தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
சமுத்திரம் போல் அமைந்த மைதானம்
அங்கே கூடினர் அத்தனை பேரும்.
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்
உரக்கக் கேட்டான், உயிரோ நம்தமிழ்?
அகிலம் கிழிய ஆம் ஆம் என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரை சேர்த்தமைத் தார்கள்,
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி தொடங்கினர், பறந்தது தொழும்பு
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றி லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
பாவேந்தர் பாரதிதாசன்.
வலைப் பூ.
இந்த நான்கு எழுத்து வார்த்தையின்
வல்லமையினையும், இவ்வார்த்தையில் ததும்பிக் கொண்டிருக்கும், உடன் பிறவா உறவுகளின்
எல்லையற்ற அன்பினையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
ஒரு கணித ஆசிரியராய், சூத்திரங்களும், கரும்
பலகையுமே வாழ்வென்று எண்ணி, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்
கிடந்தவன் நான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு கணினி வாங்கி,
இரண்டாண்டுகள் அதனை ஒரு அலங்காரப் பொருளாகவே பத்திரமாய் பாதுகாத்து வந்தேன்.
பின் மெல்ல, ஒரு வலைப் பூவினைத் தொடங்கி, இணையக்
காட்டுக்குள் நுழைந்து, திக்கு திசை தெரியாமல், ஓர் ஆண்டினைச்
செலவிட்டிருக்கிறேன்.