02 ஏப்ரல் 2015

ஆனை மலை


நண்பர்களே, நலம்தானே.

      கடந்த பல வருடங்களாக, சில நூறு முறையாவது மதுரைக்குச் சென்று வந்திருப்பேன்.

      ஒவ்வொரு முறை, ஒத்தக் கடையைக் கடந்து செல்லும் பொழுதும், நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் ஆனை மலையைக் கண்டு வியப்பு அடைந்திருக்கிறேன்

      இயற்கை தந்த கொடையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் ஆனை மலையை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும், ஆனை மலையில காலார நடந்து மகிழ வேண்டும், ஆனை மலையில் மோதித் திரும்பும் காற்றை சுவாசித்து இன்புற வேண்டும் என்ற எனது எண்ணம், நிறைவேறாமல், பகற் கனவாகவே நீடித்து வந்தது.

     சில நாட்களுக்கு முன், நண்பரும், கரந்தைத் தமிழ்ச சங்கத் துணைத் தலைவருமான திரு இரா.சுந்தர வதனம், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும் நண்பருமான திரு மு.பத்மநாபன் ஆகியோருடன், மதுரைக்குச் செல்லும் ஓர் வாய்ப்பு கிடைத்தது.

     மதுரை சென்றோம். வந்த அலுவல் முடிய இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருந்த வேளையில், என்னுள் ஆனை மலை எட்டிப் பார்த்தது.

      இரண்டு மணி நேரம், வெறுமனமே, அமர்ந்திருப்பதை விட, ஆனை மலைக்குச் சென்று வந்தால் என்ன? என்னும் எண்ணம் தோன்றியது. விருப்பத்தைத் தெரிவித்தேன். சற்றும் தயங்காது, இருவருமே, வாருங்கள் சென்று வருவோம் என்றனர்.

ஆனை மலை

     சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும், 400 மீட்டர் உயரமும் கொண்ட மாமலையாகும். சற்று தொலைவில் இருந்து பார்த்தால், யானை ஒன்று படுத்தபடி ஓய்வெடுப்பதைப் போல் தோன்றுவதால், ஆனை மலை என்ற பெயரினைப் பெற்ற மலை.
    


அக்காலத்தில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஊருக்கு வெளியே, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள, இம் மலை, சமணர்களின் தங்குமிடமாக இருந்துள்ளது.

     யானையின் துதிக்கையைப் போல் தோன்றும், மலைப் பகுதியில், இயற்கையாய் அமைந்த சிறு குகையில், பாறையினையே, கட்டில் போல் செதுக்கி, சமணர்கள் தங்கள் படுக்கையாகப் பயன்படுத்தி உள்ளனர். இவைகள் சமணர் படுக்கைகள் என்றழைக்கப் படுகின்றன.

     நண்பர்களே, சமணர் படுக்கையிலன் அருகே காட்சியளிக்கும் கவ்வெட்டில், பொறிக்கப் பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?

இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

    ஒன்றும் புரியவில்லைதானே?

    இவம் எனில் சமஸ்கிருத்ததில் யானை என்று பொருள்.

  குன்றம் என்றால் மலை என்பது தெரியும்.

    எனவே இவகுன்றத்து என்றால் யானை மலை என்று புரிகிறதல்லவா.

    உறையுள் எனில் தங்குமிடம். பாதந்தான் எனில் பாய் அல்லது படுக்கை என்று பொருள்.

    அத்துவாயி அல்லது அட்டவாயி எனில் சொற்பொழிவாளர்கள் என்று பொருள்.

    ஏரி ஆரிதன் மற்றும் அரட்ட காயிபன் என்னும் சொற்கள் இரு சமணத் துறவிகளின் பெயர்களாகும்.

     ஆனை மலையில் தங்கிய, இரு சமணத் துறவிகள், சொற்பொழிவாற்றி, தங்கள் சமயத்தை பரப்பினர் எனப் பொருள் கொள்ளலாம் அல்லவா.

     ஆனை மலையை ஒட்டியுள்ள, நரசிங்கப் பெருமாள் குடவறைக் கோயில், கி.பி.770 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட, மாறஞ்சடையான் பராந்தக நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனால் உருவாக்கப் பட்டதாகும்.

     எனவே இம் மலையும், மலை சார்ந்த இடமும் நரசிங்க மங்கலம் என்றே அழைக்கப் பட்டது. இதுவே பின்னர் சுருங்கி நரசிங்கம் ஆயிற்று.

     இதோ ஒத்தக் கடையை நெருங்கி விட்டோம். ஒத்தக் கடை வீதி வழியாக, ஆனை மலையின் பின்புறம் பயணித்தோம். சிறிது தொலைவிலேயே, ஒரு பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது.

சமணர் சிற்பங்கள் ஆனை மலை.

    மகிழ்வுந்தில் இருந்து கீழிறங்கினோம். மலையின் அடிவாரத்தை நோக்கி, ஒரு சிமெண்ட் தரை.

    

மனதில் மகிழ்ச்சியை உணர முடிந்தது. நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி.

    மலை அடிவாரத்தில் இருந்து. மலையிலேயே செதுக்கப் பெற்ற, குறுகிய படிக் கட்டுகள் மேல் நோக்கிச் செல்ல, மெதுவாக ஏறினோம். படிக்கட்டுகளை ஒட்டி, ஒரு இரும்புக் கைப்பிடியும், நீண்டு கொண்டே சென்றது.

    



படிகளில் ஏற, ஏறத்தான் வயதாகி விட்டது என்ற உண்மை உறைக்கத் தொடங்கியது. தினசரி மேற்கொண்டிருந்த, அதிகாலை நடைப் பயிற்சியை, சமீப காலமாக, சரியாகத் தொடராத்தன் பலனை அனுபவிக்க வேண்டியிருந்தது.

     இனி காலையில் ஒழுங்காக நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

     படிகளின் நிறைவில், ஒரு இரும்புக் கதவு, எங்களுக்காகத் திறந்தே இருந்தது.

    


ஒரு சிறு சம தளம். இடது புறத்தில் குகை போன்ற அமைப்பு. உள்ளே நுழைந்ததுமே தெரிந்து விட்டது, இது குகையல்ல.

     நீண்ட நெடிய கற் பாறைகளின் மீது, ஒரு பெரிய்ய்ய்ய பாறையை தூக்கி வைத்தாற் போன்ற அமைப்பு.

    



மீண்டும் வெளியே வந்து பார்த்த போதுதான் மெதுவாக ஓர் எண்ணம் தோன்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இம் மலைப் பகுதியில், ஒரு மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக, மலையின் மீதிருந்த, ஒரு பெருங் குன்று அளவிலான பாறை, பெயர்ந்து, அடிவாரத்தை நோக்கி உருண்டு வரும் போது, இவ்விடத்தில் உள்ள பாறைகள் தடுத்ததால், அப்பாறைகளின் மீதே, அக் குன்று, நிலைத்து நின்று, ஓய்வெடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது.



இக்குன்றின் முகப்பில், வரிசையாய் கண்கவர் புடைப்புச் சிற்பங்கள். மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி மற்றும் அம்பிகா.

     கி.பி.9 அல்லது கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக்க் கருதப் பெரும், இச்சிற்பங்களின் கீழ், தமிழ், கிரந்தம், வட்டெழுத்து ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

     மெய்மறந்து சிற்பங்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம்.

    மலையடிவாரத்தில், நரசிங்க பெருமாள் கோயில், எழிலுடன் காட்சியளிப்பதையும் கண்டு களித்தோம்.

   
இவ்வுலகு உள்ள வரை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆனை மலையும், அதிலுள்ள சிற்பங்களும்.

     ஆனாலும் நண்பர்களே, மனம் வேதனைப் படத்தான் செய்கிறது. ஆயிரம் ஆண்டுகளாய், நம் முன்னோர்களால் போற்றிப் பாதுகாக்கப் பட்ட ஆனை மலை, பல்வேறு படையெடுப்புக்களாலும், சேதப் படுத்தப் படாத ஆனை மலை,  பழமையின் மகத்துவம் அறியாத, இன்றைய மனிதர்களால், தன் பொலிவினை இழந்து கொண்டு வருகிறது.

     பாறைகளில் பல்வேறு கிறுக்கல்கள். இலை வடிவப் படங்கள், அதனுள் பாயும் மன்மதன் அம்பு என இன்றைய இளைஞர்களின், கை வண்ணங்களை ஆங்காங்கே காண முடிகிறது.

    தமிழகத்தில் பரவி வரும் டாஸ்மாக் கலாசாரம், ஆனை மலையையும் விட்டு வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும, உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், சிகரெட் துண்டுகள்.

     உலகிற்கு அன்பையும், அகிம்சையையும் மட்டுமே போதித்த, மாமனிதர்களின் காலடிச் சுவடுகள், பதிந்துள்ள இம் மலையில், இங்குள்ள பாறையில் காட்சியளித்துக் கொண்டிருக்கும், மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி மற்றும் அம்பிகா ஆகியோரின் கண் முன்னே, நாள்தோறும் அரங்கேறும், ஒழுக்கச் சீர்கேடுகள், மனதை உளி கொண்டு ரணப் படுத்துகின்றன.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, நம் மூதாதையரின் பண்பாடு, இக்கால நவநாகரிக மனிதர்களிடம், எள்ள்ளவும் இல்லையே என்பதை எண்ணும்போது, ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் விடையாய் வெளி வருகின்றது.

     நண்பர்களே, ஆனை மலை, நம் முன்னோர், நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் கலைச் செல்வம், காலப் பெட்டகம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது, ஒரு முறையேனும், ஒரே ஒரு முறையேனும், ஆனை மலையின் படிகளில் ஏறி இறங்குங்கள்.

     நம் முன்னோர்களின் காலடிச் சுவடுகளைத் தங்கி நிற்கும், இம் மலையில், அம் மாமனிதர்களின் காலடிச் சுவடுகளோடு, நம் பாதச் சுவடுகளும் ஒன்றெனக் கலக்கட்டும்.

வாழ்க ஆனை மலை.