07 டிசம்பர் 2013

வாழ்வின் விளிம்பில்

தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னங்  சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்று நினைத் தாயோ?
-          மகாகவி பாரதியார்

     நண்பர்களே, நரை கூடித்தான் போய்விட்டது இம்மனிதருக்கு. மீசையும், தலைமுடியும் வெண்ணிறமாய், அவரது மனம் போலவே காட்சியளிக்கின்றன. சின்னஞ்சிறு கதைகள் பல உண்டு இவரிடத்தில். இவரது பேச்சினைப் போலவே, இவரது எழுத்துக்களும் காந்தமாய் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை.

ஓடி விளையாடு பாப்பா – நீ
    ஓய்ந்திருக்க லாபாது பாப்பா
என்று பாடுவாரே மகாகவி பாரதி, இவ்வரிகள் பாப்பாவிற்கு மட்டுமல்ல இந்தத் தாத்தாவிற்கும் பொருந்தும். ஓய்வறியா உழைப்பிற்குச் சொந்தக்காரர் இவர்.

     ஆம் நண்பர்களே, இம்மனிதருக்கு வயது வெறும் எழுபத்து ஐந்துதான். உடலின் வயது என்று சொல்வதைவிட, அனுபவத்தின் வயது எழுபத்து ஐந்து என்று சொன்னால், மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆண்டுதோறும் இவரது உள்ளத்தின் வயது மட்டும் குறைந்து கொண்டே போகிறது.

     நண்பர்களே, இவர் யார் என்று ஊகித்துவிட்டீர்கள் அல்லவா? ஆம் தங்களின் ஊகம் சரிதான். நமது ஜி.எம்.பி., ஐயா அவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

 ஊன்றுகோலைப் பற்ற வேண்டிய வயதில், பல வேடிக்கை மனிதரைப் போல் வீழாமல், நெஞ்சம் நிமிர்த்தி, விசாலப் பார்வையோடும், சுவைமிகு சொல்லோடும் இவர் வலம் வருவதற்கு, இவரது கைகள் எழுதுகோலைப் பற்றி இருப்பதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். சரிதானே நண்பர்களே.

      வாழ்வின் விளிம்பில். ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின், சிறுகதைத் தொகுப்பு. ஆனால் இவற்றில் இருப்பதெல்லாம் கதைகள் அல்ல, வாழ்வியல் யதார்த்தங்கள்.


    

மனித வாழ்க்கையே விசித்திரமானது. அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல், வியாதியால் நலிவுற்று, யாரும் உதவ இல்லாமல், அனாதையாய் ஆறுதலற்றுக் கிடக்கும் ஜீவன்களும் வாழத்தான் ஆசைப்படுகின்றன.... இல்லை.... சாவைக் கண்டு பயப்படுகின்றன.

     வாழ்வின் விளிம்பில் என்னும் நூலின் முதற் கதையிலேயே நாம் கரைந்து போய்விடுவோம்.
     ஆலய வழிபாடுகளும், ஆண்டவன் தரிசனமும் மகப்பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால், அந்த பாக்கியம் இல்லாதவர்களே இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை எது என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையும், திருத்த முடியாத குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

     கேள்விகளே பதிலாய்.. என்னும் சிறுகதையில், ஐயா அவர்களின் எழுபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தை நாம் அறியலாம்.

     அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள். யாருக்காவது சேகரனைப் பற்றிய நினைவோ, ஏறி வந்த ஏணி பற்றிய எண்ணமோ இருப்பதில்லை என மனித மனத்தின் சுயநலத்தை, ஏறி வந்த ஏணி என்னும் கதையில் இறக்கி வைக்கிறார்.

     சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தது. இதை செலவு செய்யலாமா, நமக்கு தேவைதான் என்ன.. உடுக்க ஏதோ துணியும், உயிர்வாழ உணவும் போதாதா? தேவைக்கு மேல் செலவு செய்பவன் எங்கோ ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ உருவாக்குகிறான் என்று காந்தி சொன்னதாக படித்த ஞாபகம்.

     வாழ்க்கையில் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை, அனுபவி ராஜா அனுபவி என்னும் கதையில், எதையுமே அனுபவிக்காத ஒருவன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

     இப்படியும் ஒரு கதை என்னும் சிறு கதையில், முன்னொரு காலத்தில், கேரள மண்ணில் நடைமுறையில் இருந்த அவலத்தை, நம் கண் முன்னே நிறுத்துகிறார். படிக்கப் படிக்க நமக்கு மனம் பதறுகிறது. படித்தபின், இதனின்று மீண்டு வர சில நிமிடம் ஆகலாம்.

     கண் தெரியாமல் இருப்பதுபோல், பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்.

     பார்வையும் மௌனமும் என்னும் இக்கதை நம்மையும் மௌனத்தில் ஆழ்த்தும் வல்லமை படைத்தது.
 
ஒரு இனிமையான காலைப் பொழுதில்
ஜி.எம்.பி.,ஐயா, அவரது துணைவியார், ஹரணி அவர்களின் மகன்,  ஹரணி மற்றும் நான்
      நண்பர்களே, சிறுகதை என்னும் வடிவத்திற்குள் அடங்காமல் திமிறும் கதைகள் இவை. கதைகளில் அலங்காரமில்லை, ஆனால் உண்மையின் ஆழமிருக்கிறது.

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க
    உன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
    அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?

எனப்பாடும் பாவேந்தரின் வழி நின்று, பொதுமக்கள் நலம் நாடி, புதுக் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லவும், எழுதவும் ஜி.எம்.பி.,ஐயா அவர்களை வாழ்த்துவோமா நண்பர்களே?

வாழ்த்த வயதில்லை எனத் தயங்க வேண்டாம்,
உயர் குணமும், நல் மனமும்
இருக்கிறது நம்மிடம்
வாழ்த்துவோம் நண்பர்களே,

தொடரட்டும் ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்களின் எழுத்துப் பணி.

நூறாண்டு காலம் வாழ்க

நோய், நொடியில்லாமல் வாழ்க.
-------

மழலை நலம் பெற வேண்டுவோம்

குழல்இனிது யாழ்இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்

     நண்பர்களே, இன்று 7.12.2012 சனிக் கிழமை மாலை, பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு, நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, வருகை தந்தார் ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் திருமிரு புலவர் பன்னீர் செல்வம்.

     புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம். அங்கு பல்லாண்டுகளாக திருவள்ளுவர் ஞான சபை என்னும் அமைப்பினை நிறுவி வள்ளுவத்தின் வாக்கினைப் பரப்பி வருபவர். வள்ளுவரும், வள்ளுவமும் இவரது இரு கண்கள். தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருபவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் கொலுவீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இவரே காரணகர்த்தா.

     தஞ்சைக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தந்தவர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பி, மாலையோடு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தார்.

     நானும், நண்பர் சரவணன் அவர்களும், புலவரை வரவேற்று, திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். மாலை அணிவித்து, இரு கரம் கூப்பியபடி, அகர முதல எழுத்தெல்லாம் என இராகத்துடன் பாடத் தொடங்கினார். பாடப் பாட இவரின் நா தழுதழுக்கிறது.

     நண்பர்களே, நேற்றுதான் இவருக்குப் பெயரன் பிறந்திருக்கிறான். பெயரனை உச்சி முகர்ந்து, குழந்தைபோல், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டியவர் இவர். ஆனால் கண்களில் கண்ணீர் மழ்க வள்ளுவனை நாடி நிற்கிறார்.

     ஆம் நண்பர்களே, இயற்கையின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது. நேற்று பிறந்த இவரது பெயரனுக்கு ஆசன வாயே இல்லை.

     வள்ளுவத்தை மட்டுமே வாழ்நாள் முழுதும், மந்திரம் போல் முழங்கி வரும் இவரது பெயரன், ஆசன வாய் இல்லாமலேயே பிறந்திருக்கிறான். கடவுள் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறாரே, அது ஏன் நண்பர்களே.

     புதிதாய்ப் பிறந்த பச்சிளங் குழந்தைக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து, ஆசன வாயை உருவாக்க வேண்டுமாம். இன்று காலை முதல் அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தாக வேண்டும்.

     நண்பர்களே, என் பெயரனுக்கு ஏன் இந்த நிலை என்று கேட்டு, இவர் தெய்வத்தை நாடிச் செல்லவில்லை. வள்ளுவனை நாடி வந்திருக்கிறார். இவருக்குத் தெரிந்ததெல்லாம் வள்ளுவரும், வள்ளுவமும் மட்டுமே.



     திருவள்ளுவர் சிலையின் முன் நின்று கைக் கூப்பி, வள்ளுவத்தைப் பாடிக் கொண்டே இருக்கிறார். பார்த்துக் கொண்டிருந்த எங்களின் கண்கள் கலங்குகின்றன.

     நண்பர்களே, வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துவோமா நண்பர்களே, இறைவனை வேண்டுவோமா நண்பர்களே.


மழலை நல் வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுவோம்.

38 கருத்துகள்:

  1. சிறுகதை என்னும் வடிவத்திற்குள் அடங்காமல் திமிறும் கதைகள் இவை. கதைகளில் அலங்காரமில்லை, ஆனால் உண்மையின் ஆழமிருக்கிறது.

    அருமையாய் கதைகள் வடிவமைத்த ஐயா அவர்களுக்குப் பாட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துவோம்..பிரார்த்திக்கிறோம்..!

    பதிலளிநீக்கு
  3. அன்பு நிறை G.M.B. ஐயா அவர்களின் நூலுக்கு - தாங்கள் அளித்தது - சிறப்பு மணி மகுடம்!..

    உயர் குணம், நல் மனம் - இவற்றின் உறைவிடமான ஐயா அவர்களின் பணி தொடர எல்லாம் வல்ல சிவம் தண்ணருள் பொழிவதாக!..

    பதிலளிநீக்கு
  4. நினைத்துப் பார்க்கவே மனம் வருந்துகின்றது. மழலையின் துயர் தீர வேண்டுகின்றேன்!..

    குருவருளும் திருவருளும் துணை புரிவதாக!..

    பதிலளிநீக்கு
  5. எழுத்தாளர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

    மழலை நல் வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  6. சகோதரருக்கு வணக்கம்
    திரு.ஜி.எம்.பி அய்யா அவர்களின் சுறுசுறுப்பு கண்டு வியந்தது உண்டு நாமெல்லாம் அவரது அடி பற்றி செல்லக்கூடிய அற்புதமான படைப்பாளி. அவர்களின் சிறுகதை தொகுப்புக்கு நீங்கள் சிறப்பு சேர்த்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி. ஜி,எம்,பி அய்யா அவர்களின் பல்முகத்திறன் பற்றி அவரது படைப்புகளில் நான் படித்ததுண்டு. நாடக இயக்குநராக கூட செயல்பட்டிருக்கிறார். அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துவதோடு வணங்குகிறேன்.
    ==================
    தங்கள் பதிவால் அவரது புத்தகத்தைப் படிக்க வேண்டும் ஆவல் மிகுந்துள்ளது. அவரது புத்தகம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்!
    =================
    வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துவோம்.. இறை வேண்டலைத் தொடர்வோம். பச்சிளம் குழந்தை நலமாக வாழ வாழ்த்தி இறைவனையும் வள்ளுவப் பெருமானையும் வணங்கி வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மழலை நல் வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  8. சிறுகதை படிக்க ஆவல்......

    குழந்தைக்கு விரைவில் பூரண நலம் கிட்ட எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  9. தரமான புத்தகம் பற்றிய அழகான விமரிசனம்...

    பதிலளிநீக்கு
  10. அந்த மழலை விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
    நினைக்கவே நெஞ்சடைக்கும் துயரமாயுள்ளது.
    அவரின் பெற்றார், பேரனுக்கும் எனது வேண்டுதலையும் கூறுங்கள் ஐயா!

    திரு.ஜி.எம்.பி ஐயாவின் சிறுகதைப் புத்தக விமர்சனம் அருமை!.
    ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பகிர்வு செய்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
  11. தொடரட்டும் ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்களின் எழுத்துப் பணி.
    நூறாண்டு காலம் வாழ்க ! நோய், நொடியில்லாமல் வாழ்க!!

    மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.

    புத்தக விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  13. G.M.B அய்யா நூறாண்டு வாழவும் ,மழலை நலம் பெறவும் வேண்டுவோம் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
  14. நானும் ஜி எம் பி அவர்களின் எழுத்துக்கு
    ரசிகன் என்பதால் தங்கள் அருமையான விமர்சனம்
    மனம் கவர்ந்தது

    வள்ளுவப் பெருந்தகையின் மீது
    நமது சமூகம் நம்பிக்கை கொண்டு
    வணங்கப் பழகி இருந்தால் என்றோ
    பண்பாட்டிலும் அனைத்துத் துறைகளிலும்
    என்றோ உச்சம் தொட்டிருப்போம் என்பது நிச்சயம்

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. சிறுகதை அறிமுகம் அருமை..


    அய்யா என்ன கொடுமை குழந்தைக்கு ...
    நலம் பெரும் மழலை ...
    நம்புவோம்
    பிரார்த்திப்போம் ...

    பதிலளிநீக்கு
  16. அன்பின் ஜெயக்குமார்

    ஜி,எம்.பி ஐயாவின் அனுபவத்தின் வயது எழுபத்தைந்து - நம்பவே இயல்வில்லை - மதுரையில் பதிவர் சந்திப்பில் கலந்துரையாடினோம் - மறக்கவே இய்காது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ஜெயக்குமார்

    வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. நூல் விமர்சனம் அருமை. எதை எழுதினாலும் சிறப்பாக எழுதும் வல்லமை உங்களுக்கு இருக்கிறது. புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் சிக்கல்கள் தீர இறைவனை இறைஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. புலவர் அய்யா அவர்களின் புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்துவிட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  20. G.M.B. ஐயா அவர்களின் நூலுக்கு சிறப்பான விமர்சனம் ஐயா... வாழ்த்துக்கள்...

    குழந்தை விரைவில் பூரண நலம் அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  21. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைப் பற்றிப் படித்தவுடன்எனக்கு தஞ்சையில் உள்ள அழகிரி விஸ்வநாதன் ஐயா (1931) அவர்களின் நினைவு வந்தது. 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் 10 நூல்கள். சந்திக்கச்செல்லும்போதெல்லாம் எழுத்து, சமூகம் பற்றிய சிந்தனைகளே. இப்பெரியவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  22. அந்த குழந்தையை அவர் போற்றிய தமிழே காக்கும் .
    தெய்வத்தால் ஆகாதெனினும் ....
    விரைவில் அதையும் பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  23. G M B அவர்களின் நூல் ஒன்று கிடைக்குமா?
    படிக்கத்தூண்டிவிட்டீர்கள்.
    இந்த வயதிலும் அவரது பணி வியக்க வைப்பதாக.
    இறை நம்பிக்கை போல் வளுவத்தின் மீதான நம்பிக்கை/
    அவரது நம்பிக்கை பொய்த்துப்போகாது,எது ஒன்று இல்லாது போகும் போதுதான் ஆதன் அருமை தெரியும் என்பார்கள்.பேரனுக்கு இல்லாததை அவர் மனமுருகி வேண்டியது நெக்குருக வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. மிக அருமையான பதிவு.அய்யா அவர்களின் சிறுகதை அருமை.குழந்தை நலம்பெற வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  25. GMB அய்யாவின் ” வாழ்வின் விளிம்பில் “ என்ற நூல் விமர்சனம் படித்தேன். சுருக்கமாகவும் மனதில் பதியும் வண்ணமும் தந்து இருந்தீர்கள். அய்யாவின் நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.

    நல்லவர்களுக்குத்தான் எப்போதுமே சோதனை! இப்போது மருத்துவத் துறையில் நிறைய நவீன முன்னேற்றம் வந்து விட்டது. அய்யா புலவர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நல்லதே நடக்கும். “ மழலை நலம் பெற வேண்டுவோம் “ என்று நானும் உங்கள் பிரார்த்தனையில் பங்கு கொள்கிறேன். இறைவனிடம் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள்! GMP
    படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தாதீர்கள். மூளைக்கு இதை விட நல்ல மருந்து எதுவும் கிடையாது dementia - வாரமல் இருக்க!
    இந்த வெண்டைக்காய் சுண்டக்காய் எல்லாம் சும்மா!
    +1

    பதிலளிநீக்கு
  27. குழந்தை நலம் பெறவேண்டும்!

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு, திரு.ஜி.எம்.பி. அய்யாவின் புத்தகத்திற்கு தாங்கள் எழுதிய விமர்சனம் மிக அருமை. புத்தகதினை உடன் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து புலவர் திரு.பன்னீர்செல்வம் அவர்களின் பெயரனை பற்றிய செய்தி நேரிடையாக நானும் கேட்டதால் அந்த அதிர்வில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கிறேன். அக்குழந்தை விரைவில் நலமடைய நாம் அனைவரும் மனமார்ந்து ஆண்டவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  29. புலவர் அய்யா அவர்களின் புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்துவிட வேண்டும்...ஆசையாக இருக்கு உங்க்ளின் முன்னுரை மூலம் அறிந்து!

    பதிலளிநீக்கு
  30. எனது புத்தகம் பற்றிய விமரிசனத்துக்கு நன்றி. இதன் மூலம் புத்தக வெளியீடு பற்றி பலரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு.
    புலவர் பெயரன் குணமடைய வேண்டுவோர்களில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணியுமாம் என்றும் பெருமை
      சிறுமை அணியுமான் என்றும் தன்னை வியந்து
      என்ற குறள் போல் உண்மை சம்பவங்களை விவரிக்கும் கதைகளுக்கு அலங்காரம் தேவையில்லை.

      பொய்யை விவரிக்கத்தான்
      புனைந்துரைமற்றும்
      புகழுரைகள் பல தேவைப்படும்.

      வள்ளுவனைப் பற்றி மட்டும் நினைக்காமல்
      வள்ளுவனைப் படைத்த வல்லவனையும்
      நினைக்கதான் இறைவன் இந்த சிறிய
      மன வேதனையை தந்துள்ளான் போலும்!

      மனம் கனிந்து
      அவனை வேண்டினால்
      அந்த குறையையும் அவன்
      சரி செய்துவிடுவான்

      நீக்கு
  31. பெரியவர் ஜி எம் பி வாழ்க! புலவர் பன்னீர் அவர்களின் பேரன் நலம் பெற வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  32. அருமையான விமர்சனம்.பலசுப்பிரமணியம் சாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்
    ஐயா
    பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் ஐயா அவர்களின் பணி சிறக்கட்டும்
    பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ கட்டாயம் நாம் இறைவனை .பிராத்திப்போம்....
    மிகச்சிறப்பாக எழுதியள்ளீர்கள் .. வாழ்த்துக்கள் ஐயா

    குறிப்பு -எனது புதிய தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன் ஐயா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  34. வாழ்வின் விளிம்பில் “நல்ல அறிமுகம்.

    நல்லவர்களே இக்காலத்தில் நலிவடைகிறார்கள் .அவரின் பெயரன் நலமடைய நம்பிக்கை கொள்வோம் .நன்றி

    பதிலளிநீக்கு
  35. நண்பர்களே, சிறுகதை என்னும் வடிவத்திற்குள் அடங்காமல் திமிறும் கதைகள் இவை. கதைகளில் அலங்காரமில்லை, ஆனால் உண்மையின் ஆழமிருக்கிறது.//

    ஜி.எம். பாலசுப்ரமணியம் சார்அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அவரின் வாழ்வின் விளிம்பில் “ சிறுகதை புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.

    வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு