முதல் வெட்டு, வலது கையின் மணிக்கட்டுக்கு,
கொஞ்சம் மேலே விழுந்தது. அந்த வெட்டு எலும்பைக் கடந்து போகவில்லை. எலும்பு வெளியே
தெரிய, இரத்தம் பீரிட்டுக் கிளம்பியது.
கத்தி மீண்டும் ஒருமுறை வேகமாய் இறங்கியது.
இந்தத் தடவை கத்தி தனது வேலையை சரியாகச் செய்தது. அவளது வலது கை, பாறையின்
மீதிருந்து மெதுவாக உருண்டு, தரையில் விழுந்தது. நரம்புகள் நீட்டிக் கொண்டிருந்த
அந்தக் கை, சிறிது நேரம் துடித்து அடங்கியது.
மீண்டும் அதே பையன், இடதுகையையும் அதே போல்
பிடித்து இழுத்து பாறையின் மீது வைத்தான். நிச்சயமாக அந்தப் பையன் அவளை விட வயதில்
குறைந்தவனாகத்தான் இருப்பான்.
இப்பொழுது அந்தப் பெண்ணுக்குக் கதறவோ, கெஞ்சவோ
சத்தியேயில்லை. அவளது இடதுகையில், வாட்ச் கட்டும் இடத்திற்கு சற்று மேலே, கத்தி
வேகமாய் இறங்கியது. மூன்று முறை வெட்டியதும், இடது கையும் தனியே மண்ணில் விழந்தது.
அப்பெண்ணால் வலியை அப்பொழுது
உணரமுடியவில்லை. கால்கள் துவண்டன. வெட்டிய கத்தியைத் தன் உடையின் மீது, தேய்த்துத்
துடைத்தபடியே, அந்தப் பையன் நடந்து போவதைப் பார்த்தாள்.
நீ வளரும்போது உனக்கு விரல்கள் இருக்கக்
கூடாது. கைகள் இருக்கக் கூடாது. ஏனென்றால் நீ எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்துக்கு
ஓட்டுப் போடக் கூடாது. உன்னைப் போன்றவர்களை நாங்கள் கொல்ல மாட்டோம். கைகளைத்தான்
வெட்டுவோம். அப்பொழுதுதான், நாட்டை ஆளுகின்ற அராஜக அதிபருக்கு, நீ ஓட்டுப் போட
முடியாது என்று
ஒருவன் கத்தியது, அப்பெண்ணின் காதில் விழுந்தது.
அப்பெண்ணின் நினைவு நழுவத் தொடங்கிய,
அந்நொடியில், அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அதிபர் என்றால்
என்ன? ஓட்டு, ஓட்டு என்கிறார்களே, ஓட்டு என்றால் என்ன?
நண்பர்களே, அந்தப் பெண்ணின் பெயர் மரியாட்டு
கமாரா. ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் இருக்கும், சியாரா லியோனி
நாட்டைச் சேர்ந்தவள். சியாரா லியோனி நாட்டின், மிகச்சிறிய கிராமங்களில் ஒன்றான மேக்பரு
என்ற கிராமத்தைச் சேர்ந்தவள்தான் இந்த மரியாட்டு.
1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுவரை,
கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிய தேசம்தான் சியாரா லியோனி. ரெவல்யூசனரி
யுனைடெட் ஃப்ரண்ட் (Revolutionary
United Front) என்னும் ஆயுதமேந்திய புரட்சி இயக்கம்,
கிராமம் கிராமமாகப் புகுந்து, அப்பாவி மக்களின் வீடுகளைச் சூறையாடியது.
வயது
பாராமல் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். பல ஆயிரக் கணக்கானப்
பெண்களும், குழந்தைகளும் கொன்று குவிக்கப் பட்டனர். ஏராளமான குழந்தைகளின் கைகள்
வெட்டி வீசப்பட்டன.
சமூகம், குடும்பம், பெண்கள் மீது பெரு
மதிப்பு எனப் போற்றிய பாரம்பரிய
கலாச்சாரம் கொண்ட இந்நாடு, அடியோடு மாறிப் போய்விட்டது. காரணம் வறுமை,
வேலையில்லாத் திண்டாட்டம்.
மரியாட்டுவிற்கு நினைவு திரும்பியபோது,
அங்கு யாரும் இல்லை. வெட்டப் பட்ட கைகளைத் தரையில் ஊன்றி எழ இயலவில்லை. வலி உயிர்
போய்விடும் போலிருந்தது. மெதுவாக அப்படியும், இப்படியுமாக உருண்டு, முதலில்
முழங்காலிட்டு அமர்ந்தாள். அதன்பின் ஒரே மூச்சாக எம்பி எழுந்தாள்.
நான்
உயிரோடிருக்கிறேன்.... இனியும் உயிரோடு வாழ்வேன்
மனதிற்குள்ளாகத்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே ஓடத் தொடங்கினாள்.
வழியில் சிறு சிறு கிராமங்கள். பயந்து,
பயந்து, ஒளிந்து, ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த அக் கிராம மக்கள் மரியாட்டுவிற்கு
உணவு வழங்கி, கைகளுக்குக் கட்டுப் போட்டு விட்டனர். தொடர்ந்து நடந்தாள். போர்ட்
லோகோ என்னும் சிற்றூரை அடைந்தாள்.
போர்ட் லோகோவின் அரசு மருத்துவ மனையில்,
மரியாட்டுவின், வெட்டுக் காயத்தைக் கவனித்த செவிலியர், உன் காயத்துக்கு முழு சிகிச்சை
அளிப்பதாற்கான வசதி இங்கே இல்லை. நம் நாட்டின் தலைநகரான, ஃப்ரி டவுனுக்கு, இன்னும் சிறிது நேரத்தில்,
ஒரு ராணுவ வண்டி கிளம்புகிறது. உன்னைப் போன்ற இன்னும் பல நோயாளிகளையும், அழைத்துக்
கொண்டு போய், அங்குள்ள கனாட் மருத்துவ மனையில் சேர்க்க இருக்கிறார்கள்,
நீயும் அவர்களுடன் போ என்றார்.
கனாட் மருத்துவமனையில் மரியாட்டுவிற்குச்
சிகிச்சை அளிக்கப் பட்டது. கைகள் வெட்டப் பட்ட நூற்றுக் கணக்கானவர்கள்
அங்கிருந்தனர். மரியாட்டு சிந்தித்தாள், என்னைப் போன்ற அதே தலைவிதியைச்
சந்தித்தப் பலரும், தளர்ந்து விடாமல் வாழ முயன்று கொண்டிருக்கிறார்கள். நானும்
வாழ்வேன், வாழ்ந்து காட்டுவோன்.
கைகளே இல்லாமல் குளிக்கவும், சாப்பிடவும்,
உடை மாற்றிக் கொள்ளவும் பழகிக் கொண்டாள். கை முனையில் போடப்பட்டிருந்த கட்டின்
இடையே, டூத் பிரஷ்ஷைச் சொருகிப் பல் விளக்கவும், சீப்பைச் சொருகி தலை வாரவும்
கற்றுக் கொண்டாள்.
நண்பர்களே, மருத்துவ மனையில் இருந்தபோது,
மரியாட்டுவைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். மரியாட்டு
நீ கர்ப்பமாக இருக்கிறாய்.
வியப்பாக இருந்தது மரியாட்டுவிற்கு. எனக்கு
ஒரு குழந்தை வரப்போகிறதா. குழந்தை என்பது பெண்களின் தொப்புள் ஓட்டையிலிருந்துதான்
வெளி வரும் என்று எனக்குச் சொல்லியிருந்தார்களே. பிள்ளை உண்டானவளின் வயிறு, வாத்து
மாதிரி வீங்கிக் கொண்டே போவதையும், திடீரென்று ஒரு நாள் வலியில் துடிக்கும் பெண்கள், வைத்தியக்காரியின்
குடிசைக்குள் ஓடுவதையும் பார்த்திருக்கிறேனே. மறுநாள் வயிறு சிறுத்துப் போய்,
கையில் குழந்தையுடன், குடிசையில் இருந்து வெளிவருவதையும் பார்த்திருக்கிறேனே.
ஆண் பெண் என்றால் என்ன? உறவு என்பது என்ன?
என்பதைதெல்லாம் மரியாட்டு சிறிது புரிந்திருந்தாள். இருப்பினும் தன் வயிற்றுக்குள்
எப்படி குழந்தை உருவானது என்பதுதான் புரியவில்லை.
நண்பர்களே, வெகுநேரம் யோசித்துக் கொண்டே
இருந்த மரியாட்டுவிற்கு, மேக்பரூ கிராமத்தில் இருந்து, தப்பியோடுவதற்கு ஒரு
மாதத்திற்கு முன் நடந்த சம்பவம் நினைவில் வந்தது.
வீட்டில் யாருமில்லாத சமயத்தில், வீட்டிற்கு
வந்த உறவினர் ஒருவர், வயதானவர், தனது அருகில் படுத்து தொந்தரவு செய்து கொண்டே
இருந்தது நினைவிற்கு வந்தது. அவர்தான் குழந்தையைக் கொடுத்துவிட்டுப்
போயிருக்கிறார் என்பது புரிந்தது.
நண்பர்களே, ஒரு குழந்தைக்குக் குழந்தை
பிறக்கப் போகிறது. அதுவும் தொட்டுத் தூக்கக், கைகளே இல்லாத மரியாட்டுவிற்குக்
குழந்தை பிறக்கப் போகிறது. என்ன உலகம் இது.
சிகிச்சை முடிந்து, மருத்துவ மனையில்
இருந்து வெளியேறிய மரியாட்டு, அபெர்தீன் எனப்படும் அகதிகள் முகாமில் தஞ்சம்
புகுந்தாள்.
முகாமிற்குப் போனபிறகுதான் தெரிந்தது, அது
எத்தனை மோசமன இடம் என்பது புரிந்தது. எச்சிலும், அழுக்கும் எல்லாப் பக்கமும்
நாறிக் கொண்டிருந்தது.
அபெர்தீன் அகதிகள் முகாமில்,
மாரியாட்டுபோல், கைகள் வெட்டப் பட்ட நானூறு பேர் இருந்தனர். சரியான உணவு கிடையாது.
உடை கிடையாது.
நண்பர்களே, முகாமில் சேர்ந்த மரியாட்டு
மற்றவர்களுடன் சேர்ந்து, உணவிற்காகவும், உடைக்காகவும் என்ன செய்தாள் தெரியுமா?
பிச்சை எடுத்தார். பல காலம், தெருவோரங்களில் நின்று பிச்சை எடுத்துத்தான், வயிற்றை
நிரப்பினாள்.
குழந்தையுடன் மரியாட்டு |
நண்பர்களே, ஒரு நாள் வெளிநாட்டுப்
பத்திரிக்கையாளர்கள் இம்முகாமிற்கு வந்தனர். மரியாட்டு அவர்கள் முன் நின்றுப்
பேசத் தொடங்கினாள், என் பெயர் மரியாட்டு....
பேசப் பேச, இறுகிப் போயிருந்த
மரியாட்டுவின் நினைவுகள், அருவியாய் கொட்டத் தொடங்கின. கிட்டத் தட்ட பத்து மணி
நேரம், புரட்சிக் காரர்களிட்ம் பிணைக் கைதியாய் சிக்கியிருந்தது, கேலியும்
கிண்டலுமாய் துண்டிக்கப் பட்ட கைகள், ரத்தம் கசியக் கசிய, காடும் மேடும் ஓடிக்கொண்டேயிருந்தது
என மூச்சு விடாமல் பேசினார்.
அடுத்த சில நாட்களில் பத்திரிக்கைகளில்
மரியாட்டுவின் படத்துடன் செய்தியும் வெளியானது.
நண்பர்களே, மரியாட்டுவின் நல்ல நேரம்
தொடங்கியது. மரியாட்டு பற்றிய செய்திகளை அறிந்த கனடா தம்பதியினர், மரியாட்டுவைத்
தத்து எடுத்துக் கொண்டனர். கனடாவிற்கும் அழைத்துக் கொண்டனர்.
நண்பர்களே, மரியாட்டு கனடாவில் பள்ளிக்குச்
சென்றார். பாடம் படித்தார். தற்பொழுது கனடாவின், டொரண்டோவில் உள்ள கல்லூரியில்
படித்து வருகிறார்.
உலகெங்கும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ள
யுனிசெஃப் அமைப்பு, மரியாட்டுவைத் தனது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தது.
உலகெங்கும் உள்ள நாடுகளில், போரினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மரியாட்டுவின் இன்றைய முக்கியப் பணி.
நண்பர்கேளே, மரியாட்டுவின் எண்ணம் பெரியது.
முயற்சி பெரியது. செயலும் பெரியது. பெரியது மட்டுமல்ல நண்பர்களே, உன்னதமானது,
புனிதமானது.
மரியாட்டுவின்
எண்ணம் ஈடேற வாழ்த்துவோமா நண்பர்களே.
மரியாட்டு
பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள
www.mariatufoundation.com