பங்கு முக்கியமானது.

     நம்முடைய வாழ்க்கையே பனிக்குடத்தில்தான் தொடங்குகிறது.

     இந்த நீர் எந்த அளவிற்கு, உடலில் இடம் பெறுகிறது என்பதை இன்றைய நவீன அறிவியலோடு பொருத்திப் பார்ப்போம்.

     நம்முடைய உடலில், மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் உள்ளது.

     அப்படி இருப்பது, நமக்குத் தெரிகிறதா?

     நம் உடம்பு, வெவ்வேறு மண்டலங்களாக இருக்கிறது.

     சுவாச மண்டலம்

     நரம்பு மண்டலம்

     எலும்பு மண்டலம்

     தோல் மண்டலம்

     கழிவு நீக்க மண்டலம்

     செரிமாண மண்டலம்

இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்துள்ளது.

     மண்டலங்கள் எல்லாம், உறுப்புகளாகப் பிரிந்திருக்கிறன.

     உறுப்புகள் எல்லாம், திசுக்களாகப் பிரிந்திருக்கின்றன.

     திசுக்களுக்குள் இருப்பது செல்கள்.

     செல்களுக்குள் தண்ணீர்.

     செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான், வெளியே தெரிவதில்லை.

     நம்முடைய உடலுக்குள், இன்றைய மருத்துவ அறிவியலின்படி, உருவ அமைப்பிற்கு ஏற்றாற்போல், 50 டிரில்லியன் செல்கள் முதல் 100 டிரில்லியன் செல்கள் வரை இருக்கின்றன.

     டிரில்லியன் என்பதைக் குறிக்க, ஒன்று என்ற எண்ணுக்குப் பக்கத்தில் 12 பூஜ்ஜியங்களைப் போடவேண்டும்.

     அதாவது ஒரு இலட்சம் கோடி.

     இந்த செல்களுக்கு உள்ளும், புறமும் நீக்கமற நிறைந்திருப்பது நீர்.

     காற்றில் இருக்கக்கூடிய பிராண வாயுவைப் பயன்படுத்தி, நம் உணவில் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை எல்லாம் எரியூட்டுவதற்கு இந்த தண்ணீர் பயன்படுகிறது.

     ஒவ்வொரு செல்லுக்குள்ளும் எரியூட்டப்பட்டுதான், நாம் உண்ம் உணவின் சத்துக்கள், ஆற்றலாக மாறுகின்றன.

     இதனால்தான் நீரின்றி அமையா யாக்கை என்கிறோம்.

     மேலும், நீரானது, நாம் உண்ட உணவை, இரைப்பைக்கு எடுத்துச் செல்லும், செரிக்கச் செய்யும். அது உடலுக்குள் செல்லும்பொழுது சத்தாக உறிஞ்சப்படும்.

     ஆற்றலைப் பெற்றவுடன், மீதம் இருப்பதை, கழிவாக வெளியேற்றுவது என அனைத்தையும் செய்வது தண்ணீர்தான்.

     எனவே, உடல் ஆரோக்கியம் என்பது தண்ணீரில்தான் இருக்கிறது.

     ஒரு நாளில், நம் உடலில் இருந்து, சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீருக்கும் மேல், கழிவாக வெளியேறிவிடுகிறது.

     அதனால், அதைவிட கூடுதலாக நீரைக் குடிக்க வேண்டும்.

     நீரேற்றம் சரியான முறையில் இருக்கும்பொழுதுதான், இது ஆரோக்கியமான உடம்பு.

     ஆனால், மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது என்றால், நம் உடம்பின் ஒவ்வொரு கிலோ எடைக்கும், 40 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     அதாவது ஒவ்வொரு 20 கிலோ எடைக்கும், ஒரு லிட்டம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     ஒரே நேரத்தில் இந்தத் தண்ணீரைக் குடிக்கக்கூடாது.

     அது சிறுநீரகத்திற்கு வேலைப் பளுவை அதிகரிக்கும்.

     இரண்டு மணி நேர இடைவெளியில், ஒரு குவளை நீராக எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

     இது சிறுநீரகத்தையும் பாதிக்காமல், உடலில் எல்லா செயல்களையும் செய்ய வைக்கும்

     தண்ணீரைக் கடகடவென்று குடிக்கக்கூடாது.

     சப்பித்தான் குடிக்க வேண்டும்.

     இதுதான் சரியான முறை.

     அறிவியல் முறை.

     சப்பிக்குடிக்கும் பொழுதுதான், உமிழ் நீரோடு கலந்து செல்லும்.

     செரிமாணம் நன்கு நடக்கும்.

     அதையும் அமர்ந்து குடிப்பது நல்லது.

     அப்பொழுதுதான் இந்த உடம்பானது, நல்ல தொழிற்சாலை போல், அதன் அத்தனை உறுப்புகளும் திறம்பட செயல்படும்.

     அடுத்து, இதே புறநானூற்றுப் பாடலில், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என வருகிறது. இது திருக்குறளிலும் இருக்கிறது.

     தேவையான உணவை உண்டாக்கிக் கொடுப்பதும் தண்ணீர், தானும் உணவாக இருப்பதும் தண்ணீர்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

    இதைத்தான், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்றார்.

     இப்பாடல் பாண்டிய மன்னன் அரசவையில் பாடப்பட்டது.

     நாமெல்லாம் ஜி.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பசுமை புரட்சி செய்தார் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

     அவர் செய்த பசுமைப் புரட்சி என்பது, ஆழ்குழாய் கிணறுகள் அதிகம் அமைத்து விவசாயத்தைப் பெருக்குவது.

     அதனால் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நிலத்தடி நீர் அதிகம் கீழிறங்கிவிட்டது.

     மேற்பரப்பு நீராதாரங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன.

     ஆனால், அந்தப் புலவன் பாடிய பாடலுக்குப் பொருள் இதுவல்ல.

     எங்கு நீராதாரணம் இல்லையோ, வறண்ட பகுதியாகிவிட்டதோ, அங்கெல்லாம் மேற்பரப்பு நீராதாரங்களை உண்டு பண்ணி வேளாய்மையை சிறப்படையச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடப்பட்டதாகும்.

     இது நீரின் தன்மையை உணர்த்தக் கூடியது.

     இதெல்லாம் நன்மைகள்.

     வேளாண் பெருங்குடி மக்கள் கூறுவார்கள், பேஞ்சும் கெடுக்குது, காஞ்சும் கெடுக்குது.

     ஆக்க சக்தியே அழிவு சக்தியாகவும் மாறும்.

     இதுவும் இந்த இருவேறு உலகத்தில்தான் அடங்கும்.

     நீரானது ஆக்க சக்தி, உணவினைத் தரவல்லது, இருப்பினும் வேளாண் மக்களுக்கு அழிவினையும் தரக்கூடியதாக இருக்கிறது.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூம் எல்லாம் மழை

     இதுதான் இருவேறு உலகத்து இயற்கை.

      உணவே மருந்தில் மற்றொன்று காற்று.

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்

கூற்றை உதைக்கும் குறியது வாமே

     என்கிறது திருமந்திரம்.

     காற்றை சரியாக்க் கையாளத் தெரிந்தவர்கள், இயற்கை கொடுத்த முழு ஆயுளையும் வாழ முடியும்.

     நாம் பேசுகிறோம்.

     உள் மூச்சு வெளி மூச்சு நடந்து கொண்டிருக்கிறது.

     பேசும்போது உள்மூச்சைவிட, வெளிமூச்சு 4 அங்குலம் கூடுதலாக வெளியில் செல்லும்.

     4 அங்குல மூச்சு இழப்பு ஏற்படுகிறது.

     அதேபோல், நடக்கும்போது, 12 அங்குல உள்மூச்சு, 16 அங்குல வெளிமூச்சு.

     4 அங்குல மூச்சு இழப்பு ஏற்படுகிறது.

     ஆனால், நம் உடலில் 360 மூட்டுகள் உள்ளன.

     அவற்றிற்கு அசைவைக் கொடுத்தால்தான் ஆரோக்கியம்.

     அந்த வகையில் நடைப் பயிற்சி சிறந்தது.

     சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உகந்த பயிற்சி, நடைப் பயிற்சி.

     பேசும்போது, நடக்கும்போது என நம், ஒவ்வொரு செயலிலும் மூச்சு இழப்பு ஏற்படுகிறது.

     நாம் இந்த உலகத்திற்கு வரும்பொழுது, நமக்கு ஒரு கையிருப்பாக காற்று கொடுக்கப்படுகிறது.

     அதனை விரைவாக செலவழித்துவிட்டால், விரைவாகவே விடைபெற்றுச் செல்ல வேண்டியதுதான். இதைத்தான்

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்றனர்.

     மூச்சு இழப்பு ஏற்படக்கூடாது.

     அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.

     எனவே வேகவேகமாக மூச்சை விடக்கூடாது.

     மூச்சு விடுதல், மெதுவாகத்தான் நிகழ வேண்டும்.

     வேகவேகமாக ஒரு செயலைச் செய்யும்பொழுது இழப்பு அதிகரிக்கும்.

     மூச்சு மெதுவாக நிகழும்போது, மூச்சு சேமிக்கப்படும்.

     ஆமை நிமிடத்திற்கு 2 அல்லது 3 மூறைதான் மூச்சு விடும்.

     குறைந்தது 150 இல் இருந்து 300 வருடங்கள் வரை வாழ்கிறது.

     நாய் ஒரு நிமிடத்திற்கு 28 அல்லது 29 முறை மூச்சு விடும்.

     13 வயதிற்கு மேல் இருக்காது.

      ஆனால் இயற்கை நமக்கு 100 வருடங்கள் வாழ்வதற்கான கையிருப்பைக் கொடுத்திருக்கிறது.

     ஜப்பான் நாட்டில், ஓகினோவா என்னும் தீவில் இருப்பவர்களில் 100 வயதைக் கடந்தும் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

     இவர்கள் என்ன செய்கிறார்கள்.

     எப்படி இவ்வளவு ஆண்டுகள் வாழ்கிறார்கள்?

     இவர்கள் மூச்சு பயிற்சி செய்வதில்லை.

     ஆனால், தங்கள் உடலில் காற்றுக்கு இடம் கொடுக்கிறார்கள்.

     வயிறு முட்ட முட்ட சாப்பிடுவதில்லை.

     அவர்கள் எந்த நேரமும், ஒரு சிறு தட்டில்தான், உணவைச் சாப்பிடுகிறார்கள்.

     80 சதவிகிதம் வயிறு நிரம்புவதற்குத்தான் சாப்பிடுகிறார்கள்.

     அதனால், அங்கு தண்ணீருக்கும் இடமிருக்கிறது, காற்றுக்கும் இடமிருக்கிறது.

     தண்ணீரைப் பொறுத்தவரை ஒரு செய்தி இருக்கிறது.

     இடையில் குடியாதே, கடையில் மறவாதே என்பது நம் முன்னோர் வாக்கு.

     சாப்பிடும் பொழுது, இடை இடையே, தண்ணீர் குடிக்கக்கூடாது.

     எதனால் என்றால், நம் இரைப்பையில், ஒரு அமிலம் உண்டாகும். இந்த அமிலம்தான், உணவு சிதைக்கப்பட காரணமாக இருக்கிறது.

     சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், இந்த அமிலம் நீர்த்துப் போகும்.

     கடையில் மறவாதே.

     சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.

     பத்து நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     இது நீரேற்றம் செய்யக்கூடிய இன்னொரு வழி.

     எனவே, காற்றுக்கும் நீருக்கும் போதிய அளவு இடம் இருக்கும்பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

     நுரையீரலில் ஏகப்பட்ட காற்று நுண்அறைகள் இருக்கின்றன. அத்தனை நுண் அறைகளுக்கும் காற்று போனால்தான், நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கும்.

     ஓகினோ மக்கள் காற்றுக்கும் நீருக்கும் போதிய அளவி இடம் விட்டு சாப்பிடுகிறார்கள்.

     இதனால்தான் இம்மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

என்கிறது திருமந்திரம்.

     அதாவது கும்பகம் என்ற ஒன்றைச் செய்யச் சொல்கிறார்கள்.

     உள்மூச்சு வாங்கி, அப்படியே மூச்சை நிறுத்தி வைத்து, பின்னர் வெளிமூச்சு விடுதல்.

     உள்ளே அடக்கி வைப்பதுதான் கும்பகம்.

     அப்படி அடக்கி வைப்பதனால், நுரையீரலில் உள்ள அத்தனை காற்று நுண் அறைகளுக்கும், காற்று செல்லும். நுழையீரலின் முழுபகுதியும் நன்றாகச் செயல்படும்.

     எல்லா செயல்களுக்கும் ஆற்றல் கிடைக்கும்.

     முதுமை என்பது எளிதில் வாராது.

     முதுமையிலும் இளமைத் தோற்றத்தோடு இருக்கலாம்.

     இவைதவிர, காற்றில் இன்னும் சில நுணுக்கங்கள் இருக்கின்றன.

     நம் மூக்கின் மையப் பகுதியில், ஒரு மெல்லிய எலும்பு போன்ற ஒரு பிரிவு இருக்கிறது.

     வலது மூக்கின் வழியே உள்ளே செல்லும் காற்றானது, நுரையீரலை அடையும்போது, வெப்பமான காற்றாக மாறும்.

     இடது மூக்கின் வழியே உள்ளே செல்லும் காற்றானது, நுரையீரலை அடையும்போது, குளிர்ச்சியான காற்றாக மாறும்.

     இதனைத்தான் யோகக் கலையில், சூரியக்கலை, சந்திரக்கலை என்று சொல்வார்கள்.

     அந்த அளவிற்கு உடல் அமைப்பிலேயே, இருவேறு தன்மைகளை உடையதுதான் மூக்கு.

     நாம் சுவாசிக்கின்ற காற்று ஒன்றுதான், ஆனால் அது உடலிற்குள் செல்லும்போது, இருவேறு தன்மைகளை பெறும்வகையில், மாற்றும்படி இந்த மூக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

     ஆனால், இப்பொழுது பலர், மூக்கினால் சுவாசிப்பதைவிட, வாயினால்தான் சுவாசிக்கிறார்கள்.

     மூக்கால் சுவாசிக்கும்பொழுது, காற்றில் கலந்திருக்கும் நச்சுத் தன்மைகள் எல்லாம், மூக்கால் வடிகட்டப்படும்.

     ஆனால் வாயினால் சுவாசிக்கும்போது, தூசுகள் அனைத்தும் உள்ளே சென்றுவிடும்.

     இப்பொழுதெல்லாம், காற்றைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

     செல்போன் வந்த பிறகு, போர்வையினைப் போத்திக்கொண்டு, குப்புறப் படுத்தவாறு செல்போன் பார்க்கிறார்கள்.

     இதனால், அவர்கள் விடும் மூச்சே சரியான முறையில் இருப்பதில்லை.

     காற்று என்பது ஒரு மகத்தான சக்தி.

     உடம்பு முழுவதும் உள்ள, அத்தனை நாடிகளுக்கும் சக்தி ஊட்டுவதற்கு, ஒரு எளிமையான பயிற்சிதான் நாடிசுத்தி.

     இதில் கும்பகம் என்பது கிடையாது.

     அடக்கி வைக்க வேண்டியதில்லை.

     இடது மூக்கில் காற்றை உள்வாங்கி, வலது மூக்கு வழியே வெளியே விடவேண்டும்.

     வலது மூக்கில் காற்றை உள்வாங்கி, இடது மூக்கு வழியே வெளியே விடவேண்டும்.

     இந்தப் பயிற்சியும், உடம்பில் உள்ள அத்தனை நாடிகளுக்கும் பிராண வாயுவைக் கொண்டுபோய் சேர்க்கும்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் என்கிறது திருமந்திரம்.

     மூச்சுதான் குழந்தையின் பாலினத்தையே நிர்ணயிக்கிறது.

     ஞானியர்கள் மேலும் கூறுவார்கள், கோபக்காரர்கள் மூக்கு நுணியைக் கவனிக்கவேண்டும் என்று.

     பொறுமையான உட்கார்ந்து, மூக்கு நுணியை கவனிக்கும் பொழுது, உள்மூச்சு, வெளிமூச்சு சாந்தப்படும்.

     விரைவாக வந்த மூச்சு, மெதுவாக வரும்.

     கோபமான நேரத்தில் உள் மூச்சு 12 அங்குலம்.

     வெளிமூச்சு 24 அங்குலம் அளவிற்கு அதிகமாகும்.

     ஒரு மூச்சிற்கு 12 அங்குல இழப்பு ஏற்படும்.

     எனவே கோபம் என்பது, அதிக மூச்சு இழப்பிற்கு வழிவகுக்கும்.

     அதைத் தடுப்பதற்குத்தான், மூக்கு நுணியைக் கவணி என்ற ஒரு எளிமையான விதியைக் கூறுகிறார்கள்.

     இப்பொழுது தண்ணீர் மாசடைந்து போய்விட்டது.

     காற்றும் மாசு பட்ட நிலையில்தான் இருக்கிறது.

     சரியான காற்றில், 78 சதவிகிதம் நைட்ரஜன்தான்.

     21 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன்.

     கார்பன்டையாக்ஸைடின் அளவு 0.039 சதவிகிதம்தான்.

     ஒரு சதவிகிதத்தைவிடக் குறைவு கார்பன்டையாக்ஸைடு.

     ஆனால், இன்று வாகனப் போக்குவரத்து, எரிபொருள் பயன்பாடு, புகை பிடித்தல், தொழிற்சாலைகள் இதுபோன்ற காரணங்களால், வளி மண்டலக் காற்றே மாசடைந்துவிட்டது.

     மன அழுத்தம், பதற்றம், மனஇறுக்கம் இவற்றிற்கெல்லாம் காரணம் கார்டிசால்.

     இந்த கார்டிசால் உண்டாவதற்குக் காரணம் வளிமண்டல காற்று மாசு.

     இதில் இருந்து விடுபடுவதற்கு, வள்ளல் பெருமகனார் ஒரு அற்புதமான வழியைக் கூறுகிறார்.

     வல்லாரை சாப்பிடுங்கள்.

     இதனால்தான், தெய்வீக மூலிகைகள் என்ற ஐந்தில், வல்லாரையும் ஒன்றால் இணைந்திருக்கிறது.

     காற்றை சரியான முறையில், கையாளுவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

     உணவே மருந்து என்பதில், மகத்தான மருந்து நீரும், காற்றும்தான்.

---

     இதன்பிறகுதான் நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவுகள்.

     நாம் எடுத்துக்கொள்ளும் உணவிலும், இருவேறு தன்மைகள் இருக்கின்றன.

     ஒவ்வொரு மருத்துவமனையிலும், டயட்டீசியன்கள் இருக்கிறார்கள்,

     அவர்கள், நாம் எடுத்துக்கொள்ளக் கூடிய உணவை, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

     இதுதான் இருவேறு உலகம்.

     பெரும்பான்மைச் சத்து, சிறுபான்மைச் சத்து.

     பெரும்பான்மைச் சத்து என்பது மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து.

     மூன்றாக இருக்கிறதே.

     நமக்கு இயற்கையில் கிடைப்பது இரண்டு வகையாகத்தான் கிடைக்கும்.

     மாவுச் சத்தும், புரதச் சத்தும் சைவ உணவுகளில் இருக்கின்றன.

     சைவ உணவில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு.

     ஆனால், புரதச் சத்தும், கொழுப்புத் சத்தும் அசைவ உணவில் அதிகம்.

     மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து என்று எடுத்துக் கொண்டாலும், அது நமக்கு கிடைக்கக்கூடிய வழிவகைகளில், இருவேறு உலகமாகத்தான் இருக்கின்றன.

     சிறுபான்மைச் சத்துக்கள்.

     சிறுபான்மைச் சத்துக்கள் என்பது கனிமங்களும், நுண்ணூட்டச் சத்துக்களும், அதாவது விட்டமின்கள்.

     நுண்ணூட்டச் சத்துக்களிலேயே, இருவகை இருக்கிறது.

     இருவேறு உலகம் இருக்கிறது.

     நீரில் கரைபவை.

     கொழுப்பில் கரைபவை.

     விட்டமின் ஏ, டி, ஈ, கே இதெல்லாம் கொழுப்பில்தான் கரையும்.

     அந்த விதத்தில், உடம்பிற்கு கொழுப்புச் சத்து அவசியம்.

     விட்டமின்கள் உடம்பிற்குள் போய் சேரனும்.

     சேரவில்லை என்றால், உடம்பின் இயக்கத்தை நிர்ணயிக்கும் 50 வகையான ஹார்மோன்கள் உற்பத்தியாபாது.

     விட்டமின் பி, சி நீரில் கரைபவை.

     சிறுபான்மைச் சத்தில் கனிமச் சத்து என்பது கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், மெலீனியம்.

     சிறுபான்மைச் சத்துக்கள் இரண்டு வகையாக இருந்தாலும், இருவேறு உலகமாக இருந்தாலும், காய்கறிகள், பழங்களில் இருக்கின்றன.

     சிறுபான்மைச் சத்து என்பது மில்லி கிராம் அல்லது மைக்ரோ கிராமில்தான் இருக்கும்.

     ஒரு கிராமின், ஆயிரத்தில் ஒரு பங்கு மில்லி கிராம்.

     ஒரு கிராமின், பத்து இலட்சத்தில் ஒரு பங்குதான் மைக்ரோ கிராம்.

     இந்த அளவிற்கு குறைவான சத்தாக இருந்தாலும், இவை இல்லாவிட்டால் பல பாதிப்புகள் வரும்.

---

     சைவம், அசைவம் என்று இரண்டுவித உணவுகள் இருக்கின்றன.

     சைவத்தைப் பொறுத்தவரை நார்சத்து எளிதில் ஜீரணமாகும். குறைந்த நேரத்தில் செரிமாணமாகிவிடும்.

     தாவரச் சத்துக்களை எடுக்கும்பொழுது, அது உடலில் உயிர் வேதிவினை நடைபெற்ற பின்னர் காரத்தன்மை உள்ளதாக மாறும்.

     இதெல்லாம், தாவரச் சத்தில் இருக்கக்கூடிய நன்மைகள்.

     காரத் தன்மை என்பது கழிவு நீக்கத்திற்கு வழிவகுக்கும்.

     ஆரோக்கியத்தை கொடுக்கும்.

     அசைவ உணவில் நார் சத்தே கிடையாது.

     எளிதில் ஜீரணமாகாது, குடலில் கழிவுகளாகத் தேங்கும்.

     குடல் என்பது 800 முதல் 900 மடிப்புகளாக உள்ளது.

     நார்ச்சத்து இல்லாத உணவானது, குடலின் திருப்பங்களில் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் நார்ச்சத்துள்ள உணவுதான் நல்லது.

     எல்லா அசைவ உணவும், அமிலத் தன்மையை உண்டாக்கும்.

     அமிலத் தன்மை கழிவு தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

     எனவே, சாப்பிடும் உணவை இருவேறு உலகமாகப் பிரிக்கலாம்.

     சைவம், அசைவம்.

     செரிமாணத்திற்கு முக்கியமானது குடல் ஆரோக்கியம்.

     குடல் நலம், உடல் நலம்.

     குடலைக் கழுவி, உடலை வளர் என்பதுதான, நம் முன்னோர் வாக்கு.

     குடல் நலம்தான் உடல்நலம் என்றால், குடல் நலத்திற்கு ஏற்றது எது?

     நார்ச்சத்து.

     அதுதான் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை வளர்க்கும்.

     நார்ச்சத்திலேயே இருவேறு உலகம் இருக்கிறது.

     நீரில் கரைபவை.

     நீரில் கரையாதவை.

     உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு இருக்கிறதென்றால் அது PH மதிப்பேயாகும்.

     PH மதிப்பு என்பது, அமிலத் தன்மையையும், காரத் தன்மையையும் பிரித்துக் காட்டும்.

     தண்ணீர் நடு நிலைமை உடையது.

     தண்ணீரின் PH மதிப்பு 7 ஆகும்.

     தண்ணீரை அளவுகோலாக வைத்து, 7 ஐ விட குறைவாக PH மதிப்பு போய்க் கொண்டிருந்தால், அவையெல்லாம் அமிலத்தன்மை வாய்ந்தவை.

     7 ஐவிட அதிகமாகப் போய்க் கொண்டிருந்தால், அவையெல்லாம் காரத் தன்மை வாய்ந்தவை.

     உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில், இரத்தத்தின் தூய்மை மிக மிக முக்கியமானதாகும்.

     இரத்தத்தின் PH மதிப்பு 7.35 இல்இருந்து 7.40 க்குள் இருந்தால், இரத்தம் தூய்மையாக இருக்கிறது என்று பொருள்.

     சிறிதளவே காரத்தன்மை இருந்தால் மட்டும்தான், இரத்தம் நல்ல இரத்தமாகும்.

     இரத்தத்தின் PH மதிப்பை நிலை நிறுத்தக்கூடிய, ஒரு அற்புதமான தொழிற்சாலை சிறுநீரகம்.

     அதனால்தான், இரண்டு சிறுநீரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

     நாம் உண்ணக்கூடிய உணவுகளில், அசைவ உணவு அனைத்தும், அமிலத் தன்மை வாய்ந்தது.

     அதைக் காரத்தன்மைக்குக் கொண்டு வரவேண்டும்.

     சில பருப்பு வகைகளும் அமிலத் தன்மையை உண்டாக்கும்.

     தானியங்களும் அமிலத் தன்மையை உண்டாக்கும்.

     அரிசி, கோதுமை அனைத்தும் அமிலத்தண்மை உடையவை.

     சிறு தானியங்களில் அமிலத் தன்மை குறைவாக இருக்கும்.

     பெரும்பான்மையான உணவுகளில் அமிலத் தன்மை இருக்கும்.

     இதிலிருந்து எப்படி காரத் தன்மையை நிலைநாட்ட முடியும்.

      சிறிதே காரத்தன்மை உள்ளதாக இரத்தத்தை மாற்றுவதற்கு, காரத்தன்மை தரக்கூடிய உணவுகளை சேர்க்க வேண்டும்.

     நீர்ச்சத்து அதிகமான காய்கறிகள் அனைத்தும் காரத் தன்மையை உண்டாக்கும்.

     எலுமிச்சை, தக்காளி, திராட்சை போன்ற பழங்கள் அமிலத் தன்மை வாய்ந்தவை.

     ஆனால் இவை நம் உடலுக்குள் சென்றவுடன் நடைபெறும் உயிர் வேதிவினையால், இவை காரத்தன்மையாக மாறும்.

     எனவே, ஒவ்வொரு வேளை உணவின்போதும், அது அரிசியோ, கொதுமையோ, எது சாப்பிட்டாலும், அது அமிலத்தன்மையை உண்டாக்குவதால், தனை ஈடு செய்ய, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்ச், திராட்டை போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

     இவை அமிலத் தன்மையை ஈடுகட்டி, காரத்தன்மைக்குக் கொண்டு  செல்ல உதவும்.

     இயற்கை இன்னொரு வகையிலும், நமக்கு உதவுகிறது.

     7.35 இல் இருந்து 7.40 வரை மட்டுமல்ல, 7.35 இல் இருந்து குறைந்து, குறைந்து 7.30 வரை வரலாம்.

     7.40 இல் இருந்து சற்று அதிகரித்து, அதிகரித்து 7.45 வரை போகலாம்.

     இரத்தத்தின் PH மதிப்பு 7.30 இல் இருந்து 7.45 வரை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

     7.30 க்கும் கீழே அல்லது 7.45 க்கும் மேலே, எவ்வளவு குறைந்தாலும், எவ்வளவு கூடினாலும் நோய்தான்.

     7.30 இல் உள்ள PH மதிப்பு 6.80 க்கு இறங்கிவிட்டால், இரத்தக் குழாய்கள் அரிக்கப்படும், இரத்தக் கசிவு ஏற்படும், திடீர் மரணம்.

     நீர்ச்சத்துள்ள காய்கறிகள் நம்மிடம் நிறைய உள்ளன.

     புடலங்காய்

     பீர்க்கங்காய்

     பரங்கிக்காய்

     வெண் பூசணி

      தர்பூசணி

     அத்தனையும் காரத்தன்மையை உண்டாக்கிவிடும்.

     அமிலத் தன்மையையும், காரத் தன்மையையும் படைத்த இயற்கையே, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, காரத் தன்மையை உண்டாக்கக்கூடிய உணவுகளை கொடையாகக் கொடுத்துள்ளது.

     நம் உடலுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் அமிலத் தன்மை, காரத் தன்மை உண்டு.

     விவசாயத்தில் மண் பரிசோதனை செய்வார்கள்.

      அமிலத்தன்மை உள்ளதெல்லாம், தானியங்கள் விளைவிக்கப் பொருத்தமானதாக இருக்கும்.

     காரத்தன்மை உள்ளதெல்லாம் பழங்கள் விளைவிக்கப் பொருத்தமானதாக இருக்கும்.

---

     வேறொரு கோணத்தில், நாம் ஆரோக்கியத்தைப் பார்க்கவேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி, தன்னுடல் எதிர்ப்பு என இருவேறு உலகம் உள்ளது.

     இயற்கையே நம் உடலுக்குள் ஒரு மருத்துவரை அனுப்பியுள்ளது.

     அதுதான் நோய் எதிர்ப்பு சக்தி.

     நம் முன்னோர் இதனைப் பல வழிகளில் அதிகரித்துள்ளனர்.

     கோயில்களில் பிரசாதமாக துளசி கொடுப்பார்கள், வேப்பிலை கொடுப்பார்கள், வெற்றிலை கொடுப்பார்கள்.

     இதுபோன்ற இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

     புதினா, மிளகு, பூண்டு, பப்பாளிச் சாறு, கீழா நெல்லி இவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியன.

     இன்னொன்று தன்னுடன் எதிர்ப்பு.

     எதெல்லாம் உணவு இல்லையோ, அதையெல்லாம் உணவாகச் சாப்பிடக் கூடிய கலாச்சாரத்திற்குள் நாம் மாட்டிக்கொண்டுள்ளோம்.

     பதப்படுத்தப்பட்ட உணவுகள், புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர் பாணங்கள்.

     இதில் எல்லாம் இனிப்புச் சுவைக்காக இரசாயனக் கலவையினைச் சேர்ப்பார்கள்.

     நீண்டநாள் கெடாமல் இருப்பதற்காக இரசாயனத்தைச் சேர்ப்பார்கள்

     குழந்தைகளைக் கவர்வதற்காக, உணவில் கலர் சேர்ப்பதற்காக இரசாயனத்தைச் சேர்ப்பார்கள்.

     மதுவகைகள்

     அதிகரித்த டீ., காபி அதுவும் வெள்ளை சீனியுடன்

     இதையெல்லாம் சாப்பிடும்பொழுது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி என்ற மருத்துவரை நாம் சீரழிக்கிறோம்.

     குடலில் அதிகபட்சமாக 100 டிரில்லியன் செல்கள் உள்ளன என பார்த்தோம்.

     குடலில் 200 பில்லியன் குடியிருப்புகள் உள்ளன.

     நன்மை செய்யும், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.

     இந்த நுண்ணுயிரிகளுக்குள், இயற்கை ஒரு விகிதாசாரத்தை அமைத்துள்ளது.

     நன்மை செய்பவை 85 சதவிகிதம்.

     தீசை செய்பவை 15 சதவிகிதம்.

     இப்படியே இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்கும்.

     சில உணவு வகைகள் தீமை செய்யும் நுண்ணுயிரிகளின் சதவிகிதத்தை உணர்த்தும்.

     நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் சதவிகிதத்தை குறைக்கும்.

     சமச்சீரற்ற குடல் தன்மை.

     இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

     நுண்ணியிரிகளின் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய ஏற்றத் தாழ்வுதான், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.

     இதற்கான அறிகுறிகள் நமக்கே தென்படும்.

     செரிமாணக் கோளாறு

     நெஞ்செரிச்சல்

     இதை எப்படி சரி செய்வது.

     பழைய சோற்று நீர்.

     இளநீர்

     மோர்

     தயிர்

     இந்த உணவுகளின் வாயிலாக, குடல் நலத்தைப் பாதுகாக்கலாம்.

     சமச்சீரற்ற தன்மையை மீட்கலாம்.

     மீட்காவிட்டால், சமச்சீரற்ற தன்மை மேலும் பெருகும்.

     நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் குறையும்.

     தீமை செய்யும் நுண்ணுயிரிகள் அதிகரிக்கும்.

     இதன் பெயர்தான்

     தன்னுடல் எதிர்ப்பு.

     இருவேறு உலகம்.

     தன்னுடல் எதிர்ப்புத் தன்மை உண்டானால், சிறு குழந்தைகளுக்கும் நீரிழிவு, முடக்குவாதம், சொரியாசிஸ் உண்டாகும்.

     தன்னுடல் எதிர்ப்பு காரணமாக வரும், நோய்களை எளிதில் சரி செய்ய முடியாது.

      நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உலகம்.

      தன்னுடல் எதிர்ப்பு என்பது வேறொரு உலகம்.

     இருவேறு உலகம்.

---

     இன்றைய காலகட்டத்தில் முதல் மாரடைப்பில், முதல் பக்கவாதத்தில் பலர் இறக்கின்றனர்.

     காரணம் அமினோ அமிலங்கள்.

     நம் உடலுக்குத்  தேவையான அமினோ அமிலங்கள் 22.

     அதில் 9 அமினோ அமிலங்கள் மிக முக்கியமானவை.

     இவற்றை உணவில் முலமே கொடுக்க முடியும்.

     13 அமினோ அமிலங்களை நம் உடம்மே தயாரித்துக் கொள்ளும்.

     ஒன்பது அமினோ அமிலங்களில் முக்கியமானது மெத்யோனின்.

     மெத்யோனின் அளவு என்பது 18 மி.கி.,

     ஒரு நாளைக்கு ஒரு கிலோ எடைக்கு 18 மி.கி.,

     சரியான அளவில் மெத்யோனின் இருக்கும்பொழுது, நன்மைகள் கிடைக்கும்.

     குடல் புற்றுநோய் வராது.

     தோல் பாதுகாக்கப்படும்.

     நரம்பு மண்டலம் பலப்படும்.

     நரம்பு மண்டலத்தில் நியூரான்களுக்கு இடைய உள்ள தகவல் பரிமாற்றம் அதிகரிக்கும்.

     ஆனால் மெத்யோனின் அதிகமானால், அது சிஸ்டைன் என்ற அமினோ அமிலமாக மாறும்.

     அந்த அமினோ அமிலமும், நம் உடலில் ஹோமோ சிஸ்டைன் என்ற மற்றொரு வடிவத்தைப் பெறும்.

     இந்த ஹோமோ சிஸ்டைன் என்பது கொழுப்புக் கட்டி.

     இந்த கொழுப்புக் கட்டிகள், இரத்த நுண் குழாய்களுக்குள் படிய ஆரம்பித்துபிட்டால் பிரச்சனை வரும்.

     இந்த கொழுப்பு கட்டிகள், 7 மைக்ரோ மோல்/லிட்டர் வரை இருக்கலாம்.

     அதிகரித்தால், கொழுப்புக் கட்டிகள், இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்.

     கொழுப்பு கட்டிகள், இதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தினால் மாரடைப்பு.

     மூளையில் உள்ள இரத்த நுண் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தினால் பக்க வாதம்.

     இதைத்தவிர வேறு இரண்டு காரணிகள் உள்ளன.

     இரத்த நுண் குழாய்களுக்குள் இரத்தமே உறைந்து போய்விடும்.

     அதுதவிர, பிளாஸ்டிக்கின் எல்லை மீறிய பயன்பாடு.

     சூடான உணவுப் பொருட்களை நெகிழிப் பைகளில் வாங்குவதால், நம் உடலுக்குள் பிளாஸ்டிக் நுண் துகள்கள் நிறைய செல்கின்றன.

     இன்று, தாய்ப் பாலிலேயே பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துவிட்டன.

     முக்கியமான 9 அமினோ அமிலங்கள் இருக்கக்கூடிய இயற்கையான உணவு தாய்ப்பால்.

     அடுத்து தேங்காய் பால்.

     அமுதம் என்று சொல்லக்கூடிய தாய்ப்பாலிலேயே பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கின்றன.

     பிளாஸ்டிக் நுண் துகள்கள் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்போது, அதன் காரணமாக மாரடைப்போ, பக்கவாதமோ வரலாம்.

---

     இன்றைய உலகை ஆட்டிப் படைக்கக்கூடிய டிஜிட்டல் உலகிற்குள் செல்வோம்.

      ஜார்ஜ் பூல் என்பவர் 1854 ஆம் ஆண்டில் ஈரிணை எண்கள் அல்லது இருமை எண்கள் என்பதை அறிமுகப்படுத்தினார்.

     ஆம் என்றால் 1

     இல்லை என்றால் 0

     செயல்படு நிலை 1

     செயல்படா நிலை 0

     குறியீடுகளை செயல்வடிவமாக அறிமுகப்படுத்தினார்.

     இயற்கையை இயற்பியல் விதிகள் மூலம் நாம் விளக்குவது போல், நம் மூளையின் சிந்தித்தலை, மூளையின் செயல்பாட்டை ஆராய்வதற்கு கணிதரீதியாகவும் முடியும் என்பதற்காக ஈரிணை எண்களை(Binary Numbers)  அறிமுகப்படுத்தினார்.

     இதனை மின்பொறியாளர் கிளாட் ஷானன் என்பவர் மின் சுற்றுக்குகுள் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

     தகுந்த மின் சுற்றுகளை அமைத்து, மின்சாரம் கடத்தப்படும் நிலையை 1 என்றும், மின்சாரம் நிறுத்தப்படும் நிலையை 0 என்றும் மாற்றினார்.

     இந்த ஈரிணை எண்களின் அடிப்படையில் மூல், ஹாலன் ஆகியோருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில்தான், இன்றைய டிஜிட்டல் உலகம் அத்தனையும் செயல்படுகிறது.

     அத்தனை மின்சுற்றுகளுக்கும் காரணம் 0, 1.

     பைனரி எண்கள்.

     இருவேறு உலகம்.

     இதன் பயன்பாட்டில்தான், Bar Code, UPI Scannerகள் செயல்படுகின்றன.

     இன்னொரு இரட்டைத் தன்மை.

     QR Code ன் வெண்மைப் பரப்பு ஒளியின் அத்தனை அலை நீளங்களையும் பிரதிபலிக்கும்.

     கருமைப் பரப்பு அத்தனை நீளங்களையும் உறிஞ்சும்.

     கருமைப் பரப்பு உள்வாங்கி வைத்துக் கொள்ளும்.

     வெண்மைப் பரப்பு வாங்கி, திருப்பி அனுப்பும்.

     இந்த அடிப்படையில்தான் Bar Code, UPI Scannerகள் செயல்படுகின்றன.

     கருப்புப் பகுதியில் எந்த செய்தியும் இருக்காது.

     வெண்மை எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கருப்புப் பின்னனி.

     அந்த கருப்பின் செயல்படாத தன்மை 0.

     வெண்மைப் பின்னனியில்தான், தேவையான தகவல் இருக்கும்.

     யாருக்குப் பணம் அனுப்புகிறோமோ, அவர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

     Bar Code, UPI Scannerகள் எல்லாம் 0, 1 என்ற பைனரி சிஸ்டத்தில்தான் செயல்படுகின்றன.

     செயல்பட்டு மின் சுற்றுகளை இயக்கி, நாம் விரும்பிய செயலைச் செய்கின்றன.

    இதற்கு அடுத்ததாக, அண்மைக் காலங்களில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது.

     செயற்கை நுண்ணறிவிலும் இரு வேறு உலகம்.

     தொழிற் புரட்சியை ஏற்படுத்தும்.

     பொருளாதாரத்தை உயர்த்தும்.

     இது ஒரு உலகம்.

     நன்மை என்னும் உலகம்.

     இதன் மறுபக்கம், செயற்கை நுண்ணறிவிற்கு முதுகெலும்பாய் இருப்பதெல்லாம், தரவு மையங்கள் (Data Centres)

     நாம் எவ்வளவு தகவல் கொடுத்திருக்கிறோமோ, அதை வைத்துத்தான், செயற்கை நுண்ணறிவு செயல்பட முடியும்.

     ஒரு நூறு மெகாவாட் தரவு மையம் இருந்தால், அந்த தரவு மையத்தைக் குளிர்விக்க, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் லிட்டம் தண்ணீர் தேவைப்படுகிறது.

     தண்ணீர் பற்றாக்குறை.

     சாதாரண இணையத் தேடலைவிட செயற்கை நுண்ணறிவுத் தேடலுக்கு பத்து பங்கு மின்சாரம் தேவை.

     மின் சிக்கனம் இயலாது.

     தண்ணீர் பற்றாகறை வரும்.

     ஒரு பக்கத்தில் நன்மைகள் என்ற உலகம்.

     மறுபக்கத்தில் தீமைகள் என்ற உலகம்.

     மேலும் பலரின் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம்.

     இந்தியாவில் இதுபோன்ற செயற்கை நுண்ணறிவிற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்ற, தரவு மையங்கள் இருக்கும் இடங்கள் எங்கெங்கு தெரியுமா?

     மும்பை, பூனே, பெங்களூர், ஹைதராபாத், சென்னை.

     வடகிழக்கு இந்தியாவில், வட இந்தியாவில் ஒன்று கூட கிடையாது.

     வட இந்தியாவிலும், வடஇந்தியாவிலும்தான் நீர் வளம் அதிகம்.

     தேர்ந்தெடுக்கப்பெற்ற நகரங்கள் எல்லாம், ஏற்கனவே நீர் பற்றாக் குறையால் தவிக்கும் நகரங்கள்.

---

ஒருமையில் உலகெலாம் ஓங்குக

ஆன்மநேயம் தலைப்படுக

என்றார் வள்ளல் பெருமான்.

     எல்லா உயிரினமும் இன்புற்று வாழனும், எல்லா உயிர்களும் ஒரே ஆன்மாதான் என்றார்.

     அவரே இருவேறு உலகம் என்ற திருவள்ளுவரின் கருத்திற்கு வந்துவிட்டார்.

     இந்த உலக மக்களை அக இனத்தார், புற இனத்தார் என இரண்டாகப் பிரித்தார்.

     அருள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் அக இனத்தார்.

     அருள் வட்டத்திற்கு வெளியில் இருப்பவர்கள் புற இனத்தார்.

     அக இனத்தார், புற இனத்தார் என்ற இருவேறு உலகத்திற்குள் ஒருமையில் ஓங்குக என்றார் வள்ளல் பெருமான்.

     திருவாசகத்தின் மேன்மையைச் சொன்ன வள்ளல் பெருமகனார்,

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தை

கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான

நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே

     பறவைகள் உலகத்தையும், கீழ்ப் பறவை சாதி, மேல் பறவை சாதி என இரண்டாகப் பிரித்தார்.

     பொல்லா விலங்கு, நல்ல விலங்கு என இரண்டாகப் பிரித்தார்.

     எனவே, இருவேறு உலகம் என்பது மகத்தான மனிதர்களாலும், உத்தமர்களாலும் மறுக்க முடியாத உண்மை.

     இதனை திருக்குறளின் மேன்மை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

     இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, வள்ளுவனின் வாக்கு சாலச் சிறந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

11.10.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை

பாபநாசம், வட்டாரவள மையம், ஆசிரியர் பயிற்றுநர்


திரு மூ.பெரியசாமி அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற சொற்பொழிவின்போது.

ஏடகப் புரவலர்,

ஆன்மிகவாதி, அறிவியலாளர்,

சித்தர் சிந்தனையாளர், ஆசிரியர்

பணிநிறைவு செய்திட்டத்  தலைமையாசிரியர்


திருமிகு பா.பாண்டியன் அவர்கள்,

இருவேறு உலகத்து இயற்கை

என்னும் தலைப்பில் நிகழ்த்திய

தங்குதடையற்ற, அருவிபோல் ஆர்ப்பரித்து எழுந்த பொழிவு கண்டு,

ஏடக அரங்கே அமைதியில் உறைந்துதான் போய்விட்டது.

முன்னதாக,

பொழிவு கேட்க, வந்திருந்தோரை

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி இரா.புனிதா அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி கு.சங்கராந்தி அவர்கள்

நன்றி கூறினார்.

ஏடகம், சுவடியியல் மாணவர் மற்றும்

தஞ்சாவூர், துணை அஞ்சலக அலுவலர்


திரு சு.சரவணன் அவர்கள்

தன் தேர்ந்த மொழிநடையால்

விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.

புதியதோர் உலகிற்குள் நுழைந்து

புதுப் பார்வையும்

தெளிவும் பெற ஆவண செய்த

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.