மனிதரெலாம் அன்புநெறி
காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனித தத்துவமாம்
இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்
இனிதினிதாய்
எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று
மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
-
பாவேந்தர் பாரதிதாசன்
எதையும் படிக்காம சொல்லக்
கூடாது. யாரோ ஒரு தலைவர் சொன்னாரு, ஏதோ ஒரு பத்திரிக்கையிலே படிச்சேன்னு சொல்லாதே.
மூல நூல்களைப் படி.
தந்தை என்றால் இவரல்லவோ
தந்தை. அறிவுரை என்றால் இதுவல்லவோ அறிவுரை.
அறிவுரை வழங்கியதோடு
விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து,
நூறு புத்தகங்களை அந்தத் தந்தை, தனது 19 வயது மகனிடம் கொடுத்தார்.
இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி.
மகனின் மனம் மகிழ்ச்சியால்
விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்க்கிறார்.
நூறு கோடி ரூபாய்
சொத்துக்களைப் பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு, ஒவ்வொரு நூலாய் படிக்கிறார்.
ஒவ்வொரு பக்கமாக, நூலைப் புரட்டப்
புரட்ட, ஒவ்வொரு நூலாகப் படிக்கப் படிக்க, மனதில் ஓர் எண்ணம், மெல்ல மெல்ல தலை
நீட்டி, வாழ்வின் இலட்சியமாய் உருவெடுத்தது.
இனி நூல்களே என் வாழ்வு.
சில ஆண்டுகளில் ஆசிரியர் படிப்பு
முடிந்த நிலையில், திருச்சி மண்ணச்ச நல்லூர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர்
பணியும் கிடைத்தது. கணித ஆசிரியர் பணி.
பகலில் ஆசிரியர் பணி.
மாலையில் திருச்சியின் பழைய புத்தகக் கடைகளுக்குப் படையெடுப்பு. இதுவே இவரது
தினசரி வாழ்வாக மாறிப் போனது.
திருச்சி சுப்பையா
செட்டியார் கடையில், மாலை வேளையில், ஆயிரம் புத்தகங்கள் குவித்து வைக்கப்
பட்டிருக்கும். இது 50 பைசா, இதை எடுத்தா 1 ரூபாய் என விற்பார்.
அபூர்வமான புத்தகங்கள்
பலவற்றை, இக்கடையில் கண்டவர், கடைக்காரரிடம் கேட்டார்.
இந்தப் புத்தகங்களை எல்லாம், எங்கே இருந்து வாங்கினீர்கள்?
வி.ஆர்.எம் செட்டியார் கொடுத்தார்.
உடனே, வி.ஆர்.எம் செட்டியாருக்கு
ஓர் கடிதம் எழுதினார்.
நீங்கள் இவ்வளவு படித்து, கீதாஞ்சலியையும், தாகூரின் பிற
நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறீர்கள். ஆனாலும் இந்நூல்களை
எல்லாம் எதற்காகப் பழைய புத்தகக் கடையில் போட்டீர்கள். உங்கள் ஊரிலேயே ஒரு
நூலகத்தை ஏற்படுத்தியிருக்கலாமே?
விளைவு. இருவரும் சந்தித்தனர்.
நட்பு மலர்ந்தது.
ஒரு முறை, தன்னுடன் பணியாற்றும்,
ஆசிரியை ஒருவரை, வி.ஆர்.எம் செட்டியாரிடம் அறிமுகப் படுத்தினார்.
செட்டியார்
அவ்வாசிரியைக்கு, தாகூரின் Crescent Moon நூலினைப் பரிசளித்தார்.
அன்றிரவு, அந்த ஆசிரியை, தாகூரின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அதனுள்ளே
முழுவதுமாய் மூழ்கித்தான் போனார்.
அன்றிரவே, தாகூரின் நூலை
முழுவதுமாய் மொழி பெயர்ப்பும் செய்து விட்டார்.
ஆசிரியரிடம் காட்டினார். கணித
ஆசிரியரோ, மொழிபெயர்ப்பு கண்டு வியந்து, மகிழ்ந்து, அம் மொழி பெயர்ப்பினை
செட்டியாருக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு சில வாரங்கள் கடந்த
நிலையில், கணித ஆசிரியர் அனுப்பிய மொழிபெயர்ப்பு, வளர் பிறை என்னும்
பெயரில், நூலாய் திரும்பி வந்தது.
விளையாட்டாய்
மொழிபெயர்த்தது, நூலாய் உருவெடுத்தது கண்டு, இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை.
அடுத்த நாளே, இருவரும் சென்று,
செட்டியாரைச் சந்தித்தனர்.
இருவரையும் சற்று நேரம்,
அமைதியாய் உற்று நோக்கிய செட்டியார் கூறினார்.
நீங்கள் இருவரும், வாழ்விலும் இணைய வேண்டும், இணைந்தே செயல்பட வேண்டும் என
விரும்புகிறேன்.
இலக்கிய நட்பு, வாழ்வியல்
தொடர்பாக மாறி, திருமணத்தில் முடிந்தது.
நண்பர்களே, இத் தம்பதியினர்
யார் தெரியுமா?
ஞானாலயா
கிருட்டினமூர்த்தி – டோரதி தம்பதியினர்.
நூல்களின் காதலர்கள் இருவரும்,
வாழ்விலும் இணையர்களாய் இணைந்த போது, நடந்தவற்றைக் கூறவும் வேண்டுமோ.
ஒருவர் ஊதியம் என்பது போய்,
இருவர் ஊதியமும், நூல்களாய் மாறி, இவர்களது வீட்டினை நிரப்பத் தொடங்கின.
வீட்டில் இடம் போதாமையால், வீட்டு
மாடியினையும், நூல்கள் முழுமையாய், தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தன.
பல ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு
முறை இவர்களது வீட்டிற்கு வந்த, கட்டுமானப் பொறியாளர் கூறினார்.
நூல்களின் கனத்தை, இதற்கு மேலும் உங்கள் வீட்டு மாடி தாங்காது.
மனம் தளரவில்லை இருவரும்.
தங்களின் ஓய்வூதியப் பணம் முழுவதையும்
செலவிட்டு, பல இலட்ச ரூபாய் செலவில், புத்தகங்களுக்காகவே, ஓர் ஆலயம் எழுப்பினர்.
சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, சட்ட நூல்கள்,
சித்த வைத்தியம், பைபிள், இசுலாமிய மொழிபெயர்ப்புகள், காகிதத் துணியினால் ஆக பகவத்
கீதை உள்ளிட்ட பல புத்தகங்களும், இலக்கியத் தரமும், தொன்மையும் கொண்ட சிற்றிதழ்கள்
என, அபூர்வமான நூல்கள், ஒவ்வொரு அலமாரியிலும் மெருகு குலையாமல்
அமர்ந்திருக்கின்றன.
இவர்களது சேகரிப்பில் உள்ள
அற்புதமான விசயம் என்னவென்றால், இவரது நூல்கள் பெரும்பாலானவை முதற் பதிப்பு
நூல்களாகும்.
1938 இல் வெளிவந்த
பாரதிதாசன் கவிதைகள் முதற் பதிப்பைப் பார்த்தேன். வெளியிட்டோர் குஞ்சிதம்,
பி.ஏ.,எல்.டி., கடலூர் என்று போட்டிருந்தது. உள்ளே புரட்டினால், ஒரு சமர்ப்பணக்
கவிதை, அடுத்து கனம் இராமநாதனுடைய பாராட்டுரை, பெரியாரினுடைய அணிந்துரை. வ.ரா வினுடைய
சிறப்புரையெல்லாம் இருந்தது.
இவையெல்லாம் 1950 க்குப் பிறகு
வந்த பதிப்புகளில் இல்லை. இதையெல்லாம் பார்த்த பிறகுதான், முதற் பதிப்புகளைத் தேட
ஆரம்பித்தேன்.
நண்பர்களே, இன்று இவரது
ஆலயத்தில், ஞானாலயாவில் கொலுவீற்றிருக்கும் நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
ஓராயிரம், ஈராயிரம் அல்ல,
முழுதாய் ஒரு இலட்சத்திற்கும் மேல்.
ஒவ்வொரு நாளும் புத்தகங்களின்
எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
இவரது பெருமை அறிந்த பல பதிப்பகத்தார், தங்களது
வெளியீடுகளை, இவருக்கு, இலவசமாகவே வழங்கி வருகின்றனர்.
கடந்த 14.4.2015 சித்திரைத் திங்களின் முதல் நாள்,
ஞானாலயா
என்னும், இந்நூல் ஆலயத்தை, அறிவாலயத்தைத்
தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.
எங்கள் பள்ளியின்
தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம்,
ஆசிரியர்களான திரு ஜி.விஜயக்குமார், திரு வி.பாலசுப்பிரமணியன், திரு
எஸ்.தனபாலன், திரு வி.பிரகாசம் மற்றும் நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு
எஸ்.டி.செளந்தரராசன், திரு எஸ்.சேகர் மற்றும் நான் என பத்து பேர், ஞானாலயாவில்
நுழைந்து, புத்தக அடுக்குகளுக்கு இடைய மூச்சுத் திணறித்தான் போனோம்.
ஆயிரம், இரண்டாயிரம் கி.மீ
தொலையில் இருந்தால் கூட, யாராவது இவரை அழைத்து, ஞானாலயாவில் இருக்கும் ஒரு
புத்தகத்தைப் பற்றிக் கேட்டால், அந்தப் புத்தகம், இத்தனாவது அலமாரியில், இத்தனாவது
வரிசையில், இத்தனாவது புத்தகமாய் இருக்கிறது, எடுத்துப் பாருங்கள், என்று சொல்லக்
கூடிய அளவில், ஞானாலயா கிருட்டின மூர்த்தி அவர்களின் உதிரத்தில் ஒன்றெனக் கலந்து விட்ட
நூலகம் இது.
ஆய்வு மாணவர்கள் யார்
வேண்டுமானாலும், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், இவரது நூலகத்திலேயே தங்கி, ஆய்வு
செய்யலாம். தங்குமிடம் இலவசம், ஏன் உணவும் கூட இலவசம்.
நண்பர்களே, உங்கள்
இல்லங்களில், பழங் காலத்திய நூல்கள் இருக்குமானால், இவர்களை அலைபேசியிலோ,
தொலைபேசியிலோ அழையுங்கள், அடுத்த நாளே உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
நூலகத்தை அறிவியல்
முறைப்படி மேம்படுத்தி, விரிவுபடுத்தி, பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களது,
தற்போதைய கவலை, கனவு, இலட்சியம் எல்லாம்.
நூல்களை அட்டவணைப் படுத்தி
கணினியில் பதிவு செய்து, இணையத்தில் ஏற்ற விரும்புகிறார். நூறு ஆண்டுகளுக்கும்
மேல் பழமை வாய்ந்த நூல்களை, மைக்ரோ பிலிம் மற்றும் ஸ்கேனிங் முறைகளில் மாற்றம்
செய்ய விரும்புகிறார்.
இதற்குத் தேவை நிதி ஆதாரம்.
தங்கள் வாழ்நாளில், உழைத்து,
உழைத்து சம்பாதித்த, ஒவ்வொரு பைசாவையும், இவர்கள் ஞானாலயாவிற்காக மட்டுமே
செலவிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் போதவில்லை. யானையின்
பசிக்கு, சோளப் பொறி போலத்தான் இவர்களது வருவாய் உள்ளது.
விரும்புவோர் தாராளமாய்
நன்கொடையினை வாரி வாரி வழங்கலாம். நன்கொடைகளுக்கு முற்றிலும் தகுதியான இடம்.
அதுமட்டுமல்ல நன்கொடைகளுக்கு வரி விலக்கும் உண்டு.
நூல்களுக்கென்றே
தம் வாழ்நாளை ஈந்து வாழும்
ஞானாலயா தம்பதியினரைப்
போற்றுவோம்
வாழ்த்துவோம், வணங்குவோம்.
முகவரி
பா.கிருட்டினமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக் கோட்டை – 622
002
தொலைபேசி 04322 2221059
அலைபேசி 99 65 63 31
40
மின்னஞ்சல் gnanalayapdk@gmail.com
வலைப் பூ http://www.gnanalayaresearchlibrary.blogspot.com
--------------------------
நண்பர்களே,
நம் பாரதத் திருநாட்டின்
சுதந்திரத் திருநாளில் பிறந்தவர்தான்,
ஞானாலயா கிருட்டினமூர்த்தி அவர்கள்.
எதிர்வரும் 15.8.2015,
இவரது 75 வது பிறந்த நாள் ஆகும்.
இவரது பிறந்த நாளினை, பவள விழாவாக சிறப்பாகக்
கொண்டாடிட,
கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற
தமிழன்பர்களும்
சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.
மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா
உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா
நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,
பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்
என தங்களை
இன்றே அழைக்கின்றேன்.
வாருங்கள், வந்து வாழ்த்துங்கள்