08 அக்டோபர் 2014

களிறு கண்டேன்


நண்பர்களே, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும் விரும்பும் ஒரு விலங்கு உண்டென்றால், அது யானையாகத்தான் இருக்கும்.

     யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. யானைக் கூட்டங்களைப் பொறுத்தவரை குடியாட்சி கிடையாது. மன்னராட்சிதான். மன்னராட்சி என்பதுகூட தவறு, மன்னி ஆட்சிதான், இராணி ஆட்சிதான்.

     வயது முதிர்ந்த பெண் யானையே கூட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தும். ஒரு கூட்டத்தில் மூன்று சோடிகள் மற்றும் யானைக் குட்டிகள் என பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.

     ஒரு முறை, ஒரு பெண் யானை கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அப்பொறுப்பு, அப்பெண் யானை இறக்கும் வரை தொடரும்.

     இராணி யானை இறந்துவிட்டால், அடுத்துப் பட்டத்திற்கு வருவது, இராணி யானைக்குப் பிறந்த, மூத்த பெண் யானைதான். இராணி யானையின் சகோதரிக்கு, இந்த வாய்ப்பு, எந்நாளும் கிட்டாது.

     நண்பர்களே, ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? நமது முற்கால மன்னர்கள், இந்த யானைக் கூட்டங்களிடம் இருந்து,  தங்களது அடுத்த வாரிசு யார்? என்பதைக் கற்றுக் கொண்டார்களா? அல்லது நமது மன்னர்களிடம் இருந்து, இந்த யானைகள் கற்றுக் கொண்டனவா? என்பதுதான் புரியவில்லை.
    

கோடைக் காலங்களில், யானைக் கூட்டங்கள், மற்ற யானைக் கூட்டங்களுடன் இணைந்து, பெரிய குழுவாக, உணவு தேடி யாத்திரை செல்வதும் உண்டு.


     நாளொன்றுக்கு பத்து முதல் இருபது கிலோ மீட்டர் தூரம் வரை உணவு தேடி, இந்த யானைகள் பயணிக்கும்.

     உணவென்றால் ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு, 150 கிலோ எடையுள்ள உணவும், தாகம் தணிக்க 40 லிட்டர் தண்ணீரும் தேவை.

    நண்பர்களே, யானையின் கர்ப்ப காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் இரண்டு ஆண்டுகள். மூளையும், துதிக் கையும் வளர்வதற்குத்தான் அதிக காலம் தேவைப்படுகிறது. மனிதனைப் போல் அல்ல, முதல் குட்டிக்கும், இரண்டாம் குட்டிக்குமான, கால இடைவெளி, குறைந்தது நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

      யானை தன் குட்டியினை ஈன்றெடுக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முதல், சில சமயம் சில நாட்கள் வரை, யானையின் பிரசவ வேதனை தொடரும்.
      


நாமெல்லாம், மனைவிக்கோ, சகோதரிக்கோ பிரசவம் என்றால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிரசவ அறையின் கதவுகளுக்கு வெளியே காத்திருப்போம். மருத்துவர் வெளியே வர மாட்டாரா? நல்ல செய்தியினைக் கூற மாட்டாரா? எனத் தவித்திருப்போம்.

     ஆனால் நண்பர்களே, யானைகள் நம்மைப் போல் அல்ல. பெண் யானை, தன் குட்டியினைப் பிரசவிக்கும் பொழுது, மற்ற யானைகள் அனைத்தும், உடனிருந்து உதவி புரியும். மருத்துவராக, தாதியாக யானைகளே பணியாற்றி, ஓர் புதிய உயிர்க்கு இவ்வுலகினை அறிமுகம் செய்து வைக்கும். குட்டி யானைகள் கூட, தன் தாய் பிரசவிப்பதை உடனிருந்து உன்னிப்பாய் கவனிக்கும்.

     நண்பர்களே, இப்பதிவின் தொடக்கம் முதலே, ஓர் சிந்தனை, ஓர் சந்தேகம், உங்களின் மனதின் ஓர் ஓரத்தில் இருந்து, எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பதை, உணர முடிகிறது.

     எதற்காக இவன், யானையைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கிறான். எல்லாம் தெரிந்த செய்திகள்தானே? என நீங்கள் யோசிப்பது புரிகிறது. தெரிந்த செய்திகள்தான் என்றபோதும், நினைவூட்டுவதற்காகத்தான் கூறினேன்.

     எதற்காக நினைவூட்ட வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழுகிறதல்லவா? நியாயம்தான்.

      வேறொன்றுமில்லை நண்பர்களே, சில நாட்களுக்கு முன், நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து, ஒரு கோயிலுக்குச் சென்று வந்தேன். அக்கோயிலில் நான் கண்ட காட்சிதான், யானைகள் பற்றிய நினைவலைகளை கிளறிவிட்டு விட்டது.

      நண்பர்களே, நாம் அனைவருமே கோயில்களுக்குச் சென்று வருபவர்கள்தான். கோயிலின் கம்பீரத்தில்,  அதன் பழைமையில், கோயிலில் உள்ள சிற்பங்களின் எழிலில் மங்கித் திளைத்தவர்கள்தான்.

     ஆனாலும், எக்கோயிலிலும் காணாத காட்சி ஒன்றினை, நான் சென்ற, இக்கோயிலில் கண்டேன். கண்ட காட்சியை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட, வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது.

     எனது நண்பரும், எம் பள்ளித் உதவித் தலைமையாசிரியருமான திரு அ.சதாசிவம் அவர்கள் மிகப் பெரிய பக்திமான். இறைவனை வணங்குதலையே, தன் முழு நேரப் பணியாகச் செய்து வருபவர்.

     சில நாட்களுக்கு முன், ஒரு நாள் நண்பர்கள் திரு அ.சதாசிவம், திரு வி.பாலசுப்பிரமணியன், திரு எஸ்.தனபாலன் மற்றும் திரு ஜெ.கிருஷ்ணமோகன் ஆகியோருடன் சேர்ந்து புறப்பட்டேன்.

     நண்பர் திரு வி.பாலசுப்பிரமணியன் அவர்கள் மகிழ்வுந்து வைத்திருக்கிறார். திறமையான ஓட்டுநரும் கூட. அவருடன் பயணிப்பதே இன்பம்தான். ஆனால், அவ்வப்பொழுது ஒரு சந்தேகம் தோன்றும். மகிழ்வுந்தில்தான் பயணிக்கிறோமா? அல்லது வானூர்தியில் பயணிக்கிறோமா? என்ற சந்தேகம் மட்டும், அடிக்கடித் தோன்றும்.

    ஐவரும் இணைந்து பயணித்தோம்.  இல்லை, இல்லை பறந்தோம்
    

கும்பகோணத்தில் இருந்து, மயிலாடுதுறை செல்லும் வழியில் ஒரு சிற்றூர். திருபுவனம். பட்டுச் சேலைகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவ்வூரில் அமைந்துள்ள அழகிய ஆலயம்தான் அருள்மிகு சரபேசுவரர் ஆலயம்.

      சரபேசுவரர் ஆலயமானது, சோழ மன்னனாகிய, குலோத்துங்கச் சோழனால், தனது வட நாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டப் பெற்றதாகும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் கட்டப் பெற்ற கோயிலாகும் இது. தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே, கருவறையின் மேல் விமானம் வானுயர்ந்து நிற்கும்.

     சரபேசுவர்ர் கோயிலின் நாற்புறத்திலும், சுவற்றின் கீழ்ப் பகுதியில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள, அழகிய சுதை சிற்பங்கள், மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அச்சிற்பங்களுள் ஒரு சிற்பம்தான், எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்தது.

     நமது முன்னோர்கள் இயற்கையினையும், கானகங்களில் வாழும் விலங்கினங்களின், செயல்களையும், பழக்க வழக்கங்களையும், எத்துனை தூரம், உன்னிப்பாக கவனித்து, உணர்ந்திருந்தார்கள், அறிந்திருந்தார்கள் என்பதற்கு இச்சிற்பம் ஒரு உதாரணம்.
    





ஒரு பெண் யானை பிரசவிக்கும் காட்சி. யானைக் குட்டி பாதி வெளி வந்த நிலையில் ஓர் சிற்பம். தாய் யானையின் முகத்தினைப் பாருங்கள். எத்தனை எத்தனை உணர்சிகள். ஒரு மகவினை ஈனும் மகிழ்ச்சி ஒருபுறமும், பிரசவகால வேதனை ஒரு புறமும் தெரிகிறதல்லவா.

     தந்தை யானை, கவலை தோய்ந்த முகத்துடன், காதலுடன், தாய் யானையினைக் கீழே விழுந்து விடாமல், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொண்டிருக்கும், இந்த அற்புதக் கர்ட்சி, நம் நெஞ்சில் ஓர் நெகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறதல்லவா.

     மூன்றாவது யானையைப் பாருங்கள். தாய் யானையின், வாலினைத் தன் துதிக்கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, குட்டியானை தடையின்றி வெளிவர உதவும் காட்சி, கண்களைக் கலங்க வைக்கிறதல்லவா.

     ஒவ்வொரு யானையின் முகத்தினையும் பாருங்கள். ஒவ்வொரு யானையும், ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை அல்லவா வெளிப்படுத்துகின்றன.

      இச்சிற்பத்தின் முன் அமர்ந்த எங்களுக்கு, சுயநினைவிற்கு வரவே சிறிது நேரம் பிடித்தது.

      நண்பர்களே, ஒரு தேர்ந்த கலைஞனின், கைவண்ணத்தில் உருவான, இந்த அற்புதக் காட்சி, விவரமறியா விஷமிகளின் கரம் பட்டு, சிதைந்து போயிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

      கோயில் என்பது வெறும் கட்ட்டமல்ல. பழங்காலத்தில், இதுவே நெற் களஞ்சியம். இதுவே பொற் களஞ்சியம். இயற்கை இடற்பாடுகளின் போது, இதுவே மக்களின் புகழிடம். திருவிழாக்கள் நட்க்கும் கூடம். கலைகள் அரங்கேறும் மேடை.

     எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் தொல்காப்பியர். அதுபோல், நம் முன்னோர் எழுப்பிய, கோயில்களின், ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செய்தியினை உரைக்கும் வல்லமை வாய்ந்தவை.

     தமிழ் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியை, அதன் தொன்மையை, அதன் பெருமையை, நமக்கு உணர்த்தியவை, கோயில் கல்வெட்டுக்கள்தானே.

     கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை. கற்றோடும், மழையோடும், பெரும் புயலோடும் போராடித் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிறப்ங்களை, நாமே சிதைக்கலாமா?


      இனியாவது சிற்பங்களை எட்ட நின்று ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.